பத்து ரூபாய் நாணயம் செல்லாக்காசா...? - யார்தான் இதை தட்டிக்கேட்பது!

செல்லாக்காசா பத்து ரூபாய் நாணயம்?

 • News18
 • Last Updated :
 • Share this:
  என்னது... பத்து ரூபாய் நாணயம் செல்லாக்காசா... இல்லையே செல்லுதே!

  - இதுதான் நம்மில் பலரின் பதிலாக இருக்கும்.

  அப்பர் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் அல்லது மிடில் கிளாஸ் என்ற பிரிவுகளை தாண்டி, லோயர் மிடில் கிளாஸ், லோயர் கிளாஸ் மற்றும் சாலையோரத்தில் வாழும் மக்களும் இந்த சமூக சக்கரத்தில் முக்கியமான அங்கங்கள்தான். நாம் தற்போது பேசப்போவது அவர்களுடைய பிரச்னையை பற்றிதான். மேலே கேட்கப்பட்ட இதே கேள்வியை பால்காரரிடமோ, பூ விற்கும் பாட்டியிடமோ, தினக்கூலிகளிடமோ கேட்டால்...

  மாதிரிப் படம்


  “அந்த கொடுமையை ஏம்பா கேட்குற” என்றுதான் பதில் வரும். தமிழகத்தில் பல மாவட்டங்களில் சட்டபூர்வமாக இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாக்காசாக கருதப்படுகிறது. செல்லாக்காசாக ஆக்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம்?

  பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் வங்கிகள்!  தமிழகத்தில் பல மாவட்டங்களில் சிறு மற்றும் குறு வியாபாரிகளிடமிருந்து வங்கிகள் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதே இந்த பிரச்னையின் ஆரம்ப புள்ளியாக பார்க்கப்படுகிறது. பால் முகவர்கள், பூ வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், பழ வியாபாரிகள் என பல தரப்பட்ட வியாபாரிகள் தாங்கள் அன்றாடம் லாபம் பார்க்கும் பணத்தில் பெரும் பங்கு சில்லறைகளாகவே இருக்கும். அவ்வாறு சில்லறைகளாக வரும் பணத்தை குறிப்பாக பத்து ரூபாய் நாணயத்தை வங்கி அதிகாரிகள் முறையான எந்த காரணமும் சொல்லாமல் வாங்க மறுப்பதால் சமூகத்தில் பண சுழற்சி துண்டிக்கப்படுகிறது.

  சமூகமும்... பணத்தின் சுழற்சியும்... 

  மாதிரி படம்


   ஒரு சிறந்த சமூகத்திற்கு அடையாளம், அந்த சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவு மக்களிடமும் பணம் முறையாக சுழற்சி ஆவதுதான். வங்கிகளிலிருந்து மக்களுக்கும், மக்களிடமிருந்து வியாபாரிகளுக்கும், வியாபாரிகளிடமிருந்து மீண்டும் வங்கிக்கோ அல்லது மக்களுக்கோ செல்லும் இந்த சுழற்சி ஆரோக்கியமானதாகும். பணப்பதுக்கல்களாலும், வருமானத்தில் காட்டாத கருப்பு பணத்தை உருவாக்குவதாலும்தான் பெரும்பாலும் இந்த சுழற்சி துண்டிக்கப்படுகிறது. ஆனால் வங்கி அதிகாரிகள் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதால் சமூகத்தில் நிகழ்ந்து வந்த இந்த பண சுழற்சி முற்றிலுமாக தடைப்பட்டு போகிறது. வங்கிகள் மறுப்பதால், டீக்கடை, பேருந்து நிலையம், பெட்டிக்கடை, காய்கறி வியாபாரிகள் ஆகியோர் பத்து ரூபாய் நாணயத்தை பொதுமக்களிடமிருந்து வாங்க மறுக்கிறார்கள்.

  பால் முகவர்களும்... பத்து ரூபாய் நாணயமும்...  இதில் பெரிதும் பாதிக்கப்படுவது பால் முகவர்கள்தான். இதுதொடர்பாக அவர்கள் சங்கத்தினர் அறிக்கை வெளியிட்டும் பலனில்லை. பலமுறை வங்கிகளிடம் போராடி தோற்றுப்போன பால் முகவர்கள் தற்போது தாங்கள் வைத்துள்ள பத்து ரூபாய் நாணயங்களை தாங்களே மக்களிடம் மறுசுழற்சி செய்து வரும் நிர்பந்ததற்கு தள்ளப்பட்டுள்ளனர். அதாவது நூறு ரூபாய் கொடுத்து பால் வாங்கினால், 25 ரூபாய் போக மீதியை 7 பத்து ரூபாய் மற்றும் ஒரு 5 ரூபாய் நாணயமாக அளிக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. ஆனால் அதை வாங்கும் பொதுமக்கள் அந்த பத்து ரூபாய் நாணயத்தை மாற்றுவதற்குள் படாதபாடு பட வேண்டியதாக உள்ளது. இதனால் உஷாரான பொதுமக்கள் பால் முகவர்களிடம் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் சூழலும் உருவாகியுள்ளது.

  மறுக்கப்படுவதற்கு வங்கிகள் சொல்லும் காரணங்கள்!  சரி ஏன் வங்கிகள் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றன. பெரிய காரணம் ஒன்றும் இல்லை... எல்லாம் நடைமுறை சிக்கல்தான். வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களான வணிகர்கள், நிறுவனங்களிடம் வாங்கும் 10 ரூபாய் நாணயங்களை எண்ணி வாங்குவதற்கு நேர விரயமாகும் என்றும், அதனை பராமரிப்பதற்கும், முறையாக சேமித்து வைப்பதற்கும் நடைமுறையில் சிக்கல் இருப்பதாக வங்கி ஊழியர்கள் கூறுகின்றனர். 2000 ரூபாய் நோட்டை வைக்க தேவைப்படும் இடமும், 2000 ரூபாய் மதிப்புள்ள 10 ரூபாய் நாணயங்கள் வைக்க தேவைப்படும் இடத்தை ஒப்பிட்டு பார்த்தால், தங்கள் தரப்பு நியாயம் புரியும் என்கிறார்கள் வங்கி ஊழியர்கள்.

  புழக்கத்தில் போலி பத்து ரூபாய் நாணயங்களா?

  மாதிரிப் படம்


  10 ரூபாய் நாணயம் மறுக்கப்படுவதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது போலி பத்து ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருப்பதாகவும் அதனாலேயே அவற்றை வாங்க மறுப்பதாகவும் சில நிறுவனங்களும் அதிகாரிகளும் கூறுகின்றனர். இது அவர்களின் அறியாமையை காட்டுகிறது என்கிறது ரிசர்வ் வங்கி. ஏனென்றால் ரிசர்வ் வங்கி தற்போது 14 வகையான 10 ரூபாய் நாணயத்தை உருவாக்கி புழக்கத்தில் விட்டுள்ளது. இந்த நாணயங்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி அளித்துள்ள விளக்கத்தில், "இந்த நாணயங்கள் தனித்துவமான வகையில் பல்வேறு காலகட்டங்களில் சமூக, பொருளாதார, கலாச்சார மதிப்பீடுகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டவை. 14 வகையான 10 ரூபாய் நாணயங்களும் பரிவர்த்தனைக்கு செல்லும். வங்கிகளும் தங்களது அனைத்து கிளைகளிலும் பத்து ரூபாய் நாணயங்களை மாற்றிக் கொள்ள ஒத்துழைக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது.

  ரிசர்வ் வங்கியும்... தொடர் விளக்கங்களும்...  ரிசர்வ் வங்கி தலைமையகம்


  அனைத்து வகையான 10 ரூபாய் நாணயமும் செல்லத்தக்கவை என்றும், அதனை மறுப்பது சட்டப்படி குற்றம் என்றும் ரிசர்வ் வங்கி பலமுறை விளக்கமளித்துள்ளது. சில வர்த்தக நிறுவனங்களும் மற்றும் வங்கிகளும் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில் தயக்கம் காட்டியதாக தகவல்கள் வெளியானதால் ரிசர்வ் வங்கி இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது. 10 ரூபாய் நாணயங்களை செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை. 10 ரூபாய் நாணயங்கள் ரிசர்வ் வங்கி பரிமாற்றத்துக்கு செல்லும் என்றும், மீண்டும் மீண்டும் ரிசர்வ் வங்கி அறிவித்து வருகிறது. ஆனாலும் இந்த உத்தரவை சில வங்கிகளும், நிறுவனங்களும் மதித்ததாக தெரியவில்லை.  யார் தான் இதை தட்டிக்கேட்பது...

  மாதிரிப் படம்


  பொருளாதார சங்கிலி தொடர், முறையாக இருந்தால்தான், பொதுமக்களின் பொருளாதார நிலைமை சீராக இருக்கும். அந்த சங்கிலி தொடர் துண்டிக்கப்படும்போதுதான், பொருளாதார சீர்குலைவு ஏற்படுகிறது. ரூ.500 மற்றும் ரூ.2000 ஆகியவற்றின் புழக்கத்தை துண்டித்து பதுக்கி வைப்பது மட்டும் குற்றமல்ல. 5 ரூபாய் நாணயம், 10 ரூபாய் நாணயம் ஆகியவற்றின் புழக்கத்தை முடக்குவது ஒரு வகையில் பொருளாதார சீர்குலைவை உருவாக்கும். வர்த்தக சக்கரத்தில், சிறு சக்கரங்களாக கருதப்படும் 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்களின் சுழற்சி நின்று போனால், ஒரு காலக்கட்டத்தில் முழு சக்கரமே இயங்காமல் போவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ஒரு காலகட்டத்தில் செல்வாக்கு மிக்கதாக  கருதப்பட்ட ஓட்ட காலணா, ஓரணா, இரண்டணா, 25 பைசா, 50 பைசா எல்லாம் தற்போது செல்லாகாசுகளாக மாறி விட்டன. இதேநிலை தொடர்ந்தால் செல்லாக்காசு வரிசையில் பத்து ரூபாயும் சேர்வதற்கு வெகு தூரமில்லை.  இதன் மறைமுக பாதிப்பு 10 ரூபாய்க்கும் கீழ் எந்த பொருளையும் வாங்க முடியாத நிலை ஏற்படும். இன்றைய காலகட்டத்தில் பெட்ரோல் பங்க், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட கடைகளில் ரூ.99.50க்கு ஒரு பொருளை வாங்கினால் நூறு ரூபாயை கொடுத்து விட்டு பேசாமல் வந்து விடுகிறோம். 10 ரூபாய் நாணயம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தால், ரூ.90 மதிப்புள்ள பொருட்களுக்கு ரூ.100 தந்து விட்டு பேசமால் வரும் காலம் உருவாகும்.

   

  50 பைசா செல்லாததுதான். ஆனால் 10,000 பேரின் 50 பைசாவின் மதிப்பு ரூ.5000. இதுவே இப்படியென்றால் ரூ.10 நாணயத்தை செல்லாக்காசானால் நீங்களே கணக்கிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்...யார் தான் இதை தட்டிக்கேட்பது!

  - எஸ்.பி.தக்‌ஷினாமூர்த்தி, சீனியர் சப்-எடிட்டர், நியூஸ்18தமிழ்.காம்
  Published by:SPDakshina Murthy
  First published: