சென்னையில் எந்தெந்த பகுதிகளில் சிட்டுக்குருவிகள் காணப்படுகின்றன? ஆய்வில் தகவல்

சிட்டுக் குருவி

சென்னையில் இந்திரா நகர், மயிலாப்பூர், திருவான்மியூர் உள்ளிட்டப் பகுதிகளில் பறக்கும் ரயில் நிலையங்களுக்கு அருகில் சிட்டுக் குருவிகள் அதிகமாக காணப்படுகின்றன.

 • News18
 • Last Updated :
 • Share this:
  சென்னையில் எந்தெந்த பகுதிகளில் சிட்டுக்குருவிகள் காணப்படுகின்றன என்ற தகவல் தரும் வரைபடத்தை  ‘மெட்ராஸ் நேச்சுரலிஸ்ட்ஸ் சொசைட்டி’ தயாரித்து வெளியிட்டுள்ளது.

  சிட்டுக்குருவிகள் எண்ணிக்கையைத் துல்லியமாக கணக்கெடுத்து வைத்திருக்கும் தனியார் மற்றும் அரசு அமைப்புகள் எதுவும்  இதுவரை இல்லை. இந்த ஆய்வில் சிட்டுக்குருவிகள் சென்னையின் எந்தெந்தப் பகுதிகளில் காணப்படுகின்றன, எங்கு கூடு கட்டி வாழ்கின்றன என்பதைக் காண முடிகிறது. இதற்கான காரணங்கள் என்ன என்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் சிட்டுக்குருவி கூடு கட்டி வாழும் 23 இடங்களும், கூடு இல்லாமல் காணப்பட்ட 78 இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

  சிட்டுக் குருவிகள்


  சென்னையில் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை பரவலாக காணப்பட்ட சிட்டுக்குருவிகள் தற்போது காணாமல் போயுள்ளன. நமது வாழ்க்கை முறை மாற்றங்களால் சிட்டுக்குருவிக்கு வாழ்வதற்கு தகுந்த இடமும், அதற்கான உணவும் கிடைக்காமல் போனதுமே இதற்கு காரணம். ஆங்கிலத்தில் ‘ஹவுஸ் ஸ்பேரோ’ எனப்படும் சிட்டுக்குருவி பெரிய பறவைகளாலும் பூனை இன விலங்குகளாலும் தாக்கப்படும் என்பதால், சிட்டுக் குருவிகள் மரங்களில் வாழ்வதைக் காண முடியாது. தாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று உணரக்கூடிய வீடுகளில் மட்டுமே காண முடியும். ஓட்டு வீடுகள் அதிகமாக இருந்தபோது சிட்டுக்குருவிகளும் நம்முடன் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன. நமது வீட்டின் அமைப்புகள் மாற, மாற சிட்டுக்குருவிகளும் மறையத் தொடங்கிவிட்டன.

  சிட்டுக் குருவிகள் ஆராய்ச்சி குறித்து நம்மிடம் பேசிய மெட்ராஸ் நேச்சுரலிஸ்ட்ஸ் சொசைட்டியின் கௌரவச் செயலாளர் விஜயகுமார், ‘முன்பெல்லாம் கடைகளில் அரிசியும், தானிய வகைகளும் கோணிப் பைகளில் தான் இருக்கும். அவற்றிலிருந்து கீழே சிதறும் தானியமே சிட்டுக்குருவிக்கு உணவாக அமையும். ஆனால் இப்போது எல்லாமே சீல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் வருகின்றன. பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு அதிகரித்திருப்பதால் சிட்டுக்குருவிகளுக்கு உணவாகும் சிறிய பூச்சி வகைகளும் அழிந்து வருகின்றன” என தெரிவிக்கிறார்.

  சிட்டிசன் சயின்ஸ் ப்ராஜெக்ட் என்ற இந்த ஆய்வின்போது சிட்டுக்குருவியை நேரில் பார்க்கும் சென்னைவாசிகள் மெட்ராஸ் நேச்சுரலிஸ்ட்ஸ் சொசைட்டியின் ஆய்வு படிவத்தில் சிட்டுக்குருவி எங்கே, எப்போது பார்க்கப்பட்டது, பார்த்த இடம், அது சிட்டுக்குருவி  கூடு கட்டி வாழும் இடமா என்பன போன்ற சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளனர். இந்தத் தகவல்களை மெட்ராஸ் நேச்சுரலிஸ்ட்ஸ் சொசைட்டியினர் நேரில் சென்று உறுதி செய்த பின்னர் இந்த வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

  இந்த வரைபடத்தின்படி மேடவாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, தரமணி, பெருங்குடி, பெசன்ட் நகர், போரூர், நீலாங்கரை உள்ளிட்ட இடங்களில் மற்ற பகுதிகளை விட சிட்டுக்குருவிகள் அதிக அளவு கூடுகட்டி வாழ்கின்றன. அடர்த்தியான முல்லைக் கொடி அதிகம் இருக்கும் பகுதிகளிலும் சிட்டுக்குருவி அதிகமாக காணப்படுகிறது.

  அதேபோன்று கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்தில் உள்ள பறக்கும் ரயில் நிலையங்களில் சிட்டுக்குருவி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயரமான மேற்கூரை, காற்றோட்டம் நிறைந்த பாதுகாப்பான இடமாக இருப்பதால்தான் இங்கு அதிகமாக காணப்படுவதாக விஜயகுமார் தெரிவிக்கிறார். இந்திரா நகர், மயிலாப்பூர், திருவான்மியூர் உள்ளிட்டப் பகுதிகளில் பறக்கும் ரயில் நிலையங்களுக்கு அருகில் சிட்டுக் குருவிகள் அதிகமாக காணப்படுகின்றன.

  சிட்டுக்குருவியின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தாலும் அவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் அதிகரித்து வருகின்றன. மேடவாக்கத்தில் ஒரு வீட்டில் ஏசி மெசினுக்கும், சுவருக்கும் இடையே குருவி கூடு கட்டி வாழ்ந்து வருவதால், 2 ஆண்டுகளாக ஏசியை பயன்படுத்தாத குடும்பமும் இருக்கிறது. அதேபோன்று மேடவாக்கம் கிணற்று சாலையில், குருவிகள் வாழ வசதியாக பழைய காலனி அட்டைப் பெட்டிகளில் ஓட்டைப் போட்டு குருவி பறக்கும் உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு ஒரு வீட்டில் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து தெருவில் உள்ள மற்ற வீடுகளிலும் இதே போன்று செய்துள்ளனர்” என்கிறார் விஜயகுமார்.

  செய்தியாளர் : சாரதா

   Also see:
  Published by:Karthick S
  First published: