Home /News /special-articles /

EXCLUSIVE: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான அசாம் போராட்டம் ஏன் மாறுபட்டது?

EXCLUSIVE: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான அசாம் போராட்டம் ஏன் மாறுபட்டது?

அசாம் போராட்டம். (கோப்புப் படம்)

அசாம் போராட்டம். (கோப்புப் படம்)

"வேறு நாடுகளிலிருந்து குறிப்பாக அவர்களுடைய எல்லையை ஒட்டி இருக்கக்கூடிய பங்களாதேஷிலிருந்தும், மேற்கு வங்கத்தில் இருந்தும் கூட எந்த மதத்தை சேர்ந்தவருமே அசாமில் குடியேறக் கூடாது என்கிறார்கள் அவர்கள்"

  • News18
  • Last Updated :
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் நிலையில், அசாம் போராட்டம் ஏன் மாறுபட்டது என்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தீவிரமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பாகிஸ்தான் , பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து மட்டும் இஸ்லாமியர்கள் தவிர்த்து இந்து, கிறிஸ்தவம், புத்தம், ஜெயின், சீக்கியம் உள்ளிட்ட ஆறு மதத்தை சேர்ந்தவர்கள் இந்திய குடிமக்களாக விண்ணப்பிக்க இந்த திருத்தச் சட்டம் வழி வகுக்கிறது.

2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முன் இந்தியாவிற்கு வந்து குறைந்தது ஆறு ஆண்டுகள் இங்கேயே தங்கி இருந்தால் அவர்கள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த சட்டம் இலங்கைத் தமிழர்களையும், இஸ்லாமியர்களையும் உள்ளடக்காததால் பாரபட்சமான சட்டம், அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்பது தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் போராட்டத்துக்கான கருவாக அமைந்துள்ளது.

அதே சமயம் இச்சட்டத்தை கடுமையாக எதிர்க்கும் வட கிழக்கு மாநிலங்களின் குரல் வேறுபட்டதாகும்.
அசாம் ஏன் போராடுகிறது?

மிக ஆக்ரோஷமாக தெருக்களில் இறங்கி போராடி வரும் பல்லாயிரக்கணக்கான அசாம் மாநில மக்களுக்கு, இந்த சட்டம் ஏற்படுத்தும் பாதிப்பு வேறுவிதமானது.

வேறு நாடுகளிலிருந்து குறிப்பாக அவர்களுடைய எல்லையை ஒட்டி இருக்கக்கூடிய பங்களாதேஷிலிருந்தும், மேற்கு வங்கத்தில் இருந்தும் கூட எந்த மதத்தை சேர்ந்தவருமே அசாமில் குடியேறக் கூடாது என்கிறார்கள் அவர்கள்.

அப்படி வந்தால் அசாம் மக்களின் கலாச்சாரம், மொழி மற்றும் நில உரிமை பாதிக்கப்படும் என்பது அவர்களின் அச்சம்.

அசாம் மொழிக்கு வங்க மொழி அச்சுறுத்தலா?

கவுஹாத்தியில் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வரும் இளம் பத்திரிகையாளர் மணிஷாவிடம் இந்த விவகாரம் குறித்து கேட்ட போது, "அசாம் மாநிலத்தில் ஏற்கனவே வங்கதேசத்திலிருந்து பலர் குடிபெயர்ந்து தங்கள் வளங்களை உரிமை கொண்டாடுகின்றனர் என்ற பிரச்சினை நிலவி வருகிறது.

அசாமிஸ் மொழியை விட பெங்காலி பேசுபவர்கள் அதிகமாகி வருவதாகவும் இது தங்களுடைய மொழிக்கு ஒரு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அசாம் மக்கள் ஏற்கனவே கருதி வருகின்றனர்.

வங்கதேசத்திலிருந்து குடியுரிமை சட்டம் மூலமாக மேலும் பலர் அசாம் மாநிலத்துக்கு வந்தாலோ அல்லது ஏற்கனவே இருப்பவர்கள் சட்டரீதியாக குடியுரிமை பெற்று விட்டாலோ பெங்காலி பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி தங்கள் மொழிக்கான முக்கியத்துவம் இருக்காது என்று மக்கள் கருதுகின்றனர்.

பெங்காலி பேசக்கூடிய பராக் பள்ளத்தாக்கை விட அசாமிஸ் பேசும் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் மிக அதிகமான தீவிரமான போராட்டங்கள் இச்சட்டத்தை எதிர்த்து நடக்கின்றன" என்று விவரிக்கிறார்.

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் பலரும் அதைத்தொடர்ந்து வரும் தேசிய குடிமக்கள் பதிவேட்டைக் குறித்த அச்சத்தையும் சேர்த்தே எழுப்புகின்றனர்.

தேசிய குடிமக்கள் பதிவேடு அமலாக்கப்பட்டால் நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவரும் தாங்கள் இந்நாட்டுக்கு சொந்தமானவர்கள் என்பதற்கு உரிய ஆவணங்களை காண்பித்து தங்கள் குடியுரிமையை நிரூபித்து பதிவேட்டில் இடம்பெற வேண்டும்.

இதை எதிர்க்கும் போராட்டங்களின் முழக்கத்தில் இருந்து அசாம் மக்களின் கோரிக்கை மாறுபட்டதாகும். சொல்லப்போனால் தேசிய குடிமக்கள் பதிவேடு வேண்டும் என்று வலியுறுத்தியது அவர்கள்தான். அவர்கள் ஏன் இந்தக் கோரிக்கையை முன் வைத்தார்கள் என்று புரிந்துகொள்ள  மற்றொரு அம்சத்தை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அதுதான் 1985-ம் ஆண்டில் கையெழுத்தான அசாம் ஒப்பந்தம்.

அசாம் ஒப்பந்தம் 1985: 

1979-ல் அசாமின் மங்கோல்தாய் இடைத்தேர்தலில் சந்தேகத்துக்குரிய வகையில் அதிக வாக்காளர்கள் பதிவுபெற்றது தெரியவந்தது.

வங்கதேசத்திலிருந்து வந்த சட்டவிரோத குடியேறிகள் தான் இதற்கு காரணம் என்று பெரும் போராட்டங்கள் வெடிக்க தொடங்கின.  ஆறாண்டு காலம் நடைபெற்ற போராட்டத்தில் முடிவில் அசாம் ஒப்பந்தம் 1985-ம் ஆண்டு கையெழுத்தானது.

டெல்லி பல்கலைகழகத்தில் படிக்கும் அசாம் சேர்ந்த ஆய்வு மாணவர் சந்தீபன், "தேசிய குடிமக்கள் பதிவேடு என்பதே 1985-ம் ஆண்டு இந்திய அரசுக்கும் அனைத்து அசாம் மாணவர் அமைப்புக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில்  கொடுக்கப்பட்ட உறுதியாகும்.

சட்டவிரோத குடியேறிகளை கணக்கெடுத்து அவர்கள் வெளியேற்ற வேண்டும் என்பது அசாம் மக்களின் கோரிக்கை.  உச்சநீதிமன்ற அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் படி கணக்கெடுப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் அக்கணக்கெடுப்பு முடிக்கப்பட்டது.

அதில் 19,00,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் 40,00,000 மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் இருப்பதாக அசாம் கன பரிஷத் உள்ளிட்ட கட்சிகள் கூறுகின்றன.

மேலும் உண்மையாகவே இந்திய குடிமக்களாக இருக்கக்கூடிய அசாம் மக்கள் பலரது பெயர் இந்தப் பட்டியலில் விடுபட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இப்படி ஏற்கனவே ஒரு குழப்பமான நிலை அசாமில் வரும்பொழுது குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானால் மேலும் பல குழப்பங்கள் ஏற்படும்.   மார்ச் 24-ம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறி வாழ்ந்து வந்தவர்களுக்கு மட்டுமே இந்திய குடியுரிமை என்று அசாம் ஒப்பந்தம் கூறுகிறது.

ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் குடியுரிமைக்கான கால அளவு 2014 டிசம்பர் என  வழங்கப்பட்டுள்ளது. எனவே அசாம் ஒப்பந்தத்தை இந்த சட்டம் நீர்த்துப் போகச் செய்யும் என அசாம் மக்கள் அஞ்சுகின்றனர்." என்றார்.

குடியுரிமை திருத்த சட்டத்தினால் பாதிக்கப்படப் போவது அசாம் மட்டும்தானா அல்லது வட கிழக்கு மாநிலங்கள் அனைத்துமா? என்ற கேள்வி எழுகிறது. 'இன்னர் லைன் பெர்மிட்' எனப்படும் நுழைவுக்கு அனுமதி பெறும் நடைமுறை அருணாச்சல் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் இருக்கிறது.

சமீபத்தில் மணிப்பூரிலும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் வீச்சு இம்மாநிலங்களில் குறைவாக உள்ளது. அனைத்து வட கிழக்கு மாநிலங்களிலும் 'இன்னர் லைன் பெர்மிட்' வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Assam, Citizenship Amendment Act, NRC

அடுத்த செய்தி