Home /News /special-articles /

Motivation Story : வெற்றிப் புன்னகை... ஒரு தாயின் வைராக்கியம்!

Motivation Story : வெற்றிப் புன்னகை... ஒரு தாயின் வைராக்கியம்!

தாய்-மகள்

தாய்-மகள்

அந்த நாள் மறக்க முடியாத நாளாக, பெருமிதமும் மகிழ்ச்சியும் ததும்பும் நாளாக, பல ஆண்டுகளாக அந்த ஏழைத்தாய் பட்ட துன்பங்களுக்குக் கிடைத்த வெற்றித் திருநாளாக அமைந்திருந்தது.

அது ஓர் ஏழைக் குடும்பம். கூலிவேலை செய்து, வாடகை குடிசையில் வாழ்ந்துவரும் குடும்பம். அதில் சிறு கூட்டில் முட்டைகளை அடைகாக்கும் குருவிபோல தன் மூன்று பிள்ளைகளை வளர்த்து வந்தாள் அந்த தாய். வறுமை அவர்களை விடாமல் துரத்தியது. சிறு பிள்ளைகளான அவர்களை படிக்கவைத்து நல்ல நிலைமைக்குக் கொண்டு வரவேண்டும் என்பது ஒன்று மட்டுமே அந்த தாயின் கனவாகவும், நினைவாகவும் இருந்தது.

கணவனும், மனைவியும் வேறு வேறு இடங்களில் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். பிள்ளைகளுக்கு வயிராற உணவு கிடைக்கவில்லை. சொந்த பந்தங்கள் கைவிரித்தனர். அவர்களின் ஏளனமும் ஏச்சுப்பேச்சும் மனவேதனைகளைக் கொடுத்தன. இவை எல்லாம் அந்த தாயின் மன உறுதியை எதுவும் செய்துவிடவில்லை. பிள்ளைகளை ஆசிரமத்திலும், அரசு உண்டுஉறைவிடப் பள்ளியிலும் சேர்த்து படிக்கவைத்தாள். தாயின் பாசமும் வைராக்கியமும் அத்தனை துன்பங்களையும் வென்று முன்னேறியது.

பிள்ளைகள் ஒழுக்கத்தையும், நன்நெறிகளையும் நேசித்தபடி நேர்மையான எண்ணங்களுடன் வளர்ந்தார்கள். முதல் இரண்டு பிள்ளைகள் கல்லூரி படிப்பை முடித்து தங்களின் சொந்த காலில் நிற்கத் தொடங்கினார்கள். இளைய மகளுக்கு மருத்துவம் படிக்கவேண்டும் என்பது கனவு. எனினும், தமிழ்நாடில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. ஒரே ஒரு மதிப்பெண்ணில் வாய்ப்பு கைநழுவிப் போனது. குடும்பமே கவலையிலும், சோகத்திலும் மூழ்கியது. அப்போது வெளிநாட்டில் மருத்துவம் படிக்க வைக்க அந்த குடும்பம் திட்டமிட்டது.

ஆனால், அதற்கு லட்சக் கணக்கில் பணம் தேவைப்படும். அதற்கு என்ன செய்வது என்ற கவலை ஏற்பட்டது. வங்கிக்கடன், நல் உள்ளம் படைத்தவர்களின் உதவி என பணத்தை திரட்டும் பணியில் இறங்கினாள் தாய். பலர் வீட்டு படியேறி, காத்துக்கிடந்து உதவி கோரினாள். “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்ற ஔவையாரின் வாசகம் வேறு வடிவத்தில் அந்த தாயின் உள்ளத்தின் உள்ளிருந்து உந்தியது. ஆம்... “பிச்சை எடுத்தேனும் என் பிள்ளையை படிக்கவைப்போன்” என முடிவு செய்தார். தொடர்ந்து தட்டப்பட்ட கதவுகள் மெல்ல மெல்ல திறக்கத் தொடங்கின. குறைந்த பட்ச கட்டணத்தைக் கொண்டு மகளை ஆனந்த கண்ணீரோடு விமானத்தில் ஏற்றி அனுப்பினாள்.

“தமிழ்வழியில் படித்த மகள், வெளியுலகம் நன்கு அறியாதவள், என்ன செய்வாளோ” என்ற தவிப்புடன் கவலை கொண்டாள் தாய். மகளோ.. துன்பங்கள், அவமானங்கள், ஏளனங்கள் அனைத்தையும் எதிர்கொண்டு, ஒவ்வொரு சொல்லுக்கும் பொருளை தேடி நன்கு படித்தாள். பழகும் நண்பர்களிடம் இருந்து அவர்களின் மொழியையும் கற்றாள். இடை இடையே பகுதி நேர வேலையும் செய்தாள். விடா முயற்சி கொண்ட தாயின் பிள்ளையல்லவா அவள். பண்பாட்டையும், ஒழுக்கத்தையும், நன்நெறியையும் அவளிடம் இருந்து மற்றவர்கள் கற்கத் தொடங்கினர்.

அவளின் கல்லூரி கட்டணத்திற்காக, மனைவி பிள்ளைகளை பார்க்க முடியாமல் தூரத்திலிருந்து, ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருந்தார் தந்தை. உடன் பிறந்தோரும் சுயநலமின்றி சம்பாதித்துக் கொடுத்தனர். இப்படியாக ஒட்டுமொத்த குடும்பமும் உழைப்பால் ஒன்றுபட்டு கனவை தாங்கிப் பிடித்தது. தொடர்ந்து உதவிகோரி அலைந்துகொண்டே இருந்தாள் தாய். நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகே கல்லூரி கட்டணத்தை கட்ட முடிந்தது. பல முறை கட்டணம் செலுத்தும் தேதி கல்லூரி நிர்வாகத்தால் கருணையோடு நீட்டிக்கப்பட்டது. உடல் உபாதைகள் துன்புறுத்தின. புதிய புதிய சிக்கல்கள் எழுந்து வந்தன. மன உறுதி எல்லாவற்றயும் வெற்றி கொள்ளச் செய்தது. முதல்நிலையில் தேர்ச்சி பெற்று, மருத்துவர் பட்டமும், பதக்கமும், பாராட்டுகளுடனும் நாடு திரும்பினாள் மகள். மகளை முத்தமிட்டு, அள்ளி நெஞ்சோடு அணைத்து கண்ணீர்வடித்தாள் தாய்.

தாய்


கஷ்டங்கள் அத்துடன் முடிந்துவிடவில்லை..., தகுதித் தேர்வு, சில லட்சம் கட்டணத்துடன் ஓராண்டு பயிற்சி மருத்துவர் பணி என்பது இங்கே கட்டாயம் என்பதால், மீண்டும் உதவி கேட்டு ஓடத்தொடங்கினாள் தாய். இதற்கிடையில், நாடே கொரோனா பரவலால் முடக்கப்பட்டது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பயிற்சி மருத்துவராக ஓய்வின்றி பணிபுரிந்தாள். ஏழைகளின் மீது தனி கவனம் செலுத்தினாள். அவளையும் இந்த பாழாய் போன கொரோனா தொற்று விட்டுவைக்கவில்லை. துன்பத்தை எதிர்கொண்டு வெல்வது அவளுக்கு ஒன்றும் புதிதில்லையே. மன உறுதியுடன் நோயுடன் போராடி வென்றாள்.

பயிற்சி முடிந்து பணியில் சேர்ந்தாள். பணியிடத்திலேயே அவளுக்கு வீடும் தரப்பட்டது. பெற்றோருடன் அங்கே தங்கி பணிபுரிந்தாள். முதல் மாச சம்பளத்தை வாங்கி தன் தாயாரிடம் கொடுத்தாள். கண்ணீர் மல்க, கணத்த மனத்தோடு அதனை கைகளில் வாங்கினாள் தாய். அருகில் இருந்து ரசித்தார் தந்தை. பெருமிதமும், வெற்றிப் புன்னகையும் அந்த தாயின் முகத்தில் பிரகாசித்தன. அந்த நாள் மறக்க முடியாத நாளாக, பெருமிதமும் மகிழ்ச்சியும் ததும்பும் நாளாக, பல ஆண்டுகளாக அந்த ஏழைத்தாய் பட்ட துன்பங்களுக்குக் கிடைத்த வெற்றித் திருநாளாக அமைந்திருந்தது.

Must Read :  சாதிக்கத் துடிக்கும் இளைஞருக்கு மருள் நீக்கியார் கூறிய ஆலோசனை

 

அன்று இரவெல்லாம் அந்த தாய்க்குத் தூக்கம் வரவில்லை. கடந்த காலத்தின் துயரம் நிறைந்த அத்தனை காட்சிகளும் நினைவில் வந்துபோயின. தாயின் மன உறுதியை அளக்கும் தராசு உலகில் இல்லை. “தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” என்றார் வள்ளுவர். ஆம், விடா முயற்சி வெற்றிக் கனியை வீடு வந்து சேர்க்கும். வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படும் என்றாலும், அம்மாவுக்கு இனி மன நிம்மதி கிடைத்துவிட்டது. அப்பாவுக்கு ஓய்வு கிடைத்துவிட்டது. இப்படித்தான் பெரும்பான்மையான குடும்பங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஒரு நாள் விடியும் என்ற நம்பிக்கையோடு....!
Published by:Suresh V
First published:

Tags: Corona, Doctor, MBBS, Mother

அடுத்த செய்தி