இந்திக்கு எதிர்ப்பல்ல... திணிப்பிற்கே எதிர்ப்பு…

ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழ் முற்றிலும் வர வேண்டும். அதுவே மொழிப் போர் தியாகிகளுக்கு செய்யும் உண்மையான வீர வணக்கமாக இருக்கும் என்கிறார்கள் தியாகிகளின் குடும்பத்தினர்.

ஜோ. மகேஸ்வரன் | news18
Updated: June 1, 2019, 11:53 AM IST
இந்திக்கு எதிர்ப்பல்ல... திணிப்பிற்கே எதிர்ப்பு…
இந்திக்கு எதிர்ப்பல்ல.. திணிப்பிற்கே எதிர்ப்பு...
ஜோ. மகேஸ்வரன் | news18
Updated: June 1, 2019, 11:53 AM IST
”விதி என்ற பெயரால் வீழ்ந்து விட்ட தமிழினமே… என் போன்றோர் உடலைப் பார்த்தாவது, விழித்தெழு வருகிறேன்….. எனது தமிழ்த் தாயின் பாதம் ரத்தக் கறை படிந்துள்ளது”– விராலிமலை சண்முகம்.

”என்னை மன்னித்து, வாழ்த்தி வழியனுப்புங்கள். தமிழ் வாழ வேண்டும் என்று நான் செய்த காரியம் வெல்லும்” – கீழப்பழுவூர் சின்னச்சாமி.

இந்த வரிகளும்…. அவற்றுக்கு பின்னால் உள்ள பெயர்களும் உங்களுக்கு தெரிகிறதா..? தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வான மொழிப் போராட்டத்தில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டு, போராட்டக் கனலை பெருக்கியவர்களில் இருவர். வரலாற்றின் பின்னே கொஞ்சம் செல்வோம்….தமிழ்நாட்டில் கடந்த 1937 -38ம் ஆண்டு இந்தி கட்டாய பாடம் என்று அப்போதைய மெட்ராஸ் மாகாண முதலமைச்சர் ராஜாஜி அறிவிக்கிறார்.

இது, ”மொழித் திணிப்பு மட்டுமல்ல, இன அடக்குமுறை. மொழியை அழித்து, தமிழர் கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை அழிக்கும் முயற்சி” என்று கூறி மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், உமா மகேசுவரனார், கி.ஆ.பெ.விசுவநாதம் பெரியார், சவுந்திரபாண்டியன், அண்ணா, கருணாநிதி, பட்டுக்கோட்டை அழகிரி, கே.எம்.பாலசுப்பிரமணியன், சண்முகானந்த அடிகள், சே.தே.நாயகம் உள்ளிட்ட என பல்வேறு அறிஞர்களும், அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டை 1937ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி கி.ஆ.பெ.விசுவநாதம் திருச்சி தேவர் மன்றத்தில் நடத்தினார். நீதிக்கட்சியின் தலைவராகியிருந்த பெரியார் போராட்டக் களத்தில் இறங்கினார்.
Loading...


இந்தித் திணிப்புக்கு எதிராக 11.09.1938-ல் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் ”தமிழ்நாடு தமிழருக்கே” என்கிற முழக்கத்தை பெரியார் முன்வைத்தார். போராட்டங்களில் தலைவர்கள், அறிஞர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதில், நடராஜன் முதல் களபலியானார். அடுத்து, தாளமுத்து களபலியானார். தொடர் போராட்டத்தினால் முதல் கட்ட கட்டாய இந்தித் திணிப்பு கைவிடப்படுகிறது.

இதையடுத்து இரண்டாம் கட்டமாக 1948ம் ஆண்டு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இந்தி கட்டாயம் என்று மீண்டும் முயற்சித்தார். அப்போதும் எதிர்ப்பு வலுவாக கிளம்ப, திணிப்பு கைவிடப்பட்டது.மூன்றாம் கட்டமாக 1952 தொடங்கி 1965ம் ஆண்டு வரை இந்தியை கட்டாயமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, 1964 -65ல் தீவிரமடைந்தது. இதை எதிர்த்து காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளின் தலைவர்கள் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் போராடினர்.

திருச்சியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில், முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு காரணமான ராஜாஜியே பங்கேற்று, போராட்டத்தின் நியாயத்தை உணர்த்தினார்.

மாநிலம் முழுக்க முக்கியத் தலைவர்கள் தலைமையேற்று தொடர் போராட்டங்களை நடத்தினர். தலைவர்கள் அனல் பறக்கும் பேச்சுக்களும் போராட்ட களமும் தமிழ்நாட்டை அதிரச் செய்தது. போராட்டத்தை தடுக்க, தலைவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.போராட்டத்தை வழி நடத்த வழியின்றி… அடுத்து என்ன நடக்கும் என்று திகைத்து நின்ற போது, வரலாற்று திருப்புமுனையாக மாணவர்கள் போராட்டக் களத்திற்கு வந்தனர். இந்தித் திணிப்பின் உள்நோக்கமும் அதன் பாதகங்களும் மாணவர்களை கிளர்ந்தெழச் செய்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவப் பிரதிநிதிகளை சந்திக்க அப்போதைய முதலமைச்சர் மறுத்ததும், மதுரையில் ஊர்வலமாக சென்ற மாணவர்கள் மீதான தாக்குதலும் மாணவர்களை மேலும் வேகப்படுத்தியது. தமிழ்நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது.

போராட்டத்தை நிறுத்த 40 ஆயிரம் போலீசார், ராணுவத்தினர் 5 ஆயிரம் பேர் என குவிக்கப்பட்டனர்.. நாற்பது இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழக்கிறார்கள். ஆனாலும் அன்றைய மாணவர்கள் பின்வாங்கவில்லை. போராட்டத்தை பல்வேறு வடிவங்களில் தொடர்ந்தனர்.

திருச்சியில் மாணவர்களின் ஊர்வலத்தை தடுக்க சென்ற மாவட்ட ஆட்சியர் சொக்கலிங்கம், தானும் அவர்களோடு ஊர்வலம் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

1964ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி வயலுக்கு போகிறேன் என்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் சொல்லி விட்டு, திருச்சி ரயில்வே சந்திப்புக்கு வந்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, தமிழ் வாழ்க… இந்தி ஒழிக என்று முழக்கமிட்டபடி தீக்குளிக்கிறார். பெற்றோர், உறவுகளைத் தவிக்க விட்டு, மொழிப் போராட்டத்தில் முதலில் தீயில் மடிந்தார்.

மொழிப்போரியில் உயிர் நீத்த தியாகிகள்


இதையடுத்து விராலிமலை சண்முகம், கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், கீரனூர் முத்து, மாயவரம் சாரங்கபாணி, சத்தியமங்கலம் முத்து, பீளமேடு தண்டபாணி உள்ளிட்ட பலர் தீக்குளித்தும், விஷமருந்தியும் கட்டாய இந்தித் திணிப்பைக் கைவிடக் கோரி தற்கொலை செய்து கொண்டனர். தங்களின் எதிர்ப்பை, கருத்தை கடிதமாக எழுதி வைத்து விட்டும் சென்றனர்.

இந்த தியாகிகளின் உயிர்த்தியாகம், மாணவர்களின் அசராத போராட்டங்கள், அஞ்சாமல் களத்தில் நின்ற தலைவர்கள், தமிழ்நாடு கொண்ட போர்க்கோலம்… இவற்றால் கட்டாய இந்தி என்கிற முடிவைக் கைவிட்டனர். இந்த போராட்டம் பெரும் அரசியல் மாற்றத்தையும் ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தியது.

முதல் போராட்டம் தொடங்கிய 1938 முதல் உச்ச கட்டத்தில் இருந்த 1965ம் ஆண்டு வரையிலான காலத்தில் ஏராளமானோர் தமிழ் மொழிக்காக உயிரிழந்தனர்.

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் உள்ளன. இவற்றில், இந்தி கட்டாய பாடமாக ஏற்காத நிலையில் தமிழ்நாடு மட்டுமே உறுதியாக இருக்கிறது.

மொழிப்போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் ஜனவரி 25ம் தேதி மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது. மொழிப்போர் தியாகிகள், அவர்களின் குடும்பத்தாருக்கு மாதாந்திர மதிப்பூதியம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை அரசு வழங்கியுள்ளது.

அதேநேரத்தில் ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழ் முற்றிலும் வர வேண்டும். அதுவே மொழிப் போர் தியாகிகளுக்கு செய்யும் உண்மையான வீர வணக்கமாக இருக்கும் என்கிறார்கள் தியாகிகளின் குடும்பத்தினர்.

அதேநேரத்தில், கட்டாய இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் பலரால் இந்தி மொழிக்கு எதிரான போராட்டமாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. முதல் போராட்டம் நடைபெற்ற 1938ம் ஆண்டுக்கு முன்பே 1923ம் ஆண்டு முதல் இந்தி பிரச்சார சபா இங்கு தடையின்றி இயங்கி வருகிறது.

விருப்பம் உள்ளவர்கள் தற்போது வரை படித்தும் வருகின்றனர். காரணம், இந்தி மட்டுமல்ல எந்த மொழிக்கும் தமிழர்கள் எதிரியல்ல. கட்டாயமாக்கல், திணிப்பை மட்டுமே இப்போதும் எதிர்க்கிறோம்.
First published: January 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...