சிற(வெறு)ப்பு பயிற்சிகளுக்கா கோடை விடுமுறை ?

பள்ளியின் வெளிக்கதவை பூட்டி விட்டு, யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டு கோடைக்கால சிறப்பு வகுப்புகளை நடத்தும் பள்ளிகளும் உள்ளன. அந்த பள்ளிகள் ஏமாற்றுவது அரசை மட்டுமல்ல, அவர்களின் மாணவர்களையும் தான்.

சிற(வெறு)ப்பு பயிற்சிகளுக்கா கோடை விடுமுறை ?
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: April 15, 2019, 4:50 PM IST
  • Share this:
ஹைய்யா…. விட்டாச்சு லீவு என்று குழந்தைகள் குதுகலிக்க…அய்யய்யோ விட்டுட்டாங்க லீவு என்று பல பெற்றோர்கள் பதறும் காலமாகியுள்ளது. ​

இரண்டு மாத காலம் வீட்டில் இருக்கப் போகிறார்கள். இனி வீடு ரெண்டாகி விடும். உடனே ஏதாவது  ஒரு கோடைக்கால சிறப்பு பயிற்சி வகுப்புகளில் சேர்க்க வேண்டும் என்று விளம்பரங்களைத் தேடியும் ஆலோசனைகளை நாடியும் செல்லும் பெற்றோர்களையும் பார்க்க முடிகிறது.

காலையில் எழுந்து பள்ளி…, பள்ளி முடிந்ததும் தனிப்பயிற்சி அல்லது பெற்றோரின் விருப்ப பயிற்சி என்று ஓடிக் கொண்டிருந்த குழந்தைகள் இளைப்பாறும் காலமே கோடை விடுமுறை. குறிப்பாக, வகுப்பறை, பாடம், தேர்வு என தொடர்ச்சியாக 10 மாதங்கள் கற்ற சோர்வைப் போக்கவும் வெயிலின் தாக்கத்திலிருந்து அவர்களைக் காக்கவுமே பள்ளிகளுக்கு ஏப்ரல், மே மாதங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது.


படிக்க... கோடை விடுமுறையில் குழந்தைகளை படிக்க கஷ்டப்படுத்தாமல் மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த பயிற்சியை கற்றுக்கொடுங்கள்...!

ஆனால், மதிபெண்ணை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் பள்ளிகளில் குறிப்பாக  தனியார் பள்ளிகள் பலவற்றில் கோடைக்காலத்திலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதுவும் தற்போது 9, 11ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவர்களின் நிலையைக் கேட்கவே வேண்டாம்.

அடுத்த ஆண்டு பொதுத் தேர்வு என்கிற காரணத்தைச் சொல்லி, அவர்களை கல்விக் கைதியாக்கி  விடும் நிலை இப்போதே தொடங்கிவிடும். விருப்பமான விளையாட்டு, சுற்றம், நட்பு என எல்லாவற்றையும் துண்டித்த பிறகு கைதி என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வதாம்…?பிள்ளைகளுக்கு பிடிக்கிறதா? என்று எதையும் கேட்காமல், அவர்களது விருப்பத்தையும் அறியாமல் ஏதாவது ஒரு கவர்ச்சிகரமான கோடைக்கால சிறப்பு வகுப்புகளில் சேர்த்து விடுகிறார்கள்.

படிக்க... இந்தியாவில் தொற்றுநோயால் அதிகமான சிறுவர்கள் உயிரிழப்பதாக தகவல்

அப்பாடா ……இந்த சம்மர் கோர்ஸில் சேர்த்து விட்டுட்டேன் என்று பெருமிதம் கொள்வோரும் உண்டு. ஆனால், தொடர்ந்து 10 மாதங்கள் படித்தவர்களுக்கு மீண்டும் கற்றல், வகுப்புகள் என்பது தொடர்ந்தால், கல்வியின் மீது வெறுப்பையும் உளவியல் சோர்வையும் ஏற்படுத்தி, எதிர்மறையான விளைவுகளையே தரும் ஆபத்துள்ளதாக கல்வியாளர்கள் எச்சரிக்கிறார்கள். அவர்களின் எதிர்காலத்திற்காக என்று அவர்கள் மீதான திணிப்பே அவர்களை சிதைத்து வருகிறது என்பதை அறியாமல் இருக்கின்றனர் என்கிறார்கள்.

எனவேதான், கோடை விடுமுறையில் எந்த பள்ளிகளிலும்  எக்காரணத்தைக் கொண்டும் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என்று இந்த ஆண்டும் எச்சரித்துள்ளது பள்ளிக் கல்வித்துறை. ஆனால், இதைப் பற்றிய கவலையின்றி வழக்கம் போல் தொடர்வோம் என்கிற மனோபாவம் சில பள்ளி நிர்வாகிகளுக்கு இப்போதும் உள்ளது.

படிக்க... உங்கள் குழந்தைகள் டி.வி, செல்ஃபோன் பயன்படுத்துவதில் அதிகநேரம் செலவிடுகிறார்களா?

பள்ளியின் வெளிக்கதவை பூட்டி விட்டு, யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டு கோடைக்கால சிறப்பு வகுப்புகளை நடத்தும் பள்ளிகளும் உள்ளன. அந்த பள்ளிகள் ஏமாற்றுவது அரசை மட்டுமல்ல, அவர்களின் மாணவர்களையும் தான்.

எல்லாம் அதிக மதிப்பெண் பெற வைக்கத்தானே? உயர்கல்வி சேர்க்கையை மதிபெண் தானே தீர்மானிக்கிறது ? நீங்க சொல்லும் வியாக்யானங்களா தீர்மானிக்கின்றன? என்கிற கேள்வியை தர்க்கமாக முன் வைப்போரும் உண்டு.

நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணை இலகுவாக பெறும் இன்றைய தலைமுறை, சின்ன தோல்வி, ஏமாற்றம், தடுமாற்றம், அற்ப காரணங்கள் என தற்கொலை செய்து கொள்வதும்,  எதையும் எதிர்கொள்ளாமல் ஓடி ஒளிவதும் ஏன் ? வாழ.., வாழ்க்கையை சொல்லிக் கொடுக்காத கல்வி, சிறப்பு பயிற்சிகளால் பயன் என்ன?  பெ(வெ)றும் மதிப்பெண் மட்டுமே கல்வியல்ல…

படிக்க.. பெற்றோர்களின் விவாகரத்து வழக்கு குழந்தைகளை எவ்வாறு பாதிக்கும்?

பிள்ளைகளோடு கோடையைக் கொண்டாடுங்கள் பெற்றோர்களே. எல்லாவற்றையும் வணிகமாக்குவோரின் வலையில் வீழ்ந்து ஏமாறலாமா? நம் தலைமுறையின் எதிர்காலத்தை நாமே வீணாக்கலாமா? பத்து மாதங்களில் வகுப்பறையில் பெறாத கல்வியை இந்த ஓரிரு மாத பயிற்சிகளா தந்து விடப்போகின்றன? பள்ளி, வகுப்பறையில் மட்டுமா கல்வி இருக்கிறது ?.

ஆயிரம் பெருமைகளையும் கதைகளையும் உயிர்ப்போடு வைத்திருக்கும் கிராமங்கள்.  அங்கு நடைபெறும் திருவிழாக்கள்.  இயற்கை சூழ் சுற்றுலாத் தலங்கள். பாரம்பரிய, வரலாற்று சின்னங்கள் இவற்றில்  கிடைக்காததையா? இந்த வகுப்புகளில் கிடைத்து விடப் போகின்றன?  அழைத்துச் செல்லுங்கள் அவர்களை, ஒரு புதிய அனுபவத்திற்கு மட்டுமல்ல புத்துணர்வளிக்கும் அனுபவங்களுக்கும்….

First published: April 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்