ஆயிரம் ஆண்டுகளை கடந்தாலும் போற்றப்பட வேண்டிய தலைவர் காமராஜர்

news18
Updated: July 15, 2018, 3:08 PM IST
ஆயிரம் ஆண்டுகளை கடந்தாலும் போற்றப்பட வேண்டிய தலைவர் காமராஜர்
காமராஜர்
news18
Updated: July 15, 2018, 3:08 PM IST
கல்விக் கண் திறந்தவர், படிக்காத மேதை, கர்மவீரர் என போற்றப்படுபவர் காமராஜர். தமிழகத்திற்கு எத்தனையோ முதலமைச்சர்கள் வந்தாலும் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் காமராஜரின் 116-ஆவது பிறந்தநாள்  இன்று.

100 ஆண்டுகள் அல்ல பல்லாயிரம் ஆண்டுகளை கடந்தாலும் போற்றப்பட வேண்டியவர் காமராஜர். காரணம், ஒவ்வொருவரின் வாழ்நாளுக்கான அடிப்படை உரிமைகளை அவர் வென்று கொடுத்துள்ளார். 1952-ஆம் ஆண்டு தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற ராஜாஜி, குலக்கல்வி திட்டத்தால் பதவியிழக்க, 1954-ஆம் ஆண்டு காமராஜர் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

6-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த காமராஜர், படிப்போடு சேர்த்து சக மாணவர்களின் ஏழ்மையின் கொடுமையையும் படித்தாரோ என்னவோ, மதிய உணவு என்ற மகத்தான திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தின்மூலம், தற்போது வரை ஏழை மாணவர்களின் வயிற்றுப் பசியை போக்கி வருகிறார் அவர்.

1957 -ஆம் ஆண்டு இரண்டாம் முறையாகவும், 1962-ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகவும் முதல்வர் ஆனார் காமராசர். அவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பல அணைகள் கட்டப்பட்டதோடு, ஏராளமான பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. 1963-ஆம் ஆண்டில் அரசியலில் பலரும் ஆச்சரியப்படும் வண்ணம் காமராசர் முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அதற்கு காரணம் கே பிளான். கட்சியின் நலனைப் பாதுகாக்க நினைப்பவர்கள் மத்தியிலும் மாநிலத்திலும் தாங்கள் வகிக்கும் பதவிகளை துறந்து, முழு நேர கட்சிப் பணியில் ஈடுபடவேண்டும். இதுதான், கே பிளான். இந்த திட்டத்தை பிரதமர் நேருவிடம் கூறியவுடன் காமராசர் பெயரின் முதல் எழுத்தையே இந்த திட்டத்திற்குப் பெயராக வைத்தார் நேரு.

இந்தியா முழுவதும்  கட்சிப் பணியாற்றுவதற்காக காமராசர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார். அந்த சமயத்தில்தான் நேரு மறைந்தார். லால்பகதூர் சாஸ்திரியையும், அவருக்கு அடுத்தபடியாக இந்திரா காந்தியையும் பிரதமராக்கினார் காமராஜர். அதன்பிறகு இந்திரா காந்திக்கும் காமராசருக்கும் இடையே மோதல் போக்கு வளர்ந்தது. காமராஜரின் அகில இந்திய தலைவர் பதவியை பறிப்பதில் இந்திரா காந்தி குறியாக இருந்தார்.

இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சியை கண்டித்தார் காமராஜர். இதையடுத்து, தேசம் போச்சு, தேசம் போச்சு என்று புலம்பினார் காமராஜர். எமர்ஜென்சியின்போது கைதான  அனைத்து தலைவர்களையும் விடுதலை செய்வதாக 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி இந்திரா காந்தி உறுதியளித்தார். ஆனால், அன்றைய தினம் தலைவர்கள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை, கிருபாளனியும் கைது செய்யப்பட்டார் என்கிற செய்திதான் வந்தது. இதனால், அன்று மனமுடைந்து படுத்த காமராஜர் பிறகு எழுந்திருக்கவேயில்லை.

தொண்டனுக்கும் தொண்டனாய், தன்னுடைய தலைவனுக்கும் தலைவனாய், தேசிய கட்சியில் மாநில உரிமைக்குரலாய், வாழ்ந்து மறைந்த காமராசரின் வாழ்வு ஒரு சகாப்தம்.
First published: July 15, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...