ஓட்டுக்கு நோட்டு: யாரால் ஒழிக்க முடியும்?

 • News18
 • Last Updated :
 • Share this:
  சமீபத்தில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் நடந்த தேர்தல் சீர்திருத்தக் கருத்தரங்கில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி ஓட்டுக்கு நோட்டு தருவதை தங்களால் தடுக்க முடியவில்லை என்று வருந்தியுள்ளார். இவரது பதவிக்காலத்தில்தான் தஞ்சை, அரவக்குறிச்சி, ஆர்.கே.நகர் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்பட்டன. தேர்தலில் பணப்பட்டுவாடா புகாருக்காக இத்தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டாலும் மீண்டும் தேர்தல் நடந்தபோதும் அதைத் தடுக்க இயலவில்லை என்று அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

  கேரளம் தவிர்த்து, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்களில் ஓட்டுக்கு நோட்டு பெரும்மோசமான சவாலாக உருவெடுத்துள்ளது எனத் தெரிவித்துள்ள நசீம் ஜைதி, 60 வகையான நூதன முறைகளில் பண விநியோகம் நடக்கிறது என்கிறார். ஆனால் தேர்தல் முறைகேடுகள் எப்படியெல்லாம் நடக்கின்றன என்பது பற்றி ஆய்வு செய்து எழுதிய பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் பண விநியோகம் நூற்றுக்கும் மேற்பட்ட வழிமுறைகளில் நடக்கிறது என்கிறார்.

  அதுமட்டுமல்லாமல் 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் திட்டமிட்டு பண விநியோகத்தில் அதிமுக, திமுக கட்சியினர் ஈடுபட்டனர் என்கிறார். இருகட்சிக்களுக்கும் வேறு வேறு நேரம் ஒதுக்கி பிரச்னை வராமல் பணவிநியோகத்தை நடத்த போலீஸ் உதவியது என்றும் அவர் கூறுகிறார்.

  இருதரப்புக்கும் எங்கு பணம் ஒளித்து வைக்கப்பட்டுள்ளது என்று தெரிந்தாலும் யாரும் யாரையும் காட்டிக்கொடுப்பதில்லை. ஒவ்வொரு பகுதிக்கும் ஓட்டுக்கான விலை ரூ. 100 முதல் ரூ. 1,500 வரை நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டது. முதலில் ஒரு கட்சி ரூ. 200 கொடுத்து விட்டால் அடுத்த கட்சி அதைவிட கூடுதலாக தந்தாக வேண்டும். முதல் சுற்றில் குறைவாகத் தருவது போல் நடித்துவிட்டு மற்ற கட்சி தருவதை விடக் கூடுதலாக இறுதி நேரத்தில் பணப்பட்டுவாடா செய்து விடுகிறார்கள்.

  பெண்களுக்கு கோலப்போட்டி, இளைஞர்களுக்கு கிரிக்கெட், வாலிபால், கபடி போட்டிகள், கோயில் திருவிழாக்கள், காதுகுத்து, மொட்டை அடித்தல் போன்ற குடும்ப விழாக்கள் என நிகழ்ச்சிகளின்போது பணப் பட்டுவாடா நடக்கிறது. இரவு நேரத்தில் பண விநியோகம் நடத்தும் நேரத்தில் மர்மமான முறையில் மின்வெட்டு நடத்தப்படுகிறது. எங்கு மின்வெடு இல்லையோ, அங்கு அன்றைய தினம் பணப்பட்டுவாடா இல்லை என்று அர்த்தம்.

  பணமாக இல்லாமல் சமையல் அறைக்கு தேவைப்படும் அனைத்துவிதமான பொருள்கள், விளையாட்டுச் சாமான்கள், விதவிதமான பரிசுப் பொருட்கள், பொதுவாக எல்லா இடங்களிலும் மதுபாட்டில்கள், சில இடங்களில் கம்ப்யூட்டர் என  விநியோகிக்கப்பட்டது.  ஒரு தொகுதியில் மட்டும் சுமார் 1.5 லட்சம் சேலைகள் பிடிபட்டது என்றால் விநியோகத்தின் வீச்சைப் புரிந்துகொள்ளலாம்.

  வாக்காளர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மையோர் பணத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வித்தியாசம் மிக மிகக் குறைவு. ஒரு தொகுதி என்று எடுத்துக் கொண்டால் குறைந்தபட்சம் 70 சதவீதம் பேருக்கு பணம் தருவது என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. சில பகுதிகளுக்கு பணம் தவிர்க்கப்பட்டாலோ அல்லது சிலர் குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளர் என்று அறிந்து பணம் தரத் தவறினாலோ அவர்கள் கட்சி அலுவலகங்களுக்குப் படையெடுத்து எங்களுக்கும் பணம் தாருங்கள் என்று கேட்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

  இந்தப் பணம் எல்லாம் கட்சியின் தலைமையிடத்திலிருந்துதான் வர வேண்டும் என்று அவசியமில்லை. சிலர் உள்ளூர் தொழிலதிபர்களிடம் கடனாக வாங்கிக் கொள்கின்றனர் அல்லது முன்கூட்டியே பணம் தொகுதி வாரியாகச் சென்று விடுகிறது. பெரும்பாலும் கொள்ளையடித்த பணத்தைத்தான் தருகிறார்கள் என மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். இப்போது பணம் வாங்காமல் விட்டால்  எம்.எல்.ஏ., எம்.பி.க்களிடமிருந்து வேறு என்ன நன்மை நமக்கு கிடைத்துவிடப் போகிறது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

  முன்பெல்லாம் பணம் தரும் போக்கு சில பகுதிகளுக்கு, சில பிரிவினருக்கு என்று மட்டும்தான் இருந்தது. 1962 தேர்தலில் அறிஞர் அண்ணாவை தோற்கடிக்க பரவலாக பணம் தரப்பட்டது. 2001-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த சாத்தான்குளம் இடைத்தேர்தலில்  அதிமுகவினர் பலர் அத்தொகுதிக்குச் சென்று வீடு எடுத்து தங்கி ஆடு, கோழிகளை வெட்டி விருந்து வைக்கும் கலாசாரத்தைத் தொடங்கினர்.

  எனினும் 2006-ஆம் ஆண்டுக்குப் பின் நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில் ஏறக்குறைய நூற்றுக்கு நூறு சதவீதம் பேருக்கு பண விநியோகத்தை திமுகவினர் துவக்கி வைத்தனர். பின்னர் கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரத்தில் அதிமுகவினர் இந்தக் கைங்கர்யத்தை தொடர்ந்தனர். ஆர்.கே.நகரில் தினகரன் ஆதரவாளர்கள் 4 மாதமாக குடும்பத்தையே தத்தெடுத்தது போல் மக்களின் தேவையை பூர்த்தி செய்தனர் என்றும், டோக்கன் முறையை அமல்படுத்தினர் என்றும், அங்கு பணியில் ஈடுபட்ட செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  தமிழகத்தில் இந்த நிலைமை ஏற்பட்டிருப்பது மிகவும் அவமானகரமானது. ஓட்டுக்குப் பணம் வாங்கக் கூடாது என உறுதியேற்க வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூட சமீபத்தில் பேசியுள்ளார். ஆனால் இந்தப் போக்கை கட்சிகள் கைவிடப் போவதில்லை. மக்களும் மனமாற்றம் பெறப்போவதில்லை.

  தங்கள் பிரதிநிதிகளை கேள்வி கேட்கும் உரிமையை மக்கள் தாங்களாகவே முன்வந்து விட்டுக் கொடுக்கின்றனர். மக்களின் இந்த அறியாமையை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற வாதம் ஏற்கத்தக்கதல்ல. இந்தத் தீங்கு எவ்வளவு நாள் தொடரும்? இதை ஒழிக்க யாரால் முடியும்? என்பதற்கு இன்றைய நிலையில் விடை கிடைப்பதாய் இல்லை.
  Published by:P Devaraj
  First published: