தல ரசிகனா இருப்பதே கெத்து சார்....! இப்படிக்கு ஒரு அஜித் ரசிகர்

4 பிளாப் படங்கள் தொடர்ச்சியாக கொடுத்திருந்தாலும் அடுத்து வெளியாகவிருக்கும் ஒரு படத்திற்காக வெறித்தனமாக காத்திருப்பார்கள். வழக்கம்போல் முதல்நாள் முதல் காட்சியை திரையரங்கில் சென்று திருவிழாபோல கொண்டாடுவார்கள்.

தல ரசிகனா இருப்பதே கெத்து சார்....! இப்படிக்கு ஒரு அஜித் ரசிகர்
அஜித் குமார்
  • News18
  • Last Updated: May 1, 2019, 2:48 PM IST
  • Share this:
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே நானும், எங்கள் குடும்பமும் ரஜினி ரசிகர்கள் தான் என்றபோதிலும், அப்போதில் இருந்தே அஜித்தின் மீதான ஈர்ப்பும் இருந்து வந்தது. அது 2001-ம் ஆண்டு என நினைக்கிறேன்.

வீட்டில் உள்ள அக்காக்கள் விஜய் ரசிகர்கள் என்பதால் நினைத்தேன் வந்தாய் படத்தின் ஒரு ஸ்டில்லை வீட்டில் ஒட்டி வைத்தனர். அதற்கு பக்கத்திலேயே முகவரி படத்தில் அஜித் தம்ஸ் அப் காட்டும் ஸ்டில்லை நானும் ஒட்டிவைத்து எனது ஆசையை தீர்த்துக் கொண்டேன். அப்படி சிறு வயது முதலே அஜித் ரசிகன் தான் நான்.

சிறு வயது முதலே எத்தனையோ நடிகர்களின் படங்களை பார்த்து வந்தாலும் அஜித் ரசிகன் என்ற பெருமை மட்டும் எனக்கு தற்போது வரை குறையவேயில்லை. அஜித் ரசிகராக இருப்பதே ஒரு கெத்து என நினைத்துக் கொண்டிருந்த தருணம் அதெல்லாம்.


மேலும் படிக்க... அன்பு... அமைதி... அஜித்...!

அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு கல்லூரியில் நுழைந்து நீங்கள் யார் ரசிகன் எனக் கேட்டால் 75% இளைஞர்கள் தல என்று சொல்வார்கள். ஆனால் நன்றாக விசாரித்தால், அவர்கள் எல்லாருமே சிறு வயதில் வேறு ஒரு நடிகரின் ரசிகராக இருந்திருப்பார்கள்.

வேறு ஒருவரின் ரசிகராக இருப்பவர்களில் 10-ல் 7 பேர் கல்லூரிக்கு வந்தவுடன் அஜித் ரசிகர்களாக மாறியிருப்பார்கள். இந்த கணக்குகள் முன்பின் இருந்தாலும், கூற்றில் உண்மை உள்ளது. காரணம் தல ரசிகர்களாக இருப்பதை அவர்கள் ஒரு கெத்தாக பார்த்தார்கள்.
அஜித்குமார்


அந்த அளவிற்கு கல்லூரி இளைஞர்களையும், மாணவர்களையும் அஜித் ஈர்க்க காரணம் என்ன என ஆராய்ந்தால் அதில் முதன்மையாக வரும் படம் ரெட். என்னாது ரெட் ஆ? அந்த படம்தான் ஓடலையே. அப்றம் எப்டி அவ்ளோ ரசிகர்கள் சேருவாங்க என நீங்கள் கேட்கலாம். ஆனால், உண்மை அதுதான்.

மேலும் பார்க்க... தன்னம்பிக்கை நாயகன் ‘தல’... அஜித்தை நெஞ்சார வாழ்த்திய பிரபலங்கள்!

படம் வெளியாவதற்கு முன்பு ரெட் படத்தின் அந்த கெட்டப் வெளியானவுடன் மொத்த இளைஞர் கூட்டமும் தல, தல என்றபடியே திரிந்தனர். அல்டிமேட் ஸ்டார் ரெட் அஜித் ரசிகர் மன்றம் என்ற பெயரில் ஏகப்பட்ட ரசிகர் மன்றங்கள் அப்போது முளைத்தன. கூலி வேலை செய்பவர்கள், உழைப்பாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் ரெட் என்பதை இணைத்துக் கொண்டனர்.

அப்போதெல்லாம் இதை பார்த்தவர்களுக்கு நன்றாக நினைவில் இருந்திருக்கும். கேட்டால் பெரிய கதையே சொல்வார்கள். அப்போது ரெட், ஜனா, வில்லன் என்றால் இப்போது மங்காத்தா படத்திற்கு பிறகு ஒரு வெறிபிடித்த கூட்டம் மீண்டும் அவர் பின்னால் திரண்டது.

அஜித் குமார்


அதேபோல் அஜித் பின்னால் இப்படி ஒரு கூட்டம் திரள முதன்மையான காரணம் அவர் மீதான நன்மதிப்பு. "அஜித் நல்லவர் பா, அவர் உண்டு, அவர் வேலை உண்டுனு இருக்காரு பா" என பிற நடிகர்களின் ரசிகர்கள் கூட சிலாகிப்பார்கள். ஏன் சிம்பு, நயன்தாரா உள்ளிட்ட எத்தனையோ நடிகர்கள், இயக்குநர்கக் கூட அஜித்தின் ரசிகர்களாக இருப்பார்கள். தலைய மனசுல வெச்சுதான் இந்த ஸ்கிர்ப்ட் எழுதிருக்கேன் எனக் கூறும் இயக்குநர்களும், உதவி இயக்குநர்களும் அதிகம்.

அதேபோல் இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் எத்தனையோ பிளாப் படங்கள் கொடுத்தாலும், ரசிகர்கள் அவரை விட்டு விலகியதே இல்லை. உண்மை என்னவெனில் படம் தோல்வியடையும் போது தான் இன்னும் வீரியமான ரசிகர்களாக அவர்கள் வெளிப்படுவார்கள்.

4 பிளாப் படங்கள் தொடர்ச்சியாக கொடுத்திருந்தாலும் அடுத்து வெளியாகவிருக்கும் ஒரு படத்திற்காக வெறித்தனமாக காத்திருப்பார்கள். வழக்கம்போல் முதல்நாள் முதல் காட்சியை திரையரங்கில் சென்று திருவிழாபோல கொண்டாடுவார்கள். இந்த மேஜிக் எப்படி நிகழ்கிறது எனக் கேட்டால் அஜித்திற்கே பதில் தெரியாது. அதுதான் தல மேஜிக்.

இத்தனைக்கும் ரசிகர் மன்றங்களை அஜித் கலைத்துவிட்டபோதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவர் பின்னால் இருப்பதெல்லாம் சம்திங் ஸ்பெஷல். எவ்வளவு கோடி பணம் கொடுத்தாலும் இதெல்லாம் சாத்தியம் இல்லை.

மாறாக அவர்களிடம் அன்பை விதைப்பதால் மட்டுமே நிகழக்கூடியவை. இன்றும் அஜித் ஒரு வார்த்தை சொன்னால் கட்டுப்படும் கூட்டம் அது. அவ்வளவு கட்டுக்கோப்பான கூட்டத்தை அஜித் தன்னோட சுயநலத்திற்காக ஒருநாளும் பயன்படுத்தியதில்லை. அது கூட அவர் மீதான மதிப்பு உயர்வதற்கு காரணமாக இருக்கலாம்.

மேலும் பார்க்க... அஜித்தை வாழ்த்திய ‘விஜய் 63’ படக்குழு - ரசிகர்கள் மகிழ்ச்சி!
 அஜித்தை சினிமாவைத் தவிர வேறு எதிலும் பார்க்கவே முடியாது. சினிமா சார்ந்த எந்த நிகழ்ச்சிக்கும் வரவே மாட்டார். அதனால் தான் அவர் எங்காவது வெளியில் சென்றாலோ, அல்லது துப்பாக்கி பயிற்சி எடுத்தாலோ, ஏதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலோ, அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகின்றன.

காலை 7 மணிக்கு ஓட்டு போட வரும் ஒரு நபரை பார்க்க, அந்த காலை வேளையிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்து தல, தல என ஆர்ப்பரிப்பது, சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்வதெல்லாம் அஜித் ஒருவருக்கு மட்டுமே நடக்கக்கூடியது. சுருக்கமாக சொன்னால், அஜித் எந்த சமூக வலைதளத்திலும் இல்லை, ஆனால் அஜித் இல்லாமல் எந்த சமூக வலைதளமும் இல்லை என்பதே நிதர்சனம்.

தன்னுடைய படங்களின் இசை வெளியீட்டு விழாவோ, படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியோ எதற்கும் வந்ததில்லை. கேட்டால், என் படத்தைப் பற்றி நானே மேடைப் போட்டு பேசக் கூடாது. மக்கள் பேசட்டும். அதுபோதும் எனக் கூறிவிட்டு சிம்பிளாக கடந்து விடுவார்.

என் படம் புடிச்சுர்ந்தா பாருங்க. ரசிங்க. பாலாபிஷேகம் பண்றது, கட் அவுட் வைக்கறது எல்லாம் செய்யாதீங்க. முதல்ல உங்க குடும்பத்த பாருங்க. அம்மா, அப்பாவ பாருங்க. நாட்டுக்கு பொறுப்பான குடிமகனா இருங்க. இதெல்லாம் தனது ரசிகர்களுக்கு அஜித் சொல்லும் அட்வைஸ். இது கூட ரசிகர்கள் அஜித்தை கொண்டாடும் காரணமாக இருக்கலாம்.

எல்லாவற்றிலும் மேலாக, அஜித்தின் படங்களுக்காக ரசிக்கும் ரசிகர்களை விட அவரது குணத்திற்காகவே ரசிக்கும் ஒரு கூட்டம் தான் இங்கு அதிகம். எந்த நடிகரையோ, தனிப்பட்ட நபரையோ விமர்சிக்காதீர்கள் என்பதே அஜித்தின் ஆல்டைம் அட்வைஸ்.

தனது பெற்றோருடன் அஜித்


"நமக்கு கீழ இருக்கறவங்கள நாம பாத்துக்கிட்டா, நமக்கு மேல இருக்கறவன் நம்மள பாத்துப்பான்"

"இந்த உலகமே உன்ன எதிர்த்தாலும் நீயா ஒத்துக்கற வரைக்கும் உன்ன யாராலயும் ஜெயிக்க முடியாது"

"என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினது"

அஜித்தின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் இந்த மூன்று வசனங்களுக்குள் அடக்கம். தன் வீட்டில் தனக்காக பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வீடு, வண்டி வாங்கிக் கொடுப்பது என தன் குடும்பத்தில் ஒருவரைப் போல பார்த்துக் கொள்கிறார் அஜித். மனைவி, குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் விதம், தனது சினிமா வாழ்க்கையில் வெற்றி பெறுவது என இதுபோல அவர் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

தனக்காக உயிரையே கொடுக்கும் ரசிகர்களுக்காக அஜித் ஆண்டுக்கு ஒரு படம் செய்தால் கூட போதும். ரசிகர்கள் அஜித்திடமிருந்து எதிர்பார்ப்பது அது மட்டும் தான். அதை செய்வார் என்ற நம்பிக்கையோடு, தனிப்பட்ட வாழ்க்கையில் தனக்கென ஒரு கொள்கையோடு நேர்மையாக வாழும், தன்னைத்தானே செதுக்கிய தல அஜித்திற்கு மீண்டும் ஒருமுறை பிறந்தநாள் வாழ்த்துகள்.

பார்க்க.. அஜித்... தவிர்க்கவே முடியாத தனி சக்தி...!

First published: May 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்