• HOME
  • »
  • NEWS
  • »
  • special-articles
  • »
  • திருக்குறளும் பிரதமர் மோடியும் இரண்டறக்கலந்த பிரிக்க முடியாத சக்திகள்: குஷ்பு சுந்தர்

திருக்குறளும் பிரதமர் மோடியும் இரண்டறக்கலந்த பிரிக்க முடியாத சக்திகள்: குஷ்பு சுந்தர்

குஷ்பு

குஷ்பு

”திருக்குறள் மட்டுமின்றி ஐ.நா. மன்றத்தில் கணியன் பூங்குன்றனாரையும், பல்வேறு சமயங்களில் பாரதியாரையும் மேற்கோள் காட்டி பேசிவரும் நமது பாரதப்பிரதமர் ஓட்டுக்காக மொழிப்பற்றையும், இனவாதத்தையும் தூக்கி சுமக்கும் அரசியல்வாதி அல்ல”

  • Share this:
"திருக்குறள் இது வெறும் புத்தகம் மட்டுமல்ல நம் அனைவரது வாழ்க்கைக்கும் வழிகாட்டும் ஒரு விளக்கு எனவே இதை கட்டாயம் படிப்பது நமது கடமையாகும்" இதைச் சொன்னவர் ஒரு தமிழ் அறிஞரோ அல்லது தமிழ் பேராசிரியரோ அல்ல, திருக்குறளைப் பற்றிய இந்த உயரிய சிந்தனையை உலகுக்கு உரக்கச் சொன்னவர் நமது பாரதப்பிரதமர் மாண்புமிகு திரு.மோடி ஜி அவர்கள். 2019ஆம் ஆண்டு பாங்காக் சென்றிருந்தபோது திருக்குறளின் தாய்லாந்து மொழிபெயர்ப்பை வெளியிடும் விழாவில் தான் மேற்சொன்ன கருத்தை அவர் பதிவு செய்தார். இதுமட்டுமல்ல 2017ல் திருக்குறளின் குஜராத்தி மொழிபெயர்ப்பையும் வெளியிடும் பேறும் தனக்கு கிடைத்ததற்காக உளப்பூர்வமாக தான் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் அந்நிகழ்வில் குறிப்பிட்டார்.

பல்வேறு இடங்களில், பலதரப்பட்ட மனிதர்கள் மத்தியில், தமிழே தெரியாத உலக நாடுகளின் அரங்கில் கூட "இவ்வுலகின் மிகப்பழமையான, தொன்மையான மொழி தமிழ்" என சுட்டிக்காட்டும் அவர் திருவள்ளுவரைப் பற்றி குறிப்பிடும் இடங்களில் எல்லாம் "நாம் நன்றாக வாழ்வதற்காக திருவள்ளுவர் எனும் மகாமுனிவர் தந்த மந்திரம் திருக்குறள்" என்றே குறிப்பிடுகிறார்.

மகாத்மா காந்தி திருக்குறளை மூல நூலாக படிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் தமிழ் கற்க விரும்புவதாக ஒருமுறை சொல்லியுள்ளார். நமது பாரதப்பிரதமர் மாண்புமிகு திரு.மோடி ஜி அவர்களோ ஒருபடி மேலே போய் திருக்குறளை கற்றதன் மூலம், திருக்குறளின் அரிய சிந்தனைகளை தான் பேசும் இடங்களில் எல்லாம் மேற்கோள் காட்டுவதன் மூலம், ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்பான தமிழர்களின் அறிவுக் கருவூலத்தை உலகெங்கும் பரப்புவதன் மூலம் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் பெருமை சேர்த்துவருகிறார்.


பாரதப்பிரதமரின் தமிழ்ப்பற்று மற்றும் திருக்குறள் பக்தி என்பது உதட்டின் ஓரத்திலிருந்து உலா வருவது அல்ல அது உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஊற்றெடுப்பது அதனால் தான் தமிழகத்தின் கடைக்கோடியில் தூத்துக்குடியில் இருக்கும் பொன்.மாரியப்பன் என்ற முடி திருத்தும் தொழிலாளி தனது கடையில் ஒரு சிறு நூலகத்தை வைத்துள்ளார் என்று தெரிந்து அவருடன் மன்-கி-பாத் வானொலி நிகழ்சியில் உரையாடும் போது மாரியப்பன் அவர்களுக்கு பிடித்த நூல் திருக்குறள் என்று தெரிந்ததும் உள்ளன்போடு அவரை வாழ்த்தினார். இந்தியாவிலுள்ள பெரும்பாலான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள உலகின் உன்னத நூல்களில் ஒன்றான திருக்குறளை அனைவரும் படித்து மேன்மையடையவேண்டும் என்றும் அவர் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தூத்துக்குடியில் மட்டுமன்று பாரதத்தின் மிக உயர்ந்த பனிப்பிரதேசமான லடாக் பகுதியில் எல்லைப் பிரச்சனைக்காக சீனர்களோடு போராடி வந்த நமது தீரமிக்க ராணுவ வீரர்களின் மத்தியில் உரையாடும் போது
"மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே ஏமம் படைக்கு"
என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி வீரம், மானம், நல்வழியில் நடத்தல், தலைவனின் நம்பிக்கைக்கு பாத்திரமாதல் இது நான்கும் நல்ல படையின் பண்புகளாகும் என்ற அதன் பொருளையும் புரியவைத்து இமயத்தை விட ஒரு அங்குலம் தமிழை உயர்த்திக்காட்டினார்.

மிக சமீபத்தில் நடந்த வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான 16வது PIRAVASI BHARATHIYA DIVAS விழாவில் உரையாற்றும் போது கூட பாரதத்தின் பெருமையை உலகிற்கு உணர்த்த
"கேடறியா கெட்டவிடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை"
எனும் திருக்குறளை உவமையாக காட்டி எத்தனையோ இடர்மிகு சூழலிலும் தன் மாண்பு கெடாமல் இயற்கை சூழல்களால் சீற்றங்களால் பாதிப்பு நேரிட்ட சமயங்களில் கூட தன் வளத்தை இழக்காமல் இருக்கும் இந்தியத்திருநாடே உலகில் சிறந்த நாடு என தாய்நாட்டை கௌரவப்படுத்தி கூடவே தமிழையும் கௌரவப்படுத்தினார்.

பன்னாட்டு அறிவியல் மாநாட்டில் இளம் அறிவியல் அறிஞர்களிடம் உரையாற்றும் போது ஒருவன் வாசிக்கின்ற பழக்கத்தை எந்த நாளும் கைவிடக்கூடாது அந்த பழக்கம் தான் ஒரு நாள் அவனுக்கு அறிவு என்ற ஞானத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்பதை உணர்த்த
"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு"
என்ற திருக்குறளையே பயன்படுத்தினார். இன்றைக்கும் பயனுள்ளதாக இருக்கும் இந்த மந்திர வாக்கியம் ஈராயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்லப்பட்டது அத்தனை தெளிவுடன் இருந்த இனம் தமிழினம் என்பதையும் அவர் சுட்டிக்காட்ட தவறவில்லை.

தினத்தந்தி பத்திரிக்கையின் 75வது ஆண்டு விழாவில் கூட பத்திரிகை துறை தனியார் வசம் இருந்தாலும் அவர்கள் அவர்களுக்கென்று உள்ள அறத்திலிருந்து தவறாமல் செயல்பட வேண்டும். ஒருவனுக்கு புகழ் மற்றும் செல்வத்தை ஈட்டித்தரவல்லது அறமேயன்றி வேறில்லை என்பதை உணர்த்த
"சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு"
என்ற திருக்குறளைத்தான் முன்னுதாரணமாக காட்டினார் நமது பாரதப்பிரதமர்.

மார்ச் மாதம் 2019ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை துவக்கிவைத்து உரையாற்றும் போது 2014ஆம் ஆண்டில் இந்திய அரசியல் வரலாற்றிலேயே 30 ஆண்டுகளுக்கு பிறகு அறுதிப்பெரும்பான்மையுடன் கூடிய பிரதமர் பதவி எனும் அரிய வாய்ப்பை வழங்கிய பாரத மக்களுக்கு பலனளிக்கக்கூடிய துணிச்சலான திட்டங்களை தான் செய்து வருவதாகவும் மேலும் தொடர்ந்து செய்யப்போவதாகவும் கூறிய பிரதமர் அவ்வாறு தான் செயல்பட தனக்கு தைரியம் தந்தது
"எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்"
என்ற திருக்குறள் தான் என்றும் அதே மேடையில் கூறினார்.

அந்த துணிச்சலான திட்டங்களின் நீட்சியாக 2019ஆம் ஆண்டு சுதந்திர தின உரையை டெல்லி செங்கோட்டையில் ஆற்றும் போது தனது கனவுத் திட்டமான அனைவருக்கும் தண்ணீர் என்ற உன்னத திட்டத்தை துவக்கி "நீரின்றி அமையாது உலகெனின்" என்ற வள்ளுவ மாமுனியின் வாக்கையே மேற்கோளாக காட்டினார். தண்ணீருக்கான பற்றாக்குறை என்பது இப்போது இருப்பது போல் தோன்றாத பல நூறாண்டுகளுக்கு முன்பே ஒரு தமிழரின் சிந்தனையில் இது உதித்ததை மிகவும் சிலாகித்து பேசினார் பாரதப்பிரதமர்.மலேசியாவிற்கு சென்ற போது அந்நாட்டுடன் தனக்குள்ள நட்புறவை விவரித்து சொல்ல அது முகத்தில் தோன்றும் செயற்கை புன்னகை போன்றது அல்ல அது அகத்தின் ஆழத்திலிருந்து வரும் ஆத்மார்த்தமான சிரிப்பு என்று சொல்லி
"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு"
என்ற குறளையும் மேற்கோள் காட்டினார்.

பாரதப்பிரதமர் பதவியில் இருக்கும் போது இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதிக்கு சென்ற முதல் பிரதமர் நமது மாண்புமிகு திரு.மோடி ஜி அவர்கள் தான்.அப்போது அங்கு அனேக தமிழர்கள் வசிக்கும் நூர்வூட் என்ற தேயிலை தோட்டப் பகுதிக்கு சென்று அங்குள்ள தமிழர்கள் மத்தியில் உரையாற்றும் போது "பாரதம் உங்கள் வளமான வாழ்க்கைக்கும், உங்கள் சந்ததியினரின் சிறப்பான எதிர்காலத்துக்கும் தேவையான அனைத்தையும் செய்ய தயாராக உள்ளது" என்று வாக்களித்து
"ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையானுழை"
என்ற குறளையும் எடுத்தியம்பினார். அதன் தொடர்ச்சியாகத்தான் நமது வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்கள் 13வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழர் நலத்திட்டங்களை உடனே செயல்படுத்துமாறு இலங்கை அரசை நிர்பந்தப் படுத்தியுள்ளார்.

திருக்குறளும் திரு. மோடி ஜி அவர்களும் இரண்டறக்கலந்த பிரிக்க முடியாத சக்திகள் என்பதற்கு அவரது ட்வீட்டில் அவர் திருக்குறளை பற்றி குறிப்பிட்டுள்ள வரிகளே சான்றாகும்.

"அரிய கருத்துகளையும், உன்னத தத்துவங்களையும், நம்மை உயர்த்தும் சிந்தனைகளையும் உடைய திருக்குறள் ஒரு பொக்கிஷமாகும். நம்மிடையே நம்பிக்கையையும், வெளிச்சத்தையும் பாய்ச்சுகிற சக்தி திருவள்ளுவரின் வாக்கிற்கு உள்ளது. நம் நாட்டின் இளைஞர்கள் அனைவரும் திருக்குறளை கட்டாயம் படித்து உணர வேண்டும்." என்று உளமார குறிப்பிட்டுள்ளார்.

திருக்குறள் மட்டுமின்றி ஐ.நா. மன்றத்தில் கணியன் பூங்குன்றனாரையும், பல்வேறு சமயங்களில் பாரதியாரையும் மேற்கோள் காட்டி பேசிவரும் நமது பாரதப்பிரதமர் ஓட்டுக்காக மொழிப்பற்றையும், இனவாதத்தையும் தூக்கி சுமக்கும் அரசியல்வாதி அல்ல நாட்டுக்காக உயர்ந்த சிந்தனைகளை, உன்னத தத்துவங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் அற்புதத்தலைவர். ஆம் அரசியல்வாதிகளின் கவலை அடுத்த தேர்தலை சுற்றி தான் இருக்கும் ஆனால் தலைவர்களது கருத்தோ அடுத்த தலைமுறையை வளப்படுத்த துடிக்கும்.
பாரதப்பிரதமர் ஒரு முறை மேற்கோள் காட்டிய கவிதையில் பாரதியார் மன்னும் இமையமலையும், இன்னறு கங்கை ஆறும், பன்னரு உபநிடத நூலும், பொன்னொளிர் பாரத நாடும் எங்கள் தமிழர்களுடையது என்று மார் தட்டி சொல்லியிருப்பார். உலகில் உயர்ந்தது எதுவாக இருந்தாலும் அது தமிழர்களுடையது என்று நிறுவ வேண்டும் என்பது தான் அவரது நோக்கம்.

அந்த பாரதியார் இன்று இருந்திருந்தால் உலகமே வியந்து போற்றும் உன்னதத்தலைவர் நமது பாரதப்பிரதமர் மாண்புமிகு திரு.மோடி ஜி அவர்களையும்
"என்னரும் நாட்டினை இமைவிழி போலே
என்றென்றும் காக்கும் மோடி எம் ஆளே
வீரமும் கருணையும் விரவியே ஆளும்
மோடியால் உயரும் பாரதம் நாளும்" என்று வாழ்த்திப்பாடி போற்றி புகழ்ந்திருப்பார்.

(கட்டுரையாளர் குஷ்பு சுந்தர், தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். கட்டுரையில் இடம்பெற்றுள்ளவை கட்டுரையாளரின் சொந்த கருத்தாகும்.)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: