• HOME
  • »
  • NEWS
  • »
  • special-articles
  • »
  • சிறப்புக்கட்டுரை - “பெரியாரும் இந்தியும்”

சிறப்புக்கட்டுரை - “பெரியாரும் இந்தியும்”

தந்தை பெரியார்

தந்தை பெரியார்

  • News18
  • Last Updated :
  • Share this:
“இந்தியா பல மொழிகள் பேசும் மக்கள் கொண்ட நாடு. ஒவ்வொரு  மொழியும் தனித்தன்மையுடன் கூடியது.  அதே சமயம், உலக அளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு மொழி இருக்க வேண்டும். இன்றைய தினம், இந்தியா முழுவதும் இணைக்கின்ற மொழியாக ஒரு மொழி இருக்குமானால், அது இந்தி யாக மட்டுமே இருக்கும். ஏனென்றால், இந்தி தான் இந்தியாவில் அதிகம் பேசப்படுகிற மொழியாக இருக்க முடிகிறது. “என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய அடுத்த கணம், தமிழ்நாடு பற்றிக் கொண்டது.

எப்போதுமே, தமிழ்நாடு என்ற மூங்கில் காட்டை பற்றி எரியச் செய்யும் தீக்குச்சியாகவே  இந்தி இருக்கிறது. சமீபத்தில் ஒரே நாடு , ஒரே மொழி என்ற கோணத்தில் இந்தியா என்றால் இந்தி. இந்தி தான் இந்தியாவின் அடையாளம் என்று அமித்ஷா சொன்னவுடன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  “இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கே வேட்டு வைப்பது போல் இருக்கிறது. இது  வேற்றுமையில் ஒற்றுமை பேசும் இந்தியாவா ,?  இல்லை  வெறும் இந்தி மொழி மக்கள் மட்டும் வாழும்  “இந்தி “  யாவா ? என்று அறிக்கை தெரிவித்து தனது  கண்டனத்தை பதிவு செய்தார்.

பாஜகவின் கூட்டணி கட்சியான  பாமக  நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “ இந்தி ஒரு போதும், இந்தியாவின் அடையாளமாக மாறிவிடாது “என்று அமித்ஷாவிற்கு பதிலடி கொடுத்தார். ஆளும் அதிமுகவினரும், அமித்ஷாவின் இந்தி குறித்த பதிவிற்கு, தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்தனர் என்பதை கவனிக்க வேண்டும்.

அமைச்சர் வைகைச் செல்வன், தனது கண்டனப் பதிவில்,” நாட்டில் மயில்களை விட காக்கைகள்தான் அதிகமாக இருக்கிறது,   என்பதற்காக, காக்கையை தேசிய பறவையாக அறிவித்திட முடியுமா ?“  என்று அண்ணா அன்று எழுப்பிய கேள்வியை நினைவு கூர்ந்து , எதிர்ப்பை பதிவு செய்தார்.  அதே போல் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் போன்றோர்களும், “தமிழகத்தில் எப்போதும் இரு மொழிக் கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் “ என்று  வலியுறுத்தினர்.

இவ்வாறாக, இந்தி திவஸ் தினத்தன்று, அமித்ஷா பதிவிட்ட “இந்திதான் இந்தியாவின் அடையாளம் “ என்ற பதிவிற்கு, தமிழகத்திலுள்ள  அனைத்து கட்சிகளும் ஓர் அணியில் திரண்டு நின்று கண்டனங்களை பதிவு செய்தன.

இந்தி என்றவுடன், தமிழகம் மட்டும் ஏன் இப்படி கொதிக்கிறது. ஏனென்றால், தமிழக அரசியல் மரபு அப்படிப் பட்டது.  இன்றைய பாஜக அரசு மட்டுமல்ல, அன்றைய காங்கிரஸ் அரசிற்கும் கடுமையான எதிர்வினைகள் கொடுத்த மாகாணம் சென்னை மாகாணம்தான். இன்னும் சொல்லப் போனால், அப்போது மாகாண முதலமைச்சர்களாக இருந்த ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா,பக்தவசலம் போன்றோர்கள் இந்தி திணிப்புக்கு ஆதரவானவர்களே!.  அப்படியென்றால், அந்த காலகட்டத்தில் மத்திய ,மாநில என இரண்டு ஆளும் வர்க்கத்தினருக்கு  எதிராக வீரியமாக  போராட வேண்டிய தேவை இருந்தது.  இப்போது போல், அப்போது மாநில கட்சிகளின் செல்வாக்கு கிடையாது. அப்போது தமிழகத்தின் வலிமையான தேசிய கட்சியாக , காங்கிரஸ் கட்சி மட்டுமே இருந்தது.

இரண்டு ஆளும் வர்க்கத்தையும், சாமான்ய மக்கள் அவ்வளவு துணிச்சலுடன் எப்படி எதிர்த்தார்கள்?,  யார் அவர்களுக்கு அந்த துணிச்சலை கொடுத்தது?, எந்த நம்பிக்கையில் வீதிக்கு வந்து போராடினார்கள்?  போன்ற கேள்விகளை எழுப்பினால், வரலாறு நமக்கு ஒரே ஒரு வரியில் பதிலை சொல்லிவிடுகிறது. அந்த பதில்  பெரியார்.

பெரியார். இந்த  ஒற்றைப் பெயர் இல்லாமல் தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை யாராலும் எழுதிவிட முடியாது. இன்று பாஜகவின் கூட்டணி கட்சியாக , பாஜகவை நேச சக்தியாக இருக்கும் பலரும் துணிச்சலாக மத்திய அரசை எதிர்த்து பேசுவதற்கு காரணமானவர் இந்த பெரியார்.  ஆம்.  அவர்  ஆழமாக விதைத்த  இந்தி எதிர்ப்பு மரபுதான் இன்று ஆலமரமாக வேர் விட்டு பரவி நிற்கிறது.

என்ன அந்த மரபு ? , மற்ற மாநிலங்களில் இல்லாத மரபு, இந்தியாவில் இந்தி பேசாத மாநிலங்கள் பல இருக்கின்றன. ஆனால், இந்தி எதிர்ப்பு என்றாலே, தமிழகத்தை மட்டும் முன்ணுதாரணமாக காட்டப்படுவது ஏன் …?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரிய வேண்டுமென்றால், 1938-ம் ஆண்டிற்கு நாம் செல்லவேண்டும். அந்த ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம்தான், தமிழகத்தில் அதற்குப் பிறகு நடைபெற்ற அனைத்து இந்தி எதிர்ப்பு, மத்திய அரசை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களுக்கு எல்லாம் முதன்மையானதும்  வீரியமானதும் கூட.

1934 ,35,37 ஆகிய ஆண்டுகளில், சென்னை மாநகராட்சி மன்றத்தில் இருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் மாநகராட்சி பள்ளிகளில் இந்தியை கட்டாயப் பாடமாக ஆக்க வேண்டும் என்பதை தீர்மானமாக நிறைவேற்றி, மாகாண அரசுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த காரணத்தினால்,  காங்கிரஸ் உறுப்பினர்களின் இந்தி ஆதரவு தீர்மானங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஆனால், சிறிது காலத்தில் நிலைமை மாறிவிட்டது. மூதறிஞர் ராஜாஜி பிரீமியர் ஆனார். பிரீமியர் என்றால் முதலமைச்சர்.  நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த போதே, இந்தியை கட்டாயமாக்கவேண்டும் என்ற ஆசையை பல முறை வெளிப்படுத்தியுள்ளார் ராஜாஜி. தற்போது மாகாண முதமைச்சர், இந்தியை கட்டாயமாக்காமல் விட்டு விடுவாரா என்ன?

அண்ணாவும் பெரியாரும்


1937-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் நாள் சென்னை மாகாணத் தமிழர் மாநாடு  திருச்சியில் நடைபெற்றது. நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமை வகித்த இந்த மாநாட்டில், பெரியார், கி.ஆ.பெ.விசுவநாதம், சி.என்.அண்ணாத்துரை, கே. வி. அழகிரிசாமி  ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ,பெரியார்  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு தீர்மானங்களை கொண்டு வந்தார். முதல் தீர்மானம், கட்டாய இந்தியை கடுமையாக எதிர்க்க வேண்டும். இரண்டாவது   தீரமானம் தமிழ்நாடு தனி நாடாக பிரிய வேண்டும் என்பது.

இதில் இரண்டாவது தீர்மானத்தைக் கேட்டு ஆட்சியாளர்கள் அதிர்ந்து போயினர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பெரியார் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார் என்பது புரிந்தது. ராஜாஜி இந்தி எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது கடும் அடக்குமுறையை ஏவினார்.

125 உயர்நிலைப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமொழியாகப் பயிற்றுவிக்கப்படும் என்று  அறிவித்தார். சட்டமன்றத்தில் அதற்கு எதிர்ப்புகள் எழுந்தபோது, “ஆரியத்தை எதிர்ப்பவர்களும், காங்கிரசைப் பிடிக்காதவர்களும்தான் இந்தியை எதிர்க்கிறார்கள் “என்று ஏளனமாகப் பேசினார் முதலமைச்சர் ராஜாஜி.

ராஜாஜியின் இந்தி திணிப்பு இன்னும் தீவிரமானது . இந்த நிலையில், சோமசுந்தர பாரதியார் தலைமையில் திருச்சியில் மீண்டும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 1938-ம் ஆண்டு மே 28-ம் தேதி, நடைபெற்ற கூட்டத்தில், இந்தி எதிர்ப்பு வாரியம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த வாரியத்திற்கு, பெரியார், உமா மகேஸ்வரன் பிள்ளை, சௌந்திரபாண்டியனார், ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்தி எதிர்ப்பு வாரியத்தின் சார்பில் பெரியார் பேசிய பேச்சுக்களே இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வடிவமைப்பதில் முதன்மையான பங்காற்றியது.

மாணவர்களை இந்தி பாடங்களைப் புறக்கணிக்கும் படி செய்தல்,  இந்தியை பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கு முன்னால் மறியல் போராட்டங்களை நடத்துதல், காங்கிரஸ் அமைச்சர்களுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டுதல், முதலமைச்சர் வீட்டிற்கு முன்பு மறியல் நடத்துதல் போன்ற வழிமுறைகள் வகுக்கப்பட்டன.

மேலும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் சிறைக்குச் செல்வதோடு மட்டுமல்லாமல், உயிரை விடவும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றும் பெரியார் கேட்டுக் கொண்டார்.

நீதிகேட்டு நெடும்பயணம் என்ற வாசகம் திராவிட கட்சிகள் பயன்படுத்துவதை பார்த்திருப்போம். வட இந்தியாவில் யாத்திரை என்ற பெயரில் , கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர்கள் பயணம் மேற்கொள்வதை பார்த்திருப்போம்.  இதற்கு எல்லாம் முன்னோடியான ஒரு பெரும் பயணம் ஒன்று அப்போது நடைபெற்றது. அது இந்தி எதிர்ப்பு பயணம். 1938 ம் ஆண்டு ஆகஸ்ட் 1 ம் தேதி தொடங்கிய இந்த பயணம், மொத்தம் 42 நாட்கள் பயணித்து, சென்னைக்கு செப்டம்பர் 11 ம் தேதி வந்தடைந்து.

42 நாட்கள் இந்தி திணிப்பிற்கு எதிராக, திருச்சியில்  தொடங்கிய இந்த பயணம் முழுவதும்  பாரதிதாசனின், எப்பக்கம் வந்து புகுந்துவிடும்  - இந்தி எத்தனைப் பட்டாளம் கூட்டி வரும்

மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை – எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை

என்ற உணர்ச்சிகரமான பாடல்களைப் பாடிக் கொண்டே அனைவரும் நடந்தனர்.

அந்த இந்தி எதிர்ப்பு  பெரும் படையை வரேவற்க, சென்னை கடற்கரையில் எழுபதாயிரம் பேர்  திரண்டிருந்தனர். அந்த பாராட்டுக் கூட்டத்தில் பேசிய பெரியார் அப்போதை காங்கிரஸ் பற்றாளர்கள் அதிர்ந்து போகும் வண்ணம் பேசினார். அப்போது என்ன, இப்போதைய தேசிய சிந்தனையாளர்கள் கேட்டாலும், அதிர்ந்துதான் போவார்கள். அப்படி என்ன பேசினார்.?

“தமிழ்நாடு தமிழருக்கே” என்று உடலில் பச்சைக் குத்தி கொள்ளுங்கள் என்றார். அது அப்படியே விடுதலை பத்திரிகையிலும் வெளிவந்தது.  பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தின் கீழ் இருக்கும் இந்தியாவில்,  தமிழ் பேசும் மக்களை தனியாகப் பிரித்து  தனி நாடாக்குங்கள்  என்று கேட்பதற்கெல்லாம் அசாத்திய துணிச்சல் வேண்டும்.

பெரியாரின் இது போன்ற பேச்சுக்கள் ராஜாஜியை சும்மா இருக்க விடுமா.?  பெரியார் கைது செய்யப்பட்டார். கைது செய்வதற்கு சொல்லப்பட்ட  காரணங்களில் ஒன்று என்ன தெரியுமா? . பெரியார் பெண்களை போராடத் தூண்டினார் என்பதுதான். ஆம். அப்போது மூவலூர் ராமமிர்தம், டாகடர் தர்மாம்பாள்,மறைமலையடிகளின் மகள் நீலாம்பிகை போன்றோரும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் குதித்தனர்.

1938 ம் ஆண்டு, நவம்பர் மாதம் 13 ம் தேதியில் ,பெண்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு மாநாட்டில்தான்  ஈவெரா என்ற இயற்பெயர் உடைய பெரியாருக்கு, பெரியார் என்ற பெயர் வழங்கப்பட்டது. அந்த கணம் முதல்தான் ஈவெரா பெரியாராக மாறினார். இது போன்ற சம்பவங்கள் ராஜாஜிக்கு கூடுதல் ஆத்திரத்தை தந்தது. பெண்களையும் போராட்டக் களத்திற்கு அழைத்து வந்து விட்டாரே என்ற கோபத்தில்தான் பெரியாரை சிறைக்குத் தள்ளினார் ராஜாஜி.

பெரியார் சிறையில் இருந்ததால், நீதிக்கட்சியின் மாநாட்டிற்கு அவரால் பங்கேற்க முடியவில்லை. ஆகையால், “இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் சிறையிலிருக்கும் பெரியார்” என்பதை குறிக்கும் வண்ணம் ஒரு உருவ அமைப்பை மேடையில் வைத்து மாநாட்டை நடத்தினார்  சர்.ஏ.டி. பன்னீர் செல்வம். இது போன்ற சம்பவங்கள் பெரியார் தொண்டர்களுக்கு மேலும் உத்வேகத்தை கொடுத்தது.

சிறையிலிருந்து  பெரியார் விடுதைலயடைந்தார். உடல் எடை கணிசமாக குறைந்திருந்ததேயொழிய, போராட்ட எண்ணத்தில் சிறிதும் மாற்றம் இல்லை. கூடுதலாக போராட்டங்களை அறிவித்தார் பெரியார்.

இந்நிலையில், இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்த முயன்ற பிரிட்டிஷ் அரசை கண்டிக்கும் விதமாக தாங்கள் ஆட்சியிலிருந்த மாகாணங்களில் எல்லாம் பதவி விலகியது காங்கிரஸ். ஆகையால், ராஜாஜியும் பதவி விலகும் சூழல் ஏற்பட்டது.

ராஜாஜி பதவி விலகியவுடன் முதலமைச்சராகும் வாய்ப்பு பெரியாரைத் தேடி வந்தது. பெரியார் திட்டவட்டமாக மறுத்து விட்டார். இந்திலையில் ஆளுநரின்  ஆட்சி அமைக்கப்பட்டது. ஆளுநரின் ஆட்சியில்தான், இந்தி திணிப்பு திரும்ப பெறப்பட்டது. இந்தி திணிப்பை பெறச் செய்த ஆளுநருக்கு பெரியார் நன்றி தெரிவித்தார்.

“ராஜாஜி  இந்தியை கொண்டு வந்தார் .பிரிட்டிஷ் அரசு இந்தியை அகற்றியது. “இதுதான் வரலாறு. இன்னும் சரியாக சொல்லப் போனால், மாநில அரசு கொண்டு வந்தது, மத்திய அரசு அகற்றியது .

முதல் இந்தி திணிப்பு போராட்டம் நடைபெற்று சரியாக 10 ஆண்டு கழிந்த நிலையில், முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமியும்  பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கினர். மீண்டும் இந்தி எதிர்ப்பு படையை  கட்டி  எழுப்பினார் பெரியார். முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி பெரியார் மீது மிகுந்த மரியாதை உடையவர். பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது, சேரன்மாதேவியில் சாதிய பாகுபாடு இருக்கிறது என்று முறையிட்டவரே ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்தான்.

பெரியாரின் வகுப்பு வாரி உரிமை போன்ற கொள்கைகள் மீது மரியாதை இருந்தாலும், இந்தியை திணிப்பதில் வழக்கமான காங்கிரஸ் முதலமைச்சராகவே, அவர் நடந்து கொண்டார்.

தமிழ்நாட்டில் பெரியாரின் எதிர்ப்புக்கு பயந்து , தெலுங்கு மொழி வழங்கும் பள்ளிகளில் மட்டும் இந்தி கட்டாயம் என்றும், தமிழ் மொழி வழங்கும் பள்ளிகளில், இந்தி விருப்ப பாடம் என்றும் கொண்டு வந்தார். ஆனால், விரைவிலேயே தமிழ்நாட்டிலும் இந்தி கட்டாயம் என்ற ஆணை வந்தது. பெரியார் மீண்டும் களத்திற்கு வந்தார். அப்போது நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு அண்ணாவை சர்வாதிகாரியாக நியமித்தார் பெரியார்.

இந்த மாநாட்டில்தான், பெரியாருடன் சற்று விலகியிருந்த அண்ணா மீண்டும் உற்சாகத்துடன் மேடையறினார். இந்த மாநாட்டில் அண்ணா உட்பட அடுத்த கட்ட தலைவர்களை இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் அமர வைத்து பெரியார் நடந்தே வந்தார் என்பது குறிப்பிடதக்கது.

ராஜாஜி,  ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் காலங்களில் மட்டுமல்ல, பெரியாரால் உச்சி முகர்ந்து கொண்டாடப்பட்ட காமராஜர் ஆட்சிக் காலத்திலும் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது.  மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக, திராவிடர் கழகத்தின் சார்பாக, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தேசியக் கொடியை கொளுத்தும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.முதலமைச்சர்  காமராஜரிடமிருந்து உடனடியாக அறிக்கை வெளிவந்தது. “தேர்வுகளில் இந்தி கட்டாயம் இருக்காது. மத்திய மாநில அரசுகளின் சார்பில், இந்தி எப்போதும் திணிக்கப்படாது. ஆகவே, கொடி கொளுத்தும் போராட்டத்தை கைவிட வேண்டும் “ என்று காமராஜர் கேட்டுக் கொண்டார். காமராஜர் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில், போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

1960-ம் ஆண்டு,மீ ண்டும் பெரியாரை போராட்டக் களத்திற்கு அழைத்தது குடியரசுத் தலைவரின் அறிவிப்பு . குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் கொடுத்த அறிவிப்பில், இந்தி மொழி ஆட்சி மொழியாக வந்தே தீரும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்  என்று இருந்தது.

குடியரசுத் தலைவரின் அறிவிப்பு, தமிழகத்தை நெருப்புக் களமாக்கியது. இந்த முறை பெரியார், அறிவித்த போராட்ட முறையை யாரும்  எதிர்பார்க்கவில்லை.

இந்திய யுனியன் வரைபடத்திலிருந்து ,தமிழ்நாடு தவிர்த்த மற்ற பகுதிகளுக்குத் தீவைக்கும் போராட்டத்தை நடத்த ஆயத்தமானார் பெரியார். பெரியாரின் இந்த அறிவிப்பைக் கண்டு, இந்திய துணைக் கண்டமே அதிர்ந்து போனது.

பெரியாரின் இந்த அறிவிப்பு,  திமுகவினர் அறிவித்த குடியரசுத் தலைவருக்கு கறுப்புக் கொடி காட்டும் பேராட்டம்  போன்ற நிகழ்வுகள்  இந்தி திணிப்பு நடவடிக்கை்கு  தற்காலிமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்திலேயே, அதிகம் கவனம் பெறும் போராட்டங்கள் இரண்டு . 1938 ம் ஆண்டில் நடைபெற்ற போராட்டம் மற்றும் 1965 ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம். 19338 ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் , நடராசன், தாளமுத்து என இருவர் உயிர் பலிகியாகினர்.

1965 ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், உயிர்பலி பல மடங்கு அதிகரித்தது.  அப்போதைய பிரதமர்  லால் பகதூர் சாஸ்திரி மீதும், முதலமைச்சர் பக்தசவலம் மீதும் மாணவர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். தன்னிச்சையாக நடைபெற்ற மாணவர் போராட்டங்களை அண்ணா தூண்டிவிடுவதாக சாஸ்திரி குற்றம் சாட்டினார்.

1965 ம் ஆண்டு சனவரி  26 ம் தேதி முதல், இந்தி மொழி மட்டுமே ஆட்சி மொழி என்று பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அறிவித்ததால்தான், தமிழக மாணவர்கள் கொந்தளித்தனர். ஏற்கனவே சாஸ்திரி உள்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில்தான், ஆட்சி மொழி மசோதாவை கொண்டு வந்தார். தற்போது பிரதமரானவுடன்  இந்தியை கட்டாயமாக்குவதில் மிகுந்த தீவிரம் காட்டினார்.

இந்த நேரத்தில், பெரியாரின் கருத்து என்ன என்பதை நுட்பமாக பார்க்க வேண்டும். தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு மரபை உருவாக்கியவர்களில் முதன்மையானவர் பெரியார். தமிழ்நாடு தனி நாடாக வேண்டும் என்று முழங்கியவர் பெரியார். மொழி அடிப்படையில்தான் தேசங்கள் வரையறுக்க வேண்டும் என்று முதன் முதலில் பேசியவர் பெரியார்.

காமராஜர்


அந்த பெரியார், 65 ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை  வேறு ஒரு கோணத்தில் அணுகினார். மேலும், மாணவர்களின் இறப்பு, தீக்குளிப்பு போன்ற செய்திகள் அவர் மனதை காயப்படுத்தியிருந்தன.  இந்தியை கடுமையாக எதிர்த்துக் கொண்டே, தற்போதைய இந்தி எதிர்ப்பு போராட்ட வடிவில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதையும் நுட்பமாக தெரிவித்தார் பெரியார்.

“இந்தி திணிப்பதில்லையென அன்றே காமராசர் எனக்கு  எழுதி தந்திருக்கிறாரே ! அந்த உறுதிமொழியை அரசினரும் மீறாதபோது, ஏன் கிளர்ச்சி செய்ய வேண்டும் .” என்று பெரியார் கேள்வி கேட்கிறார்.

அதாவது 1955 ம் ஆண்டு, இந்தி ஆட்சி மொழி என அறிவிக்கப்பட்ட போது, காமராஜர் இந்தி திணிக்கப்படாது என்று சொன்ன உறுதி மொழியை நினைவுகூர்கிறார் பெரியார். 1960-ம் ஆண்டு மீண்டு இந்தியை திணிக்க முற்பட்டபோது, தமிழ்நாடு நீங்கலாக இந்திய வரைபடத்தை கொளுத்துவோம் என்று அறிவித்த போது, மீண்டும் இந்தி திணிப்பு  திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டதை   திராவிடர் கழகத்தின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறார்.

மேலும் பெரியார் சொல்கிறார். “ நீ தானே இந்தியை எதிர்த்தாய், இப்போது ஏன் இப்படி சொல்கிறாய்?  என்று கேட்பீர்களேயானால், சொல்கிறேன், இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன். என்னைப் பொறுத்தவரை இந்தி எதிர்ப்பு மொழி பிரச்சனை அல்ல.  அரசியல் பிரச்சனைதான். என்னைப் பொறுத்தவரையில், காமராஜர் ஆட்சி அவசியமா இந்தி ஒழிய வேண்டியது அவசியமா? என்றால், காமராஜர் ஆட்சி இந்தியை ஒழித்துவிடும் என்று நம்புவதால், முதலில் காமராஜர் ஆட்சி நிலைக்கவே பாடுபடுவேன் .”

இதுதான் பெரியாரின் நிலைப்பாடு, ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்,  போன்றோர்களை இந்தி திணிப்பாளர்களாக பார்த்தார் பெரியார். ஆனால், காமராஜரை இந்தி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுப்பார். இந்தியை வரவிடாமல் தடுப்பார் என்று நம்பினார். அதற்கு கடந்த கால அனுபவமும் இருப்பதால் காமராஜர் அதிகாரத்தில் இருப்பது இந்தி எதிர்ப்பிற்கு அவசியம் என்பதே பெரியாரின் பார்வை.

இன்று இந்தியாவில் பல மாநிலங்களில்  வட இந்தியர்கள் தாக்கப்படுகின்றனர். தங்கள் மாநில மொழியில் பேசாத   உழைக்கும் பீகாரிகளை மராத்திய அமைப்புகள் தாக்குதல் நடத்துகின்றனர். ஆனால, அங்கெல்லாம் இந்தி எதிர்ப்பு அரசியல் வீரியமாக இல்லை. ஆனால், இந்தி எதிர்ப்பு அரசியல் வீரியமாக நடந்த தமிழ் மண்ணில் , வட இந்தியர்கள் தாக்கப்படுவதில்லை.

நம்பிக்கையுடன் தமிழகத்தில் வாழ்க்கை நடத்துகிறார்கள். ஏனென்றால், தமிழகத்தில் எழுந்த மொழி உணர்வு, இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது பெரியாரால் விதைக்கப்பட்ட ஜனநாயகப் போராட்டம். இந்த இந்தி எதிர்ப்பு உணர்வு தமிழை பாதுகாக்குமேயொழிய ,  யாரையும் பாதிப்படையச் செய்யாது.மொழி உணர்வுடன் சேர்த்து, இந்த ஜனநாயகப் பண்பையும் பெரியார் நடத்திய வீரியமான இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

- கட்டுரையாளர் ஜீவசகாப்தன் (நியூஸ் 18 தமிழ்நாடு)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: