காங்கிரஸ் தலைவர் மகள் முதல் தெலங்கானா ஆளுநர் வரை! தமிழிசையின் சாதனைப் பயணம்

தமிழிசையின் இந்தச் செயல் குமரி அனந்தனுக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால், நீண்ட காலமாக தமிழிசையிடம் அவர் பேசவில்லை என்பது வரலாறு.

காங்கிரஸ் தலைவர் மகள் முதல் தெலங்கானா ஆளுநர் வரை! தமிழிசையின் சாதனைப் பயணம்
தமிழிசை சௌந்தர்ராஜன்
  • News18
  • Last Updated: September 1, 2019, 11:29 PM IST
  • Share this:
தமிழகத்தின் பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், தற்போது தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவரின் மகளாக பிறந்த தமிழிசை பா.ஜ.க தலைவராக உயர்ந்து தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய அரசியல் பயணத்தை விவரிக்கிறது இந்தக் கட்டுரை.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு 1961-ம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த தமிழிசை சௌந்தரராஜன் பள்ளிப் படிப்பில் சிறப்பான மாணவராகவே வலம் வந்துள்ளார். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டமும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் டி.ஜி.ஓ பட்டமும், கனடாவில் மருத்துவப் பயிற்சி பெற்றவர் தமிழிசை சௌந்தரராஜன்.

தமிழிசை சவுந்தரராஜன்



தமிழிசை சௌந்தரராஜன், இளங்கலை மருத்துவப் படிக்கும் போதே சௌந்தரராஜனைத் திருமணம் செய்துகொண்டார். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலக் கட்டத்தில்தான் தமிழிசை திருமணம் நடைபெற்றது. தமிழிசை சௌந்தரராஜனின் திருமணம் அன்றைய நாளின் தலைப்புச்செய்தியாகியிருந்தது. காரணம், அப்போதைய தமிழகத்தின் இருபெரும் ஆளுமைகளான எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகிய இருவரின் தலைமையில் தமிழிசை சௌந்தரராஜனின் திருமணம் நடைபெற்றது.

எம்.ஜி.ஆரும், கருணாநிதியின் இருதுருவங்களாக இருந்தபோது, குமரி அனந்தன்மீது கொண்டிருந்த மதிப்பின் காரணமாக இருவரும் ஒன்றாக கலந்துகொண்டனர். இருவரும் அருகருகே அமர்ந்து தமிழிசை சௌந்தரராஜனின் திருமணத்தை நடத்திவைத்தனர். ஆரம்பம் முதலே அரசியல் மீது தமிழிசைக்கு ஈர்ப்பு இருந்தநிலையில், அவர் தொடக்கத்தில் காங்கிரஸில் சேர விருப்பம் தெரிவித்தார். ஆனால், அவருடைய தந்தை குமரி அனந்தன் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். வாரிசு அரசியலுக்கு வழி வகுக்கும் என்று கூறி அவர் மறுத்தாக கூறப்படுகிறது. அந்தக் காலக்கட்டத்தில்தான் பா.ஜ.கவும் வளர்ந்து வந்தது. தேசிய அளவில் வாஜ்பாய் தலைமையில் பா.ஜ.க முதன்முறையாக ஆட்சி அமைந்தது. வாஜ்பாயின் மீது ஈர்ப்பு கொண்டிருந்த தமிழிசை சௌந்தரராஜன், 1999-ம் ஆண்டு காங்கிரஸுக்கு நேரெதிர் சிந்தாந்தம் கொண்ட பா.ஜ.கவில் இணைந்துகொண்டார்.

தமிழிசையின் இந்தச் செயல் குமரி அனந்தனுக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால், நீண்ட காலமாக தமிழிசையிடம் அவர் பேசவில்லை என்பது வரலாறு. பின்னர், 2001-ம் ஆண்டு பா.ஜ.கவின் மாநில மருத்துவ அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2005-ம் ஆண்டு தேசிய மருத்துவ அணிச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். பின்னர், 2010-ம் ஆண்டு தமிழக மாநில பா.ஜ.க துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட அவர், 2013-ம் ஆண்டு பா.ஜ.கவின் தேசியச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில், 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக பா.ஜ.க தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டார். பா.ஜ.கவின் மாநிலத் தலைவர்களில் தமிழிசை மட்டும்தான் ஒரே பெண் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் ஐந்துமுறை வரை போட்டியிட்ட அவர் ஒருமுறை கூட வெற்றிபெற்றதில்லை. இருப்பினும், மனம் தளராமல் பொதுவாழ்வில் வலம் வந்தார்.

வேட்புமனுத் தாக்கல் செய்யும் தமிழிசை


தமிழகத்தில் மத்திய பா.ஜ.க அரசுக்கும், மோடிக்கும் கடுமையான எதிர்ப்புகள் நிலவிய நிலையிலும், தொடர்ச்சியாக மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துவந்தார். நீட் தேர்வின் காரணமாக அனிதா தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுவதும் பா.ஜ.கவுக்கு எதிரான கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. அத்தகைய நிலையிலும் நீட் தேர்வு மாணவர்களுக்கு உதவும் என்று உறுதியான வாதத்தை முன்வைத்தார்.

கடுமையான சூழலிலும் செய்தியாளர்களைச் சந்திப்பதை தமிழிசை தவிர்த்தே இல்லை. மு.க.ஸ்டாலின், திருமாவளவன், ரஜினிகாந்த், விஜய், சூர்யா என அனைவரையும் கடுமையாக விமர்சித்திருந்தார். 2016-ம் ஆண்டுக்குப் பிறகு, அரசியல்வாதிகளை ட்ரோல் செய்யும் பழக்கம் தமிழகத்தில் மிக வேகமாக வளர்ந்தது. நெட்டீசன்கள் ட்ரோல் செய்வதில் முதலிடத்தைப் பிடித்தார் தமிழிசை. அவருடைய ஃபேவரைட் வாசகமான ’தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’ என்பது நெட்டீசன்களின் ஆல்டைம் ஃபேவரைட் ஆனது. தமிழிசையை பலமுறை நெட்டீசன்கள் உருவக் கேலி செய்தநிலையிலும் அதற்கு சளைக்காத ஒருவராக வலம் வந்தவர் தமிழிசை சௌந்தரராஜன்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் சம்பவத்தின் காரணமாக, அம்மாவட்டத்தில் அ.தி.மு.க, பா.ஜ.கவுக்கு எதிரான மனநிலை இருந்தநிலையிலும் மக்களவைத் தேர்தலில் அந்தத் தொகுதியில் தி.மு.கவின் வலுவான வேட்பாளரான கனிமொழியை எதிர்த்து தைரியமாக போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் ஓயாமல் பிரச்சாரம் செய்தார். நான் மண்ணின் மகள் என்றார். பனங்காட்டு நரி.. எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டேன் என்றார். இருப்பினும், கனிமொழியை அவரால் வெற்றி கொள்ள முடியவில்லை.

தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையிலான பா.ஜ.க கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்திருந்தது. தமிழிசை தலைமையில் களமிறங்கிய பா.ஜ.க தோல்வியடைந்ததால் அவர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்று வதந்திகள் பரவின. தமிழிசைக்கு முக்கியப் பதவிகள் கொடுக்காமல் பா.ஜ.க தலைமை அவரை ஓரம் கட்டுகிறது என்ற விமர்சனங்கள் இருந்துவரும் நிலையில் அவர் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து இடம் பெற்றுவந்த தமிழிசை சௌந்தரராஜன், தற்போது தேசியச் செய்தியில் இடம் பெற்றுள்ளார். வாழ்த்துகள் தமிழிசை சௌந்தரராஜன்.

Also see:

First published: September 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்