Home /News /special-articles /

"தந்தை பெரியார்" - பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல...

"தந்தை பெரியார்" - பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல...

தந்தை பெரியார்

தந்தை பெரியார்

பொதுவாழ்விற்கு வந்த காலத்திலிருந்து தன் இறுதிநாள் வரை சமூக கொடுமைகளை சமரசமின்றி எதிர்த்து போராடிய போராளி பெரியாருக்கு இன்று பிறந்த நாள்.

பொதுபுத்தியின் எதிரி: பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையைப் பெறவேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவராக வளரமுடியும். இந்தியா முழுவதும் எந்த கட்சியைச் சேர்ந்த தலைவராக இருந்தாலும், அவர்கள் மக்களின் நம்பிக்கைகளை கொண்டாடிய தலைவர்களாகவே இருப்பர். அதன் மூலம் மட்டுமே அவர்கள் தலைவர்களாகியிருக்க முடியும். ஆனால், மக்களின் நம்பிக்கைகளை கேள்விக்குட்படுத்தி, உணர்வுகளை விமர்சனத்திற்குட்படுத்தி, அதுவரை மக்கள் பின்பற்றி வந்த அனைத்து கோட்பாடுகளும் கேடானவை என்று துணிச்சலாக மக்கள் மத்தியில் பேசி மக்கள் தலைவரானவர் பெரியார்.

கர்ப்பத்தடையை ஆதரித்த பெரியார்: பெண் விடுதலை, ஆண் பெண் சமத்துவம் போன்ற கருத்துக்கள் இன்றளவும் விவாத பொருளாகவே இருந்து வருகிறது. ஆனால், பெரியார் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு கர்ப்பத்தடை அவசியம் என்று பேசியிருக்கிறார். அந்த காலகட்டத்தில் பெண்களை பிள்ளை பெறாதீர்கள் என்று சொல்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. அரசாங்கமே செய்ய தயங்கிய பிரச்சாரத்தை சமூக நலன் கருதியும் பெண் நலன் கருதியும் பெரியார் பேசினார். "பிள்ளைகளைப் பெறுவதாலேயே பெண்களுக்கு சுதந்திரம், மானம், அறிவு, எல்லாவற்றையும் விட்டு விட நேரிடுகின்றது. பிள்ளைகளை பெறும் அடிமையான இயந்திரமாகவே இருக்கவேண்டியிருக்கிறது. அதனால், பெண்கள் கருப்பத்தடையை அனுசரிக்க வேண்டியது முக்கியமான காரியமாகும்’’ (1 மார்ச் 1931) என்கிறார் பெரியார்.

கர்ப்பத்தடை ஏன் வேண்டும் என்பதற்கு பெரியார் மக்கள் தொகை கட்டுப்பாட்டை மட்டும் முதன்மை படுத்தவில்லை. பெண்களின் சுயமரியாதை சார்ந்த பிரச்சனையாக அதைப் பார்க்கிறார். பெண் என்பவள் பிள்ளை பெறுவதற்கான எந்திரமல்ல என்பதை ஆதங்கத்துடன் பதிவு செய்கிறார். மேலும், வெளி உலக அறிவை தெரிந்து கொள்வதற்கு பிள்ளை பேறு தடையாக இருக்கிறது என்று அழுத்தமாக பெண் மொழி பேசியுள்ளார் பெரியார்.

மது விலக்கு தேவையில்லை: காங்கிரசில் இருக்கும்பொழுது காந்தியின் மதுவிலக்கு பிரச்சாரத்திற்கு செவிமடுத்து தன் வீட்டிலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தியவர் பெரியார். ஆனால், அவரே பின்னாளில் மதுவிலக்கு என்ற கோரிக்கையில் உடன்பாடற்றவராக மாறினார். பொதுவாக மதுவிலக்கு என்பது இயற்கையோடு போராடும் ஒரு முட்டாள்தனமான போராட்டமே யாகும். மதுவிலக்கு என்பது ஒரு அதிகார ஆணவமே ஒழிய மனிதத் தன்மையில் சேர்ந்ததல்ல என்பதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்கத் தயார்.
பெரியாரைப் பொறுத்தவரை மதுவிலக்கு என்பது சமூக நலத்திட்டங்கள் சாதரண மக்களுக்கு சென்று சேராமல் தடுக்கக்கூடிய தடுப்புச் சுவர். அதற்கு உதாரணமாகத்தான் மதுக்கடைகளையும் மூடி விட்டு 2600 பள்ளிகளையும் மூடிய ராஜாஜியின் செயலை பெரியார் குறிப்பிடுகிறார். மதுவிலக்கு என்ற கருத்தாக்கத்தை தூய்மைவாதம் என்றே பெரியார் விமர்சிக்கிறார். ஒருவனுக்குள் இருக்கும் சாதி உணர்வு, வர்க்க உணர்வு, ஆணாதிக்க மனநிலை போன்றவற்றை விமர்சிக்காமல், அவன் மது அருந்தாதவனாக இருக்கிறான் என்பதற்காக அவனை ஆதரிக்க முடியாது. ஆனால், இந்த சமூகத்தில் மது விலக்கு பிரச்சாரம் அப்படி ஒரு பிம்பத்தை தந்து விடுகிறது என்பது பெரியாரின் வாதம்.

காந்தியவாதம் ஒழிய வேண்டும்: தேசமே காந்தியை மகாத்மா என்று கூறி கொண்டாடிருக்கும்பொழுது பெரியார் காந்தியம் அழிய வேண்டும் என்கிறார். “தத்துவத்தை குறித்தும் வேதாந்தந்தைக் குறித்தும் பேசுவதும் உண்மையில் நாட்டின் முன்னேற்றத்தில் மக்களின் வாழ்க்கை உயர்வில் அக்கரையுள்ளவர்கள் செய்கையாகுமா என்று கேட்பதோடு, இவ்வாறு பேசித்திரியும் கூட்டத்தாரின் காந்தியத்தினால், இந்நாடு எந்நாளாவது சுதந்திரம் அடையுமா, மக்கள் விடுதலை பெறுவாரா என்று கேட்கின்றோம்?’’  (குடிஅரசு தலையங்கம் 2 பிப்ரவரி 1940) என்று ஆத்திரத்துடன் கேட்கிறார். வேதாந்தங்களையும், புராண இதிகாசங்களையும் காந்தியார் பெருமைபடுத்தி பேசுவதையே பெரியார் கடுமையாக சுட்டிக் காட்டுகிறார். தேச விடுதலை குறித்து சிந்திப்பவர்கள் மக்களின் நடைமுறை வாழ்வைப் பற்றி சிந்திப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்களை நம்பி தேச விடுதலை சாத்தியமாகாது என்பது பெரியாரின் எண்ணம்.

காந்தி தேசம் எனப் பெயரிட வேண்டும்: பெரியார், காந்தி இறந்தவுடன் “காந்தி தேசம்” என்று பெயரிடவேண்டும் என்று கட்டுரை எழுதினார். இது அவருடைய கொள்கைகளுக்கே முரண்பாடானாதாக இருக்கிறதே என்ற கேள்வி வரும். உண்மையில் ஒரு முரண்பாடும் இல்லை. தன்னுடைய வருணாசிரம எதிர்ப்பு நிலைப்பாட்டினால்தான் காந்தியை வேண்டாம் என்றார். பிறகு அதே வர்ணாசிரம எதிர்ப்பு நிலைப்பாட்டிற்காகத்தான் பெரியார் ,”காந்தி தேசம்” என்று பெயரிடச் சொன்னார்.
“ஹிந்துஸ்தான் முப்பது கோடிக்கு மேற்கொண்ட மக்களைக் கொண்டது. அதன் அரசியல் திட்டமாக- ‘காந்தியம்’ என ஏற்பட்டுவிடுமானால், கண்டிப்பாக வெற்றிபெற்றே தீரும். இன்றைய முட்டாள்தனமும், மூர்க்கத்தனமும் ஆன கொலைபாதகப் பேயாட்டங்கள் இனி நடைபெற முடியாமலும் போகும்.”
என்று எழுதினார் பெரியார். காந்தியின் கொலையாளிகள் யார். அவர்களின் நோக்கம் என்னவென்பதை தெரிந்துகொண்ட பெரியார் காந்தியை கொண்டாடும் மனநிலைக்குச் செல்கிறார்.

காந்தியின் இறுதி காலங்களில், இந்து முஸ்லீம் ஒற்றுமை, பாகிஸ்தானுக்கு உதவி பணம் கொடுக்கவேண்டும் போன்ற செயல்பாடுகளில் உறுதியாக இருந்தார். வகுப்புவாரி பிரச்சனையில் கூட காந்தியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. ஆகவேதான் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டவுடன், “காந்தி தேசம்” என பெயரிட வேண்டும் என்றார் பெரியார். அது மட்டுமல்லாமல், இந்தியா என்ற பெயர் அந்நியர்கள் நமக்கு கொடுத்த பெயர். “காந்தி தேசம்” என்று வைத்தால், இந்து முஸ்லீம் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் பெயராக இருக்கும். மதநல்லிணக்கத்திற்காக உயிரை விட்டவரின் பெயரை நமது நாட்டிற்கு வைப்பதன் மூலம் உலக அரங்கில் நமக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று பெரியார் கருதினார்.

சூத்திரன் பட்டத்தை விட பறையன் பட்டம் மேல்
பெரியார் இடைநிலை சமூகங்களுக்கான தலைவர் என்றும் அவர்களின் உரிமைகளுக்காக மட்டுமே போராடினார் என்றும் பிரச்சாரம் அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. ஆனால்,பெரியார் ஒடுக்கப்பட்டோரிலும் ஒடுக்கப்பட்டோருக்காகவே முழுநேரமும் சிந்தித்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை இல்லாமல் சாதியமைப்பை தகர்க்க முடியாது என்று அழுத்தமாக பல இடங்களில் பதிவு செய்கிறார்.
”சூத்திரன் என்று அழைப்பது மேலா? பள்ளன் பறையன் என்று அழைப்பது மேலா? என்று கேட்டால், சூத்திரன் என்று அழைக்கவே கூடாது பள்ளர் பறையர் என்று அழைப்பதுதான் மேல் என்று சொல்லுவேன். ஏனென்றால்,”சூத்திரன்” என்னும் பெயர் அந்த பெயர்களை விட மிகமிக இழிந்ததாகும். ஜனத்தொகை கணக்கெடுப்பில் என்னை பள்ளர் பறையர் என்றுதான் சொல்வேன்.” (திராவிடன் இதழ் 1929) என்கிறார் பெரியார். வருணாசிரம அடுக்கில் நான்காவதாக, சூத்திரராக இருப்பதை பற்றி கவலை கொள்ளாமல், தனக்கு கீழே தாழ்த்தப்பட்ட மக்கள் இருப்பதாக எண்ணிக் கொள்ளும் இடைநிலை சமூகத்தினரை பெரியார் கடுமையாக சாடியுள்ளார்.

கிராமங்கள் ஒழிய வேண்டும்: கிராமங்களுக்கு திரும்ப வேண்டும். கிராமங்களில் வாழும் வாழ்க்கையே முழுமையான வாழ்க்கை என்று இன்று எழும் குரல்களை நாம் கேட்கிறோம். ஆனால்,பெரியார், “கிராமங்கள் ஒழிய வேண்டும் “ என்கிறார். “மேல்சாதியானுக்கு உழைத்துப் போட வேண்டியது எப்படி கீழ்சாதியானின் கடமையாக இருந்து வருகின்றதோ, அதாவது கீழ்சாதியான் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், சாதி முறையில் கட்டுப்பட்டு இருப்பதின் காரணமாகவே, எப்படி கீழ்சாதியான் என்பவன் உழைப்பவனாகவும், மேல்சாதியான் என்பவன் அவ்வுழைப்பை அனுபவிப்பவனாகவும் இருந்து வர முடிகின்றதோ, அதுபோலவே பட்டணங்கள் மேல்சாதியாகவும், கிராமங்கள் கீழ்சாதியாகவும் இருந்து வருகின்றன”

கிராமம் என்ற வாழ்க்கை முறையை புனிதப்படுத்துவதன் பின்ணனியில் சாதிய கட்டமைப்பு நியாயப்படுத்தப்படுவதாக பெரியார் கருதுகிறார். கிராமத்தை அப்படியே வைத்துக்கொண்டு அந்த மக்களை சமூக பொருளாதார அமைப்பில் கீழ் நிலையில் வைத்திருப்பதாக குற்றம் சாட்டுகிறார். பெரியார் உழைக்கும் மக்களை வெளி நகரங்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுங்கள் என்று சொன்னதன் பின்னணி இதுதான். கிராமத்திற்குள் ஆணாதிக்க, சாதிய, வர்க்க அமைப்பிற்குள் சிக்கி கொள்ளாமல் நகர்புறம் சென்று சுயமரியாதையுடன் வாழவேண்டும். ஆகையால், சமூக ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தும் கிராம வாழ்க்கையை விட்டொழிக்க வேண்டும் என்று அழுத்தமாக குரல் கொடுக்கிறார் பெரியார்.

தமிழ் காட்டுமிராண்டி மொழி: தமிழ் கடவுள், தமிழ் நமக்கு தாய் என்று புகழும் அரசியல்வாதிகளையும், கவிஞர்களையும் பார்த்திருப்போம். ஆனால்,தமிழை “காட்டுமிராண்டி மொழி” என்று சொன்ன தலைவரை பார்த்திருப்போமா? பெரியாரைத் தவிர வேறு யாரும் இவ்வளவு துணிச்சலான கருத்தை பேசியிருக்க முடியாது.
“தமிழை ஒதுக்கிவிடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன?
தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? நம் மக்கள் வளர்ச்சி அடைய வேண்டிய நிலை இன்னும் வெகுதூரம் இருக்கிறது. அதனால்
புலவர்களுக்கு, வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லையே என்கின்ற காரணம் ஒன்று அல்லாமல் தமிழர்கள் நல்வாழ்விற்கு தமிழ் எதற்கு ஆக வேண்டியிருக்கிறது?

இத்தனை காலமும் தமிழ் தோன்றிய 3000, 4000 ஆண்டுகாலமாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும் தமிழ் படித்த புலவனாலும் தமிழ்நாட்டிற்கு, தமிழர் சமுதாயத்திற்கு என்ன நன்மை என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்தப் புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால், இதுவரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்?” என்று திடுக்கிடும் வகையில் தமிழ் பெருமையின் மீது புதிய ஒளியைப் பாய்ச்சினார். தமிழ் என்ற மொழியை காலத்திற்கேற்றாற்போல் நவீனப்படுத்தாமல் வெறும் கொண்டாடி மகிழும் கருவியாகவே பார்ப்பதை விமர்சிக்கிறார். ஆங்கில மொழியிலுள்ள அறிவியல் கருத்துக்கள் ஏன் தமிழ் மொழியில் இல்லை என்கிறார். புது புது அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டறியவதற்கு ஏற்றாற்போல் நமது மொழி அமையவேண்டும். புராணங்களையும் இதிகாசங்களையும் கொண்டாடி கொண்டிருந்தால் காட்டுமிராண்டி மொழியாகத்தானிருக்கும் என்பது பெரியாரின் கருத்து.பெரியாரின் தமிழ் மொழி குறித்த விமர்சனம் என்பது தமிழர் நலன் சார்ந்தே அமைகிறது.

"நான் சொல்லும் சில கருத்துகள் இன்று தலைகீழ்ப் புரட்சியாகச் சிலருக்குத் தோன்றுகின்றன. அடுத்த 20 வருடங்களில் - என்னையே மகா பிற்போக்குவாதி என்று அன்றைய உலகம் கூறுமே! அறிவு வளர்ச்சியின் வேகம் அவ்வளவு அதிகமாயிருக்கிறதே! மாறுதலுக்குக் கட்டுப்பட்டதன்றோ உலகம்? மாறுதலுக்கு வளைந்துகொடாத மனிதன் மாயவேண்டியதுதானே!" (விடுதலை - 24.10.1948) பெரியார் விரும்பிய நவீன இளைஞர்கள் இன்னும் போதுமானவளவிற்கு உருவாகவில்லை என்றேதான் தோன்றுகிறது. ஏனென்றால், பெரியாரின் கருத்துக்கள் இன்னும் பொது புத்தியை அதிர வைத்துக் கொண்டுதானிருக்கின்றன. (அல்லது) பெரியார் தான் வாழ்ந்த காலத்தில் தொலைநோக்காளராக, நவீன சிந்தனையாளராக பார்க்கப்பட்டது மட்டுமல்ல, சமூகம் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வாக பெரியாரைத் துணைக்கொள்ளும் இன்றைய தலைமுறைக்கும் முன்னத்தி ஏராகவே இருக்கிறார். காரணம், பெரியாரின் விடுதலைச் சிந்தையின் தொலைநோக்கு அத்தகையது.

-ஜீவசகாப்தன், சிறப்பு செய்தியாளர், நியூஸ் 18 தமிழ்நாடு
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Diravidar kalagam, HBDPeriyar140, Periyar birthday special, Thanthai periya

அடுத்த செய்தி