பிரியங்காவின் ஆச்சரியமான அரசியல் பிரவேசம்

பிரியங்காவின் ஆச்சரியமான அரசியல் பிரவேசம்
  • Share this:
மக்களவைத் தேர்தலுக்கு 100 நாட்களே உள்ள நிலையில் பிரியங்கா காந்தியை காங்கிரசின் பொதுச்செயலாளராகவும், கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் பொறுப்பாளராகவும் ராகுல்காந்தி நியமித்துள்ளார். இந்த நியமனம் அரசியல் வட்டாரத்தில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்பாராத நிகழ்வுகள் அரசியலில் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பை இந்த அரசியல் பிரவேசம் ஏற்படுத்தியுள்ளது. அரசியல் மதிப்பீட்டை மறு ஆய்வு செய்யும் தேவையை உருவாக்கியுள்ளது.

1999 ல் அமேதியில் சோனியாகாந்தி போட்டியிட்ட போது, அவருக்காக பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார். அங்கு பிரசாரம் செய்ததோடு அருகிலுள்ள ரேபரேலியிலும் பிரியங்கா பிரசாரம் செய்வார் என்ற அறிவிப்பு திடீரென்று வந்தது. ரேபரேலியில் ராஜிவ் காந்தியின் உறவினர் அருண் நேரு காங்கிரஸிலிருந்து விலகி பாஜக சார்பில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


தனது மாமா அருண் நேரு மறைந்த ராஜீவ் காந்திக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார். அவருக்கு ஒரு பாடம் புகட்டுங்கள் என்று பிரியங்கா பிரசாரம் செய்தார். இவர் தெருவோர கூட்டங்களில் பிரசாரம் செய்த காலத்திலேயே அருண்நேரு தோற்றுவிட்டார் என்று செய்திகள் பரவின.பிரியங்காவின் அந்த தெருவோர பிரசாரம் திட்டமிட்ட பிரசாரம் அல்ல. ரேபரேலியில் 1996, 1998-ல் காங்கிரஸ் தோற்றது. அதனால் காங்கிரஸ் அங்கு காலாவதியாகிப் போன கட்சியாக இருந்தது. அந்த ரேபரேலியில் அருண்நேரு 90, 000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்க நேரிட்டது. இதற்கு பிரியங்கா மீதான ஈர்ப்பே காரணம்.அப்போது உ.பி.யில் மட்டும் 10 இடங்களில் காங்கிரஸ் வென்றது. மொத்தத்தில் நாடு முழுவதும் 114 இடங்களையே காங்கிரஸ் பெற்றது. அந்தக் கால வரலாற்றின்படி பார்த்தால் காங்கிரஸ் பெற்ற இடங்கள் அந்தத் தேர்தலில்தான் மிகக் குறைவு. அதன் பின்பு 2004 தேர்தலில் காங்கிரஸ் மீண்டெழுந்ததும் 2014-ல் பெரிய தோல்வியைத் தழுவியதும் வரலாற்று போக்காக உள்ளது.

ம. பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பின் காங்கிரசின் மதிப்பு உயர்ந்துள்ளது.

ஊடகங்களில் ராகுலுக்கு எதிராக பிரசாரங்கள் நடந்த போதிலும் அவரை மட்டப்படுத்தும் வேலைகள் நடந்தாலும் பிரதமர் வேட்பாளர் போட்டியில் ராகுல் முன்னணியில் உள்ளார். மம்தா அல்லது மாயாவதி பிரதமராவார்கள் என்பதெல்லாம் காற்றில் கட்டப்படும் மாளிகைகள் தான். இது விஷயத்தில் ராகுல் அமைதியாக இருக்கிறார் என்பதற்காக அவரைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இடையே ஏற்பட்டுள்ள கூட்டணியை முன்வைத்து காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை என்ற மதிப்பீட்டுக்கு சிலர் வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் நடந்த கோரக்பூர், புல்பூர், சஹரன்பூர் ஆகிய இடைத்தேர்தல்களில் நிபந்தனையற்ற ஆதரவை சமாஜ்வாதி கட்சிக்கு பகுஜன் சமாஜ் அளித்ததால் மூன்று இடங்களிலும் பாஜக தோற்றது. பாஜக ஏன் தோற்றது என்று அறிய ராக்கெட் தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த 2014-க்குப் பின்பு அது செல்வாக்கை இழந்து வருகிறது என்ற பொது அறிவு மூலமே தெரிந்துகொள்ள முடியும்.

இதேபோல் 2014-ல் அமோக வெற்றி பெற்ற மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், டில்லியிலும் பாஜக-வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸுக்கு வருகிற மக்களவைத் தேர்தலில் கூடுதல் இடங்கள் கிடைக்கும். அதேபோல் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியும் கணிசமான இடங்களில் வெற்றி பெறும்.

இதன் விளைவாக, 1996-ல் ஏற்பட்ட அரசியல் சூழல் மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்நிலையில் அப்போது வலியுறுத்தப்பட்டது போல் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி தேவை என்று கோரமாட்டார்கள் என்று கருதுகிறேன். அரசியல் பாடம் கற்றுக்கொள்ளக் கூடியவர்கள் யாரும் அந்தத் தவறைச் செய்யாமல் 2004, 2009-ல் காங்கிரஸை முன்னிறுத்தியது போன்ற முடிவுக்கு வர வேண்டும்.

பிரியங்கா காந்தியின் நியமனத்துக்குப் பின் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் தேர்தல் விளையாட்டில் பின்னே ஓடிவரக் கூடிய ஒரு கட்சியாக இருக்கப் போவதில்லை. பாஜக-வுக்கு எதிரான வாக்குகள் தானாக பகுஜன், சமாஜ் கூட்டணிக்கு வந்து சேரப் போவதில்லை. அது காங்கிரஸுக்குக் கிடைக்கும் பட்சத்தில் அது பாஜக-வுக்கு உதவியாகப் போகுமா என்ற கேள்வி எழுகிறது.

கர்நாடகத் தேர்தலுக்குப் பின் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்குக் ஆட்சியை விட்டுக்கொடுத்தது போன்ற முடிவை ராகுல்காந்தி எடுக்கமாட்டார். இத்தகைய சூழலைக் கணக்கில் எடுத்துத்தான் பிரியங்கா காந்தியை ராகுல் களமிறக்கி இருக்கக்கூடும்.

சமாஜ்வாதி, பகுஜன் கூட்டணி காரணமாக கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் முன்னேறிய சாதியின் வாக்குகள் பாஜகவுக்கு செல்லும் வாய்ப்பு அதிகம். இதைத் தடுக்க பிரியங்காவின் தீவிர பிரசாரம் பெரிதும் உதவும்.

அரசியலில் ஒரு வாரம் என்பதே அதிக காலம் என்பார்கள். ஒரே இரவில் இப்போது மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதற்கிடையே காங்கிரசிலும் இரண்டு அதிகார மையங்கள் திடிரென்று முளைத்துள்ளன. இதைப் பார்த்துக் கொண்டு மத்திய அரசு அமைதியாக இருக்காது. பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கும் முடிவை ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டாரிடம் ஒப்படைக்கும்.

( கட்டுரையாளர்: வி. கிருஷ்ணா ஆனந்த், வரலாறு துறை பேராசிரியர், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், ஆந்திரா)

First published: January 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்