• HOME
 • »
 • NEWS
 • »
 • special-articles
 • »
 • வேதாந்தம் : இந்தியாவின் ராஜதந்திர யுக்திகளுக்கு வழிகாட்டும் ஆன்மிக ஆயுதம்

வேதாந்தம் : இந்தியாவின் ராஜதந்திர யுக்திகளுக்கு வழிகாட்டும் ஆன்மிக ஆயுதம்

வேதாந்த இலக்கியம் காலங்காலமாக இந்தியாவின் ராஜ தந்திரங்களுக்கும், போர் வியூகங்களுக்கும் ஓர் சக்திவாய்ந்த வழிகாட்டியாக இருந்து வருகிறது.

 • Share this:
  இந்தியா விடுதலை பெற்ற பல தசாப்தங்களுக்கு பின்னர் நாட்டிற்கு ஓர் வரமாக 2014 மற்றும் 2019- ல் தனிப் பெரும்பான்மையான ஆட்சி அமைக்கப்பட்டது. இதற்கு நம் தலைமுறையின் நாயகன், முன்மாதிரி தலைவர் பிரதமர் மோடியே முக்கிய காரணம். அவர் வெற்றிகரமாக நாட்டின் வாக்காளர்களை ஈர்த்தார். இந்தியாவின் ஆன்மாவுடன் தொடர்புகொள்வதற்காக நரேந்திர மோடி தனது ஆன்மாவை அர்ப்பணித்துள்ளார். அவரின் இந்த திறன் வரலாற்றில் அபூர்வமானது. அவருக்கு முன்பாக இதை செய்தவர் தேசத்தந்தை மகாத்மா காந்தி.

  தனிப்பட்ட முறையில் வேதங்கள் மீது அபிமானம் கொண்டவர் பிரதமர் மோடி. தூய்மை இந்தியா போன்ற பல்வேறு முக்கிய திட்டங்களில் விவேகானந்தரின் பொன்மொழிகள் மற்றும் வேதாந்தத்தில் உள்ள கருத்துக்களை மோடி பயன்படுத்துகிறார். இந்தியாவின் One Sun One World One Grid (OSOWOG) திட்டம், 2018 அக்டோபரில் நடைபெற்ற சர்வதேச சோலார் கூட்டணி (ISA) திட்டம் ஆகியவை வேதாந்தத்தின் மூலம் ஈர்க்கப்பட்டவையாகும். இந்த திட்டம் முதலில் ஆசியாவையும், தொடர்ந்து ஆப்பிரிக்க மற்றும் உலக நாடுகளையும் சூரிய சக்தியின் அடிப்படையில் இணைக்கிறது.

  மனித உணர்வுகளை ஒளிரச்செய்யும் ஆற்றலுடன், வேதங்கள் பல நூற்றாண்டுகளாக இந்தியர்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தை வளர்த்துள்ளது. இந்தியாவை உலகின் மிக நெகிழக்கூடிய மற்றும் புகழ்பெற்ற நாகரீகமாக ஆக்கியுள்ளது. உபநிடதங்கள், பிரம்ம சூத்திரங்கள் மற்றும் பகவத் கீதையின் மூன்று முக்கிய ஆதாரங்களில் இருந்து எடுக்கப்பட்ட வேதாந்தத்தின் பல ஒப்பற்ற விதிகள் இன்று நவீன இந்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு வழிகாட்டுகின்றன.

  இந்தியா 26 ஜனவரி 1950 அன்று தனது தேசிய முழக்கமாக ‘சதயமேவ ஜெயதே’ (வாய்மையே வெல்லும்) என்பதை ஏற்றுக்கொண்டது. இது முண்டக உபநிஷத்தின் வேதாந்த நியதியில் இடம்பெற்றுள்ள மந்திரமாகும். ‘வாசுதேவ குடும்பகம்’ (உலகம் ஒரு குடும்பம்) மற்றொரு மகத்தான அறிவிப்பு ஆகும். இது ‘மகா உபநிடதத்திலிருந்து’ எடுக்கப்பட்டது.

  வாசுதேவ குடும்பகம், பிரதமர் மோடியால் இந்தியாவின் அரசியல் மற்றும் கலாச்சார இராஜதந்திரத்தின் அடிப்படையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பஞ்ச சீலக் கொள்கை, பல நாடுகளுடனான கூட்டணி, வல்லரசு நாடுகளுடனான நெருங்கிய உறவு போன்ற இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் வேத வாக்கியங்களை நினைவூட்டுகின்றன.

  வேதாந்தத்தின் சக்தி இந்தியாவின் ஆன்மீக மற்றும் தத்துவ நெறிமுறைகளோடு மட்டும் நின்றுவிடவில்லை. அது, இந்திய அரசியல் மற்றும் ராஜதந்திர கலாச்சாரத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வேதங்களில் உள்ள அத்வைத தத்துவமானது அதனைப் பின்பற்றுவோறுக்கு எல்லையற்ற சக்தயை அளிக்கிறது. இந்த சக்தியானது இந்தியாவுக்கு பல யுகங்களாக தீவிர சமூக-அரசியல் மற்றும் மனிதாபிமான பேரழிவுகளை சமாளிக்க உதவுகிறது. ‘அஹம் பிரம்மாஸ்மி’ (நான் பிரம்மன் அல்லது கடவுள்) என்ற வேதாந்தத்தின் பொன்மொழி, சிந்தனையாளர்கள் முதல் சுதந்திரப் போராளிகள் மற்றும் புரட்சிகரத் தலைவர்கள் வரை பலரை ஊக்கப்படுத்தியுள்ளது. பல பின்னடைவுகளுக்கு பின்னும், ஆக்கப்பூர்வமான விளைவுகள் ஏற்படும் என்ற நம்பிக்கையை இந்த பொன்மொழி ஏற்படுத்தியுள்ளது. வேதாந்த சித்தாந்தத்தின் ஆழமானது இந்தியாவின் உள்நாட்டு சிந்தனை மற்றும் பார்வையில் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளது. வேதாந்தக் கண்ணோட்டம் இந்தியச் சமூகத்தில் ஊடுருவி, மதப் பிரிவு சார்ந்த சிந்தனையைக் கடக்க வழிவகுத்துள்ளது.

  ஒரு தனிப்பட்ட இந்தியனுக்கு, தான் ஒரு "இந்தியன்" என்ற விழிப்புணர்வும், தான் இந்திய நாகரிகங்களுககு சொந்தமானவன் என்ற உணர்வுதான் மிக உயர்ந்த உணர்வாகும். சுதந்திரப் போராட்டத்தின் போது, வேதாந்தத்தின் கட்டளைகள், ஜாதி, மொழி, மதம் பார்க்காமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் எழச் செய்து, வெள்ளையர்களை விரட்ட ஊக்குவித்தது. இந்த அரசியல் மறுமலர்ச்சி முதலில் ஆன்மீக களத்தில் வெளிப்பட்டது.

  சுய விழிப்புணர்வை ஏற்படுத்தி, வேதாந்த தத்துவம் 19 ஆம் நூற்றாண்டின் சீர்திருத்த இயக்கங்களான ராஜா ராம் மோகன் ராயின் பஹ்மோ சமாஜ், தயானந்த சரஸ்வதியின் ஆர்ய சமாஜ், விவேகானந்தரின் ராமகிருஷ்ண மிஷன் உள்ளிட்டவற்றுக்கு ஊக்கம் அளித்தது.

  அரவிந்தர் மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் கவிதைகளுக்கும், பாலகங்காதர திலகர் மற்றும் லாலா லஜபதி ராய் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் அரசியலுக்கும் வேதாந்த தத்துவங்கள் வேராக இருந்தது. இது மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு மற்றும் சர்தார் வல்லபாய் படேல் போன்ற அகிம்சை வெற்றியாளர்களின் கொள்கைகளை ஊக்குவித்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்ற சமூக சமத்துவ மற்றும் புரட்சியாளர்களுக்கும் இது உத்வேகம் அளித்தது.

   

  சுயராஜ்யம் என்பது ஆன்மீகம் மற்றும் அரசியல் கருத்தாகும். 'தன்னை நிலைநிறுத்துவது மற்றும் சுயமாக ஆளப்படுவது' அல்லது 'சுயராஜ்யம்' என்ற நிலையில் ஆன்மாவானது பிரம்மனுடன் இணைவதாக வேதாந்தம் கூறுகிறது. இதனை ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில் தேசத்தின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார விடுதலையுடன் ஒப்பிடலாம். சுயராஜ்யம் தான் புவியரசியலில் இந்தியாவின் ராஜ தந்திரத்தை வகுக்கிறது. பிரதமர் மோடியின் ‘ஆத்ம நிர்பார் பாரத்’ என்ற திட்டமும் சுயராஜ்யம் போன்றதொரு கருத்தாகும். இது சுதந்திரம் அல்லது சுயராஜ்ய இந்தியாவின் பொருளாதாரப் பயணத்தை குறிக்கிறது.

  சுயராஜ்யம் என்பது அனைவருக்கும் விடுதலை என்ற காந்திய இலட்சியத்திற்கு வழிவகுக்கிறது. தனிமனிதனைப் போலவே நாடுகளும் சுதந்திரமாக இருந்தாலும், மனிதகுலத்தின் பெரிய இலக்குகளுடன் இணைந்திருக்கும் போது, சுயராஜ்யம் தன்னம்பிக்கை உணர்வைத் தூண்டுகிறது. இது பிராந்திய மற்றும் உலகளவில் பயங்கரவாதத்தை எதிர்த்தல், தூய்மையான ஆற்றல், பருவ நிலை மாற்றம், பேரிடர் நிவாரணம் பொதுவான விவகாரங்களின்போது இணைந்து செயல்படும்.

  மோடியின் வெளியுறவுக் கொள்கை மற்றும் வெளிநாட்டு ஈடுபாடு ஆகியவற்றை வேதாந்த அணுகுமுறைகள் அடிக்கோடிட்டு காட்டுகின்றன. இவை நாட்டை இன்னும் சுதந்திரமாக செயல்பட வைக்கும். மோடியின் இந்த கொள்கைகள் உலகிற்கு காந்திய தத்துவங்களை கற்பித்துக் கொடுக்கும்.

  “எனது தேசியவாதம் எனது சுதேசியைப் போலவே பரந்தது. முழு உலகமும் பயன்பெற இந்தியாவின் எழுச்சியை நான் விரும்புகிறேன்” என்று மகாத்மா காந்தி கூறியிருந்தார். இதே கருத்தைத்தான் பிரதமர் மோடியும் ஐ.நா.சபையில் முன்வைத்தார். 25 செப்டம்பர் 2021 அன்று 76 வது ஐநா பொதுச் சபையில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியா வளரும்போது, உலகம் வளரும், இந்தியா சீர்திருத்தப்படும்போது, ​உலகம் மாறுகிறது" என்று கூறியிருந்தார்.

  வேதாந்த இலக்கியம் காலங்காலமாக இந்தியாவின் ராஜ தந்திரங்களுக்கும், போர் வியூகங்களுக்கும் ஓர் சக்திவாய்ந்த வழிகாட்டியாக இருந்து வருகிறது.

  யுக்திகளை வகுக்கும் துறையில், வேதாந்த நூல்கள்தான் தர்ம யுத்தம் என்ற உயர்ந்த நெறிகளை வழங்குகின்றன. பகவத் கீதையின் போதனைகளின்படி‘அஹிம்சை’ என்ற உபநிஷத போதனை ஒரு முழுமையான உத்தரவு அல்ல. தர்மம் (நீதி) தகர்க்கப்படும்போது, போர் தவிர்க்க முடியாததாகிவிட்டால், தர்மத்தைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்துவதற்கு அனுமதிக்கிறது. இதற்கு உதாரணமாக இந்தியாவின் எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் உறுதியான பதிலடியை சொல்லலாம்.
  வேதாந்த நியதிகளுக்கு உட்பட்ட பகவத் கீதை, ராணும் தொடர்பான படிப்புகளுக்கு மிக முக்கியமானது. இது அர்ஜுனனை சுயநலமற்ற கர்மயோகியாக மாற்றியது. அவர் 'ராஜ்சீக்' என்ற சுயநலம் மற்றும் ஆக்கிரமிப்பு கொள்கைகளாலும், 'தமசிக்' என்ற இருள்நிறைந்த மற்றும் அறிவற்ற தன்மையாலும் செயல்படவில்லை. மாறாக அவர், தர்மத்தை நிலை நாட்ட, லட்சியத்தை அடைய உன்னத கொள்கைகளை ஏற்றுக் கொண்டு செயலாற்றினார். செயல்களால் மட்டுமே உன்னத நிலையை அடைய முடியும் என்பதை பகவத் கீதை நமக்கு உணர்த்துகிறது.

  தாய்நாட்டிற்கான கடமைகளை செய்வதில் நாம் உறுதியுடன் செயல்பட வேண்டும் என்று வேதாந்தங்கள் கூறுகின்றன. இவை, சிறந்த இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக உள்ளன. இந்த வேதாந்தங்களுக்கு பரந்த பாராட்டும் அங்கீகாரமும் தேவை.

  (கட்டுரையாளர் சுஜன் சினோய் முன்னாள் இந்திய தூதுவர். தற்போது மனோகர் பாரிக்கர் இன்ஸ்டிடியூட் ஃபார் டிஃபென்ஸ் ஸ்டடீஸ் அண்ட் அனாலிசஸின் இயக்குனராக உள்ளார்; கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் தனிப்பட்டவை)

   

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Abdul Mushtak
  First published: