Home /News /special-articles /

வண்ணங்கள் சொல்லும் கதை...!

வண்ணங்கள் சொல்லும் கதை...!

சென்னையின் பல்வேறு  குடிசைப்பகுதிகளில் வசித்து வந்தவர்களுக்கு அரசு கட்டி தந்துள்ள மாற்று குடியிருப்புகளை கொண்டது தான் கண்ணகி நகர், எழில் நகர், சுனாமி அடுக்குமாடி கட்டிடங்கள். அங்கு நிலவும் புறச்சூழலை அழுகுப்படுத்த கட்டிட சுவர்களில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலயா, கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் சென்னையிலிருந்து ஆறு கலைஞர்களும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து நான்கு கலைஞர்களும் கொண்டு சென்னை மாநகராட்சி மற்றும் ஸ்டார்ட் இந்தியா தன்னார்வ அமைப்புடன் இணைந்து எழில் நகரில் உள்ள 14 சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

முப்பையின் தாராவி, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட ஐந்து நகரங்களில் ஏற்கெனவே ஓவியங்கள் தீட்டியுள்ள அனுபவம் கொண்ட ஸ்டார்ட் ( ஸ்ட்ரீட் ஆர்ட்) இந்தியா தற்போது சென்னை வந்துள்ளது. "ஓவிய கண்காட்சிகளுக்கு எல்லாம் யார் செல்கிறார்? அவை யாருக்காக வரையப்படுகின்றன? இது போன்று மக்கள் வாழும் பகுதியில் வரைந்தால் தான் சக்திவாய்ந்த கலையை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். எந்தவொரு பகுதியிலும் வரைவதற்கு முன் அந்த பகுதி மக்களைப் பற்றி புரிந்து கொள்வோம். அதன் பின் அவர்களை பிரதிபலிக்கும் வகையில் வரைவோம். " என்கிறார் ஸ்டார்ட் இந்தியா சிறப்பு திட்ட இயக்குநர் விகாஸ்.

முதலில் இந்த ஓவியங்கள், கடலை நோக்கி உயர்ந்து நிற்கும் நொச்சிக்குப்பம் குடியிருப்புகளையே அலங்கரிக்க இருந்தன. மக்களும் ஸ்டாரட் இந்தியாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆனால் சென்னை மாநகராட்சி முயற்சியில் இது நடைபெறுகிறது என தெரிந்தவுடன் அவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியாக இது இருக்குமோ என அச்சமடைய தொடங்கினர். "நாங்கள் இன்று வரைவோம். நாளை சென்று விடுவோம். ஆனால் இந்த ஓவியங்களை மக்கள் கொண்டாட வேண்டுமானால் அவர்களின் முழுமனதுடன் பங்கேற்பும் அவசியம். எனவே கண்ணகி நகருக்கு திட்டத்தை மாற்றிக் கொண்டோம்" என்றார் விகாஸ்.

கண்ணகி நகரில் 14 சுவர்களில் ஓவியங்கள் வரும் மார்ச் மாத முதல் வாரத்துக்குள் வரைந்து முடிக்கப்படவுள்ளன. ஒரு தனியார் பெயிண்ட் நிறுவன உதவியுடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

"சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் இங்கு உள்ளனர். வாழ்க்கை எவ்வளவு இன்னல்களை கொண்டதாக இருந்தாலும் எப்போதும் நம்பிக்கை நமக்கு துணை புரியும் என இந்த ஓவியத்தின் மூலம் நான் கூற விரும்பினேன்" என கூறுகிறார் பெங்களூரூவில் இருக்கும் மகாராஷ்ட்ராவை சேர்ந்த ஓவிய கலைஞர் காஷ்மீரா சரோடே.

காஷ்மீரா சரோடே (Picture: Saradha/News18)


"இந்த பகுதிக்குள் நுழைந்தவுடன் என்னை உற்சாகமாக வரவேற்றது இப்பகுதி குழந்தைகள். எனவே அவர்களின் மலர்ந்த முகங்களை வரைய வேண்டும் என நினைத்தேன். ஒரு ஆண் குழந்தையையும் ஒரு பெண் குழந்தையையும் வரைந்து வருகிறேன். மாலை நேரத்தில் பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகள் எங்களுடன் சேர்ந்து ஆர்வத்துடன் வரைய தொடங்குகின்றனர்" என்று கூறுகிறார் சென்னையை சேர்ந்த கலைஞர் ஏகில்.

ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு அனுபவத்தை ஒவ்வொருவருக்கு தரும். அந்த இரு குழந்தைகளின் ஓவியத்துக்கு முன் உள்ள மைதானம் அங்கு கட்டப்பட வேண்டிய பள்ளிக்காக ஒதுக்கப்பட்டது. அங்கும் இங்கும் சேறு படிந்துள்ள அந்த மைதானத்தில் நின்றுக் கொண்டிருந்த இரு சிறுவர்கள், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பிட்டு "டேய் ஜெயலலிதா அவங்களோடு சின்ன வயசு முகம் மாறி இருக்குதுடா" என்று பேசிக் கொள்கின்றனர்.

(Image:Saradha/News18)


"கிணற்றில் விழுந்த ஒரு பையனை போல் இருக்கிறது எனவும் குழந்தைகள் கூறுகின்றனர். யார் அது? " என கேட்கிறார் ஏகில்.

சில மாதங்களுக்கு முன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் என்றவுடன் உள்ளிருந்து மேல்நோக்கி பார்க்கும் அந்த சிறுவனின் முகம் தான் நம் நினைவில் நிற்கும். இந்த ஓவியம் அந்த குழந்தைகளுக்கு சுஜித்தை நினைவூட்டியுள்ளது.

(Image:Saradha/News18)


கருப்பு வெள்ளை நிறத்தில் குழந்தைகளின் முகங்கள் தீட்டப்பட்டிருப்பதற்கு அருகில் பல வண்ணங்களில் ஒரு மீனவ பெண்ணின் ஓவியம் தீட்டப்படுகிறது. வெளிச்சம் நுழையாதபடி வடிவமைக்கப்பட்டிருக்கும் அந்த கட்டிடத்தில் உடைந்த படிகட்டுகள் வழியே ஏறி வந்து தனது மூன்றாவது மாடியிலிருந்து அந்த ஓவியங்களை எட்டிப் பார்க்கும் வசந்தி, "ஏன் கருப்பு வெள்ளையில் வரையறாங்க?  பக்கதுல இருக்குற மாதிரி நல்லா கலரா வரைஞ்சா நல்லா இருக்கும்ல" என்கிறார்.

(Image:Saradha/News18)


அருகில் நின்றுக் கொண்டிருந்த முனியப்பனுக்கு இந்த ஓவியங்கள் ஏன் வரையப்படுகின்றன என புலப்படவே இல்லை. "நல்லா இருக்குல பாக்குறதுக்கு, அதான் வரையறாங்க" என்று அருகில் இருந்தவர் கூறிய பதில் அவருக்கு திருப்தியளிக்கவில்லை. "ஏதாவது விளம்பரமா?" என்று மீண்டும் கேட்கிறார். "இந்த கட்டிடத்துல தண்ணி ஒழுகுது என பல முறை புகார் எழுதி கொடுத்தும் நடவடிக்கை இல்ல. நானே எங்க வீட்ல கொஞ்சம் பூசி வச்சுருக்கேன். கட்டிடமே எப்போ வேணா இடிஞ்சு விழுற மாதிரி இருக்கு. இதுல எதுக்கு பெயிண்ட்?" என கேள்வி எழுப்புகிறார் அவர்.

முனியப்பன் (Image:Saradha/News18)


கண்ணகி நகரில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் உள்ளன, 1998- 2009 கட்டப்பட்டவை, எழில் நகரில் 6 ஆயிரம் வீடுகள் 2009-12 ல் கட்டப்பட்டவை, சுனாமி குடியிருப்புகள்  2 ஆயிரம் வீடுகள் 2009-12ல் கட்டப்பட்டவை என மொத்தம் 23 ஆயிரத்து 704 வீடுகள் உள்ளன.

கண்ணகி நகரில் உள்ள குடியிருப்புகளின் பராமரிப்பு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பொறுப்பில் உள்ளது.  இது குறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரியிடம் கேட்ட போது, "அவ்வப்போது வரும் புகார்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. ஆனால் கட்டிடங்களை முழுமையாக புனரமைக்கும் திட்டம் ஏதும் இல்லை " என்றார்.

மோசமான நிலையில் வீடுகள் (Image: Saradha/News18)


தென்சென்னை மண்டல் மாநகராட்சி இணை ஆணையர் ஆல்பி ஜான் இது குறித்து பேசுகையில், "தமிழ்நாட்டின் முதல் கலைக்கிராமத்தை உருவாக்குகிறோம். இந்த ஆண்டு மட்டுமல்ல, தொடர்ந்து அடுத்தத்த ஆண்டுகளும் தொடரும். இதனால் மற்ற பகுதி மக்கள் அங்கு வருவார்கள். ஓர் உரையால் ஏற்படும். சிறு வணிகங்கள் பெருகும்" என்றார்.

Also See...
Published by:Sankar
First published:

Tags: Chennai

அடுத்த செய்தி