துக்ளக் விழாவில் பெரியார், கருணாநிதி, ராமர் குறித்த பேச்சு! எங்கே தவறிழைத்தார் ரஜினிகாந்த்?

துக்ளக் விழாவில் பெரியார், கருணாநிதி, ராமர் குறித்த பேச்சு! எங்கே தவறிழைத்தார் ரஜினிகாந்த்?
ரஜினிகாந்த், பெரியார்
  • Share this:
சென்னையில் நடைபெற்ற துக்ளக் வார இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘பெரியார் நடத்திய மாநாட்டில் ராமர் படத்தை அவர் செருப்பால் அடித்தார். அதுதொடர்பாக செய்தி வெளியிட்ட துக்ளக் இதழுக்கு கருணாநிதி அரசு தடைவிதித்தது’ என்று பேசியிருந்தார்.  அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், பெரியார் உண்மையில் ராமர் படத்தை செருப்பால் அடித்தாரா? என்ற கேள்வியும் எழுந்தது.

1971-ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை சேலத்தில் நடத்தினார் பெரியார். இந்து மதத்தைக் கேலி செய்யும் வகையில் மாநாடு நடத்துவதாகச் சொல்லி பெரியாருக்கு எதிர்ப்பு தெரிவித்த பாரதிய ஜனசங்கம், பெரியாருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டுவோம் என்றது. சொன்னது போலவே பெரியாருக்குக் கருப்புக்கொடி காட்டினர் ஜனசங்கத் தொண்டர்கள்.

ரஜினிஅப்போது திடீரென ஒற்றைச் செருப்பு ஊர்வலத்துக்கு நடுவில் வந்து விழுந்தது. அது ஜனசங்கத்தினர் வீசிய செருப்பு என்றார்கள் திராவிடர் கழகத்தினர். இல்லவே இல்லை என்றனர் ஜனசங்கத்தினர். ஆனால் அதற்குள் ஒரு திராவிடர் கழகத் தொண்டர் கீழே விழுந்த செருப்பைக் கொண்டு ஊர்வலத்தில் கொண்டுவரப்பட்ட ராமனின் படத்தைத் தாக்கினார். அந்தச் செய்தி சர்ச்சை நெருப்பைப் பற்றவைத்தது.

தி.மு.க கூட்டணிக்கு பெரியார் ஆதரவளிக்கும் சூழலில் இந்தச் சம்பவம் நடந்ததால், அது தி.மு.கவுக்கு எதிரானதாக மாறியது. ராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா உங்கள் வாக்கு? என்று கேள்வி எழுப்பினர் எதிர்க்கட்சியினர்.

ராமர் படம் அவமதிக்கப்பட்ட விவகாரம் தேர்தல் பிரச்னையாக மாறிவிட்டதைக் கவனித்த பெரியார், “முன்னேற்பாடுகள் ஏதுமின்றி நடந்த தற்செயல் நிகழ்வுக்கு தி.மு.கவைப் பலிகடா ஆக்குவதில் அர்த்தமில்லை. என்றாலும், நான் தேர்தல் பிரசாரத்துக்குப் போவதில்லை’என்று அறிவித்தார். ஒருவேளை பிரசாரம் செய்தால், அப்போது ராமர் சிலை பற்றிப் பேசவேண்டும் என்பதால் அதைத் தவிர்க்க முடிவுசெய்திருந்தார் பெரியார்.

ஆனால் எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் ராமர் படம் அவமதிப்பு விவகாரத்தைக் கைவிடுவதாக இல்லை.

தி.மு.கவுக்கு எதிரான பிரசாரத்தில் சோ தீவிரம் காட்டினார். மேடைகளில் பேசினார். அவர் பேசும் கூட்டங்களுக்கு கூட்டம் பெருமளவில் திரண்டது. போதாக்குறைக்கு, ராமன் படம் விவகாரம் தொடர்பாக ராஜாஜி சொன்ன கருத்தைப் பிரதிபலிக்கும் கேலிச்சித்திரம் ஒன்று துக்ளக்கில் வெளியானது.

ஒரு கையில் ராமர் படம், மறுகையில் செருப்பு சகிதம் கையை ஓங்கியபடி நிற்கிறார் பெரியார். அதை முதலமைச்சர் கருணாநிதி அருகில் நின்றுகொண்டு, கைகளை உயர்த்தி ஊக்கப்படுத்துவது போல சமிக்ஞை காட்டுகிறார். இதுதான் அந்தக் கேலிச்சித்திரம். அதைப் பார்த்துப் பரவசப்பட்ட ஸ்தாபன காங்கிரஸ் – சுதந்தரா மற்றும் ஜனசங்கத்தினர் அந்தக் கார்ட்டூனை பெரிய அளவிலான சுவரொட்டிகளாக மாற்றி, தேர்தல் பிரசாரம் செய்தனர்.

ஆகவே, ராமர் சர்ச்சை தி.மு.கவை வீழ்த்தும் என்று பலரும் கணித்தனர். ஆனால் தேர்தல் முடிவுகளில் ராமர் சர்ச்சை விவகாரம் வேறு திசையில் திரும்பியிருந்தது. ஆம், அன்று தி.மு.க கூட்டணி அபார வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்திருந்தது. தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஆளுங்கட்சி பெற்ற அதிகபட்ச எண்ணிக்கை என்ற சாதனையை தி.மு.க எட்டிப்பிடித்தது அந்தத் தேர்தலின்போதுதான்.

Also see:First published: January 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading