முகப்பு /செய்தி /சிறப்புக் கட்டுரைகள் / வெறுத்தவர்களையும் வென்றவர் ‘விஜய்’! #HBDTHALAPATHYVijay

வெறுத்தவர்களையும் வென்றவர் ‘விஜய்’! #HBDTHALAPATHYVijay

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

Vijay | "விஜய் பயணித்த திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிகளும் இருக்கின்றன; இமாலய தோல்விகளும் இடம்பெற்றிருக்கின்றன"

  • News18 Tamil
  • 4-MIN READ
  • Last Updated :

அது அவருக்கு ஐம்பதாவது திரைப்படம். அன்றைய தமிழ்த் திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் அதனைத் தயாரித்து வெளியிட்டிருந்தது. ’சூப்பர்ஸ்டார்’ ரஜினியின் இடத்திற்கு அவர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், அவரின் முந்தைய தோல்விகளை அவரது ஐம்பதாவது திரைப்படம் சரிகட்டிவிடும் என்றும் ரசிகர்கள் நம்பியிருந்தனர். அவரது படங்கள் குடும்பங்களையும், குழந்தைகளையும் கவரும் என்பதால் கோடை விடுமுறை நாள் ஒன்றில் அந்தப் படமும் வெளியானது.

பெரும் எதிர்பார்ப்புடன் வந்த அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது அந்தப் படம். தொடர் தோல்விகள். ‘அவ்ளோ தான்!’ என்று அவரை வெறுத்தவர்கள் முடிவுசெய்ததோடு, அந்தப் படத்தின் அவரது ’இண்ட்ரோ’ காட்சி இன்றுவரை அதிகளவில் கலாய்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தப் படம் - ‘சுறா’. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, தொடர் தோல்விகளைத் தழுவிய அந்த நடிகர், ‘இளைய தளபதி’ விஜய்.

நிற்க.

பத்தாண்டுகள் கழிந்துவிட்டன. அவரது படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கையில், வருமான வரிச்சோதனை என்ற பெயரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்படுகிறார். வருமான வரிச்சோதனையில் அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று அந்தத் துறையில் இருந்து அறிவிப்பு வெளியாகிறது. நெய்வேலியில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து அவர் அழைத்துச் செல்லப்பட்டதை அறிந்த அவரது ரசிகர்கள் அங்கு கூடுகின்றனர். அவருக்காக குரல் எழுப்புகின்றனர். அவர் தனது ரசிகர்களைக் காண அங்கு வருகிறார். தனது ட்ரேட்மார்க் மென் புன்னகை அவரிடம் அப்படியே இருக்கிறது. அங்கிருந்த பேருந்து ஒன்றின் மேல் ஏறுகிறார். ரசிகர் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. ரசிகர்களோடு செல்ஃபி எடுத்துக் கொள்கிறார். இரண்டு நாட்களுக்குப் பின், அந்த செல்ஃபி படம், சர்வதேச அளவில் ’ட்ரெண்ட் ஆகிறது. பத்தாண்டுகளில் மிகப்பெரிய மாற்றம். தன்னை வெறுத்தவர்களும், தன்னை நேசிக்கும்படிச் செய்த அந்த மாற்றம், அவரை பாக்ஸ் ஆஃபிஸின் வசூல் மன்னனாக மாற்றியிருந்தது. ‘இளைய தளபதி’ விஜய், ‘தளபதி’ விஜய் ஆகப் ப்ரொமொஷன் பெற்றிருக்கிறார். அசாத்தியங்களை நனவாக்கியிருக்கிறது விஜயின் சினிமா பயணம்.

’எல்லா ஏரியாவிலும் கில்லி!’

நடிகர் விஜய்க்குத் தோல்வி என்பது புதிதல்ல. அவரது தொடக்க காலத் திரைப்படங்கள், அவர் விருப்பப்படி ஆக்‌ஷன் திரைப்படங்களாக வெளிவந்தன; தோல்வியைத் தழுவின. ஆக்‌ஷன் திரைப்படங்களைக் கைவிட்டு, ரொமான்ஸ் பக்கம் திரும்பினார் விஜய். ’பூவே உனக்காக’, ‘லவ் டுடே’, ‘ஒன்ஸ் மோர்’ முதலான திரைப்படங்கள் விஜய்க்குத் தனி முத்திரையைப் பெற்றுத் தந்தன. அவர் நடித்த ’காதலுக்கு மரியாதை’ கல்ட் அந்தஸ்து பெற்ற திரைப்படமாக மாறியது. ’ப்ரியமுடன்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ ஆகியவற்றிற்குப் பிறகு வந்தது ‘குஷி’. வெளியாகி 20 வருடங்கள் கடந்தும், விஜய் நடித்த படங்களுள் அதிகம் கொண்டாடப்படுகிறது ‘குஷி’.

’பிரியமானவளே’, ’பிரெண்ட்ஸ்’ முதலான ஃபீல் குட் படங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜய் மீண்டும், அவர் விரும்பியபடி, ‘தமிழன்’, ‘பகவதி’, ‘பத்ரி’ ஆகியவற்றின் வழியாக ஆக்‌ஷன் திரைப்படங்களிலும் கால்பதிக்கத் தொடங்கினார். அதன் நீட்சி, ’கில்லி’ படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியில் எதிரொலித்தது. ‘அப்படிப் போடு!’ என்று விஜய் ஆடிய பாடல் அன்றைய காலகட்டத்தில் ஒலிக்காத தமிழக வீடுகளையும், தெருக்களையும் பார்ப்பது அரிது என்பதாக அந்தப் படம் கொண்டாடப்பட்டது. கண்டிப்பான அப்பா, செல்லம் கொடுக்கும் அம்மா, எப்போதும் தன்னுடன் முட்டிக் கொள்ளும் தங்கை, கிராமத்து ஹீரோயின், கிராமத்து டெர்ரர் வில்லன் எனக் கபடி ஆடி, தமிழக மக்களின் நெஞ்சில் குடியேறினார் விஜய்.

’மதுர’, ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ போன்ற ஆக்‌ஷன் திரைப்படங்களில் நடித்த போதும், இடையில் ‘சச்சின்’ படத்தில் ‘ஃபீல் குட்’ முகம் காட்டினார் விஜய். ரஜினியின் ‘சந்திரமுகி’, கமல்ஹாசனின் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ ஆகியவை வெளியான அதே நாளில் வெளியான ‘சச்சின்’, இரு பெரும் ஜாம்பவான்களின் படங்களோடு போட்டியிட்ட போதும், ‘சச்சின்’ வெற்றிப்படமாக அமைந்தது. அவரது ’குஷி’, ‘பத்ரி’, ‘கில்லி’ முதலானவை கோடை விடுமுறையில் இருக்கும் குழந்தைகளையும், குடும்பங்களையும் குறிவைத்து வெளியாகி வெற்றி பெற்றவை. ‘சச்சின்’ படம் அந்த செண்டிமெண்டை உறுதி செய்தது.

தெலுங்குத் திரைப்படத்தின் ரீமேக்காக வெளிவந்த போதும், ‘போக்கிரி’ விஜயின் மாஸ் இமேஜுக்கு வலுசேர்த்தது. 200 நாட்கள் திரையரங்குகளில் வெடித்த ‘போக்கிரி பொங்கல்’ என்ற மேஜிக், விஜயின் அடுத்தடுத்த படங்களில் நிகழத் தவறின.

இரட்டை வேடத்தில் அவர் நடித்த ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை அவரது மாஸ் நடிப்பும், ஏ.ஆர்.ரகுமானின் ஹிட் பாடல்களும் காப்பாற்றவில்லை. அடுத்தடுத்து, ‘குருவி’, ‘வில்லு’, ‘வேட்டைக்காரன்’ எனத் தொடர் ‘மாஸ்’ படங்கள் தோல்வியைத் தழுவின. அதன் தொடர்ச்சியாக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவரது ஐம்பதாவது படமான ‘சுறா’ மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. விஜய் பெற்ற கடந்த கால வெற்றிகள் மறக்கடிக்கப்பட்டன. இணையத்தில் பெரிதும் ‘ட்ரோல்’ செய்யப்படும் நபராக மாறினார் விஜய். எனினும், அவருக்கான ரசிகர் கூட்டம் முன்பு இருந்தது போல, அப்படியே இருந்து வந்தது.

’வாழ்க்கை ஒரு வட்டம்..!’

மீண்டும் ஒரு காதல் கதை. ஆனால் அதில் அவரது மாஸ் அம்சத்தையும் கைவிடவில்லை.  அப்படியான காம்போவாக வெளிவந்த ‘காவலன்’ நல்ல வரவேற்பும் பெற்றது. அடுத்து ‘வேலாயுதம்’ சுமாராக இருக்க,  மாஸ் அம்சத்தையும், ஆக்‌ஷனையும் கைவிட்டு, இயக்குநர் ஷங்கரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தார் விஜய். ஹிந்தியில் பெரிதும் கொண்டாடப்பட்ட ‘த்ரீ இடியட்ஸ்’ படத்தின் ரீமேக் அது. ’ஆமிர் கானின் வேடத்தில் விஜய் நடிக்கிறாரா?’ என்று பகடி செய்தவர்களை, தன்னடக்கத்துடன் வெற்றிகொண்டார் பஞ்சவன் பாரிவேந்தன். ‘ஆல் இஸ் வெல்!’ என்றது விஜயின் அடுத்தடுத்த திரைப்பயணம்.

விஜய் நடித்த திரைப்படங்களில், அவருக்கு மைல்கல்லாக இருந்த முதல் திரைப்படம் ‘பூவே உனக்காக’. அடுத்தது, ‘கில்லி’. நடுவில் அவர் சில வெற்றிப்படங்களை அளித்திருந்தாலும், விஜய்க்குத் தனி மார்க்கெட்டையும், பாக்ஸ் ஆஃபிஸில் தனியிடத்தையும் தந்தவை இந்தத் திரைப்படங்கள்தாம். அந்த இடத்தை மற்றுமொரு உயரத்திற்குக் கொண்டு சென்றது ‘துப்பாக்கி’. மாஸ், கிளாஸ், ஸ்டைல் என அனைத்தும் ஒன்றுசேர, நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருந்தது ‘துப்பாக்கி’. வெளியான 11 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, ‘துப்பாக்கி’ படத்திற்காக பாடல் பாடியிருந்தார் விஜய். அதுவே அதன்பிறகு வெளியான படங்களில் வழக்கமாக மாறிவிட்டது. ‘கூகுள் கூகுள்’ தொடங்கி, தற்போதைய ‘குட்டி ஸ்டோரி’ வரை விஜய் குரலில் வெளியாகும் பாடல்களை எதிர்பார்த்துக் கொண்டாடுகின்றனர் அவரது ரசிகர்கள்.

அதற்கடுத்து, அவர் நடித்த ‘தலைவா’ படம் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது. அது வெளிவராமல் காலம் தாழ்த்தப்பட்டதற்குப் பின்னணியில் அன்றைய ஆளுங்கட்சியின் தலையீடே காரணம் என்று கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெளிவந்த ‘கத்தி’ படம் விவசாயிகளுக்கு ஆதரவாக, கார்ப்பரேட் எதிர்ப்பு பேசிய போதும், அதன் தயாரிப்பாளர் குறித்த சர்ச்சைகள் எழுந்தன. தொடர் சர்ச்சைகளுக்குப் பிறகு, ஒரு படமே இயக்கியிருந்த இளம் இயக்குநர் அட்லீயுடன் இணைந்து, போலீஸாகக் களமிறங்கினார் விஜய்.

‘தெறி பேபி!’

’பழைய பன்னீர்செல்வமா வரணும்!’ என்ற 'சத்ரியன்' படத்தின் வசனத்தைப் போலவே, மீண்டும் ‘போக்கிரி’, ‘ஜில்லா’ ஆகியவற்றிற்குப் பிறகு, மீண்டும் காக்கிச் சட்டை அணிந்த நேர்மையான காவல்துறை அதிகாரியாக மாஸ் அவதாரம் எடுத்தார் விஜய். காதல், ஆக்‌ஷன், மகள் செண்டிமெண்ட் என அனைத்தும் கைகொடுத்தது. மீண்டும், அட்லீயுடன் இணைந்து ‘மெர்சல்’ வெளியானது. ‘மெர்சல்’ விஜய் நடித்த படங்களுள் மற்றொரு மைல்கல். மத்திய அரசை விமர்சித்தது என்று கடுமையாக எழுந்த ‘மெர்சல்’ எதிர்ப்பு, விஜயின் சிறுபான்மை மத அடையாளத்தைக் குறிவைத்தது. அதற்கும் அசரவில்லை விஜய். படத்தின் வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி கூறி வெளியிட்ட அறிக்கையில், தன்னை ‘ஜோசப் விஜய்’ என்றே வெளிப்படுத்தினார்.

’சர்கார்’ போஸ்டரே சர்ச்சைகளுடன் வெளியாக, படத்தைப் பார்த்த அரசியல்வாதிகள் தியேட்டர்களுக்கு வெளியே விஜய் போஸ்டர்களையும், கட் அவுட்களையும் கிழித்துக் கொண்டிருந்தனர். திரையில் அரசியல்வாதிகளை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தார் விஜய். விஜயின் மாஸ் அடையாளத்திற்கு மற்றொரு கிரீடமாக வெளியானது ‘பிகில்’. விமர்சனங்களை எதிர்மறையாகக் கொண்ட போதும், பாக்ஸ் ஆஃபிஸைத் தக்கவைத்துக் கொண்டன இந்தப் படங்கள். கடந்த பத்தாண்டுகளில், தென்னிந்தியத் திரையுலகின் வணிக வெற்றிகளில் மிகப்பெரிய சாதனைகள் புரிந்தன விஜய் நடித்த திரைப்படங்கள்.

’தலைவன் இருக்கிறான்.. மயங்காதே!’

விஜய் பயணித்த திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிகளும் இருக்கின்றன; இமாலய தோல்விகளும் இடம்பெற்றிருக்கின்றன. அந்தப் பயணத்தின் போது, அவருக்கு உறுதுணையாக இருந்தது அவரது ரசிகர்கள். மேடைப் பேச்சுகளைத் தொடக்க காலத்தில் விரும்பாத விஜய், தனது ரசிகர்களுக்காக மைக்கைப் பிடிக்கத் தொடங்கினார். ‘என் நெஞ்சினில் குடியிருக்கும்..’ என்று விஜய் தனது பேச்சைத் தொடங்கினார் ரசிகர்களின் விசில் சத்தம் விண்னை எட்டத் தொடங்கும். அவரின் அழகான சிரிப்புக்காக, இண்ட்ரோ காட்சியில் அவர் வெளிபடுத்தும் மாஸுக்காக, அவரது நடனத்திற்காக, அவரது ஸ்டைலுக்காக ஏங்கும் ரசிகர்களைத் தமிழகம் முழுவதும் காண முடியும். ரசிகர்கள் மட்டுமல்லாது, கடந்த காலங்களில் தன்னை வெறுத்தவர்களையும், தன்னை நேசிக்கும்படி மாற்றியது விஜயின் உழைப்பு.

தமிழகத்தின் மிகப்பெரிய இயக்குநர்கள் விஜயைத் திரையில் இயக்கியிருக்கலாம். புதிய இளைஞர்கள் பலருக்கு விஜய் வாய்ப்பு வழங்கி, தன் படங்களை இயக்க வைத்திருக்கலாம். ஆனால், விஜய் என்ற தனி மனிதரை இயக்குவது, அவரது ’ நெஞ்சினில் குடியிருக்கும் புள்ளைங்க’ அவர் மீது கொண்டுள்ள பேரன்பு மட்டுமே!

பிறந்தநாள் வாழ்த்துகள் ’தளபதி’!

First published:

Tags: Actor vijay