முகப்பு /செய்தி /சிறப்புக் கட்டுரைகள் / தோனிக்கு இருப்பது இரண்டே வாய்ப்புகள் தான்... ஓய்வு பெற நெருக்கடியா?

தோனிக்கு இருப்பது இரண்டே வாய்ப்புகள் தான்... ஓய்வு பெற நெருக்கடியா?

மகேந்திர சிங் தோனி. (BCCI)

மகேந்திர சிங் தோனி. (BCCI)

  • 2-MIN READ
  • Last Updated :

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடைசியாக ஆடிய 10 இன்னிங்ஸில் அவரது அதிகபட்ச ரன்னே 42 தான். அண்மையில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில், வங்கதேச அணி உடனான இறுதி போட்டியில் 67 பந்துகளை சந்தித்த தோனி அடித்ததோ 36 ரன்கள். பேட்டிங்கில் தோனியின் அண்மைக்கால செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கூட தோனி பேட்டிங் மீதான அதிருப்தியையும், விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தோனியை அணியில் தேர்வு செய்யக்கூடாது என முன்னாள் வீரர்கள் பலர் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் தோனிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, அணியில் ரிஷப் பந்துக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகள் கிட்டத்தட்ட தோனியின் வாழ்வா, சாவா போட்டிகள்தான். அவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும் போட்டியாகவே இது பார்க்கப்படுகிறது.

ஏனெனில், 2 போட்டியிலும் தோனி சொதப்பும் பட்சத்தில் ரிஷப் பந்துக்கு வாய்ப்பளிக்கப்பட்டு அணியில் இருந்து தோனி நீக்கப்படலாம். ஒருவேளை தோனி நீக்கப்பட்டால் பல ஆண்டுகளுக்கு பிறகு அணியில் இருந்து நீக்கப்படுவதாக அமையும். அப்படி நீக்கப்பட்டால் அது மிகப்பெரிய செய்தியாகவும் பார்க்கப்படும்.

கேப்டன்சி வந்ததால் பொறுப்பு வந்தது:

தன்னுடைய பேட்டிங்கின் ஆரம்ப காலங்களில் ஆக்ரோஷமாக ஆடிவந்த தோனி, கேப்டன் பொறுப்பை ஏற்றதும், மிக பக்குவமான ஆட்டத்தை கையண்டார். கேப்டனாக இருக்கும்போது தேவையில்லாத ஷாட் ஆடி ஆட்டமிழந்தால் அது அணியினரின் நம்பிக்கையை குறைக்கும் என நினைத்த தோனி, ஒன்றிரண்டு ரன்களாக சேர்த்து இறுதி ஓவர்களில் ருத்ர தாண்டவம் ஆடுவார். இன்று வரை தோனி கடைபிடிக்கும் யுக்தி அதுதான்.

மிடில் ஓவர்களில் ஸ்டிரைக் ரொட்டேட் செய்வதில் தோனி எப்போதுமே கில்லிதான். மறுமுனையில் உள்ள ரெய்னாவோ, யுவராஜோ ஆக்ரோஷமாக ஆடுகிறார்கள் என தெரிந்தால், அழகாக சிங்கிள் ஆடி அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்களின் ஆட்டத்தை மறுமுனையில் நின்றபடி ரசித்து, ஊக்குவிப்பார் தோனி. ஆனால் அண்மைக் காலங்களில் தோனியால் ஸ்டிரைக் ரொட்டேட் கூட ஒழுங்காக செய்ய முடியாமல் பந்துகளை வீணடிக்கிறார். இடுப்பை குறிவைத்து வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் பந்துகளையும், சுழற்பந்து வீச்சாளர்கள் நல்ல லென்த்தில் வீசும் பந்துகளையும் எதிர்கொள்ள தோனி மிகவும் சிரமப்படுகிறார். அதில் நெருக்கடி அடையும் தோனி, பந்துகளை வீணடிக்கிறார்.

இதனால் தான் தோனியின் மீதான விமர்சனம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. ஒருவேளை தோனி அணியில் இருந்து நீக்கப்பட்டால், இரண்டு வாய்ப்புகள் மட்டுமே அவர் முன்பு இருக்கும்.

1. உலகக்கோப்பை வரை அணியில் இருக்க வேண்டுமெனில், உள்ளூர் போட்டிகளில் ஆடி தனது திறமையை நிரூபித்து மீண்டும் அணியில் இணைவது...

2. ஓய்வு பெறுவது...

ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில் கூட தோனி பெரும்பாலும் ஆட மாட்டார். ஏனெனில், உள்ளூர் போட்டிகளில் தன்னுடைய இடம் வேறு யாருக்காவது கிடைத்தால் அவர்கள் தன்னை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதால், பிறர் இடத்தை அபகரிக்க நான் முயற்சிக்க மாட்டேன் என ஒருமுறை தோனி கூறியுள்ளார். இப்போது பார்மின்றி தவிக்கும் போது மீண்டும் உள்ளூர் போட்டிக்கு தோனி திரும்புவாரா என தெரியவில்லை?

ஒருவேளை தோனி ஓய்வை அறிவித்தால், அவருக்கான ஃபேர்வெல் போட்டி ஒன்றை பிசிசிஐ நடத்தியே ஆக வேண்டும். மூன்றுவிதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனான தோனி, ஓய்வு பெறும்போது தகுந்த மரியாதை அளிக்கப்பட வேண்டும்.

DRS நாயகன் தோனி:

அதேநேரம், தோனியின் அனுபவத்தை தவிர்த்துவிட்டு உலகக்கோப்பையில் இந்திய அணி விளையாடினால் அது அணிக்குதான் பேரிழப்பு. ஏனெனில், இக்கட்டான நேரத்தில், முடிவெடுக்க முடியாமல் யோசிக்கும் போதெல்லாம், கோலியின் கண்கள் முதலில் தேடுவது தோனியைதான். ஏனெனில் உலகக்கோப்பை போன்ற தொடர்களில் கேப்டன்சியில் மேஜிக் செய்த அனுபவம் கொண்டவர் தோனி. அதேநேரம் இன்றுவரை உலகிலேயே வேகமாக செயல்படும், சிறந்த கீப்பர் என்றால் அது தோனிதான். கீப்பிங்கில் நின்றபடி தோனி செய்த மின்னல் நொடி ஸ்டம்பிங் ரெக்கார்டுகளை இன்றுவரை யாரும் முறியடிக்கவில்லை. அவை ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவை. மேலும், தோனி ரிவ்யூ சிஸ்டம் என்று விளையாட்டாய் சொல்லும் அளவிற்கு டி.ஆர்.எஸ். சிஸ்டத்தை உலகிலேயே வெற்றிகரமாக பயன்படுத்தும் ஒரே வீரரும் தோனி மட்டுமே.

இவ்வளவு அனுபவம் கொண்ட தோனியை உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்குவது என்பது மிகப்பெரிய ரிஸ்க். அந்த ரிஸ்க்கை எடுக்க தேர்வுக் குழுவினர் தயாராக இல்லை. தோனிக்கு வாய்ப்பளிக்க தேர்வுக்குழுவினர் தயாராகவே உள்ளனர். அதேநேரம், தனது டெக்னிக்கை மாற்றி மீண்டும் பழைய பார்முக்கு திரும்புவதற்கான முயற்சிகளை தோனி செய்தாக வேண்டும்.

அணி இக்கட்டான தருணங்களில் இருக்கும் போதெல்லாம் தனது அனுபவத்தால் அணியை மீட்ட தோனி, இப்போது தனது பேட்டிங் வாழ்க்கையின் இக்கட்டான தருணத்தில் இருக்கிறார். தனது திறமையால் அந்த இக்கட்டில் இருந்து தோனி மீண்டு, பழையபடி ஹெலிகாப்டரை பறக்கவிடுவார் என நம்புவோமாக.

-  கோ.ர. மணிகண்டன்

First published:

Tags: Cricket, Dhoni, MS Dhoni, Retirement