முகப்பு /செய்தி /சிறப்புக் கட்டுரைகள் / அணுக்கழிவு கிடங்கு அமைந்தால்... கதிர்வீச்சால் நரகமான ஜாதுகோடாவாக தமிழகம் மாறும் ஆபத்து?

அணுக்கழிவு கிடங்கு அமைந்தால்... கதிர்வீச்சால் நரகமான ஜாதுகோடாவாக தமிழகம் மாறும் ஆபத்து?

யுரேனியம் கதிர்வீச்சால் நரகமான ஜதுகோடா

யுரேனியம் கதிர்வீச்சால் நரகமான ஜதுகோடா

யுரேனிய கழிவுகளின் கதிர்வீச்சின் வீரியம் குறைய, குறைந்தது 50,000 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஜாதுகோடா... ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கும் ஓர் அழகிய மலை கிராமப் பகுதி. இந்தப் பகுதியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 35,000-க்கும் மேற்பட்ட மக்கள், விவசாயத்தை முதன்மையாகக் கொண்டு, இயற்கையோடு இயற்கையாக மகிழ்ச்சியாக, நிம்மதியாக வாழ்ந்து வந்தார்கள்.

1951-ம் ஆண்டு மலைவாழ் மக்களின் மகிழ்ச்சியில் பேரிடி விழுந்தது போல ஒரு செய்தி பரவியது. அந்த மக்கள் வாழ்ந்து வந்த மலைப் பகுதிகளில் யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதே அந்தப் பேரிடி. பிறகு, 1967-ம் ஆண்டு யுரேனிய சுரங்கத்தையும், உற்பத்தித் தொழிற்சாலையையும், இந்தியாவிலேயே முதன்முதலாக, யுரேனியம் கார்பரேஷன் ஆஃப் இந்தியா என்ற அரசு நிறுவனம் ஜாதுகோடாவில் நிறுவியது.

யுரேனிய சுரங்கம் அமைக்க அப்பகுதி மக்களின் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டன. விவசாயம் தவிர வேறெதுவும் தெரியாத அந்த அப்பாவி மக்களை, வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்ற வழக்கமான கட்டுக்கதைகளைக் கூறி, தினக்கூலிகளாக வேலையில் அமர்த்தியது அந்த நிறுவனம். என்னவென்று தெரியாத அந்த மக்களை, யுரேனிய மூலப்பொருளை எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கையாள வைக்கப்பட்டனர்.

ஒவ்வோர் ஆண்டும் யுரேனியம் ஆலையில் இருந்து வெளியேறும் 3,60,000 டன் யுரேனியம் உற்பத்திக் கழிவுகள், செயற்கையாக அமைக்கப்பட்ட குட்டைகளில், எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் கொட்டப்பட்டன. அந்தக் கழிவுகளில் யுரேனியம் மட்டுமல்ல, தோரியம் 230, ரேடியம் 226, ரேடான் 222 போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய கதிரியக்கத் தனிமங்களும் இருந்தன.

அணுக்கழிவுகள் செல்லும் நீர்க் குழாய்களில் ஆங்காங்கு உடைப்பு ஏற்பட்டு, அந்தக் கதிரியக்க சக்தி கொண்ட நீர், சுற்றியுள்ள ஏரி, குளங்களில் கலந்தன. யுரேனிய கழிவுக்குட்டைகள் கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தடி நீரையும், அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து நீர் ஆதாரங்களையும் மாசுபடுத்தின.

யுரேனிய அணுக்கழிவு வெளியிடும் காமா கதிர்வீச்சு; மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் கதிரியக்க பாதிப்பு; யுரேனிய ஆலை வெளியேற்றும் கதிர்வீச்சுப் புகை என தொடர்ச்சியாக அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் பயங்கரமான கதிர்வீச்சால் முற்றுகையிடப்பட்டன. கதிர்வீச்சு பாதிப்புகள் குறித்து எந்த ஓர் அடிப்படை அறிவும் இல்லாத அப்பகுதி மக்கள், வழக்கம் போல நீர்நிலைகளைப் பயன்படுத்தி வந்தார்கள். கதிர்வீச்சு கலந்த தண்ணீரில் குளித்தார்கள், அதையே குடித்தார்கள்.

சில ஆண்டுகளில் அந்தப் பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கதிர்வீச்சின் தாக்கம் அப்பகுதி மக்களின் வாழ்க்கையை சூறையாடத் தொடங்கியது. பிறக்கும் குழந்தை முதல் படுக்கையில் கிடக்கும் முதியவர்கள் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை கதிர்வீச்சு அரக்கன்.

அப்பகுதி மக்களுக்கு புற்றுநோய், காசநோய், சுவாசக் கோளாறு, தோல் சிதைவு, உறுப்புச் சிதைவுடன் பிறக்கும் குழந்தை என நரகத்தின் வாசலைத் திறந்துவைத்தது கதிர்வீச்சு. அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தை இறந்தே பிறப்பது, கை, கால், தலை பெரிதும் சிறிதுமாக, மூளை வளர்ச்சி குன்றியும் பிறந்தார்கள். பெண்களுக்கு மலட்டுத்தன்மை, கருச்சிதைவுப் பிரச்னை, குழந்தைகள் பிறந்தவுடன் இறப்பதும் அதிகரித்தது.

இதுபோல கொட்டப்படும் யுரேனிய கழிவுகளின் கதிர்வீச்சின் வீரியம் குறைய, குறைந்தது 50,000 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். விழிப்புணர்வு ஏற்பட்டு, மக்களின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு 2014-ம் ஆண்டு ஜார்கண்ட் அரசு அந்த ஆலைக்குத் தடைவிதித்து உத்தரவிட்டது. ஆலை இழுத்து மூடப்பட்டது.

இதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேவர பாதிக்கப்பட்ட மக்கள் முயன்று வந்த வேலையில், ஜார்கண்ட் அரசு அம்மக்களின் நிம்மதியில் பெரிய கல்லைத் தூக்கிப் போடும் விதமாக, 2018-ம் ஆண்டு ஆலையை மீண்டும் திறக்க அனுமதியளித்தது. இதற்கு முடிவுதான் என்ன என்று தலையில் அடித்துக்கொண்டு, கண்களில் நீர் வழிய, எதிர்காலம் தெரியாத பச்சைக் குழந்தைபோல ஏங்கிக் கிடக்கிறார்கள் ஜாதுகோடா மலைப் பகுதி மக்கள்.

மலைப்பகுதியில் குறைந்த மக்கள்தொகை கொண்ட இடமான ஜாதுகோடாவிற்கே இந்த நிலைமை என்றால், தமிழகத்தில் அணுக்கழிவுகளை சேமிக்கும் கிடங்கு அமைத்தால் என்னவாகும் என்று யோசித்துக்கூட பார்க்கமுடியவில்லை. தமிழகத்தின் ஒரு பகுதியே வாழத் தகுதியற்ற நரகமாகிவிடும் என்பது மட்டும் நிச்சயம்.

First published:

Tags: Kudankulam, Nuclear Power plant, Nuclear waste dumping yard, Uranium Corporation of India ltd