Home /News /special-articles /

Valentine's Day 2021 | காதலை எப்படி கையாள்வது - பேராசிரியர் ராஜீ கிருஷ்ணகுமார் விளக்கம்

Valentine's Day 2021 | காதலை எப்படி கையாள்வது - பேராசிரியர் ராஜீ கிருஷ்ணகுமார் விளக்கம்

காதலர் தினம் 2021

காதலர் தினம் 2021

எந்த ஒரு விஷயம் ஒரு ஆணையும் பொண்ணையும் முடக்கிப் போடுதோ, அதுக்கு பேர் காதல் இல்ல நிர்பந்தம்.

காதல் என்றதுமே அதோடு சேர்த்து புனிதம் என்கிற பிம்பமும் ஒட்டிக் கொள்கிறது. சிலரோ படங்களில் வரும் காதல் கதைகளோடு தங்கள் துணையையும், உறவையும் ஒப்பிட்டுக் கொள்கிறார்கள். சர்ப்ரைஸ் கிஃப்ட், கேண்டில் லைட் டின்னர், சூப்பர் மேனுடன் இருப்பது போன்றதொரு பாதுகாப்பு உணர்வெல்லாம் கனவுலகத்துக்கு வேண்டுமெனில் பொருந்தும். ஆனால் நிஜ வாழ்க்கையில் சர்க்கரை பொங்கலுக்கு சாம்பார் ஊற்றிக் கொள்வது போலத்தான்.

குறிப்பாக பெண்கள் இந்த விஷயத்தில் பல நேரங்களில் தவறான முடிவெடுத்து, அதனால் வாழ்க்கை முழுவதும் அவதிப்படுகிறார்கள். இதைப்பற்றியும் காதல் குறித்த வேறு சில இயல்பான விஷயங்களைப் பேச ராஜீ கிருஷ்ணகுமாரை அணுகினோம். யாரிவர் என்கிறீர்களா? தாய்லாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளில் ஆராய்ச்சி படிப்பை முடித்து, அங்கே பேராசிரியராகவும் பணி புரிந்தவர். தற்போது தன் காதல் கணவரின் ஆசைப்படி ஹோட்டல் துறையில் கால்பதித்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ‘நீயா நானா’வில் உறவு சம்பந்தமான தலைப்புகளின் விவாதங்களில் சிறப்பு விருந்தினராக நீங்கள் இவரை பார்த்திருக்கக் கூடும்.

valentines day 2021 Things women need to realize in Love raji krishnakumar
கனடாவில் தனது மாணவியுடன் ராஜி


”சென்னைல பிறந்து வளர்ந்த பொண்ணு நான். சென்னைல பி.எஸ்.சி, கோவைல எம்.எஸ்.சி முடிச்சிட்டு, 2-வது எம்.எஸ்.சி படிப்புக்காக என் 21 வயசுல முதன்முதல்ல வெளிநாட்டுக்கு பயணமானேன். ரொம்ப நல்லா படிக்கணும். பி.ஹெச்.டி படிக்கணும், ஆராய்ச்சி பண்ணனும்ங்கற எண்ணங்களுக்கு இடையே என்ன ஒருத்தன் காதலிக்க மாட்டானாங்கற சராசரி பொண்ணோட எதிர்பார்ப்புகளும் இருந்தது. கல்வியா? காதலா? அதோட சேர்ந்த திருமணமான்னு கேள்விகள் வந்தப்போ, நான் கல்வி தான் முக்கியம்ங்கறதுல ஸ்ட்ராங்கா இருந்தேன். 2000-க்கு முன்னாடி வரைக்கும் காதல்ன்னாலே அது திருமணத்தோட சேர்ந்த்து வர்ற ஒண்ணா தான் இருந்துச்சு. இந்த தலைமுறைல காதல் வேற திருமணம் வேறங்கறதுல தெளிவா இருக்காங்க.

20 வருஷத்துக்கு முன்னாடி இந்த தெளிவு எங்களுக்கு இல்ல. ஆனா நான் கல்வி தான் முக்கியம்ன்னு இருந்தேன். 2-வது எம்.எஸ்.சி படிப்புக்காக தாய்லாந்து போனேன். அங்க இருந்து ஹாலந்து போனேன். எல்லா நாடுகளுக்கும் போயிருக்கேன். அங்க இருக்க எல்லா கலாச்சாரங்களையும் பாத்துருக்கேன். என் கணவர் கிருஷ்ணகுமாரை முதன் முதலா சந்திக்கும் போது எனக்கு வயசு 34. என்னோட கற்பனை காதல் எனக்கு அந்த வயசுல தான் சாத்தியமானது. என்னுடைய சக நண்பர்கள் மூலமா அவர் எனக்கு அறிமுகமானாரு. அப்போ நான் கனடாவுல இருந்தேன். ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சு போய் காதலிச்சு திருமணம் பண்ணிக்கிட்டோம்.

5 வருஷம் வெளிநாட்டுலேயே இருந்துட்டு இந்தியா திரும்புனோம். இங்க வந்ததும் சென்னைல நடந்த ஒரு சாலை விபத்துல அவர் இறந்துட்டாரு. இப்போ கிட்டத்தட்ட 6 வருஷமாகுது. என் கணவரோட தொழில் தான் உணவகம். கிருஷ்ண விலாசம்ங்கற இந்த உணவகத்தை இப்போ நடத்திட்டு வர்றேன். அவரோட பார்வை வேற மாதிரி இருந்துச்சு, முன்னாள் பேராசிரியர்ங்கறனால இதுல என்னோட பார்வை மாறியிருக்கு. ஸோ நான் ராஜியோட ஸ்டைல்ல இந்த உணவகத்தை நடத்திட்டு வர்றேன். மாணவர்களுக்கு நல்ல சத்தான உணவு கொடுக்கணும்ன்னு, ஐஐடி சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் ரெண்டுலயும் கிருஷ்ண விலாசம் இருக்கு. தவிர அடையாறுலயும் எங்க உணவகம் இருக்கு. வெளிநாடுகள்ல இந்திய மாணவர்கள் படிக்கிற பல்கலைக்கழகங்களுக்கும் கிருஷ்ண விலாசத்தை கொண்டு சேர்க்கணும்ங்கற எதிர்காலம் திட்டம் இருக்கு” என தன்னைப் பற்றிய விஷயங்களைப் பகிர்ந்துக் கொண்டார் ராஜி.

valentines day 2021 Things women need to realize in Love raji krishnakumar
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கிருஷ்ண விலாசம்


ஆராய்ச்சியாளரான இவர் உலகம் முழுக்க சுற்றி வந்திருக்கும் அனுபவத்திலும், சொந்த வாழ்க்கையில் கற்றுக் கொண்ட விஷயங்களின் அடிப்படையிலும் காதல் குறித்த விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார்.

”காதல்ன்னாலே இப்படித்தான்னு ஒரு கட்டமைக்கப்பட்ட பிம்பம் இந்த சமூகத்துல இருக்கு. அந்த கண்ணோட்டத்துலயே காதலை அணுகினா, பெண்களுக்கு சரியான காதல் கிடைக்கிறது கஷ்டம்ன்னு நினைக்கிறேன். காதல் எப்போவுமே நம்மள சுத்தி இருந்துட்டு தான் இருக்கு. ஆனா அதை ஒரு எச்சரிக்கை உணர்வோட எதிர்க்கொள்ள வேண்டிய கட்டாயத்துல நாம இருக்கோம். குறிப்பா அவங்கவங்க துறைல வெற்றி பெற்ற பெண்கள் தான், தனிப்பட்ட வாழ்க்கைல தனிமைல தவிக்கிறாங்க. நமக்குன்னு ஒருத்தன் வர மாட்டானாங்கற ஏக்கம், சராசரி பெண்கள விட வெற்றி பெற்ற பெண்களுக்கு அதிகமாவே இருக்கு.

ஒரு பெண்ணுக்கு, கணவன், குடும்பம், குழந்தைகளோட சேர்த்து தான் விரும்பிய துறைல பயணிக்கிற சூழ்நிலையையும் எந்த சமூகம் அமைச்சுக் கொடுக்குதோ, அது தான் ஆரோக்கியமான சமூதாயம். நல்ல குடும்பம் அமைஞ்சதுன்னா, உன்னோட துறைல உன்னால ஜொலிக்க முடியாது. உனக்கு அதீத அறிவும், திறமையும் இருந்துன்னா, உனக்கு குடும்ப வாழ்க்கை சரியா அமையாதுங்கற சூழல் உண்மையிலேயே அவலத்துக்குரியது.

தன்னை சுத்தியிருக்கும் காதலை மீட்டெடுக்கும் பொறுப்பு பெண்கள் கிட்ட தான் இருக்கு. ஆனா அதை செய்யும் போது அவங்க கவனமா இருக்கணும். என்னோட அனுபவத்துல நான் சொல்றது ரொமாண்டிக்கா இல்லாம இருக்கலாம், ஆனா இது தான் நிதர்சனம். காதலுக்கும் திருமணத்துக்கும், காதலுக்கும் பாலியல் உறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால இதுல ஒண்ணுக்கொண்ணு முடிச்சுப் போட்டுக்காதீங்க. காதல்ங்கற உணர்வு கொடுக்குற இண்டிமஸி ரொம்பவே நுட்பமானது. பெண்ணைப் போலவே ஆணுக்கும் பலவிதமான பரிமாணம் இருக்கு. அவனோட காதலை மீட்டெடுக்கிறது அந்த பொண்ணு கிட்ட தான் இருக்கு. எந்த ஒரு விஷயம் ஒரு ஆணையும் பொண்ணையும் முடக்கிப் போடுதோ, அதுக்கு பேர் காதல் இல்ல நிர்பந்தம்.

valentines day 2021 Things women need to realize in Love raji krishnakumar
ஐஐடி மாணவிகளுடன் ராஜி.


உலகம் முழுக்க இருக்க வெவ்வேறு ஆண்களை பாத்துருக்கேன். அதுல தமிழ்நாட்டு ஆண்கள் மிக நுட்பமானவங்க. பொண்ணுங்களுக்கு அவங்க கொடுக்குற மரியாதையை வேறு. அதை வேறு எந்த ஆணும் கொடுக்க மாட்டான். ஒரு பெண்ணோட காதல் வெற்றியை, அவளோட பாலியல் தேவையை எப்படி அணுகுறாங்குற விஷயம் தான் தீர்மானிக்குது. இதை சரியா கையாளாம விட்டா, அவளோட காதல் கொச்சைப்படுத்தப்பட்டு, திருமண வாழ்க்கையும் கேள்விக்குள்ளாகுது. ஆனா இதை யாரும் பேச மாட்டேங்குறாங்க. நீங்க எந்த கடைல சேலை எடுக்குறீங்கன்னு கேஷுவலா கேக்குற மாதிரி, உங்களோட பாலியல் தேவைகளை எப்படி பூர்த்தி பண்ணிக்கிறீங்கன்னு பேச ஆரம்பிக்கணும். இதை அந்த பொண்ணோட தோழியோ, சகோதரியோ, பேராசிரியையோ கேக்கலாம்.

மற்றவர்களைப் போல நான் காதலை ரொம்ப க்ளோரிஃபை பண்ணாம இருக்கலாம். ஆனா இந்தியாவுல காதல்ங்கற பேர்ல திறமையான பெண்கள் பலர் உயிரை விடுறது எனக்கு பயத்தைக் கொடுக்குது. காதல் எந்தளவுக்கு உண்ணதமோ, அதே அளவுக்கு நம்மள சுத்தி இருக்க ஆண்களும் உண்ணதமானவங்க. நாம புத்திசாலித்தனமா நமக்கானவங்க யாருன்னு கண்டுப்பிடிக்கணும்” என்று முடித்தார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Valentine Day 2021

அடுத்த செய்தி