சச்சினா... கோலியா... ரூட்டு தல யாரு?

சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி

சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி

சச்சினா, கோலியா யார் பெஸ்ட் என்றும், அடுத்த சச்சின் கோலி தான் என்றும் நீண்ட விவாதம் ஒன்று சமூக வலைதளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. உண்மையில் யார் சிறந்தவர்? பார்க்கலாம்...

  • News18
  • Last Updated :
  • Share this:
2003-ம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் சேர்த்து சச்சின் அடித்தது வெறும் 82 ரன்கள் மட்டுமே. 3 போட்டிகளில் மொத்தம் 5 இன்னிங்ஸ்களில் சச்சின் மிக மோசமான முறையில் ஆட்டமிழந்தார். ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தை கவர் திசையில் ஆட முயன்று, ஸ்லிப்பில் கேட்ச், கீப்பரிடம் கேட்ச் என சச்சினின் அவுட் ஆகும் தன்மை ஒரே மாதிரி தொடர்கதையாக இருந்தது.

இத்தனைக்கும் அதற்கு முன்பு வரை சச்சினின் ட்ரைவ் ஷாட்கள் ஒவ்வொன்றும் ஸ்டைலாக இருக்கும். ஸ்டிரைட் டிரைவ், கவர் ட்ரைவ் என கிரிக்கெட்டில் உள்ள அத்தனை ஷாட்களையும் அநாயாசமாக, அதே நேரம் கண்களில் ஒற்றிக் கொள்ளும் நேர்த்தியுடன் ஆடக் கூடிய ஒரே பிளேயர் சச்சின் மட்டுமே. ஆனால், அந்த 5 இன்னிங்சுகளிலும் ஏதோ கவனக் குறைவு காரணமாக சச்சின் ஒரே பாணியில் ஆட்டமிழந்து வந்தார். இதனால் கடும் விமர்சனங்கள் சச்சின் மீது எழுந்தன.

சச்சினின் மகாமுனி இன்னிங்ஸ்

இந்த நிலையில் சிட்னியில் 4-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. போட்டியில் 4-வது வீரராக களமிறங்கிய சச்சினின் விக்கெட்டை வீழ்த்த ஆஸி கேப்டன் ஸ்டீவ் வாஹ் பல்வேறு வியூகங்களை வகுத்து வைத்திருந்தார். கவர் திசையை பலப்படுத்தி, சச்சினின் விக்கெட்டை கைப்பற்ற நினைத்தார். ஆனால், அது சுலபமில்லை என்பதை ஸ்டீவ் வாஹ் புரிந்து கொண்டார்.

sachin tendulkar
சச்சின் டெண்டுல்கர் (கோப்புப் படம்)


ஆஸ்திரேலிய பவுலர்களால் கடைசிவரை சச்சினின் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. அந்த இன்னிங்சில் சச்சின் குவித்த ரன்கள் 241. இதைவிட ஆச்சரியம் என்னவெனில் சுமார் 10 மணி நேரம் களத்தில் நின்று, 436 பந்துகளை எதிர்கொண்ட சச்சின், அதில் ஒரு பந்தை கூட கவர் திசையில் அடிக்கவேயில்லை. சச்சின் கவர் திசையில் அடிப்பார் என காத்திருந்து காத்திருந்து ஆஸி வீரர்களுக்கு காலங்கள் போனது தான் மிச்சம். ஏனெனில் ஆப் ஸ்டம்ப்க்கு வெளியே வீசப்பட்ட பந்துகளை அடிப்பதையே தவிர்த்தார் அல்லது அதை லெக் சைடில் ட்ரைவ் ஆடினார் சச்சின். இது நம்ப முடியாததாக இருக்கலாம், அல்லது சற்றே மிகைபடுத்தலாக தோன்றலாம். ஆனால் அது தான் நடந்த உண்மை. சச்சின் அந்த இன்னிங்சில் ஒரு கவர் ட்ரைவ் கூட ஆடவேயில்லை.

436 பந்துகளை எதிர்கொண்டும், ஒருவர் தனக்கு விருப்பமான ஷாட்டை அடிக்காமல் அதை அறவே தவிர்த்துவிட்டு ஒரு ஜென் நிலையில் ஆடுவதெல்லாம் நிச்சயம் Master Class தான். ஒருவர் தன்னுடைய துறையை எவ்வளவு நேசிக்கிறார், எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்பதற்கு இதெல்லாம் சான்று.

sachin tendulkar
சச்சின் டெண்டுல்கர் (கோப்புப் படம்)


எத்தனை பெண்கள் வந்து இடையூறு செய்தாலும் தனது தவத்தை கலைக்காத ஒரு மகாமுனியின் மனநிலையில் தான் சர்வ நிச்சயமாக சச்சின் அந்த இன்னிங்சை ஆடியிருப்பார். இப்படி ஒரு discipline ஆன, கட்டுக்கோப்பான வீரரை நாங்கள் இதுவரை கண்டதே இல்லை என பின்னாளில் பாண்டிங்கே பேட்டி கொடுக்கும் அளவிற்கான இன்னிங்ஸ் அது.

நிற்க.

அப்படியே இந்த பக்கம் கோலியை எடுத்துக் கொள்ளுங்கள். 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஆண்டர்சன், பிராட் பந்துவீச்சில் கிட்டத்தட்ட ஒரே மாதிரி ஷாட் ஆடி தான் கோலி ஆட்டமிழந்தார். அந்தக் குறையை போக்க கோலி கடைசிவரை மெனக்கெடவே இல்லை. அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்து தொடரில் கூட 3, 4 இன்னிங்ஸ்களில் கோலி அதே பாணியில் தான் ஆட்டமிழந்தார்.

virat kohli
விராட் கோலி (கோப்புப் படம்)


தனது கிரிக்கெட் வாழ்க்கையில் கோலி ஆட்டமிழந்த விதத்தை எடுத்துப் பார்த்தால் ஸ்லிப்பிலும், கீப்பர் கேட்சிலும் ஆட்டமிழப்பதை கோலியால் தவிர்க்க முடியவில்லை. தான் பல்வேறு சாதனைகள் செய்தபோதிலும், இன்றும் கோலியின் வீக்னெஸ்ஸை அவரால் மாற்றிக் கொள்ள முடியாமல் தடுமாறிதான் வருகிறார். சச்சினிடமும் குறைகள் இருந்தது தான். ஆனால் குறைவாக தவறிழைப்பவனே நல்ல பேட்ஸ்மேன் என்பார்கள். கோலி தன்னுடைய குறைகளை போக்கிக் கொண்ட பிறகு அவரை சச்சினோடு ஒப்பிடுவதை பற்றி நாம் யோசிக்கலாம்.

"ரூட்டு தலை"களை எதிர்கொண்ட சச்சின்

உண்மையில் இன்று உலகிலேயே சிறந்த வீரர் கோலி தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதை மறுக்கவும் முடியாது. ஆனால் சச்சின் ஆடிய காலத்தில், ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங், யார்கர் உள்ளிட்ட அனைத்து வித்தைகளும் கற்றுத் தேர்ந்த வால்ஷ், அம்ப்ரோஸ், ஆலன் டொனால்ட், ஷான் பொலாக், வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், அக்தர், மெக்ராத், பிரெட் லீ போன்ற வேகப்பந்து வீச்சாளர்களையும், ஷேன் வார்னே, முரளிதரன், சக்லைன் முஸ்தாக், முஸ்தாக் அகமது, ஆஷ்லே கெயில்ஸ் போன்ற ஸ்பின்னர்களையும் அசால்ட்டாக எதிர்கொண்டு அவர்களை கதறவிட்டவர் சச்சின்.

sachin tendulkar and virat kohli
சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி (கோப்புப்படம்)


ஆனால் தற்போதைய வேகப்பந்து வீச்சாளர்களை கணக்கிட்டால் மிச்செல் ஸ்டார்க், ஆண்டர்சன், பிராடு, போல்ட் என ஓரிருவரே அதில் தேறுவர். அதேபோல் இம்ரான் தாஹீர், ஹெராத் போன்ற ஸ்பின்னர்களை எல்லாம் கிரிக்கெட் விளையாட கற்றுக் கொண்டிருக்கும் அப்பரசண்டிகள் கூட அசால்ட்டாக டீல் செய்வார்கள்.

சோதனைகளை சாதனைகளாக்கிய சச்சின்!

அப்படி இருக்கும்போது கோலியையும், சச்சினையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பதே தவறானது. பல்வேறு விதமான காலகட்டங்களில் சச்சின் சந்திக்காத சோதனைகளே இல்லை எனலாம். அணியின் மீதான சூதாட்ட புகார், டென்னிஸ் எல்போ காயம் என அத்தனை சவால்களையும் கடந்து தான் சச்சின் இமயத்தை அடைந்திருக்கிறார். அணி இக்கட்டில் தவித்தபோதும், தொடர்ந்து தோல்வி அடைந்தபோதும், கடினமான காலங்களிலும் சச்சினின் பேட்டிங் தான் ரசிகர்களுக்கு ஒரே மருந்தாக அமைந்தது. அதனால் தான் கிரிக்கெட் உலகின் கடவுளாக சச்சினை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

sachin tendulkar
சச்சின் டெண்டுல்கர் (கோப்புப் படம்)


இப்போது ஒரு பேட்ஸ்மேன் தவறான ஷாட் ஆடி ஆட்டமிழந்தால், பெவிலியன் திரும்பிய அடுத்த நொடியே அந்த வீடியோவை அக்கு வேறு, ஆணி வேறாக பிரித்து தவறுகளை கண்டறிந்து, அடுத்த போட்டியில் அதை சரி செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அப்போதெல்லாம் எந்தவித தொழில்நுட்ப வசதியும் இல்லாத காலகட்டத்தில், ஒருவர் தவறான ஷாட் ஆடி ஆட்டமிழந்தால், அவரது தவறை அவராகவே திருத்திக்கொண்டாக வேண்டும். அல்லது பயிற்சியாளர் ஆலோசனைகள் வழங்குவார். அப்போதெல்லாம் கிரிக்கெட்டில் தவறுகளை திருத்திக்கொள்ளாவிட்டால் அவர் மொத்தமாக காணாமல் போய்விடுவார். அப்படிப்பட்ட வெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்கள் இருந்தார்கள். அப்படி ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருந்து வந்தவர் தான் சச்சின்.

இப்போதெல்லாம் கோலி எல்லா மேட்ச்சிலும் ஆடுகிறார், ஆடுகிறார், ஆடிக் கொண்டேயிருக்கிறார். அது பாராட்டப்படக் கூடிய விஷயம் தான். ஆனால் அதில் ஒரு உயிரோ, ஆடும் ஷாட்டில் ஒரு நேர்த்தியோ இல்லையே என எண்ணத் தோன்றுகிறது.

வில்லன்களை எதிர்கொண்ட சச்சின்!

அப்போதைய ரஜினி படங்களில் எல்லாம், துண்டு, துக்கடா வில்லன்களை எல்லாம் அடித்துத் துவைத்துவிட்டு ரஜினி திரும்பிப் பார்ப்பார். அங்கே ஆஜானுபாகுவாக மலை போன்ற ஒரு வில்லன் காத்துக்கொண்டிருப்பார். அவர் முன்பு சின்னதாக இருக்கும் ரஜினி, அவரை அடிக்க முடியாமல் தடுமாறி, 4, 5 அடிகள் வாங்கி, பின்பு வீக் பாயிண்ட்டை கண்டறிந்து, தாக்கி, அந்த வில்லனை வீழ்த்துவார். உடனே ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள்.

virat kohli
விராட் கோலி (கோப்புப் படம்)


அதேபோலத்தான், ஆடிய காலங்களில் சச்சின் எதிர்கொண்டது எல்லாம், ரஜினி எதிர்கொண்ட மெயின் வில்லன் போன்ற ஆஜானுபாகுவான பவுலர்களை தான். 6.2 அடி உயரத்தில் இருக்கும் பவுலர் ஓடிவந்து ஆக்ரோஷ்மாக தலை உயரத்திற்கு வீசும் பந்தை அநாயாசமாக புல் ஷாட் ஆடுவார் சச்சின். இல்லையெனில் வாசிம் அக்ரம் கையில் இருந்து ரிவர்ஸ் ஸ்விங்காக வரும் பந்தை ரொம்பவும் மெனக்கெடாமல் அப்படியே டிரைவ் ஆடுவார் சச்சின். அதைப்பார்க்கும் ரசிகர்களுக்கு அப்படியே புல்லரிக்கும்.

சச்சினே சச்சினாக இருக்கட்டும்!

ஆனால், இங்கு, விராட் கோலி இப்போது தான் துண்டு துக்கடா வில்லன்களை எல்லாம் அடித்துப் புரட்டிக் கொண்டிருக்கிறார்.

virat kohli
விராட் கோலி (கோப்புப் படம்)


அதற்குள் அவரை சச்சினோடு ஒப்பிடுவது முட்டாள் தனம். ரெக்கார்ட்ஸ், ஸ்டேட்ஸ் இருப்பதாலேயே கோலி, சச்சின் ஆகிவிட மாட்டார். சச்சின் ஆட்டமிழந்தால் டிவியை அணைத்துவிட்டு, அடுத்த வேலையை பார்க்கச் செல்லும், வெறித்தனமான ஒரு ரசிகர் கூட்டம் கடைசி காலம் வரை சச்சினுக்கு இருந்தது. அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தை கோலி சம்பாதித்துவிட்டு வரட்டும். அதற்குப்பிறகு கோலியை சச்சினோடு ஒப்பிடுவோம்.

அதுவரை சச்சினே சச்சினாக இருக்கட்டும்.

மேலும் விளையாட்டு செய்திகள்..

``நம்ம பேட்டுதான் பேசும்” - விராட் கோலி செஞ்சுரி ஸ்பெஷல் செலிப்ரேஷன் வீடியோ

சர்வதேச கிரிக்கெட்டுக்கு குட்-பை கூறிய ``டான்ஸர் ஹிட்டர்”

Also See..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: