ஹோம் /நியூஸ் /சிறப்புக் கட்டுரைகள் /

சிறிசேனாவின் துரோகம்: 2014-ல் ராஜபக்சே, 2018-ல் ரணில் விக்கிரமசிங்கே!

சிறிசேனாவின் துரோகம்: 2014-ல் ராஜபக்சே, 2018-ல் ரணில் விக்கிரமசிங்கே!

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா

அதிபர் சிறிசேனா முன்னிலையில் ராஜபக்சே பிரதமராக பதவியேற்ற நிலையில், பாராளுமன்றத்தில் தனக்கே பெரும்பான்மை இருப்பதாக ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

  • News18
  • 3 minute read
  • Last Updated :

இலங்கை தீவில் நிலவும் அரசியல் குழப்பம் இந்தியாவையும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. 2014-ல் ராஜபக்சேவுக்கு துரோகம் இழைத்து ரணில் உதவியுடம் அதிபர் ஆன சிறிசேனா, தற்போது ராஜபக்சே உடன் கைகோர்த்து ரணிலை கழற்றிவிட்டுள்ளார்.

2014-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் ஒரு நாள். தேர்தல் பரபரப்பில் இருந்த இலங்கையில், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். 2015-ம் ஆண்டு ஜனவரியில் நடக்கும் அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து மைத்திரிபால சிறிசேனா போட்டியிடுவார் என்பதே அந்த அறிவிப்பு.

ஓட்டுமொத்தத் தீவும் திகைத்து நின்றது. அதிபராக இருந்த ராஜபக்சேவின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்த சிறிசேனா, அவரை எதிர்த்தே களமிறங்குகிறாரா? என்பதே அந்த ஆச்சரியத்துக்கான காரணம். எதிர்கட்சிகளின் இந்த நகர்வை ராஜபக்சே நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. பதவிக்காலம் முடிவதற்கு 2 ஆண்டுகள் இருந்தும் முன்னரே தேர்தலை கொண்டு வந்த அவர், ஒரு நிமிடம் ஆடித்தான் போனார்.

மைத்ரிபால சிறிசேனா - ரணில் விக்கிரமசிங்கே

நிச்சயமாக ராஜபக்சேவுக்கு எதிராக சிறிசேனாவை நிறுத்தியது சந்திராகா மற்றும் ரணிலின் சாதுர்ய முடிவுதான். ஆனால், சிறிசேனா செய்தது சரியா? என அப்போதே பல கேள்விகள் எழுந்தன. எதிர்க்கட்சிகளுடன் கைகோர்க்கும் கீழான நிலைக்கு சிறிசேனா செல்வார் என ராஜபக்சே நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். தேர்தலும் வந்தது ராஜபக்சேவை வீழ்த்தி சிறிசேனா அபார வெற்றி பெற்றார். தலைமை நீதிபதியைப் பயன்படுத்தி தேர்தல் முடிவுகள் செல்லாது என அறிவிக்க ராஜபக்சே எடுத்த முயற்சிகளும் தோல்வியடைந்தன.

அனைவரும் எதிர்பார்த்தபடி ரணில் விக்கிரமசிங்கேவை பிரதமராக நியமித்தார் சிறிசேனா. ராஜபக்சே அவ்வளவுதான் என அனைவரும் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அவர் அடிபட்ட புலியாக பாய்வதற்கு பதுங்கிக்கொண்டிருந்தார். சில மாதங்களுக்குப் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியும், சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியும் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் பிரதமரானார். அமைச்சரவையிலும் இரு கட்சிகளுக்கும் சம பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது.

மகிந்த ராஜபக்சே

தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக செயல்பட்டது. ஆச்சரியப்படும் வகையில் அதிபரானாலும் சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் ஆகிய இருவரும் அவ்வளவு மோசமாக ஒன்றும் ஆட்சி நடத்தவில்லை. ராஜபக்சே ஆட்சியின் போது குறைக்கப்பட்ட பாராளுமன்ற அதிகாரங்களை சிறிசேனா மீண்டும் அதற்கே வழங்கினார். ஊடகங்கள் மீதான இறுக்குப்பிடி தளர்த்தப்பட்டது. இப்படியாக பிரச்னை ஏதும் இல்லாமல் கூட்டணி ஆட்சி போய்க்கொண்டிருந்த நிலையில், சிறிசேனா கட்சியில் இருந்த ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் சிலர் அவ்வப்போது ஏதாவது கூறி குட்டையை குழப்பியபடி இருந்தனர்.

ஆனால், இந்தியா மற்றும் சீனா இந்த இரு நாடுகளுடன் இலங்கை கொண்டுள்ள உறவில் சிறிசேனா மற்றும் ரணில் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்து கொண்டேதான் இருந்தது. சில நேரங்களில் அது பொதுவெளியிலும் வெடித்தது. இரு தலைகள் இடையே உரசல் அதிகமானது. ஆனால், மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து தன்னை அதிபராகக் கொண்டு வந்த ரணிலுக்கு இப்படி ஒரு துரோகத்தை சிறிசேனா செய்வார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

பிரதமராக பொறுப்புகளை ராஜபக்சேவிடம் ஒப்படைக்கும் சிறிசேனா

சமீபத்தில் தன்னை கொலை செய்ய இந்திய உளவு அமைப்பான ‘ரா’ சதி செய்வதாக சிறிசேனா கூறியதாக செய்திகள் வெளியானது. தன் கட்சி அமைச்சர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்திய ரணில், இவ்விவகாரம் தொடர்பாக சிறிசேனாவிடம் பல கேள்விகளை எழுப்பினார். சமீபத்தில் இந்தியாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணமாக வந்த ரணில், சிறிசேனா தனது சிறந்த தேர்வு என்றே கூறியிருந்தார். முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயகாவும் தன்னைப் போலவே சிறிசேனா ஆட்சி செய்வதாக தெரிவித்திருந்தார்.

ஆனால், அவர்களின் நம்பிக்கையை பொய்யாக்கிய சிறிசேனா மீண்டும் இப்போது ஒருமுறை இலங்கையையும், அண்டை நாடுகளையும் திகைக்க வைத்துள்ளார். 2014 டிசம்பர் வரையிலும் ராஜபக்சேவுக்கு அப்படி ஒரு துரோகத்தை சிறிசேனா செய்வார் என்று யாருக்கும் தெரியாது. தற்போதும், அதே சஸ்பென்ஸ் நடந்துள்ளது. ரணிலுக்கு அதே போன்ற துரோகத்தை செய்வார் என நேற்று முன்தினம் வரை யாருக்கும் தெரியாது.

புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கூறியுள்ள ரணில் விக்கிரமசிங்கே, தான் இன்னும் பிரதமராக தொடர்வதாக தெரிவித்தார். “ராஜபக்சேவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. தனக்கே பெரும்பான்மை உள்ளது” என அவர் கூறியிருந்தார். இதனை அடுத்து, பாராளுமன்றத்தை தற்காலிகமாக முடக்கி அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். இதனால், இலங்கையில் அரசியல் குழப்பங்கள் நிலவுகின்றன.

அரசியல் சாசனத்துக்கு விரோதமான நடவடிக்கைகள் மூலமாக சிறிசேனா சொந்த நாட்டின் மீதான சர்வதேச பார்வையையும், தனது அரசியல் வாழ்க்கையிலும் ஒரு சேதாரத்தை உருவாக்கியுள்ளார். ஏனெனில், நான்கே வருடங்களில் ஒரு சாதாரண மனிதர் ஓநாயாக மாறுவார் என்று இலங்கையில் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

மேலும் கட்டுரைகள்..

சச்சினா... கோலியா... ரூட்டு தல யாரு?

Also See..

Published by:Sankar
First published:

Tags: Mahinda rajapaksa, Maithripala Sirisena, Ranil Wickremesinghe, Srilanka