வைகுண்ட ஏகாதசி: தமிழ்ப் பாசுரங்களுக்கான விழா... தமிழுக்கான விழா!

ஸ்ரீரங்கம் - ரங்கநாதர்

சொர்க்க வாசல் திறப்புக்கு முன்னதாக நம்பெருமாள் கருவறையில் இருந்து புறப்பட்டு செல்கையில், பெருமாளுக்கு முன்னதாக நாலாயிர திவ்விய பிரபந்த குழுவினர் தமிழ்ப் பாசுரங்களைப் பாடிச் செல்வதை காண முடியும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வைணவத் திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சொர்க்க வாசல் என்கிற பரமபத வாசல் மார்கழி 3-ம் தேதியான இன்று (டிச. 18) காலை திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பெருமாளை வணங்கி, பரமபத வாசலைக் கடந்து, பேரானந்தம் அடைந்தனர்.

அதேநேரத்தில், வைகுண்ட ஏகாதசி விழாவில் பெருமாள் தமிழ் பாசுரங்களைக் கேட்டு மகிழ்கிறார் என்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள். நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்கும் ஆழ்வார்களுக்குமான உற்வசமாக திருமங்கை மன்னரால் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கப்பட்டு, இன்றும் தொடர்கிறது என்கிறார்கள்.

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாகவும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில் ஆண்டு முழுவதுமே முக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் என்றாலும், சொர்க்க வாசல் திறப்பு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. நாலாயிர திவ்வியப் பிரபந்த பாடல்களை இசை, அபிநயங்களுடன் பாடி பெருமாளை மனமுருக வேண்டுவதும் ஸ்ரீரங்கத்தில் இருந்து தான் பிற கோயில்களுக்கும் பரவியது என்றும் சொல்லப்படுகிறது.

பக்திப் பண்பாடிய 12 ஆழ்வார்கள் உருகி உருகி சொன்ன ஆன்மீகம், வகுத்த வாழ்வியல் நெறிகள், பக்திப் பரவசங்களே பாசுரங்களாக வடிக்கப்பட்டுள்ளன. அந்தப் பாடல்களைத்தான் பெருமாள் விரும்பிக் கேட்கிறார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. இதன்படி, ஒவ்வொரு நிகழ்விலும் தமிழ்ப் பாசுரங்களை உள்ளம் உருக பாடி வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த வைகுண்ட ஏகாதசி விழாவிலும் தினமும் அரையர் சேவை என்று தமிழ்ப் பாசுரங்களை தாள, அபிநயத்துடன் அரங்கன் முன் பாடுகின்றனர்.

சொர்க்க வாசல் திறப்புக்கு முன்னதாக நம்பெருமாள் கருவறையில் இருந்து புறப்பட்டு செல்கையில், பெருமாளுக்கு முன்னதாக நாலாயிர திவ்விய பிரபந்த குழுவினர் தமிழ்ப் பாசுரங்களைப் பாடிச் செல்வதையும் பெருமாளுக்கு பின்னால்தான், வடமொழி வேதங்களை பாடிச் செல்வதையும் காண முடியும். இது, பெருமாளின் நெஞ்சுக்கு நெருக்கமாக மட்டுமின்றி முன்பாகவும் தமிழே செல்கிறது என்பதையே காட்டுகிறது.

இவ்வளவு சிறப்பு பெற்ற நாலாயிர திவ்விய பிரபந்தத்தை பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார், திருப்பணாழ்வார், திருமங்கையாழ்வார் உள்ளிட்ட 12 ஆழ்வார்களும் வெவ்வேறு கால கட்டங்களில் பாடியுள்ளனர். இவர்களில் திருமங்கையாழ்வார் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.

வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து என்றும், இராப்பத்து என்றும் இரண்டு பிரிவாக நடைபெறும். பகல் பத்தின் துவக்கத்தை திருமொழித் திருநாள் என்றும் இராப்பத்தை திருவாய்மொழி திருநாள் என்றும் சொல்வார்கள்.  ஒவ்வொரு நாளும் பத்து பதிகங்களை பாடுதலே பகல் பத்து, இராப் பத்து என்று வழங்கப்படுகிறது. இராப்பத்தின்போது தமிழ்ப் பாசுரங்களை பாடிய ஆழ்வார்கள், ஆச்சாரியார்களுடன் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

இதனால்தான், தமிழ்ப் பாசுரங்களை மனதாரப் பாடி, பெருமாளை வணங்கும் வைகுண்ட ஏகாதசி விழா, தமிழ்ப் பாசுரங்களுக்கான விழா, தமிழுக்கான விழா என்கிறார்கள் பெரியோர்கள்.

திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கும் இந்த விழா பகல் பத்து, இராப் பத்துடன் நம்மாழ்வார் மோட்சம் என்கிற நிகழ்வுடன் நிறைவு பெறுகிறது.

Also watch

Published by:DS Gopinath
First published: