ஆடி செவ்வாய் விரதமும் வழிபாடு பலன்களும்

அம்பாள்

ஆடி மாதத்தில் வரும் “ஆடி செவ்வாய் கிழமைகள்” சிறப்பான தினங்களாகும். குறிப்பக ஆடி செவ்வாய் விரதம் இருப்பது பென்களுக்கு மிகவும் நல்லது. ஆடி செவ்வாய்வழிபாட்டு முறைகளை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

 • Share this:
  ஆடி மாத செவ்வாய் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட வேண்டும். பின்பு பூஜையறையை நீரால் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு பூஜையறையில் உள்ள அத்தனை இறைவனின் படங்களுக்கும் பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.  ஏதேனும் பழங்கள் மற்றும் பாலை நீங்கள் வணங்கும் இறைவனுக்கு நிவேதனம் வைக்க வேண்டும்.

  ஜாதக தோஷங்கள் நீங்கும் செவ்வாய் வழிபாடு

  ஆடி செவ்வாய் அன்று பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வீடு சுபிட்சம் அடையும். ஒரே வரியில் சொல்ல போனால் உங்கள் வாழ்க்கையில், உங்கள் ஜாதக கட்டத்தில் இருக்கும் அத்தனை தோஷங்களும், அத்தனை கஷ்டங்களும் விலகும். ஜாதக கட்டத்தில் செவ்வாய் தோஷம், நாக தோஷம், ராகு கேது தோஷம், இப்படி எந்த தோஷங்கள் இருந்தாலும் அந்த தோஷத்தினால் உண்டாகக் கூடிய பாதிப்புகளை தடுப்பதற்கு இந்த பூஜை செய்து, அம்பாளை வழிபடுவது மிக மிக நல்லது. இது கொரோனா காலமாக இருப்பதால் ஆடி செவ்வாய்க்கிழமை அம்பாளை நினைத்து வீட்டில் இருந்தபடியே சுலபமான முறையில் எளிமையாக பூஜை செய்தாலே பலன் கிடைக்கும்.

  விளக்கேற்றும் முறை

  இரண்டு குத்துவிளக்குகளில் பஞ்ச தீப எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றி, இரு குத்துவிளக்குகளையும் இரு புறமும் வைத்து விட்டு சாம்பிராணி கொளுத்தி, அந்த புகையை பூஜையறை மற்றும் வீடு முழுவதும் பரவச் செய்ய வேண்டும். இப்போது உங்கள் பரம்பரையின் குல தெய்வத்தை வணங்கிய பின்பு இந்த ஆடி செவ்வாயில் நீங்கள் வழிபட இருக்கும் இறைவனை வேண்டி அன்றைய தினம் முழுதும் உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருப்பது நீங்கள் வணங்கும் இறைவனின் ஆசிகளை பெற்று தரும்.

  உண்ணா விரதம் 

  ஆடி செவ்வாய் விரதத்தில் உண்ணா விரதம் இருப்பது உடலுக்கும், மனதுக்கும் நன்மையை தரும் என்றாலும் முழு தினமும் உண்ணா நோன்பு இருக்க முடியாதவர்கள், இந்த தினத்தில் பழங்கள் மற்றும் பாலை உணவாக கொள்ளலாம். உங்களுடைய உடல் சூழ்நிலைக்கு ஏற்ப உங்களுடைய விரதத்தை நீங்கள்தான் அமைத்துக்கொள்ள வேண்டும். பால் பழம் சாப்பிட்டு விரதம் இருந்தாலும் சரி, சாப்பாடு சாப்பிட்டு விரதம் இருந்தாலும் சரி, எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருந்தாலும் சரி, இல்லை சாதாரண உணவுகளை உண்ண வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களும் சரி  இந்த செவ்வாய் கிழமை காலை இறைவழிபாட்டை முடித்த பின்பு உணவு உண்ண தொடங்கலாம். ஆனால் சுத்தமான மனதோடு விரதம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

  ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு  நல்லது


  அம்மனுக்கு படையல் வைப்பது எப்படி

   

  மாலை அம்மனுக்கு நிவேதனமாக சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம், கேசரி இப்படி உங்களால் எது செய்ய முடியுமோ அதில் ஒன்று செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, குறிப்பாக உங்களுடைய வீட்டின் காமாட்சியம்மன் தீபம் இருந்தால் அதை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். தீபத்தின் முன்பு நீங்கள் அமர்ந்து கொள்ள வேண்டும். அம்மனுக்கு நிவேதனம் படைத்து விடுங்கள். தீபத்திற்கு அருகில் ஒரு சிறிய வாழை இலை அல்லது வெற்றிலையை வைத்துக் கொள்ளுங்கள். அதில் குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். அதனை வீட்டின் அருகில் உள்ள 11 சுமங்கலி பெண்களுக்கு உங்கள் கையால் கொடுக்க வேண்டும்.

  குழந்தை வரம் கிடைக்க வழிபாடு

  திருமணம் ஆகாத பெண்களாக இருந்தால் திருமணம் நடக்க வேண்டும் என்று இந்த பூஜையை செய்யலாம். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் குழந்தை பாக்கியத்தை வேண்டி இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். அதன் பின்பு சாப்பிடாமல் இருப்பவர்கள் அம்மனின் பிரசாதத்தை எடுத்து சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
  Published by:Vaijayanthi S
  First published: