புரிசையும், குட்டி இளவரசனும், நானும்….

புரிசையும், குட்டி இளவரசனும், நானும்….
தெருக்கூத்து
  • News18
  • Last Updated: October 18, 2019, 11:35 AM IST
  • Share this:
புரிசையில் கூத்து பார்ப்பது அலாதியான அனுபவம். பல வருடங்களுக்கு முன்பு ஒருமுறை அந்த வாய்ப்பு கிடைத்தது. இணையத்தில் தேடிப்பார்த்தும் நாடக விழாவின் தேதி தெரியாததால் போகாமல் இருந்த வருடங்களும் உண்டு. தேதி தெரிந்தும் பணிச் சூழலில் செல்ல முடியாமல் பெருமூச்சு விட்டுக் கொண்டதும் உண்டு.

இந்த வருடம் அக்டோபர் 5, 6ம் தேதிகளில் 16-ம் ஆண்டு நாடகக் கலைவிழா நடைபெறுகிறது என பத்திரிகையில் படித்து தெரிந்தபோது எப்பாடு பட்டாகினும் சென்றே தீருவது என முடிவு செய்திருந்தேன். பேச்சுத் துணைக்கு யாரும் வருவதாய் தெரியவில்லை. கடைசியில் நண்பர் சைமன் பைக்கோடு வர புரிசைக்கு புறப்பட்டோம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது புரிசை கிராமம். கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம் இங்கே தான் செயல்பட்டு வருகிறது. ஆறு தலைமுறைகளாக தெருக்கூத்து நடத்துவதோடு அதனை கற்றுக் கொடுத்துக் கொண்டும் வருகிறது கண்ணப்ப தம்பிரானின் குடும்பம். மொத்த குடும்பமுமே தெருக்கூத்தில் பங்கேற்பதுதான் சிறப்பு.
வருடம்தோறும் நாடகம், தெருக்கூத்துக்காக இந்த கிராமமே கூடி விழா எடுக்கிறார்கள். பெரும்பாலும் அக்டோபரில்தான் இந்த விழா நடைபெறுகிறது. இருநாட்கள் இரவில் நாடகம், நாட்டுப்புற நடனம், தெருக்கூத்து என களைகட்டும் புரிசை.
கூகுள் ஆண்டவரின் தவறான வழிகாட்டுதலோடு தெருவிளக்கே இல்லாத கிராமத்து சாலைப் பக்கமெல்லாம் (வெறும் கற்கள் மட்டுமே கிடந்த அதை சாலை என்பது சாலச் சிறந்ததல்ல) சுற்றித் திரிந்து ஒரு வழியாய் புரிசை போய் சேர்ந்தபோது மணி இரவு 11ஐ தாண்டியிருந்தது. மொத்த கிராமமும் பாய் போட்டு மேடை முன் அமர்ந்து நாடகம் பார்த்துக் கொண்டிருந்தது.மேடையில் குட்டி இளவரசன், குட்டி இளவரசனின் வாசித்தவர்கள் எல்லாம் புதிய உலகில் சஞ்சரித்து வந்திருப்பார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அந்த்வான் து செந்த் எக்சுபெரியின் பிரெஞ்சு கதையின் மாய உலகு அதி அற்புதமானது. அது சென்னை தென்னிந்திய மக்கள் நாடக விழாவில் நாடகமாக அரங்கேற்றப்படுகிறது என கேள்விப்பட்டபோதே அதை பார்க்க ஆவல் உண்டானது. ஒரு மாயக் கதை எப்படி நாடக வடிவில் இருக்கும் என்று நினைக்கும்போதே வியப்பாக இருந்தது. ஆனால் சென்னையில் அதை பார்க்க முடியவில்லை.புரிசையில் அந்த வாய்ப்பு கிட்டியது. புதுச்சேரி இன்டியனோஸ்ட்ரம் குழு சார்பில் வசந்த் செல்வம் நெரியாளுகையில் வந்திருந்தான் குட்டி இளவரசன். மாயா, கீர்த்தி என இரண்டே பேர்தான். பொம்மலாட்ட பாணியில் குட்டி இளவரசனை கையில் வைத்துக்கொண்டு புகுந்து விளையாடினார்கள். ஒரு அருமையான இலக்கியத்தை படிப்பறிவில்லாத மூதாட்டிக்கு கூட சேர்க்கும் விதத்தில் இருந்தது நாடகத்தின் வடிவமைப்பு. மேடை முன்னால் கண் கொட்டாமல் பல குட்டி இளவரசர்களும், குட்டி இளவரசிகளும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். குட்டி இளவரனின் வசனத்திற்கு கீழே இருந்தபடி அவர்கள் அடித்த கமெண்ட்களே எந்த அளவுக்கு நாடகத்தோடு ஒன்றியிருந்தார்கள் என்பதற்கு சாட்சி. அதிலும் பாட்டியோடு வந்திருந்த குட்டிப் பெண் ஒருத்தி எழுந்து நின்று மேடையில் கை வைத்தபடியே குட்டி இளவரசனை ரசித்துக் கொண்டிருந்தாள். பள்ளிகளில் குழந்தைகளுக்கு கண்டிப்பாக நிகழ்த்திக் காட்ட வேண்டிய நாடகம் இது. அருகில் துண்டை விரித்து படுத்தபடியே குட்டி இளவசரனை பார்த்துக் கொண்டிருந்த செய்யாறுவைச் சேர்ந்த தாத்தா ஒருவர், குட்டி இளவரசன் பேசும் போதெல்லாம் “சரிதான் போடா, போய் கூத்துக் காரங்கள வரச் சொல்லுடா” என சீரியஸாக திட்டிக் கொண்டிருந்தது தனிக்கதை.அதற்கடுத்தபடியாக வந்த ஜெயராணியின் “மஞ்சள்” மனிதக் கழிவுகளே மனிதரே அள்ளும் அவலம் பற்றி பேசியது. ஏற்கெனவே நான் சென்னை காமராஜர் அரங்கில் இதை பார்த்திருந்தேன். அதில் சில மாற்றங்களுடன் மேடை ஏற்றப்பட்டிருந்தது. திறந்தவெளி கழிப்பிடமில்லா நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதன் செவுளில் ஓங்கி அறையும் நாடகம்.  செல்வம் கலாலயத்தின் காவேரி நாடகம் ஓர் அரசியல் பகடி. காவேரி என்ற பெண்ணின் பெற்றோரை கர்நாடகாவாகவும், குடிகாரக் கணவனை தமிழ்நாடகாவும் மகனை வயலாகவும் உருவகப்படுத்தியிருந்தது. கதை உணர்ச்சிகரமாக இருந்தாலும் கூட அதன் அரசியல் பகடியால் சிரிப்பையே வரவைத்தது.

கடைசியாக அதிகாலை நான்கு மணிக்கு மேல் புரிசை கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றத்தின் சிலம்புச் செல்வி என்ற தெருக்கூத்து அரங்கேற்றப்பட்டது. கோவலன் மதுரைக்கு வந்து சிலம்பை விற்கச் செல்வதில் இருந்து கண்ணகி மதுரையை எரித்தவரையிலான நிகழ்வுகளின் தொகுப்பாக இருந்தது. தெருக்கூத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். வசனமும், பாடல்களும் கலைஞர்களிடம் பெய்யெனப் பெய்யும் மழை போல் கொட்டிக் கொண்டிருந்தது. கோவலனும், கண்ணகியும் பாட்டிகளை உச்சுக்கொட்ட வைத்துக் கொண்டிருந்தார்கள். எப்போது தூங்கினேனோ தெரியாது. திடீரென விழித்தபோது கண்ணகி பாண்டியன் நெடுஞ்செழியனோடு சிலம்பு தொடர்பாக வாதிட்டுக் கொண்டிருந்தாள்.நன்றாக விடிந்திருந்தது. சுற்றிப் பார்த்தபோது இரவில் இருந்த கூட்டத்தின் ஒரு பகுதி இன்னும் உட்கார்ந்து மதுரை எப்போது எரியும் என காத்திருந்தது. தெருக்கூத்து பார்த்துக் கொண்டே தூங்குவதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும். நேற்று நமக்கு அது கிட்டியது என நினைத்துக் கொண்டேன். கொஞ்ச நேரத்தில் அழுது புலம்பிய கண்ணகி மதுரையை எரிக்க முடிந்தது “சிலம்புச் செல்வி”.
சுமார் மூன்றரை மணி நேரம் இடைவிடாது மேடையில் நடித்திருந்தாலும் கண்ணகியும், கோவலனும், நெடுஞ்செழியனும் களைப்பென்றால் என்னவென்றே தெரியாதவர்கள் போல கீழே இறங்கி வந்தார்கள். மூவருமே கண்ணப்ப தம்பிரானின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். எங்கள் விருப்பத்தை ஏற்று மகிழ்வோடு எங்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்கள்.

வெளியூரில் இருந்து வந்திருந்த நாடகக் கலைஞர்கள், ரசிகர்கள் பலரும் ஊரில் இருந்த திருமண மண்டபத்திலும், தெருக்கூத்து பயிற்சி பள்ளியிலும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்களும் தெருக்கூத்து பயிற்சி பள்ளிக்கு சென்று பைகளை வைத்துவிட்டு ஊருக்கு வெளியே இருக்கும் வயக்காட்டு கிணற்றுக்கு சென்று குளியல்போட்டோம். பத்து படி இறங்கினாலே தண்ணீர் கிடக்கும் அளவுக்கு செழிப்பான பகுதியாக இருக்கிறது புரிசை. அங்குள்ள கோயிலிலேயே விழாக் குழு சார்பில் மூன்று வேளையும் உணவு அளிப்பது எங்களுக்கு தெரியாது. அதனால் இருவருமே அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று காலை உணவை முடித்துக் கொண்டு திரும்பினோம். அப்போது சில நண்பர்கள்தான் விழா ஏற்பாட்டாளர்களே உணவளிக்கும் விஷயத்தை கூறினார்கள்.

மதியத்திற்கு பார்த்துக் கொள்ளலாம் என நினைத்துக்கொண்டு தெருக்கூத்து பயிற்சி பள்ளியில் தூக்கம் போட்டோம். வெயில் ஏற ஏற வெக்கை அதிகமானதால் பின்பு எழுந்து அருகில் இருந்து வீட்டின் முன்பு அகலமான, குளிர்ச்சியான திண்ணையில் போய் படுத்துக் கொண்டோம். நாடக விழாவிற்கு வெளியூரில் இருந்து வந்திருப்பவர்கள் என தெரியுமாதலால் திண்ணையில் படுத்து தூங்கினால் யாரும், எதுவும் சொல்லவில்லை. குட்டி, குட்டி ஓடுகளால் நடுவில் முற்றத்துடன் கூடிய வீடுகள், வெளியே அகலமான திண்ணைகள். கிராமத்தின் அடையாளங்கள் இன்னும் முற்றாக கரைந்துபோகாமல் இருக்கிறது புரிசை.
மதியம் நல்ல சாப்பாடு. பிராய்லர் கோழிக்கறிக் குழம்பு இருக்க, நாட்டுக் கோழி உண்டா என்றேன். “இல்லையப்பா… காசு கட்டுபடியாகாது தம்பி, வேற ஒன்னும் இல்ல” என சிரித்தபடியே சொல்லிச் சென்றார் “கோவலன்”. கண்ணகிதான் சோறு போட்டார். மாலையில் மீண்டும் குளியல், பாட்டியின் குடிசைக் கடையில் வடை என பகல் ஓடியதே தெரியவில்லை. மீண்டும் இரவு… மீண்டும் நாடகம்…
நாகப்பட்டினம் வானவில் பள்ளி மாணவர்களின் “பொம்மை முகச் சிங்கங்கள்” நாடகம். மரமாகவும், பறவையாகவும், ஆடு, மாடாகவும், சிங்கமாகவும் உருவம் பூண்டு வந்த பள்ளி மாணவர்கள் ஒன்றரை மணி நேர நாடகத்தில் எந்த இடத்திலும் தயங்கி நிற்கவில்லை. அருமையான கதையாடலோடு நாடகத்தை நடத்திச் சென்றார்கள். பார்க்கவே பிரமிப்பாக இருந்தது.

பலத்த கைதட்டல்களோடு நாடகம் நிறைவு பெற்றபோது, அவர்கள் அனைவருமே நாடோடியாய் வாழும் நரிக்குறவ மற்றும் பூம் பூம் மாடு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் என்றும் முதல் தலைமுறையாக பள்ளிக் கூடம் செல்பவர்கள் என்றும் கூறியபோது நெகிழ்ச்சியாக இருந்தது. தேசிய அளவில் நடைபெறும் குழந்தைகளுக்கான நாடக விழாவிற்கு தேர்வாகி உள்ளார்களாம்.அடுத்து வந்தது வெளிப்படை அரங்கத்தின் இரணியன் நாடகம். இரணியனின் புராணப் புரட்டை மறுவாசிப்பு செய்யும் நாடகம். தேர்ந்த நடிகர்களின் அசுரப் பாய்ச்சலால் மிரட்டினான் இரணியன். அதிலும் கட்டிக்காரனாகவும், இரணியனாகவும் நடித்த அந்த இருவரும் பார்வையாளர்களை நடிப்பால் கட்டிப்போட்டார்கள். கட்டிக்காரனாக வந்தவர் பைக் ஸ்டார்ட் ஆகாததுபோல் நடித்துக் கொண்டிருக்க கீழே இருந்த சிறுவர்கள் “சாவி போடுய்யா” என தொடங்கி ஒவ்வொரு வசனத்திற்கும் கலாய்த்து எடுத்துவிட்டார்கள். அவர்களோடு உரையாடியபடியே நாடகத்தை நகர்த்திச் சென்ற கட்டியக்காரனின் திறமை அபாரம்… மதகுருவாகவும், சேனாதிபதியாகவும் பல வேடம் பூண்டு அசத்தினார் அவர். இரணியனின் நாவில் வந்தாடிய தமிழுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் நாடகத்தை பார்க்கலாம்…

மங்கையின் இயக்கத்தில் திருநங்கை ரேவதியின் ஓராள் நாடகமாக வெள்ளை மொழி. தனது சொந்த கதையே பாமரருக்கும் புரியும் விதத்தில் திருநங்கை, திருநம்பி பற்றிய எளிமையான கதையாடலாக நிகழ்த்தினார் ரேவதி. கடைசியாக பிரகாலாத நாடகம் தெருக்கூத்து. தஞ்சாவூர் ஆர்.சுத்திப்பட்டு இரணியன் நாடகக் குழுவின் அரங்கேற்றம் அது. வழக்கம்போல் கேமராவில் புகைப்படங்களை சுட்டுவிட்டு புழுதி மண்ணில் போர்வை விரித்து படுத்தபடியே தெருக்கூத்து பார்த்தேன். மீண்டும் கொடுப்பினை. அப்படியே தூங்கிப்போனேன். இடையில் விழித்தபோது எழுந்து அருகில் இருந்த கோயில் வளாகத்தில் சென்று படுத்துக் கொண்டேன்.

அதிகாலையில் தெருக்கூத்து முடிந்தபோது அருகில் கூத்துப் பார்த்துக் கொண்டிருந்த பாட்டி உசுப்பி விட்டார். மீண்டும் விடிந்திருந்தது. இரண்டு நாட்களாக நடந்த நாடக விழாவும் முடிந்திருந்தது. நாடகம் பார்ப்பதற்காக ஏதோ ஒரு ஊரில் இருந்து புறப்பட்டு வருபவர்களை இருநாட்கள் அரவணைக்கும் புரிசையின் விருந்தோம்பலை வேறு ஒரு கிராமத்தில் எதிர்பார்க்க முடியுமா என தெரியவில்லை. புரிசையின் அந்த இருநாட்களும் ஒரு சுகானுபவம்….

- க.பொன்ராஜ் (துணை ஆசிரியர் - நியூஸ் 18 தமிழ்நாடு)
First published: October 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading