இன்றைய தெலங்கானா முதல்வர் கல்வகுந்தல சந்திரசேகர் ராவ் தன் வாழ்வில் சந்தித்த அனுபவங்களும் எடுத்த முடிவுகளும் பெற்ற வெற்றிகளும் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டவை.
1985-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறி தெலுங்கு தேசம் கட்சியில் இணைய முடிவெடுத்தார் சந்திரசேகர ராவ். அதுவும் அன்றைய அரசியலில் மிகப்பெரும் இடத்திலிருந்த சந்திரபாபு நாயுடுவை சந்திரசேகர ராவ் எதிர்த்தது பெரிய துணிச்சலாகப் பார்க்கப்பட்டது. அதன் பின்னர் ராஜசேகர ரெட்டி உடன் சேர்ந்தது, ஆட்சிக் கலைப்பு எனப் பல சவால்களையும் சந்தித்து அத்தனையையும் கடந்து வந்தார் சந்திரசேகர ராவ்.
1999-ம் ஆண்டு காலகட்டத்தில் சந்திரசேகர ராவ் பல சோதனைகளுக்கு உள்ளானார். தெலுங்கு தேச கட்சியில் இணைந்த சந்திரசேகர் ராவ், தேர்தலில் கட்சி பெற்ற வெற்றியால் எப்படியும் தனக்கென தனி அமைச்சரவை ஒதுக்கப்படும் எனப் பெரும் எதிர்பார்ப்புடன் காணப்பட்டார். ஆனால், இதை அடித்து நொறுக்கும் வகையில் மாநில சட்டசபையின் துணை சபாநாயகர் பதவியை அளித்தார் அன்றைய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. ஆனால், அப்போதைக்கு அப்பதவியை ஏற்றுக்கொண்ட சந்திரசேகர ராவ், ஒரே ஆண்டில் தனது பதவியை துறந்து கட்சியைவிட்டு விலகினார். விலகியதோடு மட்டும் இல்லாமல் தனி மாநிலமான ‘தெலங்கானா’ கோரிக்கையோடு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைத் தொடங்கினார் சந்திர சேகர ராவ்.
அதன் பின்னர் வெற்றிப் பாதையில் பயணிக்கத் தொடங்கிய சந்திரசேகர ராவ், 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஐந்து தொகுதிகளில் வென்றார். அன்றைய நாளில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆனார். ஆனால், நம்பி வந்த காங்கிரஸும் தெலங்கானாவுக்கான எந்த அறிவிப்பையும் வெளியிடாததால் கூட்டணி, பதவி என அனைத்தையும் விடுத்து தெலங்கானாவுக்கான குரலை உயர்த்தினார்.
மிகுந்த நம்பிக்கையோடு 2009-ம் ஆண்டு தேர்தலில் தனிச்சையாக நின்றார் சந்திரசேகர ராவ். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பு பாஜக உடன் கூட்டணி அமைத்தார். தேர்தல் முடிவில் 206 இடங்களைப் பெற்று வென்றது காங்கிரஸ். மீண்டும் விழுந்தார் சந்திரசேகர ராவ். இதன் பின்னர் தெலங்கானாவும் காலி, சந்திரசேகர ராவ்வும் காலி என வெளிப்படையாகவே பத்திரிகைகளில் விமர்சனத்துக்கு உள்ளானார் சந்திரசேகரராவ்.
இந்த நேரத்தில் தான், அமெரிக்காவில் உயர் கல்வியை நிறைவு செய்து நியூ ஜெர்சியில் மிகப்பெரும் நிறுவனத்தில் பெரும் பணியிலிருந்த சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதா தனது வேலையைத் துறந்து ஆந்திரா வந்திறங்கினார். “நாங்கள் காணாமல் போகவில்லை. எங்கள் போராட்டத்தைத் தொடருவோம். தெலங்கானாவை நனவாக்குவோம். என் அப்பா ஒரு போராளி. எங்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்” என அதிரடியாகக் களம் இறங்கினார்.
சில நாள்களிலேயே ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் மரணமடைந்தார் அன்றைய ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி. இந்த நேரத்தில் மீண்டும் களம் கண்டார் சந்திரசேகர ராவ். போராட்டம், வேலைநிறுத்தம், பந்த் என மத்திய அரசை ஆட்ட, தெலங்கானாவுக்கு சம்மதம் தெரிவித்தது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு. அபார வெற்றி பெற்றார் சந்திரசேகர ராவ். நினைத்தபடி மகளின் துணையோடு தெலங்கானாவை உருவாக்கி அம்மாநிலத்தின் முதல் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
அதன் பின்னர் எந்தவொரு விமர்சனத்துக்கும் ஆளாகமல் மக்களுக்குத் தேவையான திட்டங்களை சரிவர அறிவித்தால் போதும் நல்லாட்சி தரலாம் என்றமுடிவோடு சந்திரசேகர ராவ்வின் ஆட்சி தொடர்ந்தது. வலம், இடம் என எதையும் சாராமல் மத்தியில் நிலை நிற்பவராகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர் மகளையும் மகனையும் அரசியலில் இறக்கி நாட்டை திரும்பப் பார்க்க வைத்தார். தொடர்ந்து சமீபத்திய தேர்தலையும் வென்று இரண்டாம் முறையாக தெலங்கானாவைக் கைப்பற்றி உள்ளார் சந்திரசேகர ராவ்.
ஆங்கிலத்தில்: டி.பி.சதீஷ்
தமிழில்: ராஹினி
மேலும் பார்க்க: புருவப் புயல் பிரியா பிரகாஷ் வாரியருக்கு முதலிடம்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chandrasekar rao, Telangana