இந்தியாவின் மற்ற பகுதிகளில் பொங்கலை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா?

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படுவது போல இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

  • Share this:
பொங்கல் பண்டிகையானது இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை மூன்று நாட்களாக கொண்டாடப்படுவது போல ஒவ்வொரு மாநிலங்களிலும் பொங்கல் பண்டிகை அவர்களின் கலாச்சாரத்திற்கு ஏற்ப கொண்டாடப்படுகிறது. தற்போது இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் எப்படி கொண்டாடப்படுகிறது என்பது குறித்து காண்போம்.

தமிழ்நாடு:



தமிழ்நாட்டை பொறுத்தவரை பொங்கல் பண்டிகை என்றால் போகியில் தொடங்கி காணும் பொங்கலில் முடிகிறது. முதலில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீ வைத்து எரிப்பது வழக்கம். இரண்டாவது நாள் தான் தைப்பொங்கல். இந்நாளில் அதிகாலை எழுந்து புத்தாடை அணிந்து புதிய பானையில் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கலை சமைத்து சூரிய பகவானுக்கு படைப்பார்கள். மூன்றாவது நாள் தான் மாட்டுப் பொங்கல். இந்த நாள் விவசாயத்திற்கு உதவிய கால்நடைகளை கொண்டாடும் பொங்கலாகும். மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் பூசி அலங்கரித்து பொங்கல் செய்து படைப்பார்கள். இந்த நாளில் தான் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெறும். நான்காவது நாள் காணும் பொங்கல், இந்நாளில் குடும்ப உறவினர்களுடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடுவார்கள்.

ஆந்திரா :



ஆந்திராவில் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டை போலவே கொண்டாடப்படுகிறது. முதல் நாள் நம்மை போலவே போகி கொண்டாடி பழைய பொருட்களை எரிக்கின்றனர். இரண்டாவது நாள் மகர சங்கராந்தி என்ற பெயரில் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். மூன்றாவது நாள் கனுமா என்று அழைக்கப்படுகிறது . இந்நாளில் கால்நடைகளுக்கு உணவளித்து கொண்டாடப்படுகிறது. நான்காவது நாள் வீர விளையாட்டுகளை விளையாடுகின்றனர். இந்நாளின் பெயர் முக்கனுமா.

குஜராத்:

`

குஜராத்தில் ஜனவரி 14 ஆம் தேதி மகர சங்கராந்தி அல்லது உத்ராயன் என்ற பெயரில் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் முதல் நாளான உத்ராயன் பண்டிகை அன்று பட்டங்களை விட்டு கொண்டாடுகின்றனர். இரண்டாவது நாள் வாசி உத்ராயன் என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் குளிர்கால காய்கறிகள், எள்ளு விதைகள், கடலை, வெல்லம் ஆகியவற்றை பயன்படுத்தி உந்திலு என்ற உணவு தயாரித்து கொண்டாடுகின்றனர்.

பீகார் மற்றும் ஜார்க்கண்ட்:



பீகார் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற பகுதிகளில் இப்பண்டிகை சக்ராத் அல்லது கிச்ச்டி என்று அழைக்கப்படுகிறது. இதில் முதல் நாளான, மகர சங்கராந்தியன்று மக்கள் நதிகளில் குழித்துவிட்டு எள் மற்றும் வெல்லம் கொண்டு எள் உருண்டைகளை செய்து மற்றவர்களுக்கும் வழங்கி கொண்டாடுகிறார்கள். இரண்டாம் நாள் மக்ராத் என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் பருப்பு, அரிசி, பட்டாணி போன்றவற்றை கொண்டு கிச்சடி சமைத்து இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

மகாராஷ்டிரா:



மகாராஷ்டிராவில் பிரம்மாண்டமாக கொண்டாப்படும் பண்டிகை என்றால் அது மகர சங்கராந்தி தான். இந்த மாநிலத்தில் இந்த பண்டிகை மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் எள் உருண்டை, அல்வா, போலி போன்றவற்றை செய்து சாப்பிடுகின்றனர். இங்கு முதல் நாள் போகி என்றும், இரண்டாம் நாள் சங்க்ரந்த் மற்றும் மூன்றாம் நாள் கிங்க்ராண்ட் என்று அழைக்கப்படுகிறது.

மேற்கு வங்காளம்:



மேற்கு வங்காளத்தில் அறுவடை பண்டிகையின் ஸ்பெஷல் என்றாலே இனிப்பு வகைகள். இங்கு புலி பித்தே, பாடிசப்தா, மால்போவா, நர்கெல் நாடு, டில் நாடு ஆகிய இனிப்புகள் பண்டிகையின் போது செய்யப்படும் இனிப்பு உணவுகள் ஆகும்.

பஞ்சாப்:



பஞ்சாப்பில் லோஹ்ரி என்னும் பண்டிகை ஜனவரி 13 ஆம் தேதி வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. லோஹ்ரிக்கு அடுத்த நாள் மகி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. மேலும் பஞ்சாபின் சில பகுதிகளில் லோஹ்ரி அன்று பட்டம் விட்டு கொண்டாடுவார்கள். அன்று இரவு மக்கள் நெருப்பை கொளுத்தி கடவுளை வணங்குவார்களாம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published: