”எழுதுவோம், அறிவைத் தமிழில் பரப்புவோம்...” இந்திய மொழிகளுக்குள் விக்கிப்பீடியாவில் கட்டுரைப் போட்டி

”எழுதுவோம், அறிவைத் தமிழில் பரப்புவோம்...” இந்திய மொழிகளுக்குள் விக்கிப்பீடியாவில் கட்டுரைப் போட்டி
தமிழ் விக்கிபீடியா
  • News18
  • Last Updated: November 12, 2019, 11:34 AM IST
  • Share this:
விக்கிபீடியா தளமானது வேங்கைத்திட்டம் என்ற இந்திய மொழிகளுக்கிடையே கட்டுரைப்போட்டியை அறிவித்துள்ளது.

இணையத்தில் ஒரு அறிவுக் களஞ்சியம் என்றால் அது விக்கிப்பீடியா தான். கூகிள்கூட இங்கிருந்தே கொள்முதல் செய்து பயனர்களின் கேள்விக்கு விடையளிக்கிறது. இந்த விக்கிப்பீடியா என்பது தனி நபருக்கோ, தனி அமைப்பிற்கோ சொந்தமானதல்ல இது பொதுவுரிமத்தில் மக்களால் மக்களுக்கு உருவாக்கப்படும் கட்டற்ற கலைக்களஞ்சியம். இதைப் படிக்கலாம், மேம்படுத்தி வெளியிடலாம், நூலாக அச்சடிக்கலாம் என்று அறிவுப்பகிர்வதற்கான அனைத்து வாய்ப்புகளைத் திறந்து வைத்துள்ளது.

இதில் அவ்வப்போது கட்டுரைப் போட்டி, ஒளிப்படப் போட்டி, நிரல்போட்டி என்று நடந்து வரும். அதில் குறிப்பாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கிடையே இந்த ஆண்டு அக்டோபர் 10 முதல் 2020 ஜனவரி 10 வரை வேங்கைத் திட்டம் என்று ஒரு கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளது.


ஒவ்வொரு மொழியினரும் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் முன்னூறு வார்த்தைகளுக்கு எழுத வேண்டும் என்பது தான் போட்டி. நேரடியாக கூகிள் மொழிபெயர்ப்போ அல்லது இதர எந்திர மொழிபெயர்ப்போ பயன்படுத்தக் கூடாது. கடந்த ஆண்டு முதல்முறையாக இந்தப் போட்டி நடந்தது, பன்னிரண்டு மொழியினர் போட்டியிட்டனர் அதில் தமிழ்க் கட்டுரைகளைப் பன்னாட்டுத் தமிழர்களும் எழுதினர் ஆனால் தமிழ் விக்கிப்பீடியா இரண்டாம் இடம் தான் பெற முடிந்தது.

சர்வதேச மொழிகளுடன் போட்டிப்போட வேண்டிய தமிழ், இந்திய மொழிகளில் முதலிடம் பெறாதது அப்போதைய நிலையாக இருந்தது.

இந்த ஆண்டு அதை முறியடித்து வெற்றிபெற பலர் எழுதி வருகின்றனர். இந்திய வரலாற்றில் போர்கள், உள்ளாட்சி அமைப்புகள், நதிகள், அணைகள், கல்வி நிலையங்கள் போன்றவை இன்னும் எழுதப்படவேண்டியவை. பொதுவாக எந்தத் தலைப்பில் எழுத என்று அறியாதவர்களும் எதை எழுதுவது என்று புரியாதவர்களும் கூட இப்போட்டியில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில் உள்ள ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்த்துத் தமிழில் எழுதினாலே போதும்.கைப்பேசியிலோ, கணினியிலோ எழுதும் இடைமுகவசதியும் தமிழ்த் தட்டச்சுக்கான நுட்ப வசதிகளும் புதியவர்கள் கற்றுக் கொள்ள விளக்கக் காணொளித் தொகுப்புகளும் விக்கிப்பீடியாவில் உள்ளன. ஒவ்வொரு மாதமும் தமிழில் அதிகக் கட்டுரை எழுதும் மூவருக்கு நிட்சயப் பரிசுண்டு, மேலும் மூன்று மாத இறுதியில் மொத்தமாக வெற்றி பெறும் மொழியினர்க்குச் சிறப்புப் பரிசும் காத்திருக்கிறது.

ஒரு மாதம் முடிந்துள்ள நிலையில் தற்போது தமிழ் முதலிடத்தில் உள்ளது. ஆனால் கடந்த ஆண்டைப் போல கடைசி நேரத்தில் வெற்றியைத் தட்டிப்பறிக்கும் பிற மொழி விக்கிப்பீடியாக்களும் தமிழைத் தொடர்ந்து வந்து கொண்டுள்ளன. கடந்த ஆண்டு வெற்றியாளர்களான பஞ்சாபியர்கள் இந்தாண்டு சராசரியாக ஒருவருக்குச் சுமார் முப்பது கட்டுரைகளாவது எழுதியுள்ளனர்.

தமிழில் சராசரியாக இருபத்து மூன்று கட்டுரைகள்தான் எழுதப்பட்டுள்ளன. அதனால் புதிய பங்களிப்புகளை ஊக்குவித்தும், பங்களிப்பாளர்களுக்கு உதவ விக்கிப்பீடியப் பயிற்சி வகுப்புகளும் தமிழ் விக்கிப்பீடியர்கள் சார்பாக நடத்தியும் வருகின்றனர். சமீபத்தில் சென்னையில் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது, அடுத்து மதுரை மற்றும் சென்னையில் இதே போல தமிழ் விக்கிபீடியர்கள் சந்திப்பும் நிகழவுள்ளது.

அதிகக் கட்டுரை எழுதியவர்களுக்கு மட்டும் பரிசு நிச்சயம், தமிழ் விக்கிப்பீடியா குமுகமாக வென்று அனைவருக்கும் பரிசைப் பெற்றுத்தருவது லட்சியம் என்ற இலக்குடன் போட்டியில் சுமார் நாற்பது நபர்கள் எழுதிவருகிறார்கள் சுமார் எண்பது நபர்கள் எழுத ஆர்வம் தெரிவித்துள்ளார்கள். நீங்கள் பங்கெடுக்க, இங்கே (http://ta.wikipedia.org/wiki/WP:TIGER2) செல்லலாம். மேலும் உதவிகளுக்கும் வழிகாட்டல்களும் இங்கே (https://www.facebook.com/TamilWikipedia/) செல்லலாம்.

ஒரு காட்டில் எத்தனைப் புலிகள் உள்ளன என்பதைக் கொண்டு அந்தக் காட்டின் இயற்கை வளத்தை கணித்துவிடலாம். அதாவது புலி வாழ்வதற்கான இரை விலங்குகளும், அவை வாழ்வதற்கான புல்வெளிகளும், புல் வளர்வதற்கான நீர் ஆதாரங்களும் என ஒரு தொடர் சங்கிலி அந்தக் காட்டின் சூழலைப் பிரதிபலிக்கிறது.
அதுபோல ஒரு மொழியின் வளர்ச்சியை அம்மொழி விக்கிப்பீடியாவின் கட்டுரை எண்ணிக்கை காட்டும். இந்திய மொழிகளில் இணையத்தில் அதிகமாகப் புழங்கும் மொழிகளுள் தமிழ் முக்கியமானது. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் அதிகரிக்க தமிழ் இணையத்தளங்கள், சமூகத்தளங்கள் என்று பல வழிகள் இருந்தாலும் அவற்றிகெல்லாம் முதன்மையானது விக்கிப்பீடியா. இணையத்தில் எழுதுபவை காலத்தால் அழியாதவை என்றாலும் எழுதப்பட்ட தளத்தின் காலம் முடிகையில் அழிந்து போகக்கூடும்.

முன்பு ஆர்குட், கூகிள் பிளஸ், யாஹூ குருப் என்று உதாரணங்களை அள்ளிக்காட்டமுடியும் ஆனால் விக்கிப்பீடியாவில் எழுதப்பட்டவை காலம் கடந்தும் நிற்கும் என்பது இதன் பலம். கணினித் தமிழின் முக்கிய அங்கமாக இருக்கும் அறிவுக் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் எழுதுவோம், 'கேடில் விழுச்செல்வம் கல்வி' அறிவைத் தமிழில் பரப்புவோம்.
- நீச்சல்காரன் ( தமிழ் விக்கிப்பீடியர், கனடா இலக்கியத் தோட்டக் கணிமை விருதாளர்)
First published: November 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading