தமிழகம், தமிழீழம், வி.பி.சிங் !

வி.பி.சிங்

வி.பி.சிங்

VP Singh டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், டாக்டர் ராம் மனோகர் லோஹியா ஆகியோர் கண்ட கனவை நனவாக்கியவர் இடஒதுக்கீட்டு நாயகன் வி.பி.சிங்

  • Share this:
உத்தரப்பிரதேசத்தில் பிறந்து இந்தியாவின் பிரதமராக உயர்ந்த வி.பி.சிங்குக்குத் தமிழகத்தோடு நெருக்கமான தொடர்பு உண்டு. தமிழகத்தில் உயிர்நாடிப் பிரச்னையான காவிரி பிரச்னையைத் தீர்க்கும் முயற்சியில் வி.பி.சிங்கின் பங்கு முக்கியமானது. தமிழகத்தின் அரசியல் பேசுபொருள்களுள் ஒன்றான ஈழத்தமிழர் பிரச்னையில் வி.பி.சிங் எடுத்த முடிவு வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றையும்விட முக்கியமாக, தமிழகத்தின் முதன்மையான போராட்டக்களமான சமூகநீதிப் போராட்டக் களத்தோடு தன்னைப் பிணைத்துக்கொண்டவர் வி.பி.சிங். சமூகநீதியைச் சாத்தியப்படுத்தும் முயற்சியில் தமிழகத்தில் நடந்துவரும் தொடர் போராட்டப் பயணத்தின் முக்கியமான மைல்கல் என்று மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த அவர் எடுத்த துணிச்சலான முடிவைச் சொல்லவேண்டும்.

இப்படி, தமிழகத்தின் அரசியலோடும் உணர்வுகளோடும் வி.பி.சிங் நெருக்கமாக இணைந்த புள்ளிகளை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்கிறது இந்தக் கட்டுரை.

1989 மக்களவைத் தேர்தலில் அறிவிக்கப்படாத பிரதமர் வேட்பாளராகவும் தேசிய முன்னணியின் பிரசார பீரங்கியாகவும் வி.பி.சிங் செயல்பட்டார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தேர்தல் முடிவுகள் வெளியானபோது ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருந்தது. எதிர்க்கட்சிகள் வரிசையில் ஜனதா தளமும், பாஜகவும் முன்னணியில் இருந்தன.

அப்போது தேசிய முன்னணிக்கு ஆட்சியமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இல்லை. ஆகவே, பாஜக, இடதுசாரிகளின் ஆதரவோடு தேசிய முன்னணி ஆட்சியமைக்கத் தயாரானது. பிரதமர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் வி.பி.சிங். அவரது அமைச்சரவையில் தமிழகத்துக்கும் பங்களிப்பு கொடுக்க விரும்பினார். ஆனால் அப்போது தேசிய முன்னணியில் இடம்பெற்ற திமுகவுக்கு ஒற்றை மக்களவை உறுப்பினர்கூட இல்லை.

ஆனாலும், தேசிய முன்னணியை உருவாக்கியதில் திமுக தலைவர் கருணாநிதியின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், தமிழகத்தைக் கெளரவப்படுத்தும் வகையிலும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் முரசொலி மாறனை அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார் வி.பி.சிங். மத்திய அமைச்சரவையில் திமுக இடம்பெற்றது அதுதான் முதன்முறை.

பிரதமர் பொறுப்பேற்றபிறகு தமிழகம் வந்த பிரதமர் வி.பி.சிங்குக்கு சென்னையில் பாராட்டுவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் அவருக்கு முக்கியமான கோரிக்கையை வைத்தார் தமிழக முதல்வர் கருணாநிதி. அது, சென்னையில் இருக்கும் இரண்டு விமான நிலையங்களுக்கு காமராஜர், அண்ணா பெயர்களைச் சூட்டவேண்டும் என்பதுதான். உடனடியாக ஹாட்லைனில் டெல்லிக்குத் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் வி.பி.சிங், சென்னை உள்நாட்டு விமான முனையத்துக்கு காமராஜர் பெயரும், பன்னாட்டு விமான முனையத்துக்கு அண்ணா பெயரும் சூட்டப்படும் என்று மேடையிலேயே அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது நடந்த முக்கியமான காரியங்களுள் ஒன்று, இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிகாக்கும் படையை முழுமையாகத் திரும்பப்பெற்ற நிகழ்வு. உண்மையில், ராஜீவ் பிரதமராக இருந்தபோதே படைகளைத் திரும்பப்பெறுவது குறித்த நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தன. ஆனால் அது படிப்படியாகவும் மந்தகதியிலுமே நடந்தது. ராஜீவ் – பிரேமதாசா ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இந்திய அமைதிப்படை திரும்புமா என்பதில் சந்தேகம் எழுந்தது. எவ்வளவு காலத்துக்கு இந்திய அமைதிப்படை இலங்கையில் தொடர்கிறோ அவ்வளவு காலத்துக்குப் பதற்றம் தொடரும் என்பது போன்ற சூழல் இருந்தது.

இந்தப் பின்னணியில்தான் தமிழகத்தில் இருந்து அமைதிப்படையை முழுமையாகவும் விரைவாகவும் திரும்பப்பெறவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அப்போது பிரதமர் வி.பி.சிங்கிடம் இந்திய அமைதிப்படை விவகாரம் கொண்டுசெல்லப்பட்டது. அதனைப் பரிசீலித்த அவர், ”1990 மார்ச் மாதத்துக்குள் இந்திய அமைதிப்படையின் கடைசி வீரர் இந்தியா திரும்புவார்” என்று உறுதியாக அறிவித்தார். அதன்பிறகே அமைதிப்படை விரைந்து இந்தியா திரும்பியது.

1990 மார்ச் 24 அன்று இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு முழுமையாக வெளியேறியது. அதுநாள்வரை இந்திய அமைதிப்படையின் கட்டுப்பாட்டிலிருந்த பல பகுதிகள் விடுதலைப்புலிகளின் அதிகார வரம்புக்குள் சென்றது அதன்பிறகுதான். தொண்ணூறுகளுக்குப் பிறகு அந்தப் பகுதிகளைத்தான் தமிழீழம் என்றனர் விடுதலைப்புலிகள்.

அப்போது இந்திய அமைதிப்படைக்கு சென்னை துறைமுகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நிகழ்வில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி பங்காற்காமல் தவிர்த்துவிட்டார். இலங்கையில் தமிழ் மக்கள் மீது இலங்கை ராணுவம் கொடுந்தாக்குதலைத் தொடுத்ததால் அமைதிப்படையைக் கடுமையாக விமர்சித்த அவர், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறி, பிறகு அடங்கிப்போனது.

அதன்பிறகு வி.பி.சிங் தமிழகத்துக்காகச் செய்த முக்கியமான காரியங்களுள் ஒன்று, காவிரி நடுவர் மன்றத்தை அமைத்துக் கொடுத்தது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த காவிரி நதிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் உடனடியாகத் தீர்ப்பாயம் அமைக்கவேண்டும் என்று பிரதமர் வி.பி.சிங்கிடம் வலியுறுத்தினார் தமிழக முதலமைச்சர் கருணாநிதி. அப்படியான கோரிக்கை வரும்போதெல்லாம் ‘இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்’என்று சொல்வதுதான் மத்திய அரசின் பாணி. ஆனால் பிரதமர் வி.பி.சிங்கிடமிருந்து அப்படியான யோசனை வரவில்லை. அதேசமயம், தீர்ப்பாயம் அமைப்பது குறித்தும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காவிரி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 1990 பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தது. அப்போது 1990 ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் தமிழகமும் கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்றும், தவறினால், சிக்கலின் நிறைகுறை அடிப்படையில் நாங்களே தீர்ப்பளிப்போம் என்று கறாராகச் சொன்னது உச்சநீதிமன்றம்.

இருமாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தன. பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்றது கர்நாடக அரசு. பிரச்னையை தீர்ப்பாயத்திடம் விட்டுவிடவேண்டும் என்றது தமிழ்நாடு அரசு. நடந்த நிகழ்வுகளை எல்லாம் பரிசீலித்த பிரதமர் வி.பி.சிங், பேச்சுவார்த்தைகளால் இனி பலனில்லை என்ற தமிழகத்தின் கருத்தையே மத்திய அரசின் கருத்தாகப் பதிவுசெய்ய உத்தரவிட்டார். இருதரப்புப் பிரமாணப் பத்திரங்களையும் பரிசீலித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பாயம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, 2 ஜூன் 1990 அன்று காவிரி நதிநீர்த் தீர்ப்பாயத்தை அமைத்துக் கொடுத்தார் பிரதமர் வி.பி.சிங்.

பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்திலிருந்து நீடித்துக்கொண்டிருந்த காவிரி பிரச்னைக்கான தீர்வை நோக்கிய பயணத்தில் நடுவர் மன்றம் என்கிற காவிரி நதிநீர்த் தீர்ப்பாயத்தை அமைத்துக்கொடுத்து, வரலாற்றுத் திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தார் வி.பி.சிங். அது தமிழக மக்களிடம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

காவிரி பிரச்னை என்பது தமிழகம் சார்ந்த பிரச்னை. இன்னும் சற்று விரித்துப் பார்த்தால், தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களுக்கான பிரச்னை. ஆனால் சமூக நீதி என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பிரச்னை. என்றாலும், சமூகநீதி விஷயத்தில் தொடர் போராட்டங்கள் நடத்திவரும் மண், தமிழகம். அந்த வகையில், தமிழகத்தோடு நெருக்கமாக இருக்கும் சமூகநீதிப் பிரச்னைக்குத் தீர்வுகாண ஆயத்தமானார் பிரதமர் விவகாரம். அது, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தும் திட்டம்.

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை திராவிடர் கழகம், திமுக உள்ளிட்ட கட்சிகளும் சமூகநீதி ஆர்வலர்களும் போராளிகளும் தொடர்ச்சியாக முன்வைத்துக் கொண்டிருந்தனர். தேசிய முன்னணியின் ஆலோசனைக் கூட்டங்களின்போது மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொன்னார் தமிழக முதலமைச்சர் கருணாநிதி. எல்லாவற்றையும் கணக்கில்கொண்டே மண்டல் விவகாரத்தைக் கையிலெடுத்தார் வி.பி.சிங்.

மத்திய அரசு மற்றும் மத்திய அரசு சார்புடைய நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பது அந்த ஆணையத்தின் முதன்மையான பரிந்துரை. அதற்கு உயிர்கொடுக்கத் தயாரான அவர், உடனடியாக மாநில அரசுகளுக்குக் கடிதம் எழுதி, அவர்களுடைய கருத்தைக் கோரினார். அப்போது இந்தியாவின் பல மாநில முதல்வர்களும் கருத்துகளைத் தெரிவித்தனர். அவர்களில் முதலில் கருத்து தெரிவித்தது தமிழகம் என்று பதிவுசெய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பிரதமர் வி.பி.சிங்.

அதனைத் தொடர்ந்து 1990 ஆகஸ்டு 7 அன்று மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு நிறுவனங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பை நாடாளுமன்றத்தில் வெளியிட்டார் பிரதமர் வி.பி.சிங். அப்போது, ”டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், டாக்டர் ராம் மனோகர் லோஹியா ஆகியோர் கண்ட கனவை நனவாக்க மத்திய அரசு எடுத்த துணிச்சலான நடவடிக்கைதான் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் மீதான முடிவு” என்ற பிரதமர் வி.பி.சிங், “இந்த நாட்டில் சமூக நீதிக்குப் போராடிய மாபெரும் தலைவர் பெரியார் ராமசாமியின் எண்ணங்களை நனவாக்குகின்ற மண்டல் கமிஷனுடைய அறிக்கை” என்று பெருமிதத்துடன் முழங்கினார்.

மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தும் விவகாரத்தில் அரசுக்கு ஆதரவு கொடுத்து வரும் எங்களிடம் பிரதமர் வி.பி.சிங் ஆலோசனை நடத்தவில்லை என்று குற்றம்சாட்டினார் பாஜக தலைவர் அத்வானி. நாடு முழுக்க சாதி வன்முறையைப் பற்றவைத்து விட்டீர்கள் என்று பிரதமர் வி.பி.சிங்கை விமரிசித்தார் எதிர்க்கட்சித் தலைவர் ராஜீவ். அரசுக்கு ஆதரவளித்த கட்சி, பிரதான எதிர்க்கட்சி, சொந்தக் கட்சியில் இருந்த எதிர்ப்பாளர்கள் என்று மும்முனைத் தாக்குதலில் சிக்கினார் பிரதமர் வி.பி. சிங்.

நாடு முழுக்க பதற்றம் ஏற்பட்டது. எந்த நேரத்திலும் வி.பி.சிங் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற சூழல் உருவானது. அநேகமாக மண்டல் கமிஷன் விவகாரத்தை முன்வைத்து பாஜக, வி.பி.சிங் அரசின் ஆதரவுக்குக் கொடுத்துவரும் ஆதரவைத் திரும்பப் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் பாஜகவோ மண்டல் விவகாரத்துக்குப் பதிலாக வேறொரு விவகாரத்தைக் கையில் எடுத்தது. அது, அயோத்தி.

பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமருக்குக் கோயில் கட்டுவதற்கான கரசேவைக்கு ஆதரவு திரட்டும் வகையில் ரத யாத்திரை செல்லத் தயாரானார் அத்வானி. அந்த யாத்திரை மத வன்முறையைத் தூண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் எச்சரித்தனர். குறிப்பாக, அத்வானியின் ரதம் பீகாருக்குள் நுழைந்தால் அடுத்த நொடி அத்வானி கைது செய்யப்படுவார் என்றார் பீகார் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ்.

பயணத்திட்டத்தின்படி அத்வானியின் ரதம் பீகார் மாநிலம் சமஸ்திபூருக்குள் நுழைந்தது. தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அத்வானியைக் கைது செய்தது பீகார் மாநில அரசு. அதனைத் தொடர்ந்து உடனடியாக கட்சியின் தேசிய செயற்குழுவைக் கூட்டி, தேசிய முன்னணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப்பெற்றது பாஜக.

அதனைத் தொடர்ந்து வி.பி.சிங் அரசு பெரும்பான்மையை இழந்தது. என்றாலும், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் பிரதமர் வி.பி.சிங். அரசுக்கு அரசுக்கு ஆதரவாக 142 வாக்குகளும் எதிராக 346 வாக்குகளும் விழுந்தன. விளைவு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வி.பி.சிங் அரசு வீழ்த்தப்பட்டது.

மக்களவை உறுப்பினர் இல்லாத நிலையிலும் தமிழகத்துக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து, தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்னையான காவிரி நதிநீர்ச் சிக்கலைத் தீர்ப்பதற்கான பாதையை அமைத்துக் கொடுத்து, தமிழகத்தின் முதன்மையான கொள்கை முழக்கங்களுள் ஒன்றான சமூகநீதியைச் சாத்தியப்படுத்த மிகப்பெரிய முடிவை எடுத்தவர் வி.பி.சிங். அதன் காரணமாகத் தனது ஆட்சியையே இழக்கவேண்டியிருக்கும் என்றபோதும் அதுபற்றிக் கவலையின்றிச் செயல்பட்டு, ஆட்சியை இழந்தவர்.

பிரதமர் பதவி பறிக்கப்பட்டபிறகும்கூட அதே கொள்கை உறுதியோடு தமிழகத்துக்கு வந்தார். பிரதமராகப் பொறுப்பேற்று வந்தபோது எப்படியான பிரம்மாண்ட வரவேற்பு தரப்பட்டதோ அதேபோன்ற வரவேற்பைக் கொடுத்து வி.பி.சிங்கைக் கெளரவப்படுத்தி, பெருமைகொண்டது தமிழகம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: