சமத்துவம் நாடிய சிற்பி- சிறப்புக் கட்டுரை

சிகாமணி | news18
Updated: August 13, 2018, 8:07 PM IST
சமத்துவம் நாடிய சிற்பி- சிறப்புக் கட்டுரை
சமத்துவம் நாடிய சிற்பி - சிறப்புக் கட்டுரை
சிகாமணி | news18
Updated: August 13, 2018, 8:07 PM IST
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பங்களிப்புகளில் சமத்துவ சமுதாயத்திற்கான பங்களிப்புகள் தனித்துப் பதிவு செய்யப்பட வேண்டியவை.

சோஷலிச பூங்கா அமைப்போம்; வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம் என்பது திமுகவின் அடிப்படை லட்சியங்களில் ஒன்று. இந்தியாவில் எந்தத் தலைவரும் சிந்தித்திராத – துணிந்திராத முடிவுகளை கலைஞர் எடுத்தார் என்பது வரலாற்றில் நிச்சயம் இடம்பெறும். பேருந்துகளை நாட்டுடைமையாக்க அவர் எடுத்த நடவடிக்கை,  40 ஆண்டுகளுக்கு முன்பே கிராமங்களுக்கான போக்குவரத்தை மேம்படுத்தி, வளர்ச்சியை அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்ல உதவியது.

இந்த முக்கியமான நடவடிக்கையோடு சேர்த்துப் பார்க்கப்பட வேண்டியது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை ஏற்படுத்தியது. திமுக ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம்; ஒருபடி அரிசி நிச்சயம் என்று வாக்குறுதி அளித்திருந்தது. அரிசி அரசியலாக மாறிய காலமது. தமிழகம் கேட்ட அரிசியை கொடுக்காமல் மத்திய அரசு நெருக்கடி கொடுத்த நேரத்தில்தான் 1971-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய உணவு கார்ப்பரேஷனுக்கு இணையான வாணிபக் கழகத்தைத் தமிழகத்தில் உருவாக்கினார் கலைஞர்.

இந்த முடிவுதான் திமுக மட்டுமின்றி அடுத்து வந்த அதிமுக-வுக்கும் அடித்தட்டு மக்களோடு மிகவும் நெருங்குவதற்கு தொடர்ந்து உதவி வருகிறது. நில உடைமையாளர்களோடு கிராமத்து மக்களின் வாழ்க்கை காலம் காலமாக கட்டிப் போடப்பட்டிருந்தது. பொது விநியோக முறை மூலம்தான் விவசாயத் தொழிலாளர்கள் அந்தத் தடையிலிருந்து  விடுவிக்கப்பட்டனர். இதன் காரணமாக அவர்கள் கிராமத்திலிருந்து வெளியேறி மாற்று வேலைகளைத் தேட முடிந்தது. இந்த புரட்சியை செய்ததால்தான் திராவிடக் கட்சிகள் மீதுள்ள அபிமானத்தை மற்றவர்களால் மாற்ற முடியவில்லை.

இதேபோல் சாதி ரீதியிலான ஆதிக்கத்தை பெரியார் எதிர்த்தார் என்றால் அதற்கு சட்டபூர்வ நிவாரணத்தைத் தேடி தந்தவர் கலைஞர். கோயில் கருவறை நுழைவு போராட்டத்தை பெரியார் 1970-ம் ஆண்டு அறிவித்தார். இதையடுத்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதற்காக இந்து அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தவர் கலைஞர். அப்போது சட்ட ரீதியான தடைகளை இந்த முயற்சி சந்திக்க நேரிட்டது. 2006-ம் ஆண்டு இதற்காக தனிச் சட்டமே இயற்றி முறையான அர்ச்சகர் பயிற்சி நடக்கவும் ஏற்பாடு செய்தார். இந்த சட்டத்தையும் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு உச்சநீதிமன்றம் குளறுபடியான தீர்ப்பை 2015-இல் வழங்கியது.

கடந்த பிப்ரவரியில் மதுரை தல்லாகுளத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஐயப்பன் கோயிலில் மாரிச்சாமி என்ற அர்ச்சகர் பயிற்சி பெற்றவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இது ஆகமக் கோயில் அல்ல. ஆகமக் கோயிலில் பயிற்சி பெற்ற பிராமணரல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்படுவதற்கு உச்சநீதிமன்றத்தின் நிபந்தனைகள் தடையாக உள்ளன. அந்தந்த ஆகம வகையறாவைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகராக நியமிக்கப்பட வேண்டும். பிராமணரல்லாத ஒருவர் ஆகம விதியில் தவறு செய்கிறார் என கேள்வி எழுப்பி நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் வழிவகை செய்து விட்டது. ஆகமக் கோயில்களில் பிராமணரல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்படுவதன் மூலமே பெரியாரின் கனவு நிறைவேறும். அவரது நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படும்.

1971-ம் ஆண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வரதராசன் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார் கலைஞர். இந்தியாவிலேயே அவர்தான் முதல் தாழ்த்தப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதி. அத்தகைய பதவியில் கூட தாழ்த்தப்பட்டோரை அமர்த்திவிட முடிகிறது. ஆனால் ஆகமக் கோயிலில் பிராமணரல்லாத ஒருவரை அர்ச்சகராக்க முடியவில்லை.

சாதி ரீதியிலான சமத்துவம் என்பதற்கு நெடிய பயணம் தேவை. ஆனால் திட்டமிட்ட முயற்சிகளைக் கலைஞர் எடுத்தார். அதற்கு உரிய அடித்தளமும் இட்டார். இந்த அடிப்படையில்தான் அனைத்து சாதியினரும் சேர்ந்து வாழும் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை 1997-ம் ஆண்டு கலைஞர் அமைத்த நடவடிக்கை. இதற்கும் நாட்டில் எங்கும் முன்மாதிரி இல்லை. அவருடைய ஆட்சிக் காலத்தில் 145-க்கும் மேற்பட்ட சமத்துவபுரங்களை உருவாக்கினார்.

பெரியார் வாழ்ந்த 95 ஆண்டுகளை குறிக்கும் வகையில் 145-ஐ தாண்டி மேலும் 95 சமத்துவபுரங்களை அமைக்க உத்தரவிட்டார்.  பெரியாரின் சமூக நீதிச் சிந்தனைகள் வலுப்பெறவும், சமத்துவ சமுதாயம் உருவாக்கப்படவும் பணியாற்றுவோம் என கலைஞர் பேசினார். சமத்துவபுரங்களில் பெரியார் சிலை நிறுவ உத்தரவிட்டார். தமிழ்நாடே சமத்துவபுரமாகட்டும், இந்திய திருநாடே சமத்துவபுரமாகட்டும் என்றும் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். இந்த நோக்கத்தை போற்றவே கலைஞருக்கு ‘சமத்துவப் பெரியார்’ என்று பட்டம் சூட்டினார் தொல்.திருமாவளவன்.

தலைவர்களின் பெயர்கள், மாவட்டங்களுக்கு - போக்குவரத்துக் கழகங்களுக்கு சூட்டப்பட்டு வந்த நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம் பெயரை போக்குவரத்துக் கழகத்துக்கு 1997-ம் ஆண்டு சூட்டினார். வீரன் சுந்தரலிங்கம் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். அந்த துணிச்சலான முடிவுக்கு சாதிய சக்திகளிடமிருந்து எதிர்ப்பு ஏற்பட்டு கலவரம் நிகழ்ந்தது.  காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் கோரிக்கையை ஏற்று அனைத்துத் தலைவர் பெயர்களையும் நீக்கும் முடிவை மிகுந்த மன வேதனையுடன் எடுத்தார் கலைஞர் கருணாநிதி.

தனது கட்சிக்குள் எதிர்ப்பு இருந்தபோதிலும் தலித் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார். கலைஞருக்கு ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவிலிருந்து வந்தவர் என்பதால் பல்வேறு சாதிய சக்திகள் - சமூகப் பகை பாராட்டிய சக்திகள்  இரக்கமற்ற வகையில் நடந்துகொண்டன. அதையும் சந்தித்தே இப்பணிகளை நிறைவேற்ற வேண்டியிருந்தது. தாழ்த்தப்பட்டவர்போலவே சமூக வாழ்வில் பெண்கள் ஒடுக்கப்பட்ட பகுதியினராகவே நீடிக்கின்றனர். அவர்களுக்கு சொத்தில் சம உரிமை, அரசு வேலைவாய்ப்பில் 30 சதவீத இட ஒதுக்கீடு என்பதெல்லாம் மிகப்பெரிய சமத்துவ நோக்க நடவடிக்கை.

அகில இந்திய அளவில் வங்கிகளை தேச உடைமையாக்க இந்திராகாந்திக்கு உறுதுணையாக இருந்தார் கலைஞர். குடிசை மாற்று வாரியம் தொடங்கி கலைஞர் கருணாநிதி செயல்படுத்திய எண்ணற்ற திட்டங்கள் சாதிய-பொருளாதார வேற்றுமைகளைக் குறைக்க முயற்சித்தன. அவர் சமத்துவம் விரும்பிய சமுதாய சிற்பிதான்.

தி.சிகாமணி, மூத்த பத்திரிகையாளர்
First published: August 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...