முகப்பு /செய்தி /ஆன்மிகம் / அம்மாயி கொழுக்கட்டையும் அவ்வை நோன்பும் – ஆடி செவ்வாய் வழிபாடின் மகிமை!

அம்மாயி கொழுக்கட்டையும் அவ்வை நோன்பும் – ஆடி செவ்வாய் வழிபாடின் மகிமை!

அவ்வை நோன்பு

அவ்வை நோன்பு

Aadi Avvai Nombu | ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை என்றாலே அம்மாயி கொழுக்கட்டையும், அவ்வை நோன்பும் தான் பலருக்கும் நினைவுக்கு வரும்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

ஆடி மாதம் முழுவதுமே சிறப்பான மாதம் என்றாலும் ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு கூடுதல் சிறப்புகள் உள்ளன. இந்த நாட்களில் நோன்பு இருப்பது அம்மன் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்வது ஆகியவை திருமண தடைகள், செவ்வாய் தோஷம் உள்ளிட்ட பல்வேறு தடைகளை நீக்கும் என்பது ஐதீகம். அதே போல, ஆடி செவ்வாய்களில் செய்யக்கூடிய விசேஷமான ஒரு நோன்பு இருக்கிறது! அவ்வை விரதம் என்று பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் ஒரு விரதமுறைப் பற்றி நீங்கள் பரவலாக கேட்டிருப்பீர்கள்.

ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை என்றாலே அம்மாயி கொழுக்கட்டையும், அவ்வை நோன்பும் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். இதன் சிறப்புகள் என்ன ஆடி மாத செவ்வாயன்று விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பெண் புலவரும், பெண் தெய்வமும்

ஔவை என்று கேட்கும் போது, பலருக்கும் ஆத்திசூடி, சங்ககால பெண் புலவர் என்று மட்டும் தான் நினைவுக்கு வரும். கொஞ்சம் நினைவை விரிவாக்கினால் அதியமான் ஔவைக்கு கொடுத்த நெல்லிக்கனி கதை நினைவுக்கு வரும். ஒரு சிலருக்கு நடிகை கே.பி சுந்தராம்பாள் அவர்கள் நினைவுக்கு வருவார். ஆனால், புலவர் அல்லாத, இறை வழிபாடு சார்ந்த ஒரு பெண் தெய்வமும் இருக்கிறார்.

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் ஔவையார் கோயில்களும் துளசியாபட்டினம் ஔவை கோயில்கள் சங்ககால ஔவையாரை நினைவுப்படுத்தினாலும், தென் தமிழகத்தில் கன்னியாகுமரி நாகர்கோவில் குற்றாலம் போன்ற இடங்களில் உள்ள ஔவை கோயில் வழிபாடு நோன்பு முறைகள் சங்ககாலத்திற்கு பின் வாழ்ந்த பெண் தெய்வத்தையே அடையாளப்படுத்துகிறது.

அவ்வையார் நோன்பும் அம்மாயி கொழுக்கட்டையும்

அவ்வையார் நோன்பின் சிறப்புகளில் மிகவும் முக்கியமானது இது முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே செய்யும் நோன்பாகும்! பெரும்பாலான நோன்புகளை பெண்கள்தான் மேற்கொண்டாலும், அவ்வையார் நோன்பை ஆண்கள் யாரும் பார்க்கக் கூடாது, பார்க்க மாட்டார்கள்! உதாரணமாக பெண்கள் செய்யும் வரலட்சுமி விரத பூஜையில் ஆண்கள் கலந்து கொள்வார்கள். அதேபோல மகாலஷ்மி பூஜை செய்ய விரதம் இருந்து வீட்டிலேயே பெரிய அளவில் பூஜை செய்யும் பொழுது அதிலும் ஆண்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த அவ்வையார் நோன்பு எந்த ஆணுடைய கண்ணிலும் படாதவாறு பெண்கள் தனியே இந்த நோன்பை மேற்கொள்வார்கள்.

Also Read : ஆடி மாதத்தின் சிறப்புகளும் ஆன்மீக அறிவியலும்.!

இளம் பெண்கள் முதல் வயதான சுமங்கலிகள் வரை ஒரு பகுதியில் இருக்கும் அனைத்து பெண்களும் ஒன்று கூடி இந்த விரதம் இருந்து நோன்பை மேற்கொள்வார்கள். ஏதேனும் ஒரு வீட்டை தேர்ந்தெடுத்து வயதான சுமங்கலி பெண்ணின் தலைமையில் இந்த நோன்பு நடத்தப்படும். நோன்பு படைபதற்கான கொழுக்கட்டைக்கு, அரிசியை தனியாக ஊறவைத்து, காய வைத்து மாவாக அரைத்து தனியாக வைத்திருப்பார்கள். அதை உப்பு சேர்க்காமல் பிசைந்து கொழுக்கட்டை செய்து, அந்த கொழுக்கட்டைகளை வாழையிலை, வேப்பிலை, மாவிலை, புளிய இலை மற்றும் புங்கை இலை ஆகியவற்றில் பரப்பி வழிபடுவார்கள். திருமணம் ஆக நோன்பிருக்கும் இளம் பெண்கள் தங்கள் மனதுக்கு பிடித்த ஆணின் உருவத்தை கொழுக்கட்டையாக பிடித்து வழிபடுவார்கள். இந்த வழிபாட்டின்போது இந்த நோன்பை தலைமையேற்று நடத்தும் பெண் அவ்வையார் பிள்ளையார் கதையை அனைவருக்கும் கூறுவார்.

Also Read : ஆடி முதல் வெள்ளியும், அள்ளிக் கொடுக்கும் குலதெய்வ வழிபாடும்.!

பெரும்பாலான நோன்புகளில் கொழுக்கட்டை என்பது பிரசாதமாக பெரும்பாலும் நைவேத்தியம் செய்யப்படும் அதேபோலத்தான் அவ்வையார் நோன்பிலும் அம்மாயி கொழுக்கட்டை மிகவும் பிரசித்தி பெற்றது. உப்பில்லாமல் செய்யும் இந்த அரிசி கொழுக்கட்டை தான் அம்மாயி கொழுக்கட்டை என்று கூறப்படுகிறது. அம்மாயி கொழுக்கட்டையை நோன்பு இருக்கும் பெண்களே சாப்பிட வேண்டும். அதை வேறு எந்த ஆணுக்கும் கொடுக்கக் கூடாது.

அவ்வையார் நோன்பு செய்வதால் கிடைக்கும் பலன்கள்

ஆடி செவ்வாய்க்கிழமைகளில் மணமாகாத பெண்கள் விரதமிருந்து வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் கூடும். திருமணத் தடை ஏற்படுத்தும் தோஷங்களான கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், சனி தோஷத்தால் ஏற்படும் திருமணத் தாமதம், செவ்வாய் தோஷம் ஆகியவை நீங்கும்.

திருமணமான பெண்களும், கணவருக்காக விரதமிருந்து வழிபடுவார்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து, குடும்பம் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமை நிலைக்கவும், குழந்தைப் பாக்கியம் கிடைக்கவும் கணவன் நீண்ட ஆயுள் பெறவும் இந்த விரதத்தை கடைபிடிப்பார்கள்.

Also Read : கிருத்திகை விரதம் மற்றும் முருகன் கோவில்களில் திருவிழா.!

இந்த வழிபாட்டை தொடர்ந்து மூன்று செவ்வாய் கிழமைகளில் செய்யலாம். ஆடி மாதம் விரதமிருக்க முடியாதவர்களுக்கு, தை மற்றும் மாசியில் தொடரலாம். ‘அசந்தா ஆடியிலும் தப்புனா தையிலும் மறந்தா மாசியிலும்’ என்ற நாட்டுப்புறப் பாடல், அவ்வை நோன்பின் மகத்துவத்தையும், ஆடி மாதம் தவறினாலும், அடுத்து வரும் தை மற்றும் மாசியில் நோன்பு இருக்கலாம் என்பதையும் குறிக்கிறது.

First published:

Tags: Aadi