சாதிக்கு எதிரானப் போராட்டம்; குமரி மாவட்டம் மீட்பு! மார்ஷல் நேசமணியின் நினைவுகள் #Marshal_Nesamani

திருவிதாங்கூர் பகுதியில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, சென்னை மெரினா கடற்கரையில் பெரியார் கண்டனப் பொதுக்கூட்டத்தை நடத்தினார்.

Karthick S | news18
Updated: June 12, 2019, 5:29 PM IST
சாதிக்கு எதிரானப் போராட்டம்; குமரி மாவட்டம் மீட்பு! மார்ஷல் நேசமணியின் நினைவுகள் #Marshal_Nesamani
மார்ஷல் நேசமணி
Karthick S | news18
Updated: June 12, 2019, 5:29 PM IST
உண்மையில், இந்தியா பல சிக்கலான வரலாற்று நிகழ்வுகளை எதிர்கொண்ட ஒரு நாடு. அந்த சிக்கலான நிகழ்வுகளின்போது, நியாயமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், அந்த நேரத்துக்கு சரியான முடிவை ஆட்சியாளர்கள் கையாண்டுள்ளனர். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், தேசப் பிரிவினை என்பது மிகப் பெரும் இழப்புகளைச் சந்தித்த ஒரு சோகமான நிகழ்வு.

அப்போது, ஏற்பட்ட வன்முறையால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளைச் சந்தித்தது புதிதாக பிறந்த இந்தியா என்ற குழந்தை. அந்த நிகழ்வுகள் வரலாற்று சோகம். அதேபோல, மாநிலப் பிரிவினை என்பது மிகப் பெரும் சவால் நிறைந்த பணியாக இருந்தது நேரு தலைமையிலான அரசுக்கு. மாநிலப் பிரிவினையின் ஒரு நிகழ்வுதான் குமரி மாவட்டம் அதன் தாய் தமிழ்நாட்டுக்கு திரும்பக் கிடைத்த நிகழ்வு.

உண்மையில், மொழிவாரி மாநிலப் பிரிவினையில் தமிழ்நாடு இழந்த பகுதிகள் அதிகம் என்பது தமிழ் அறிஞர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் கருத்தாக இருந்து வருகிறது. இருப்பினும், அத்தனை போராட்டங்களுக்கு மத்தியில் கன்னியாகுமரி தாய் தமிழகத்துடன் இணைத்த பெருமைக்கு சொந்தக்காரர் நேசமணி. அவர் காண்ட்ராக்டர் நேசமணி அல்ல. மார்சல் நேசமணி. ஆம், அவர் தான் குமரி தந்தை.

கன்னியாகுமரி


தொல்காப்பியர் காலத்திலிருந்தே நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகள் தமிழ் மன்னர்களின் நிலமாக இருந்து வந்தது. ஆனால், கி.பி. 1766-ம் ஆண்டு இந்த நிலப்பரப்பு திருவிதாங்கூர் அரசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அன்றிலிருந்து, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்ப்பட்ட 1956-ம் ஆண்டுவரை இந்த நிலப் பரப்பு மலையாள தேசத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்துள்ளது. குமரிப் போராட்டத்தின் வரலாறு மிக நீண்டது. 1836-ம் ஆண்டில் ஐயா வைண்டசாமி தொடங்கிய போராட்டம் மார்சல் நேசமணியின் மூலம் நிறைவடைந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் பகுதியில் 1895-ம் ஆண்டு பிறந்தார் மார்சல் நேசமணி. கேரள நம்பூதரிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தப் பகுதியில் சாதி ஆதிக்கம் அதிகமாக இருந்தது. சிறுவயதிலேயே சாதிய அடிக்குமுறைகளைச் சந்தித்தவர் நேசமணி. நாகர்கோவிலுள்ள கிறிஸ்துவ உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தஅவர், திருநெல்வேலியுள்ள சி.எம்.எஸ் கல்லூரியில் கல்லூரிப் படிப்பை முடித்தார்.

பின்னர், திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் படித்து பி.எல். பட்டம் பெற்று வழக்கறிஞராக தேர்வானார். பி.எல். பட்டம் பெற்ற அவர், 1921-ம் ஆண்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார். அந்த நீதிமன்றத்தில் உயர் சாதி வழக்கறிஞர்கள் உட்கார்வதற்கு நாற்காலியும், மற்ற வழக்கறிஞர்கள் அமர்வதற்கு குந்துமனையும் போடப்பட்டிருக்கும். மேலும், வழக்குத் தொடுப்பவர்களும் நீதிமன்றத்துக்கு வெளியே நின்றுதான் சாட்சியங்களைப் பதிவு செய்யவேண்டும். இடுப்பில் துணியைக் கட்டிக் கொண்டுதான் வெளியே நிற்கவேண்டும்.

இந்தச் சூழலில் உள்ள நீதிமன்றத்துக்கு பணியாற்றச் சென்ற நேசமணி, நேராகச் சென்று நாற்காலியில் அமர்ந்தார். அவருடைய மனுதாரர்களையும் நீதிமன்றத்துக்கு உள்ளே அழைத்துவந்தார். நேசமணியைப் பார்த்து உத்வேகமடைந்த மற்ற தாழ்த்தப்பட்ட வழக்கறிஞர்களும் நேசமணியுடன் இணைந்து போராட முன்வந்தனர். அதனையடுத்து, திருவிதாங்கூர் அரசு, எல்லா வழக்குரைஞர்களும் நாற்காலியில் அமரலாம் என்று அனுமதிவழங்கியது.

அதேபோல, நீதிமன்றத்தில் உயர் சாதியினருக்கு தண்ணீர் அருந்த ஒரு பானையும், மற்றவர்களுக்கு வேறு பானையும் என்ற இரு பானை நடைமுறை இருந்தது. அதைப் பார்த்த நேசமணி, ஒரு பானையை உடைத்து எறிந்தார். அதனையடுத்து, ஒரு பானை நடைமுறையும் பழக்கத்துக்கு வந்தது.

தமிழ்மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் குமரிப் பகுதிகளை மெட்ராஸ் ஸ்டேட்டுடன்(தமிழ்நாடு) இணைக்க வேண்டும் என்று கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வந்தார் நேசமணி. அதன் ஒருபகுதியாக 1945-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என்ற அமைப்பைத் தொடங்கினார். பின்னர், 1947-ம் ஆண்டு அந்த அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றினார்.

அந்தக் கட்சியிலிருந்து போட்டியிட்டு, திருவாங்கூர் கொச்சி சட்டசபையின் உறுப்பினராக 1948-1952 வரை இருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும், திருவிதாங்கூர் கொச்சின் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாகவே கன்னியாகுமரி இருந்து வந்தது. கன்னியாகுமரியை மெட்ராஸ் ஸ்டேட்டுடன் இணைக்க வேண்டும் என்று கூறி நேசமணியின் போராட்டம் தீவிரமடைந்தநிலையில், 1954-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி நேசமணி. ஜனாப் அப்துல் ரசாக், சிதம்பரநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது, திருவிதாங்கூர் கொச்சின் சமஸ்தானத்தின் முதல்வராக இருந்த பட்டம் தாணுப்பிள்ளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். அதன்படி, மார்த்தாண்டம், புதுக்கடை, மூலச்சல் ஆகிய பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்தச் துப்பாக்கிச் சூட்டில் அரசு கணக்குப்படி 11 பேர் உயிரிழந்தனர். ஆனால், அதில் 30 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. திருவிதாங்கூர் பகுதியில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, சென்னை மெரினா கடற்கரையில் பெரியார் கண்டனப் பொதுக்கூட்டத்தை நடத்தினார்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவல்துறையின் அடக்குமுறைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, வழக்கை பெங்களூரு நீதிமன்றத்தில் நடத்தினார் நேசமணி. சிறையில் அடைக்கப்பட்ட அனைவருக்கும் ஜாமின் வாங்கினார். அதைக்கடந்து, துப்பாக்கிச் சூடு நடத்திய பட்டம் தாணுப்பிள்ளை அமைச்சரவையைக் கவிழ்த்தார்.

இதற்கிடையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும என்று நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்தநிலையில், 1955-ம் ஆண்டு  நேரு தலைமையிலான அரசு மொழிவாரி மாநிலங்கள் அமைக்க குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் எல்லைப் பகுதிகள் பிரிக்கப்பட்டு 1956-ம் நவம்பர் 1-ம் மொழிவாரி மாநிலங்கள் உருவாகின.

அப்போது, மார்சல் நேசமணியின் தொடர் போராட்டம் காரணமாக தமிழர்கள் அதிகம் வாழும் கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. எனவே, நேசமணி, மார்சல் நேசமணி என்று அன்போடு அழைக்கப்பட்டார். கன்னியாகுமரி, மெட்ராஸ் ஸ்டேட்டுடன்(தமிழ்நாடு) இணைக்கப்பட்டப் பிறகு, 1962, 1967-ம் ஆண்டு கன்னியாகுமரி நாடாளுமன்றத்தில் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு போராட்டக்காரராகவே வாழ்ந்த மார்சல் நேசமணி 1968-ம் ஆண்டு காலமானார்.

கன்னியாகுமரி இன்று தமிழகத்தில் தென் எல்லையாக இருக்கிறதென்றால், அதற்கு நேசமணியின் அளப்பறிய அர்பணிப்புதான் காரணம். அவரது, புகழ் காலத்தைக் கடந்தது.

Also see:

First published: June 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...