ஆடி அறுதி என்பது ஆடி மாதத்தின் கடைசி மாதமாகும். மற்ற மாதங்களைப் போல அல்லாமல், தமிழ் மாத அடிப்படையில் வரும் ஆடி மாதத்திற்கு 32 நாட்கள் உள்ளன. ஆடி அறுதி எந்த கிழமையில் வருகின்றது என்ற அடிப்படையில் கூடுதல் சிறப்பைப் பெறும். இந்த ஆண்டு, ஆடி அறுதி 2022 ஆகஸ்ட் 16, செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளி இரண்டு நாட்களுமே ஆடி மாதத்தில் சிறப்பான, அம்மனுக்கு உகந்த நாளாகக் கருதப்படுவதால், இந்த ஆண்டு ஆடி அறுதி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
ஆடி அறுதி அன்று நாற்று நடுவார்கள்
ஆடிப்பட்டம் தேடி விதை என்பதற்கு ஏற்ப, ஆடி மாதம் தொடங்கிய முதல் நாளில், விவசாயிகள் விதை விதைப்பார்கள். அதே போல, ஆடி அறுதி அன்று, நாற்று நடுவார்கள். விவசாயிகளை காக்கும் காவிரி ஆற்றை தெய்வமாக, ஆடி பதினெட்டு அன்று வணங்கி, குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடியிருப்பார்கள். அடுத்தது மழைக்காலம் என்பதால், ஆடி மாதம் முடியும் நாளில், விவசாயத்தின் அடுத்த கட்டமாக, நாற்று நடுவார்கள்.
2022 ஆடி அறுதி செவ்வாய்க்கிழமை அம்பாள் வழிபாடு
எல்லா செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் அம்மன் வழிபாட்டுக்கு சிறந்தது. இந்த ஆண்டு ஆடி அறுதி செவ்வாயில் வருவது மிகவும் சிறப்பானது. செவ்வாய் கிழமைகளில் இதுவரை நீங்கள் தொடர்ந்து அம்மனை வழிபட்டு வந்தாலும், அல்லது செவ்வாய் அல்லது வெள்ளியில் உங்களால் அம்மன் கோவிலுக்கு சென்று இந்த மாதத்தில் வழிபட முடியவில்லை என்றாலும் வரும் ஆகஸ்ட் 16 ம் தேதி தவறாமல் அம்மன் கோயிலுக்கு சென்று வாருங்கள். ஆடி மாதம் செவ்வாயோடு முடிவதால் அன்று பெரும்பாலான அம்மன் கோவில் மற்றும் அம்பாள் ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். வாய்ப்பு இருப்பவர்கள் ராகு கால பூஜையில் கலந்து கொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபடுவது வேண்டிய வேண்டுதல்களை நிறைவேற்றும்.
Also Read : ஊசி முனையில் தவம் செய்த ஆதிபராசக்தியின் கதை.!
ஆடி அறுதி சிவ பெருமானுக்கு அபிஷேகம்
ஜோதிட ரீதியாக ஆடி மாதத்தில் கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். அதற்கு அடுத்த மாதமான ஆவணி மாதம் முதல் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்கு ஆட்சியாக சூரியன் பெயர்ச்சி ஆவார். சந்திரன் அம்பாளையும் சூரியன் சிவபெருமானையும் குறிக்கும். ஒருமாத காலமாக அம்பாளின் வீட்டில் சிவபெருமான் இருந்து, ஆவணி மாதம் முதல் தனது சொந்த வீட்டில் சஞ்சரிப்பார். எனவே ஆவணி மாதம் தொடக்கத்திற்கு முன்பாக ஆடி மாதத்தின் கடைசி நாளன்று சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபடுவது நினைப்பதெல்லாம் நிறைவேறும் என்பது ஐதீகம். சங்கு புஷ்பம், வில்வ இல்லை, விபூதி, இளநீர் போன்றவற்றைக் கொண்டு அபிஷேகம், ஆராதானை செய்தால் தோஷங்கள் நீங்கும்.
அதே போல, ஏதேனும் ஒரு கோவிலில் வசதிக்கு ஏற்றவாறு, அன்னதானம் செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.