Home /News /special-articles /

தமுக்கம் மைதானம் இல்லாத சித்திரைத் திருவிழா எண்ணிப் பார்க்க முடியவில்லை! எழுத்தாளர் சுபகுணராஜன் வேதனை

தமுக்கம் மைதானம் இல்லாத சித்திரைத் திருவிழா எண்ணிப் பார்க்க முடியவில்லை! எழுத்தாளர் சுபகுணராஜன் வேதனை

தமுக்கம் (wikipedia)

தமுக்கம் (wikipedia)

விழாக்களின் நகரமான மதுரையின் முத்திரை விழா சித்திரை விழா. அந்த விழாக்களின் விழாவின் நிகழ் மையம் தமுக்கம்.

மதுரை தமுக்கம் மைதானமும், அதன் உள்ளே இருக்கும் சங்கரதாஸ் நாடக அரங்கும் இடிக்கப்படப் போவதாக செய்தி அறிந்தேன். இத்தனைக்கும் சென்னைக்கும் மதுரைக்குமாக காலத்தைப் பிரித்துக் கொண்டு வாழ்பவன்தான். ஆனால் நிலைக்காத இருப்பு வேரறுத்திருக்கிறது.
இப்போதைக்கு நான் சென்னைவாசியுமில்லை, மதுரைக்காரனுமில்லாமல் ஆகிவிட்டிருக்கிறேன்.
மதுரையின் பலவேறு பகுதிகளில் வாழ வாய்த்திருக்கிறது என்றாலும், எனது இளம் பருவத்தின் கனவுகளைச் சாத்தியமாக்கியது மதுரை அமெரிக்கன் கல்லூரியும், தல்லாகுளம் பகுதியுமே. வனத்தினுள் ஒளிந்திருந்த சிவப்புக் கட்டிடங்கள் கொண்ட கல்லூரி வளாகம் பற்றிய சித்திரம் இப்போதும் ஒரே வெட்டுக்காட்சியில் என்னை ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துவிடும் வல்லமை கொண்டது. ஒரு சிறு கிராமச் சிறுவனுக்கு கிலேசம் வழங்க அந்த வனத்தின் நெடிய சாலைகள் போதுமானதாய் இருந்தது.

அந்நாட்களில் கல்லூரி விட்டு வெளியே வந்தால், கால்கள் தாமாக வலம் திரும்பி காந்தி மியூசியம் சாலைக்கே நகரும். சாலை துவங்கும் இடது ஓரம் மூலையில் சங்கரதாஸ் சுவாமிகள் சிலையும் , சற்றே தள்ளி தல்லாகுளம் பெருமாள் கோவில் சாலையில் தமுக்கம் நுழைவாயிலில் தமிழன்னை சிலையும் இருக்கும். இன்றைய பரபரப்புகள் ஏதுமற்ற, அநேகமாக ஆளரவமற்ற காந்தி மியூசியம் சாலை இருபுறமும் அடர்ந்த மரங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அந்த செவ்வரளி பூச் சொரிந்த சாலைகளில் நடப்பது ஒரு சுகம்.

மாலைவேளைகளின் இருள்வதற்கு முன்னான மங்கலான வெளிச்சம் நிரத்துவம் பெற்ற பிரதேசம் அது. இடதுபுறம் நீண்ட மதில்சுவர்கள் கொண்ட தமுக்கம் அமைதி கப்பியதாகவே இருக்கும். இந்தச் சாலையை ஒட்டிய கதவு உள்ளே நிகழ்ச்சிகள் இல்லாத நாட்களில் திறக்கப்படுவதில்லை. எனக்கான மதுரையின் மிக அழகிய சாலைகளில் முதலாவது இந்தச் சாலை. ஒரு எழில் மிக்க சாலை, ஓவியத்திலிருந்து உயிர் பெற்றது போன்ற தோற்றம். ஒரு கவித்துவ மோனமும், போதமுமான பிரதேசம் அது . இதெல்லாம் எப்போதுமில்லை . அந்தப் பகுதியே பரபரப்பு தொற்றிக் கொண்டு மனிதக் கடலில் மூழ்கித் திளைக்கும் நாட்களும் உண்டு.

சுபகுணராஜன்


அமைதியும், கவித்துவமுமான பகுதி கொள்ளும் மாற்றம் ரம்மியத்திலிருந்து திருவிழா மனநிலைக்கு சட்டென நகர்த்திவிடும். மதுரையின் வீதிகள் ஒவ்வொரு நாளும் விழாப்பூணுபவைதான், ஆனால் தமுக்கத்தில் நிகழும் ரசவாத மாற்றம் பல படித்தான விழாக்களின் குதுகலம் நிறைந்தவை.

என் நினைவின் அடுக்கில் தமுக்கத்தின் பல்தள சித்திரங்கள் உண்டு. ஆதியில் எழுபதுகளின் ஆரம்ப காலங்களில் வாடிக்கையாக தமுக்கத்தில் நடந்தது அகில இந்திய சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டிகள். இன்னும் கிரிக்கெட் எனும் விபரீதம் முற்றாக இன்னபிற விளையாட்டுகளை விழுங்கிவிடாத நாட்கள் அவை. இந்தியன் வங்கியும், மர்மகோவா அணியும் , பஞ்சாப் போலீசும் டெம்போ கோவாவும் மோதும் நாட்களில் நகரத்திலிருந்து வரும் பேருந்துகளிலிருந்து மொத்தக் கூட்டமும் தமுக்கம் நோக்கி ஓடும். அனைத்து நாளிலும் போட்டியைக் காணும் பொருளாதார வாய்ப்பில்லாத கூட்டமொன்று, தமுக்கத்திறகு வெளியே சாலையில் குழுமி நின்று, ஒவ்வொரு வர்ணனையையும் வைத்தே மனக்கண்ணில் காட்சியை ஓட்டியபடி நிற்கும். இறுதிப் போட்டி நடக்கும் நாளில் தமுக்கம் பக்கம் போவதே சாத்தியமில்லை. உள்ளே ஐயாயிரம் பேர் வெளியே ஆறாயிரம் பேர் திரள்வார்கள்.

தமுக்கம் சங்கரதாஸ் கலையரங்கம் காணாத வரலாற்று காட்சிகள் இல்லை. அதைவிட தமுக்கம் காணாத வரலாறுகள் இல்லவே இல்லை. காந்தியார் துவங்கி பெரியார், அண்ணா, கருணாநிதி என தமுக்கத்தில் முழங்காத குரல்கள் இல்லை. கட்சி மாநாடுகள் துவங்கி தலைவர்கள் பொதுக்கூட்டங்கள் வரை அங்குதான். வரலாற்றின் தடம் பதிந்த நிகழ்வுகள் ஏராளம். திமுகவினை விட்டு எம்ஜிஆர் தடம்மாறிய மாநாடு துவங்கி , ஈழத்தமிழர் நலன் காக்க பிஜூ பட்நாயக், வாஜ்பேயி உள்ளிட்ட இந்தியத் தலைவர்களை கருணாநிதி ஒருங்கிணைத்த டெசோ மாநாடும் நடந்ததும் அங்கேதான். பெரியார் உரையை 1973-ல் கடைசிமுறையாக கேட்டதும் அங்கேதான். நவீன நாடக விழா, அரசியல் ஆய்வரங்கு, கத்தார் பாடலரங்கு என அங்கு பதியப்படாத நிகழ்வுகள் இல்லை. இப்போதைய நிலையில் மதுரை புத்தகச் சந்தைக்கான களமாகி இருப்பதும் தமுக்கமே. தமிழ்நாட்டு கலாச்சார மற்றும் அரசியல் வரலாற்றில் அழிக்கவியலாத தடம் பதித்த களம் தமுக்கம்.

பிற நிகழ்வுகள் வரலாற்றின் பதிவுகள் உருவான இடமாக அதனைக் கொள்ள, ஒற்றை நிகழ்வு மட்டும் வரலாற்றை மீண்டும் மீண்டும் புதிப்பித்தபடியும், அதன் பக்கங்களை புதிதாக எழுதியபடியுமாக இருந்தது. அது சித்திரைத் திருவிழா. சித்திரைத் திருவிழாவும், மதுரையும் பிரிக்கவியலாதபடி பிணைக்கப்பட்டவை. அதன் நிகழ்த்து களம் தமுக்கம் மைதானம் என்றால் மிகையில்லை. தமுக்கம் சித்திரைத் திருவிழா பொருட்காட்சியும், கண்காட்சியும் சிலநூறு ஆண்டு பழமையானவை. அழகர் ஆற்றில் இறங்கும் விழா அழகர் கோவிலையும், மதுரை நகரையும் இணைத்து நிகழும் உலகின் மாபெரும் நாடக அரங்கு. அழகர் கோவில் அடிவாரத்தில் துவங்கி கோரிப்பாளையம் , ஆழ்வார்புரம் வைகை ஆறு வரை சுமார் முப்பது கிலோமீட்டர் நீள அரங்கம். வேஷக்காரர்களும், ஆட்டக்காரர்களும் , பக்தர்களுமான அரங்கப் பாத்திரங்களால் (பங்கேற்பாளர்களால் ) நிகழ்த்தப்படும் நாடக அரங்கு.

எதிர் சேவை எனும் அழகர் வரவேற்பு முற்றிலுமான நிகழ்த்துகலை வடிவிலானது. அதன் ஆகப் பெரிய எதிர் சேவையான தல்லாகுளம் பெருமாள் கோவில் நிகழ்வின் குவிமையம் தமுக்கம்தான். எனது கல்லூரி நாட்களில் தல்லாகுளம் தமுக்கம் துவங்கி வைகைக்கரையோரம் வரை சுற்றுப்புற கிராமவாசிகளின் மாட்டுவண்டிகளால் நிறைந்திருக்கும். தல்லாகுளம் எதிர்சேவை இரண்டுநாள் நிகழ்வு. தமுக்கத்தின் சித்திரைத் திருவிழாக் கண்காட்சியும் இரவு பகலாய் இடைவிடாமல் தொடரும். மதுரை சுற்று வட்டாரத்தின் மக்கள் திரள் தல்லாகுளத்தில் குவிந்து நின்று ஆர்ப்பரிக்கும். இந்த மாபெரும் திருவிழாவிற்காக மக்கள் மனம் ஆண்டு முழுதும் ஆவல் ததும்பி வழிய ஏங்கிக் கிடக்கும்.

அழகர் ஆற்றில் இறங்கும் நாளில் மக்களின் உற்சாகம் கரைபுரண்டோடும். மண்டகப்படிகளில் சேவை செய்வோரில் சகல மதத்தவரும் உண்டு. மதுரை சித்திரைத் திருவிழா சகலருக்குமான விழாவாக பரிணமிக்கும் சாத்தியம் கொண்டது. விழாக்களின் நகரமான மதுரையின் முத்திரை விழா சித்திரை விழா. அந்த விழாக்களின் விழாவின் நிகழ் மையம் தமுக்கம். தமுக்கமற்ற சித்திரைத் திருவிழாவை எண்ணிக்கூடப் பார்க்க இயலவில்லை.
தமுக்கமில்லாமல் சித்திரைத் திருவிழா மட்டுமில்லை , மூதூர் மதுரையே ஊனமுற்றுப் போய்விடும் என்பதே எனது பதற்றம். நானூறு அல்லது ஐநூறு ஆண்டு வரலாற்றை மட்டுமே கொண்ட பல தொன்மைகள் தம்மை காலங்கடந்தவையாக பீற்றித் திரியும் நாளிது. மட்டுமல்ல , வரலாற்றுத் திரிபுவாதங்கள் கூச்சமின்றி வலம் வரும் நாளிது. தமுக்கமும், காந்தி நினைவரங்கும் ஒரு நெடிய வரலாற்றின் எஞ்சி நிற்கும் இறுதிச் சரடுகள். நாயக்கர்கால ஆட்சியாளர்கள் உள்ளூர் சமூகங்களின் தன்னாட்சி சுதந்திரத்தை ஏற்று ஒப்பந்தம் போட்டு, அதன் சாட்சியாக தடம் மாற்றப்பட்ட விழா கள்ளழகர் விழா என்கின்றன ஆய்வுகள். அந்த வரலாற்றின் சுவடு பதிந்த பகுதியே தமுக்கம் அரங்கம். வரலாற்றைப் பதியனிட்டு, வரலாற்றின் பக்கங்களாகவே மாறிப் போன அடையாளச் சின்னங்களை அக்கறையின்றி அழித்தொழிக்கும் அறிவீனத்தை என்னவென்பது.

வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்
வரலாறு, சமூகவியல் ஆய்வாளர்.

Also see:
Published by:Karthick S
First published:

அடுத்த செய்தி