பிசுபிசுத்த பேரணி: என்ன செய்யப் போகிறார் மு.க.அழகிரி? - சிறப்பு கட்டுரை

மு.க.அழகிரி (கோப்புப் படம்)

 • News18
 • Last Updated :
 • Share this:
  கருணாநிதியின் இரண்டாவது மூத்த மகன் மு.க.அழகிரி. முரசொலியின் மதுரை பதிப்பை பார்த்துக்கொள்ள மதுரைக்கு அனுப்பட்டவர், பலமுறை திமுகவில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இறுதியாக 2014-ம் ஆண்டு கட்சியில் இருந்து கருணாநிதியால் நீக்கப்பட்ட அவர், கருணாநிதி இறக்கும்வரை மீண்டும் திமுகவில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. இயல்பாகவே கோபமான மனிதராக அறியப்படும் அழகிரி, அவ்வப்போது கருணாநிதியின் அரசியல் வாரிசான ஸ்டாலினை கடுமையாக விமர்சிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அப்படிப்பட்டவர் இப்போது தன்னையும், தன் ஆதரவாளர்களையும் கட்சியில் சேர்த்துக்கொண்டால் போதும் ஸ்டாலினை தலைவராக ஏற்கவும் தயார் என்கிறார். ஆனால் திமுக தரப்பிடமிருந்து அழகிரிக்கு ஆதரவாக எந்த சமிக்கையும் வரவில்லை. இன்னிலையில் மு.க.அழகிரியின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும்?

  மு.க அழகிரி திமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டதாகவும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் திமுக தலைவர் கருணாநிதியின் தீர்மானத்தின் அடிப்படையில், கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.

  அதன்பின் மு.க.அழகிரி மதுரையிலேயே இருந்து வந்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அப்போது அந்த தேர்தல் தோல்விக்கு ஸ்டாலின்தான் காரணம் என்றும், ஸ்டாலின் கட்சியை அழித்துவிடுவார் என்றும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். இதனால் ஸ்டாலின், திமுகவில் தான் வகித்துவந்த பொருளாளர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளையும் ராஜினாமா செய்ய முன்வந்ததாக தகவல் வெளியானது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, “அழகிரியை பற்றி என்னிடம் கேட்காதீர்கள்; அவரை நான் மறந்து பல நாட்கள் ஆகிறது; அழகிரி என்று ஒரு மகனே எனக்கு இல்லை” என்று கூறினார்.

  அதன்பிறகு அழகிரி குறித்த எந்த செய்திகளும் வெளிவராத நிலையில், திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவாக இருந்தபோது கடந்த ஜூலை மாதம் 8-ம் தேதி சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு மு.க.அழகிரி சென்றார். அங்கு கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் ஆகியோரை சந்தித்து அவர்களது உடல்நலம் குறித்து விசாரித்தார். சிறிது நேரத்துக்குப் பின், அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

  திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, திமுகவின் உண்மையான விசுவாசிகள் அனைவரும் என் பக்கம்தான் இருக்கிறார்கள் என்று அழகிரி கூறினார். மேலும் கருணாநிதியின் நினைவிடத்திற்கு குடும்பத்தோடு சென்றவர், என் ஆதங்கம் முழுவதையும் அப்பா கருணாநிதியிடம் கொட்டிவிட்டேன். ஆதங்கங்கள் எல்லாம் தற்போதைய அரசியல் நிலை குறித்துதான் என்றார்.

  மேலும் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியவர், தி.மு.க.வில் என்னை சேர்க்கவில்லை என்றால், பின்விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று திமுக-வுக்கு எச்சரிக்கை விடுத்தார். கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் அனைவரும் என்னுடைய பக்கம்தான் இருக்கிறார்கள். அவர்கள் என்னை ஆதரித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு காலம் பதில் சொல்லும், இப்போது அது உங்களுக்கு புரியாது என்று கூறி அனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தார்.

  இதற்கிடையில் ஆகஸ்ட் 28-ம் தேதி ஸ்டாலின் திமுக தலைவராக பதவியேற்றார். இதற்கு முன்னதாக, செப்டம்பர் 5-ம் தேதி  கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று தனது பலத்தை நிரூபித்துக்காட்டுவேன் என்று கூறியிருந்தார். இவை அனைத்திற்கும் திமுக தலைமையும், ஸ்டாலினும், அமைதியாகவே இருந்து வந்தனர். மேலும் அழகிரி அறிவித்தபடி, செப்டம்பர் 5-ம் தேதி அமைதி பேரணியை தொடங்கினார். சென்னை அண்ணா சிலையிலிருந்து கருணாநிதியின் நினைவிடம் வரை நடந்த இந்த அமைதிப் பேரணியில் 8,000 முதல் 10,000 வரையிலான தொண்டர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.

  அமைதி பேரணியில் அழகிரி


  இந்தப் பேரணியில் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று அழகிரியால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேரணிக்கு வந்த கூட்டம் அவருக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்தது. அந்த கோபத்தை அழகிரி தனது ஆதரவாளர்களிடமே காட்டிக் கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தவர், இது அமைதிக்கான பேரணி என்றும் அரசியல் பேரணி இல்லை என்றும் தனது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு பேசினார். அதனைத் தொடர்ந்து அழகிரிக்கு ஆதரவாக அதிமுக, அமுமுக, பாஜக ஆதாரவாளர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். பேரணி நடந்த போது #AlagiriForDmk என்ற ஹேஷ்டாக்கில் தொடர்ந்து அவர்கள் பதிவுகளை இட்டனர்.

  அதற்கு சாட்சியாக அழகிரியின் அமைதி பேரணி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது என்று பாஜக-வை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். அழகிரியை பெரிதுபடுத்தி காட்டுவதன் மூலம் திமுகவை பலவீனப் படுத்திவிடலாம் என்று கருதினர்.

  பலத்தை நிரூபிப்பேன் என்ற சூளுரையுடன் தொடங்கப்பட்ட பேரணி கூட்டமில்லாமல் பிசுபிசுத்ததால் ‘அமைதிப் பேரணி’ என்று அழகிரியாலேயே அறிவிக்கப்பட வேண்டிய சூழல் உருவானது. தற்போதைய நிலையில் ஸ்டாலினும் சரி, திமுகவில் உள்ள மற்ற மூத்த நிர்வாகிகளும் சரி கட்சிக்குள் இரட்டை தலைமை உருவாவதை விரும்பவில்லை. எனவே அழகிரியின் அடுத்த நகர்வு பாஜகவை நோக்கி இருக்கக் கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். அல்லது திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் தனது செல்வாக்கை பயன்படுத்தி திமுகவை வீழ்த்துவதன் மூலம் தென்மாவட்டங்களில் தன்னுடைய துணையில்லாமல் கட்சியால் வெல்ல முடியாது என்ற நிலையை உருவாக்கப் போராடுவார் என்றும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  - செ.வைஜெயந்தி, உதவி ஆசிரியர், நியூஸ்18தமிழ்.காம்
  Published by:Vaijayanthi S
  First published: