அன்னா ஹசாரே தான் கடைசி காந்தியா?

டெல்லியில் நடந்த ஊழலுக்கு எதிரான ஹசாரேவின் போராட்டம் சர்வதேச ஊடகங்களில் கெய்ரோவின் தாரீர் சதுக்கப் போராட்டத்துக்கு இணையாக ஒப்பிடப்பட்டது.

Web Desk | news18
Updated: February 12, 2019, 2:01 PM IST
அன்னா ஹசாரே தான் கடைசி காந்தியா?
அன்னா ஹசாரே
Web Desk | news18
Updated: February 12, 2019, 2:01 PM IST
கடந்த 2011-ம் ஆண்டு ‘கடைசி காந்தி’ என ஆதரவாளர்களாலும் ஊடகங்களாலும் அழைக்கப்பட்டவர் அன்னா ஹசாரே. மஹாத்மா காந்தியைப் போலவே கதர் ஆடை, வேட்டி, தொப்பி என அடியொத்து நாட்டு மக்களுக்கு அறிமுகமானவர் அன்னா ஹசாரே. ஆனால், இன்று தன்னுடைய 82-ம் வயதில் யாருடைய ஆதரவும் கோஷங்களும் இல்லாமல் தனித்து விடப்பட்டுள்ளார் ஹசாரே.

2011- 2013-ம் ஆண்டுகளைப் போல் ஹசாரேவுக்கு இன்றைய சூழலில் பெரிய ஆதரவோ கவனிப்போ இல்லை. சமீபத்தில் தன் சொந்த ஊரான மஹாராஷ்டிராவில் ஹசாரே 7 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். இந்தப் போராட்டத்துக்கு மக்கள் மத்தியிலும் சரி ஊடகங்கள் மத்தியிலும் சரி, போதிய கவனம் கிடைக்கவில்லை.

கடந்த 2011-ம் ஆண்டு ஊழலுக்கு எதிராகக் களத்தில் குதித்த அன்னா ஹசாரேவுக்கு நாடெங்கிலும் இருந்து ஆதரவுக் கரம் நீண்டது. ஆனால், அன்று போல் டெல்லியில் இல்லாமல் தனது சொந்த கிராமத்தில் நடத்தியதால் என்னவோ 2011-ம் ஆண்டில் கிடைத்த கவனமும் ஈர்ப்பும் 2019-ம் ஆண்டில் ஹசாரேவுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. ஆனால், அன்னா மேஜிக் 2019-ல் உண்மையில் எடுபடாமல் போனதன் காரணம் என்ன?

அன்னா ஹசாரே


2011-ம் ஆண்டில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காணச் செய்தது இதே ஹசாரே அலைதான். ஆனால், 2019-ம் ஆண்டில் உருவான ஹசாரே அலையை இன்றைய ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் பா.ஜ.க-வுக்கு ஒரு சின்ன அதிர்வைக் கூட ஏற்படுத்தவில்லை.

சொல்வதென்றால், ஏழு நாட்கள் எவ்வித கவன ஈர்ப்பும் இன்றி நடைபெற்ற ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்தை மஹாராஷ்டிராவின் பாஜக முதல்வர் தான் முடித்தேவைத்தார். ஊழலை ஒழிக்க அன்றிலிருந்து இன்று வரையில் போராடி வருபவர் ஹசாரே. ஆனால், இந்த 7 ஆண்டுகளில் குறிக்கோளையும் போராட்டத்தையும் ஹசாரே மறக்கவும் இல்லை, அதிலிருந்து மாறவும் இல்லை.

ஆனால், இதே 7 ஆண்டுகளில் நாடு ஹசாரேவை மறந்தது எப்படி? புதிய காந்தி திடீரென மக்களால் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது ஏன்? இந்த ஏழு ஆண்டுகளின் நிலை மாற்றத்தைப் புரிந்துகொள்ள நாம் ஹசாரேவின் சொந்த ஊரான ராலேகன் சித்தி கிராமத்துக்குச் சென்றோம்.

யார் இந்த அன்னா ஹசாரே?

அன்னா என்கிற கிசான் பாபுராவ் ஹசாரே மஹாராஷ்டிரா மாநிலத்தில் 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் மிகவும் பிரபலம். தனது சொந்த கிராமமான ராலேகன் சித்தியில் ஹசாரே ஏற்படுத்திய சமூக மாற்றங்களால் செய்தி நாளிதழ்களில் ஹசாரேவின் பெயர் இல்லாத நாட்களே இருக்காது.

1975-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்று சொந்த ஊர் திரும்பிய பின்னர் தான் ஹசாரே தனது கிராமத்தையே முற்றிலும் மாற்றிக்காட்டியுள்ளார். இந்திய ராணுவத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்த ஹசாரே, நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் பல்வேறு இடங்களில் பணியாற்றி உள்ளார்.

தனது மிலிட்டரி கால வாழ்க்கைக் குறித்து ஹசாரே ஒருமுறை பேசியபோது, ‘ராணுவ சேவையும் அங்கு எனக்குக் கிடைத்த அனுபவ வாழ்க்கையும் தான் என் வாழ்வின் குறிக்கோள்களை நிர்ணயித்தது. மஹாத்மா காந்தியின் கிராமப்புற மேம்பாடு மற்றும் சுவாமி விவேகாந்தரின் இலக்கிய எண்ணமும் என்னை வெகுவாகக் கவர்ந்தன’ என்றுள்ளார்.

1. காந்தியத்தை நோக்கியப் பயணம்

ஹசாரே திருமணம் முடிக்காதவர். தன் சொந்த வீட்டில் கூட தங்கி இருந்ததில்லை. ராலேகன் சித்தி கிராமத்தில் உள்ள ஒரு கோயிலில்தான் ஹசாரே வாழ்ந்துகொண்டிருக்கிறார். அங்கு இருப்பதுதான் அவருக்கு விருப்பமும் கூட.

தனது சொந்த முயற்சியாலேயே அந்த யாதவ்பாபா கோயிலைக் கட்டினார். இன்று அந்தக் கோயில்தான் ஹசாரேவின் வாழ்விடம். அவரது இயக்க நற்பணிகளின் தலைமையிடமும் அந்தக் கோயில்தான். கடந்த 1975-ம் ஆண்டிலிருந்து அந்தக் கோயிலில்தான் ஹசாரே வசித்து வருகிறார். ஆனால், அவரது இரு சகோதரர்கள் அதே ஊரில் தங்களது பரம்பரை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

ஹசாரே சகோதரர்கள் வசிக்கும் இல்லம்.


ஒருமுறை நியூஸ்18-க்காகப் பேட்டி அளித்த ஹசாரே கூறுகையில், “எந்தவொரு ஆசையும் எதிர்பார்ப்பும் இன்று வாழும் துறவி நான். என்னுடைய ஒரு லட்சியம், தன்னலம் இன்றி என் நாட்டுக்காகப் பணியாற்றுவது மட்டும்தான்” என்றுள்ளார். இதுவரையில் ஹசாரேவின் சகோதரர்கள் உள்ளிட்டக் குடும்பத்தார் யாரும் வெளியுலகில் தெரிந்ததில்லை. இவரது இயக்கமும் புகழும் அவர்கள் வாழ்வியலை எந்தவொரு வகையிலும் முன்னேற்றவில்லை. மிகவும் ஏழ்மை நிலையிலேயே அந்தக் குடும்பம் வாழ்ந்து வருகிறது.

2. கிராம சபை ஈடுபாடு- நகரமயமாக்கல் எதிர்ப்பு முதல் ஊழல் அமைச்சர்களை எதிர்த்தது வரை

சிறந்த நீர் மேலாண்மை மற்றும் தூய்மைக்காக மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே புகழ்பெற்ற கிராமமாக இருப்பது ஹசாரேவில் ராலேகன் சித்தி கிராமம். இந்தக் கிராமத்தில் ஹசாரே முன்னெடுத்த முதல் போராட்டமே, மதுவிலக்கு போராட்டம் தான். ஹசாரே கட்டிய யாதவ்பாபா கோயில் முழுக்க முழுக்க இயக்கப் பணிகளுக்காகவே கட்டப்பட்டு அந்தக் கிராம மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஹசாரேவின் முயற்சியால் உருவான ஏரிகள், கால்வாய்கள் மூலம் இன்றளவும் வறட்சியானக் கோடை காலத்திலும் ராலேகன் சித்தியில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டதில்லை.

3. ஹசாரேவுக்காக சாகவும் துணிந்த கிராமம்

பூனே- அவுரங்காபாத் இடையே உள்ள சிறிய கிராமம் தான் ராலேகன் சித்தி. அன்னா ஹசாரேவின் பெயராலேயே பிரபலமடைந்தது. வறட்சியின் பிடியில் வீழ்ந்துகிடந்த இந்தக் கிராமத்தையே இன்று நாட்டின் முன்னோடி கிராமமாக உயர்த்தியவர் ஹசாரே. நீடித்த கிராம வளர்ச்சிக்கு உதாரணமாக இக்கிராமம் உள்ளது.

”காந்தியின் கிராமப்புற மேம்பாட்டுக் கொள்கை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. இன்றளவும் ஒரு நாட்டுக்குத் தேவையான வளர்ச்சியை கிராம மேம்பாடு மட்டுமே தரும். நகரமயமாக்கல் தீர்வு இல்லை” எனக் கூறியுள்ளார் ஹசாரே.

கடந்த 1990-ம் ஆண்டிலிருந்து ராலேகன் சித்தி கிராமத்தைப் பார்வையிட வருவோர் எண்ணிக்கை அதிகமாகியது. சமயத்தில் சர்வதேச விருந்தினர்களையும் வரவேற்று உபசரிக்கும் இந்தக் கிராமம். அசாத்திய கிராமப்புற மேம்பாடுகள் மேற்கொண்ட அன்னா ஹசாரேவுக்குக் கடந்த 1992-ம் ஆண்டு நாட்டின் உயரிய பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

ராலேகன் சித்தி கிராமத்தை முன்னோடியாகக் கொண்ட முன்னேற்றமடைந்த மற்றொரு கிராமம் ஹிவ்ரே பஜார். ராலேகன் சித்தியிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது இக்கிராமம். அன்னா ஹசாரேவின் இயக்கத்தில் உள்ள ஹிவ்ரே பஜார் கிராமத்தைச் சேர்ந்த தத்தா அவரே கூறுகையில், “அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அழைத்தால் போது, எந்தவொரு கேள்வியும் கேட்காமல் ஒட்டுமொத்த கிராமமும் ஹசாரே முன்வந்து துணை நிற்கும். ஒட்டுமொத்த கிராமத்திலும் ஒரு அடுப்பு கூட எரியாது. நாங்கள் அனைவருமே அவரோடு இணைந்து உண்ணாவிரதம் இருப்போம். காந்திக்கு நிகரானவர் எங்கள் அன்னா. எங்களது தந்தை போன்றவருக்காக நாங்கள் உயிரைவிடவும் தயாராக இருக்கிறோம்.

ராலேகன் சித்தி கிராமத் தலைவர் ஜெய்சிங் மாபாரி கூறுகையில், “ஒரே குடும்பமாக ஹசாரேவுக்காக நாங்கள் ஆதரவு அளிப்போம். என்ன நடந்தாலும் உடன் இருப்போம். அன்னாவின் ஒரு அழைப்பு எங்களை ஒன்றிணைத்துவிடும்” என்றார்.

அன்னா ஹசாரே வசிக்கும் கோயில்.


4. ஆர்.டி.ஐ முதல் லோக்பால் வரை...

அன்னா ஹசாரே கிராம மேபட்டுக்குப் பின்னர் கிராம சபைக் கூட்டம் மற்றும் ஊழலுக்கு எதிரானக் கருத்துகளை முன்வைக்கத் தொடங்கினார். ஆர்.டி.ஐ என்னும் தகவல் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வே ஹசாரேவாலும் அவரது இயக்கத்தாகும் மட்டுமே இந்நாட்டுக்குக் கிடைத்தது. முதலில் மஹாராஷ்டிராவில் இருந்து தொடங்கிய ஹசாரே ஆர்.டி.ஐ குறித்த விழிப்புணர்வை மட்டுமல்லாமல் லோக்பால் குறித்தும் மக்களுக்காக முன் நின்று எடுத்துக் கூறியவர் அன்னா ஹசாரே.

5. உண்ணாவிரத ஆயுதம்:

காந்தியக் கொள்கையின் அடிப்படையிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தை மிகப்பெரும் ஆயுதமாகக் கருதுகிறார் ஹசாரே. கடந்த 25 ஆண்டுகளாக இதே ஆயுதத்தைத் தான் பயன்படுத்தி வருகிறார் ஹசாரே. கடந்த 2003-ம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் 4 பேருக்கு எதிராக ஹசாரே கையில் எடுத்த உண்ணாவிரத ஆயுதம் அன்றைய ஆளும் கட்சியை நன்கு பதம் பார்த்தது. இதே ஆயுதம் மத்திய ஆட்சியிலிருந்த அன்றைய காங்கிரஸ் கட்சியையும் விட்டுவைக்கவில்லை.

ராணுவத்தில் ஹசாரே


6. அரசியல் இல்லா சமூக இயக்கம்

அரசியலைவிட சமூக இயக்கம் மீது அதிக நம்பிக்கைக் கொண்டவர் ஹசாரே. இதனால்தான், ஆரம்பத்திலிருந்து எந்தவொரு கட்சிக்கும் ஹசாரே ஆதரவு அளித்ததில்லை. குறிப்பாக, ’அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கையும் இல்லை எதிர்பார்ப்பும் இல்லை’ என்றே கூறுவார் ஹசாரே. “அரசாங்கத்தில் ஏற்படும் மாற்றம் நாட்டை மாற்றாது. அமைப்பில் மாற்றம் வேண்டும். அதுதான் நாட்டை மாற்றும். இந்த மாற்றத்தை எந்தவொரு அரசியல் கட்சிகளாலும் கொண்டுவர முடியாது. இதனால், சமூக இயக்கங்கள் வலுப்பெற வேண்டும்” எனக் கூறியுள்ளார் ஹசாரே.

7. குழப்பமான அரசியல் நிலைப்பாடு

பலருக்கும் ஹசாரேவின் அரசியல் நிலைப்பாடு குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கும். ஒரு பெரிய அளவிலான மஹாத்மா காந்தியின் புகைப்படம் ஹசாரேவின் அறையில் மாட்டப்பட்டு இருக்கும்.

ஹசாரே, “எனது வாழ்வில் நான் எந்த அரசியல் கட்சியின் சார்பையும் எடுத்ததில்லை. எந்தவொரு கட்சிக்கு ஆதரவாகவோ எதிராகவோ நான் நின்றதில்லை” என்றுள்ளார்.

2011 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் லோக்பாலுக்காக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட ஹசாரே, அரசுக்கு எதிரானவராக அடையாளப்படுத்தப்பட்டார். அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்ததால் அன்றைய எதிர்க்கட்சியான பா.ஜ.க ஹசாரே போராட்ட இயக்கத்தைத் தனக்குச் சாதகமானதாக எடுத்துக்கொண்டது.

சமீபத்திய போராட்டம் ஒன்றில்கூட ஹசாரே, ‘என்னை பாஜக உபயோகப்படுத்திக் கொண்டது’ எனக் குறிப்பிட்டார். மேலும், “ஆர்.எஸ்.எஸ் உடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால், குறிப்பிட்ட ஒரு நிறக் கண்ணாடியை அணிந்து பார்த்தால் அனைவரும் அந்த நிறத்தில்தான் தெரிவார்” என ஹசாரேவை ஆர்.எஸ்.எஸ்-க்காரர் என அழைத்த விமர்சனங்களுக்கு எதிராகப் பேசினார்.

ராணுவ வீரராக ஹசாரே


8. அரவிந்த் கெஜ்ரிவாலும் அன்னா குழுவும்:

அரவிந்த கெஜ்ரிவாலும் இன்ன பிற அன்னா குழுவினரும் வரும் வரையில் ஹசாரேவின் போராட்டங்கள் மஹாராஷ்டிரா வரையிலேயே இருந்தது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலும் இன்ன பிற குழுவினரும் ஹசாரேவை தங்களது அரசியல் ஆதாயத்துக்காக உபயோகப்படுத்துக் கொண்டனர் என ஹசாரே ஆதரவாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

2011-ம் ஆண்டு ஹசாரே அலை பிரபலமடைந்த போது அன்னா குழுவை வழிநடத்திய அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா, கிரண் பேடி மற்றும் இதர முக்கியஸ்தர்கள் பலரும் ஹசாரேவால் ஆதாயம் தேடிக்கொண்டனர். ஆனால், அன்னா குழுவினராக அறியப்பட்ட மேற்கூறியவர்களின் உதவி பெரிது என்றே கூறுகிறார் ஹசாரே.

“சமூக இயக்கங்களில் அதுவரையில் போராடத நகரத்தின் நடுத்தர வர்க்கத்தினர் இவர்களால் தான் போராட்டங்களுக்கு வந்தனர்” என்று நியூஸ் 18 பேட்டியில் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் அரசியலில் இறங்கிய பின்னர் தன்னுடன் எந்த மேடையிலும் அவரை ஹசாரே ஏற்ற அனுமதிக்கவில்லை. “கட்சிகள் எனது போராட்டங்களுக்கு வந்து ஆதரவு அளிப்பது அவர்களது அரசியல் ஆதாயங்களுக்காக. ஆனால், என்னுடன் மேடையைப் பகிர்ந்துகொள்ள அவர்களை நான் அழைக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

9. அன்னா குழு- அன்றும் இன்றும்:

ஒரு காலத்தில் பலதரப்பட்டோரும் அன்னா குழுவில் இணைந்து இருந்தனர். சமூக ஆர்வலர் ஜி.பி.பிரதான் முதல் இயற்கை ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்களான யோகேந்திர யாதவ், மேதா பட்கர், அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி வரையில் அத்தனை பேரும் ஒரே குழுவில் இருந்தனர்.

ஆனால், இந்த குழுவினரில் ஒருவர் கூட 2019-ம் ஆண்டில் ஹசாரே உடன் இல்லை. புதிய இந்தியா கனவு கண்ட நடுத்தர நகர மக்களின் ஆதரவு இவர்கள் வெளியேறியதற்குப் பின்னர் ஹசாரேவுக்குக் கிடைக்கவில்லை.

இன்று அன்னா குழு என்ற ஒன்றே ஹசாரே உடன் இல்லை. ஹசாரே உடன் ஆரம்பத்திலிருந்து உடன் இருக்கும் அவரது கிராமத்தார்கள் தான் இன்றும் ஹசாரே உடன் தோள் கொடுத்து நிற்கின்றனர்.

“இம்முறை ஹசாரேவின் போராட்டத்தில் எவ்வித திட்டமும் முன்யோசனையும் இல்லை. இது போராட்டத்தின் முதல் இரண்டு நாள்களிலேயே தெரிந்துவிட்டது. ஹசாரே அவரது வயது முதிர்வு, பொருத்தமற்ற, சம்பந்தம் இல்லாத உண்ணாவிரதப் போராட்டத்தால் கவனம் பெறாமல் மோனார்” எனக் கடந்த பத்து ஆண்டுகளாக ஹசாரேவே உன்னிப்பாகக் கவனித்து வரும் பத்திரிகையாளர் சஹேப்ரோ கோக்னே கூறுகிறார்.

சர்வதேச அளவிலும் இந்தியாவின் புரட்சி நாயகனாக அறியப்பட்டவர் அன்னா ஹசாரே. டெல்லியில் நடந்த ஊழலுக்கு எதிரான ஹசாரேவின் போராட்டம் சர்வதேச ஊடகங்களில் கெய்ரோவின் தாரீர் சதுக்கப் போராட்டத்துக்கு இணையாக ஒப்பிடப்பட்டது. ஆனால், தனது கொள்கையை நீடிக்கச் செய்ய முடியாமல் ராலேகன் சித்தி உடன் முடிந்துவிடுவாரா அன்னா ஹசாரே என்ற பயம் எழுகிறது.

ஹசாரே காந்தி ஆக முடியாது. “2013-ம் ஆண்டு அன்னா குழு பிரிந்த பின்னர் தொடர்பு அற்றுப்போகக் கூடாது எனப் போராட்டங்களை நடத்தினேன். ஆனால், நாடு முழுவதும் பயணிக்கவும் போராடவும் எனக்கு ஆதரவும் இல்லை பணமும் இல்லை. நல்ல படிப்பறிவு இல்லாத ஒரு கிராமத்துக்காரனால் காந்தியாக எல்லாம ஆக முடியாது. நான் சாதாரண ஒரு துறவி” என்கிறார் அன்னா ஹசாரே.

- தமிழ் மொழிபெயர்ப்பு ராஹினி
First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...