பிக்பாஸ் சீசன் 2-வில் ரித்விகா வெற்றி பெற்றது எப்படி?

ரித்விகா

 • News18
 • Last Updated :
 • Share this:
  பிக்பாஸ் ஷோவில் ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்று நடிகர் கமல்ஹாசன் அடிக்கடி கூறுவதுண்டு. ஆனால், பிக்பாஸ் சீசன் 2-வின் ஃபைனலில் அனைவரும் எதிர்ப்பார்த்ததே நடந்துள்ளது. ஆம், ரித்விகா வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  பிக்பாஸ் சீசன் 1-ன் மெகா வெற்றியைத் தொடர்ந்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிக்பாஸ் சீசன் 2, கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி தொடங்கியது. ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா, பொன்னம்பலம் உள்ளிட்ட 16 பேர் நேரடியாகவும், விஜயலட்சுமி வைல்டு கார்டு என்ட்ரி மூலமும் போட்டியாளர்களாகப் பங்கேற்றனர்.

  இதில், மற்ற 16 பேரை பின்னுக்கு தள்ளி ரித்விகா டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு வெற்றியாளருக்கான டிராஃபியும், ரூ. 50 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.  வெற்றியாளராவதற்கு முன்பே, பிக்பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 போட்டியாளர்களில் யாருக்குமே கிடைக்காத சிறப்பு ரித்விகாவுக்கு கிடைத்தது. அது பிக்பாஸ் லோகோவை (கண்) பச்சை குத்திக்கொண்டது. ஊசி குத்துவதையே தாங்காத ரித்விகாவின் மன உறுதியை சோதிப்பதற்காக நடத்தப்பட்ட டாஸ்க் ஒன்றில் ரித்விகா பச்சை குத்திக்கொண்டார். இனி, அவர் அதை பெருமையாக வெளி உலகுக்கு காட்டலாம்.

  பொதுவாக ரித்விகா என்றவுடன், அனைவரது மனதிலும் நிற்பது `மெட்ராஸ்’ படத்தில் அவர் நடித்த அழுத்தமான கதாபாத்திரம்தான். அதன்பிறகு கபாலி, இருமுகன் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருந்தாலும் மெட்ராஸ் படம் ரித்விகாவுக்கு நிச்சயம் சம்திங் ஸ்பெஷல்தான்.

  இயல்பான முகம், மாநிறம், பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றம் கொண்டவர்தான் ரித்விகா. பிக்பாஸ் வீட்டில் நுழைந்த புதிதில், ரித்விகா யாருடனும் ஒட்டாமல் தனித்திருந்தார். பின்னர், நாட்கள் செல்ல செல்ல அவர் பிறருடன் சகஜமாகப் பழகினார். இதை ரித்விகா, பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே பலமுறை ஒப்புக் கொண்டுள்ளார்.  இப்படியிருந்த ரித்விகா டைட்டில் வின்னரானது எப்படித் தெரியுமா? பிக்பாஸ் சீசன் 2-வை ஆரம்பத்திலிருந்து விடாமல் பார்த்து வந்தவர்களின் பொதுவான குற்றச்சாட்டு, பிக்பாஸ் போட்டியாளர்களில் பெரும்பாலானவர்கள் போலியாக நடிக்கின்றனர்; தங்களது இயல்பான குணத்தை வெளிப்படுத்தவில்லை என்பதுதான். எனினும், ரித்விகா மீது இந்த முத்திரை விழவில்லை.

  ரித்விகாவின் வெளிப்படையான பேச்சு பலரைக் கவர்ந்தது. போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக, அவர்களது உறவினர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த வகையில், ரித்விகாவின் பெற்றோர் வந்தபோது தனது தாயை அவர் கட்டியணைத்தார். பின்னர் இதுகுறித்து பேசிய ரித்விகா, `எனக்கு நினைவு தெரிந்து எனது தாயை கட்டியணைத்தது இதுவே முதல்முறை’ என்றார்.

  அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசாதது, பெரிய அளவில் பிறரை பகைத்துக் கொள்ளாதது, டாஸ்குகளில் உண்மையாக நடந்துகொண்டது, ஐஸ்வர்யா மீதான அதிருப்தி உள்ளிட்ட பல காரணங்களால் ரித்விகாவுக்கு வெற்றி வசமானது. அதைவிட முக்கியமாக, பலம் வாய்ந்த போட்டியாளர்களான டேனியல், யாஷிகா உள்ளிட்டோர் விதிவசத்தால் வெளியேறியதும் ரித்விகாவின் வெற்றிக்கு கைகொடுத்தது. எனினும், ரித்விகா டைட்டில் வின்னராவதற்கு தகுதியானவர்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  டி.எஸ்.கோபிநாத், சீனியர் சப் எடிட்டர்.
  Published by:DS Gopinath
  First published: