சிறப்பு கட்டுரை: படேல் யாருக்கு சொந்தம்? - தி. சிகாமணி

படேல் யாருக்கு சொந்தம்?

நான் பாஜகவை சேர்ந்தவன். எனினும், இப்போது காங்கிரஸ்காரரான படேலின் கொள்கையை நம்பிக்கையை பின்பற்றுகிறேன் என்கிறார் பிரதமர் மோடி. எதற்காக காங்கிரஸ்காரரின் கொள்கையை.. நம்பிக்கையை.. மோடி பின்பற்ற வேண்டும்?

  • Share this:
சர்தார் வல்லபாய் படேல்... சுதந்திர போராட்டத்தில் முழு மூச்சாகப் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ... நாட்டின் முதல் துணைப் பிரதமர்... முதல் உள்துறை அமைச்சர்.. துண்டு துண்டாகக் கிடந்த 565 சமஸ்தானங்கள் மட்டுமின்றி பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளையும் ஒன்றிணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி சாதனை படைத்தவர். அதனால் இரும்பு மனிதர் என்றும், இந்தியாவின் பிஸ்மார்க் என்றும் போற்றப்படுபவர். அவருக்கு உலகிலேயே மிகப்பெரிய சிலை (182 மீட்டர் அதாவது 597 அடி) பிரமாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. ஒருமைப்பாட்டு சிலை என்றும் அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை வெறும் 3 ஆயிரம் கோடிதான்.

Nehru, Mahatma Gandhi, Sardar Patel
பண்டித நேரு, மகாத்மா காந்தி, சர்தார் படேல் (இடமிருந்து வலமாக)


குஜராத்தில் சர்ச்சைக்குரிய சர்தார் சரோவர் அணைக்கு அருகிலேயே நர்மதை ஆற்றின் நடுவே இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள உலகம் வியந்து பார்க்கும் சுதந்திர தேவிச் சிலையின் உயரத்தை விட இருமடங்கு உயரம் கொண்டது படேல் சிலை. இதுமட்டுமல்ல சீனாவில் உள்ள ஸ்பிரிங் ஆலய புத்தர் சிலையின் உயரம் கூட 420 அடி மட்டுமே. படேல் குஜராத்தில் பிறந்தவர் என்றால் மகாத்மா காந்தியும் குஜராத்தில் பிறந்தவர்தான் என்பதை யாரும் நினைவூட்டி தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

தேசத்தந்தை என்று அழைக்கப்பட்ட மகாத்மாவுக்கோ, நவீன இந்தியாவின் சிற்பி என வர்ணிக்கப்படும் நேருவுக்கோ காங்கிரஸ்காரர்கள் பிரமாண்ட சிலையை நிறுவில்லை. காங்கிரஸ்காரரான படேலுக்கு பாரதிய ஜனதாக்காரரான மோடி பிரமாண்ட சிலையை அமைப்பதன் நோக்கம் என்ன?

குஜராத் மாநில முதல்வராக 10 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் 2010-லேயே படேல் சிலை பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் மோடி. பின்னர் 2013-ல் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் படேலுக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைத் தந்தார். அப்போதே சிலைக்கான அடிக்கல்லையும் நாட்டினார். மோடி பிரதமர் ஆன பின்னர் மத்திய அரசின் நிதியுதவி மூலமும் இந்தச் சிலையை நிறுவ உத்தரவிட்டார். இதோடு நிற்கவில்லை. இந்த சிலைக்காக நாடு முழுவதுமிலிருந்து இரும்பு சேகரிக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

மோடி பிரதமர் ஆன பின்னர் 2017-ல் பல்கலைக்கழக மானிய கமிஷனிடமிருந்து ஓர் உத்தரவு வருகிறது. உயர் கல்வி நிறுவனங்கள் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ல் ஒற்றுமை ஓட்டம் நடத்த வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இந்த ஒற்றுமை ஓட்டத்தை கொடியசைத்து பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

Mahatma Gandhi, Nehru, Sardar Patel
மகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலத்தில் ராணுவ வாகனத்தில் ஒருபுறம் படேல், மறுபுறம் நேரு


மகாத்மா காந்தியை அகிம்சை வழிக்காக - மதவெறி எதிர்ப்புக்காக - தீண்டாமை ஒழிப்புக்காக என பல காரணங்களுக்காக நினைவு கூரலாம். ஆனால், பிரதமர் மோடியோ 2014 அக்டோபர் 2 முதல் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் மகாத்மா காந்தியை நினைவுகூர வைத்துள்ளார். டாக்டர் அம்பேத்கரின் 127-வது ஜெயந்தி கூட்டத்தில் அம்பேத்காரால்தான் பிரதமர் பதவி அளவுக்கு உயர்ந்தேன் என பிரதமர் மோடி சுட்டிக்காட்டவும் செய்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சுதந்திர இந்திய அரசு அறிவித்து 75 ஆண்டுகள் ஆனதையும் சமீபத்தில் கொண்டாடினார். அங்கு பேசியபோதும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களை காங்கிரஸ் சமமாக போற்றவில்லை என்ற புகாரைச் செய்தார்.

இவையெல்லாம் ஏன்? நான் பாஜகவை சேர்ந்தவன். எனினும், இப்போது காங்கிரஸ்காரரான படேலின் கொள்கையை நம்பிக்கையை பின்பற்றுகிறேன் என்கிறார் பிரதமர் மோடி. எதற்காக காங்கிரஸ்காரரின் கொள்கையை.. நம்பிக்கையை.. மோடி பின்பற்ற வேண்டும்?

சுதந்திரப் போராட்டத்தில் முழு மூச்சாகப் பங்கேற்றவர்கள் என பாஜகவினர் தாய் அமைப்புகள் எனச் சொல்லப்படும் ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபையில் ஒருவரும் இல்லை. இதனால் வலிந்து தங்களை சுதந்திர போராட்டத்தில் நுழைத்துக் கொள்ளும் முயற்சியாகவே படேல் போன்றவர்களை பிரதமர் மோடி கொண்டாடுகிறார். எங்கள் தாத்தாவுக்கும் ஒரு யானை இருந்தது என சொல்லிக்கொள்வது போல.

காங்கிரஸ் தலைவர்களை தனதாக்கி உரிமை கொண்டாடுவதன் மூலம் வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கிறார் மோடி. இதற்கு இடையே ஒன்றைச் சொல்லியாக வேண்டும். இன்றைய காங்கிரஸ்காரர்கள் மீது மோடி வைக்கும் விமர்சனத்தில் சிறிது உண்மை இருக்கத்தான் செய்கிறது. சர்தார் படேலின் பிறந்த தினம் அக்டோபர் 31 என்றால் அதே தினத்தில்தான் 1984-ல் இந்திரா காந்தியும் படுகொலை செய்யப்பட்டார். இந்த இரண்டு நிகழ்வுகளும் காங்கிரஸ்காரர்களுக்கு முக்கியமாக இருந்திருக்க வேண்டும். இவற்றில் இந்திரா காந்தி நினைவு தினத்துக்கு மட்டும் காங்கிரஸ்காரர்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். இதை பயன்படுத்தித்தான் மோடி, காங்கிரஸ்காரகள் மீது விமர்சனத்தை முன்வைக்கிறார். 1991-ல் நரசிம்மராவ் காலத்தில்தான் பாரத ரத்னா விருது படேலுக்கு தாமதமாக வழங்கப்பட்டது.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் அனைவரையும் அடுத்தடுத்து வந்த அரசுகள் போற்றத்தவறி விட்டன என தொடர்ந்து கூறுகிறார் பிரதமர் மோடி. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு பின் பாஜகவுக்கு தேசத்தலைவர்கள் மீது ஏன் பாசம் வர வேண்டும்? அடுத்தடுத்த அரசுகள் என்றால் வாஜ்பாய் அரசையும் குறை கூறுகிறாரா மோடி? குறிப்பாக, படேலுக்கு பெரிய பிம்பத்தைக் கட்டமைக்கிற அதே வேளையில், மோடி தன்னையும் அதில் பொருத்திக் கொள்ளப்பார்க்கிறார் என்று விமர்சிக்கப்படுகிறது.

Statue of Unity, World's Tallest Statue, Sardar Vallabhbhai Patel, Sardar Patel statue
உலகின் மிகப்பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலை


படேல் பெரிய சர்தார் அதாவது பெரிய தலைவர் என்றால் மோடி சிறிய சர்தார் என்ற சித்திரத்தை உருவாக்க முனைகிறார். படேலின் நகலாக மோடி சித்தரிக்கப்படும் நோக்கமே அவரின் இரும்பு மனிதர் அடையாளத்துக்கு நெருக்கமான பிம்பம் தனக்கும் வேண்டும் என்பதுதான். படேலை மிக உயரமான மனிதர் என்று போற்றுவது கூட உள்ளூர் அரசியல் லாபம் கருதித்தானோ என்னவோ?. சாதி வாக்குகளை ஈர்த்து ஹர்திக் படேல் செல்வாக்கு பெறுவதை தடுக்கும் நோக்கம் கொண்டதாகவும் அது இருக்கலாம்.

ஆனால் வரலாற்றில் சில திருத்தங்களை செய்வது போல் பாஜக செய்கிற பிரச்சாரங்களை ராமச்சந்திர குஹா போன்ற வரலாற்று ஆசிரியர்கள் கண்டிக்கின்றனர். படேலும் நேருவும் கீரியும் பாம்பும் போல் செயல்பட்டதாக கதையாடல்களை பாஜகவினர் உருவாக்குகின்றனர். வெற்றி பெற்றவர்கள் தங்களுக்குச் சாதகமாக அவர்கள் பார்வையில் எழுதுவதே வரலாறு என்பார்கள். அதுதான் இப்போது நடக்கிறது. வரலாறு என்பது ஓர் ஆயுதம். அதை நீங்கள் எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதே வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

படேலும் நேருவும் இருதுருவங்கள் என்று காட்டுவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு உதாரணம் ஒன்று உள்ளது. படேல் 1950-ல் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் நேரு பங்கேற்கவில்லை என பாஜக தரப்பில் துணிந்து புகார் சொல்லப்பட்டது. இதை மறுக்க நேரு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்கள் மட்டுமின்றி வீடியோவையும் காங்கிரஸ் தரப்பு வெளியிட்டது. நேருவுக்கும் படேலுக்கும் பல்வேறு பிரச்னைகளில் கருத்து வேறுபாடு இருந்தது என்பது உண்மைதான். ஆனால், அவை தனிப்பட்ட நோக்கம் கொண்டதல்ல. இருவருக்கும் ஒரே நோக்கம்தான். அணுகுமுறையில்தான் அவர்கள் மாறுபட்டனர்.

நேருவுக்கு உலகலாவிய ஜனநாயகப் பார்வை இருந்தது. படேலுக்கு நிர்வாக ரீதியான திறமைகள் இருந்தன. படேல் பர்தோலி என்ற இடத்தில் விவசாயிகள் கோரிக்கைக்காக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றியைப் பெற்றார். அதன் மூலம் விவசாயிகள் மத்தியில் நற்பெயரை ஈட்டினார். அப்போதிலிருந்து, மக்களால் சர்தார் என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

வட்ட மேஜை மாநாட்டு தோல்விக்குப் பின் மகாத்மாவும் படேலும் கைது செய்யப்பட்டனர். இருவரும் எரவாடா சிறையில் அடைக்கப்பட்ட போது இருவருக்கும் இடையே நட்பு வளர்ந்தது. சுதந்திரம் பெற்ற பின்பு 165 நாட்களில் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தடை செய்தார் படேல். பின்னர், படேல் விதித்த சில நிபந்தனைகளை ஆர்.எஸ்.எஸ் ஏற்றது. இதனால் தடையை ஒரு வருடத்தில் நீக்கினார். அது படேல் மட்டுமே செய்த பாரபட்சமான முடிவு என்ற விமர்சனம் சிலரால் முன்வைக்கப்படுகிறது. ஆனால், தடை ஒரு தீர்வல்ல என்ற நேருவின் சிந்தனைப் போக்கும் ஆர்.எஸ்.எஸ் தடை நீக்கத்துக்கு காரணமாக இருந்திருக்க வேண்டும்.

“ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர் 1949 ஆகஸ்ட் 16-ல் என்னைச் சந்தித்தார். மதவெறி அழிவுப்பாதையை கைவிடுங்கள். ஆக்கப்பூர்வமான பாதைக்கு திரும்புங்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்காக எழுதப்பட விதிகளை உருவாக்கி வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுங்கள் என்று கோல்வால்கரிடம் வலியுறுத்தினேன்” என படேல் நேருவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகள் அரசாங்கத்தின் இருப்பிற்கே அச்சுறுத்தலாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் மதவெறி விஷத்தைப் பரப்புகிறது என்றும் விமர்சித்தார் படேல். மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குத் தொடர்பில்லை. ஆனால் அது பரப்பிய மதவெறி விஷத்தின் விளைவாக காந்தியை நாம் இழக்க நேரிட்டது என்றார் படேல்.

காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பின் இனிப்பு வழங்கி ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மகிழ்ந்தது குற்றம் என்றும் படேல் சொன்னார். சாவர்கர் தலைமையிலான ஹிந்து மகாசபையின் கீழ் செயல்பட்ட ஓர் அமைப்பால்தான் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது படேலின் மதிப்பீடு.

படேல் ஆழ்ந்த இந்து மத நம்பிக்கையுள்ளவராக இருந்தார் என்றாலும், மதவெறியூட்டும் சித்தாந்தத்தை அவர் எப்போதும் ஆதரித்ததில்லை. அப்படிப்பட்ட படேலை இன்று மோடியும், பாஜகவும் துணிச்சலாக உரிமை கொண்டாடுவது பெரிய நகை முரண்.

வரலாற்றை அவரவர் வசதிக்கேற்ப வளைப்பது முறையல்ல. அன்றும் இன்றும் படேல் காங்கிரஸ்காரர்களுக்குத்தான் சொந்தம். இதை நிலைநாட்டும் பொறுப்பு காங்கிரஸ்காரர்களிடம் மட்டுமே உள்ளது.
Published by:Veeramani Panneerselvam
First published: