ஹோம் /நியூஸ் /சிறப்புக் கட்டுரைகள் /

தவறுதலாக வீசப்பட்ட ஆசிட்- சாகத் துணிந்த பெண் சட்ட ஆலோசகரான கதை!

தவறுதலாக வீசப்பட்ட ஆசிட்- சாகத் துணிந்த பெண் சட்ட ஆலோசகரான கதை!

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட தல்ஜித் கவுர் இன்று சட்ட ஆலோசகராக பலருக்கும் உதவி செய்து வருகிறார்.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட தல்ஜித் கவுர் இன்று சட்ட ஆலோசகராக பலருக்கும் உதவி செய்து வருகிறார்.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட தல்ஜித் கவுர் இன்று சட்ட ஆலோசகராக பலருக்கும் உதவி செய்து வருகிறார்.

  • News18
  • 3 minute read
  • Last Updated :

ஆசிட் வீச்சால் தலைப்பகுதி முழுவதுமாக சிதைந்து தன் வாழ்க்கையையே முடித்துக்கொள்ள நினைக்கிறார் தல்ஜீத் கவுர். யார், எதற்காக தனக்கு இந்தத் தண்டனையை வழங்கினார்கள் என எதுவும் தெரியாமல் ஒன்றரை ஆண்டுகள் தனக்குள்ளேயே தவித்து வந்தார் அந்த இளம்பெண்.

பன்னிரெண்டாம் வகுப்பை முடித்த கையோடு குடும்ப சூழ்நிலையின் காரணமாக அம்மா, அப்பா, தம்பி, தங்கை என ஒரு பெரிய குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சுமந்துகொண்டு தனியார் மருத்துவமனையில் ரிசப்ஷனிஸ்ட் ஆக வேலைக்குச் சேர்ந்தார் தல்ஜீத் கவுர். ஒரு ஞாயிறு காலை வேலைக்கு வரும் போது அடையாளம் தெரியாத ஒரு நபர் தன்னைத் துரத்துவதைப் பார்த்த தல்ஜீத், சுதாரிப்பதற்குள் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டிருந்தார். கண், காது உள்ளிட்ட தலைப்பகுதி முழுவதுமாக சிதைந்துவிட, தான் பணியாற்றிய மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.

உடன் பணியாற்றிய தோழிக்கு விரைந்து சிகிச்சை அளித்தனர் மருத்துவமனை ஊழியர்கள். சரியாக ஒன்றரை ஆண்டுகள் தனக்குக் கிடைத்த தண்டனைக்குக் காரணம் என்னவென்றே தெரியாமல் தவித்து வந்த தல்ஜீத்-க்கு போலீஸ் விசாரணையின் மூலம் கிடைத்த தகவல்கள் மேலும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் தந்தன.

தல்ஜீத் கவுர் பணியாற்றும் மருத்துவமனையில் பணியாற்றும் மற்றொரு பெண் மீது அந்த நபர் ஆசிட் வீச வந்துள்ளான். உடன் பணியாற்றும் அந்தப் பெண்ணின் வருங்கால கணவர் குடும்பத்தார் அப்பெண்ணை பழிவாங்க கூலிக்கு ஆள் வைத்து ஆசிட் வீசச் சொல்லியிருக்கிறார்கள். கூலிக்கு வந்தவன் ஆள் மாற்றி தல்ஜீத் கவுர் மீது ஆசிட் வீசியதை அறிந்த பின்னர், தான் அனுபவிக்கும் தண்டனையின் வலி அதிகரித்திருப்பதை உணர்ந்தார் தல்ஜீத்.

பாதிப்பில் இருந்து மீண்டு, குற்றம் செய்தோருக்கு தண்டனை வாங்கித் தர முயன்றிருக்கிறார். ஆறு ஆண்டுகள் ஆகியும் வழக்கின் வாய்தாக்கள் நீண்டதே தவிர, நியாயம் கிடைக்கவே இல்லை. அதுவரையில் எத்தனையோ முறை தற்கொலை எண்ணம் தோன்றிய போதும் தன்னைத் தானே தேற்றிக்கொண்டு பணிக்குச் சென்றிருக்கிறார் தல்ஜீத்.

உடல் அளவில் காயமடைந்த தல்ஜீத்தை மனதளவிலும் கிழித்து ரணமாக்கியது வெளி உலகின் சந்தேகக் கேள்விகள். பார்ப்பவர்கள் அனைவரும் ஏன்? எதற்கு? எப்படி? யாரால்? காதல் பிரச்னையா? காதலன் செயலா? எனக் கேள்விகளை அடுக்க, துவண்ட தல்ஜீத் கவுர், பஞ்சாப் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதினார்.

‘எனக்கு உடனடியாக ஒரு நிரந்தர வேலை தாருங்கள் அல்லது என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள அனுமதி அளியுங்கள். இப்படியொரு வாழ்க்கையில் எனக்குத் தொடர விருப்பமில்லை’ எனக் கடிதம் எழுத, உடனடியாக தல்ஜீத் கவுரை சந்தித்தார் தலைமை நீதிபதி.

”என் வழக்கை சிறப்பு வழக்காக எடுத்து விசாரிக்க பஞ்சாப் மாநில சட்ட ஆலோசனை மைய செயலாளர் ஹர்ப்ரீத் கவுர் அறிமுகமானார். அவர் அளித்த நம்பிக்கையோடும் தைரியத்தோடும் மீண்டும் வெளி உலகைச் சந்தித்தேன். சட்ட ஆலோசனை வழங்குவதற்கான சிறப்புப் பயிற்சி எடுத்துக்கொண்டு இன்று பலருக்கும் சட்ட ஆலோசனைகள் வழங்கி வருகிறேன். ஒரு காலத்தில் தற்கொலை எண்ணத்தில் தவித்த நான் இன்று, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கொடுமைகளைச் சந்திக்கும் பெண்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் எனப் பலருக்கும் சட்ட ஆலோசனைகள் வழங்குகிறேன்” என்கிறார்.

இன்று, உயர் நீதிமன்றம் மூலம் தன் மீது ஆசிட் வீசியவனுக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுத் தந்துள்ளார் தல்ஜீத். “ஆசிட் வீச்சுக்கு திட்டமிடப்பட்ட என் உடன் பணியாற்றிய பெண்ணைச் சந்தித்து என் வழக்கில் உதவி செய்யுமாறு கேட்டேன். அவளது சாட்சி என் வழக்கிற்கு கூடுதல் பலமாக இருக்கும் என எண்ணி கேட்ட போது ’போலீஸ், கோர்ட் என அழைய முடியாது’ எனக் கூறினார். என் மீது ஆசிட் வீசியவன், ‘உன்னை என் தங்கையாக நினைத்து மன்னிப்புக் கேட்கிறேன். மன்னித்துவிடு’ என என் காலைப் பிடித்துக் கதறிய போது கூட என்னால் அவனது மன்னிப்பை ஏற்க முடியவில்லை.

ஒரு பெண் மீது ஆசிட் வீச வரும்போது அவளைத் தங்கையாக நினைத்து அந்தக் காரியத்தைச் செய்யாமல் இருந்திருக்கலாமே? என்னால் மன்னிக்க முடியவில்லை” என்கிறார் தல்ஜீத்.

இன்று சட்ட ஆலோசனை மட்டுமல்லாது பெண்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறப்பு கவுன்சிலிங் வழங்கும் தல்ஜீத் தன் சக பெண் சமூகத்திடம், “வாழ்க்கை எப்போது எப்படி மாறும் எனக் கூற முடியாது. பிரச்னைகள் வரும். ஆனால், கண்ணீர் துயர் துடைக்காது. பிரச்னைகளை நேருக்கு நேர் நின்று சந்தியுங்கள். என் கதையே உங்களுக்கு உதாரணம்” என்கிறார் துணிச்சலுடன்.

கட்டுரையாளர்: கல்பனா சர்மா

தமிழில்: ராகினி ஆத்ம வெண்டி

மேலும் பார்க்க: செல்ல மகளிடம் நடனம் கற்கும் தோனி! 

Published by:Rahini M
First published:

Tags: Acid attack, Daljeet kaur