Home /News /special-articles /

ஆபரேஷன் ட்ரெய்ன் 18: கைவிடப்பட்ட ஐசிஎஃப்... வெளிநாட்டிற்கு தாரைவார்க்கப்படும் ரயில் தயாரிப்பு...

ஆபரேஷன் ட்ரெய்ன் 18: கைவிடப்பட்ட ஐசிஎஃப்... வெளிநாட்டிற்கு தாரைவார்க்கப்படும் ரயில் தயாரிப்பு...

  • 4 minute read
  • Last Updated :
2019ஆம் ஆண்டு, பிப்ரவரி 14ஆம் தேதி. அப்போதைய காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருடன் ஸ்ரீநகரை நோக்கி சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு மறுநாள், இந்தியாவின் முதல் வேகமான ரயிலை, டெல்லி, வாரணாசி இடையிலான வழித்தடத்தில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சிக்கு முன், தாய் நாட்டை பாதுகாக்கும் பணியில் உயிர் நீத்த தியாகிகளுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

“வந்தே பாரத்” அதாவது “வாழ்க பாரதம்” என்று பெயரிடப்பட்ட அந்த ரயில் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பதில் பெருமிதம் அடைவதாக பிரதமர் குறிப்பிட்டார். ஆனால், அந்த பெருமிதம் நீண்ட நாள் நீடிக்கவில்லை.

2014ஆம் ஆண்டு, பாஜக அரசு முதல் முறையாக பொறுப்பேற்றுக் கொண்ட உடன், மேக் இன் இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலைகள் தொடங்குவதை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதும், உள்நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரிப்பதும் இந்த திட்டத்தின் பலன்களாகும்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் அடிப்படையில், இந்தியாவின் முதல் அதிக வேக ரயிலை தயாரிக்கும் பொறுப்பு, பொதுத்துறை நிறுவனமான ஐசிஎஃப்-க்கு வழங்கப்பட்டது. 60 ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகளை தயாரித்த அனுபவத்துடன், சென்னையில் இயங்கும் ஐசிஎஃப் நிறுவனம் ரயிலை தயாரிக்கும் பணியில் மும்முரமாக இறங்கியது.

இந்தியாவின் முதல் அதிவேக ரயிலை தயாரிக்கிறோம் என்ற உற்சாகம், ஐசிஎஃப்பில் பணியாற்றும் அதிகாரிகள், பொறியாளர்கள் தொடங்கி சாதாரண பணியாளர்கள் வரை தொற்றிக்கொண்டது. இதன் வெளிப்பாடாக, பதினெட்டே மாதங்களில், வெறும் 100 கோடி ரூபாய் செலவில் முதல் ரயிலை நாட்டுக்காக உற்பத்தி செய்து முடித்தது ஐசிஎஃப். ட்ரெய்ன் 18 என்ற குறியீட்டு சொல்லால் அழைக்கப்படும் இந்த ரயிலில், 80 சதவீத பாகங்கள் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை.

பொதுவாக. இதுபோன்ற புதிய வகை ரயில்களை வடிவமைப்பதற்கு பின்னர் அதை தயாரிப்பதற்கும் 3 முதல் 4 ஆண்டுகள் ஆகும். இதே வகை ரயிலை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தால் ஏறக்குறைய இரண்டு மடங்கு விலை கொடுக்க வேண்டும். ஆனால், 16 பெட்டிகளை கொண்ட, அதிகபட்சமாக மணிக்கு 160கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரயிலை, நாட்டு மக்களுக்காக குறைவான விலையில், மிகக் குறைந்த நாட்களில் தயாரித்து சாதனை படைத்தது பொதுத்துறை நிறுவனமான ஐசிஎஃப். அதே வேகத்தில், இந்த ஆண்டிற்குள் மேலும் 10 ரயில்களை தயாரிக்கும் பணியில் மும்முரமாக இறங்கியது ஐசிஎஃப்.

ட்ரெய்ன் 18ன் முதல் ரயில் நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட இரண்டே வாரத்தில், அந்த ரயில் வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய, தலைமை இயந்திரவியல் பொறியாளர் சுபார்ன்ஷூ,தெற்கு ரயில்வேக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். இந்த இடம் மாற்றத்திற்கு ரயில்வே வாரியம் உரிய காரணத்தை தெரிவிக்கவில்லை. அத்துடன், ட்ரெய்ன் 18 தயாரிப்பு இந்தியாவில் மற்றொரு ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைக்கு மாற்றப்படும் என்ற தகவலும் வெளியானது.

அடுத்ததாக, ட்ரெய்ன் 18 வடிவமைப்பிற்கு, ஆராய்ச்சி, வடிமைப்பு மற்றும் தரநிர்ணய கழகத்திடம், ஐசிஎஃப் அனுமதி பெறவில்லை என்று ரயில்வாரியம் குற்றம் சுமத்தியது. ரயில் தயாரிப்பிற்கு டெண்டர் விடப்பட்டதிலும் முறைகேடு நடந்துள்ளதாக ரயில்வே வாரியம் குற்றம் சாட்டியது. இதைத்தொடர்ந்து ட்ரெய்ன் 18 உற்பத்தி நிறுத்தப்பட்டது.

வாரியத்தின் உத்தரவின் பேரில், ட்ரெய்ன் 18 தொடர்பான அனைத்து ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றி, விசாரணையை தொடங்கியது. இதற்கிடையில், இந்த திட்டத்தில் பணியாற்றிய பல முக்கிய அதிகாரிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். சிலர் ஓய்வு பெற்றனர். இந்தியாவின் முதல் அதிக வேக ரயிலை, அதிவேகத்தில் தயாரித்து சாதனை படைத்த அவர்கள் அனைவரிடமும், லஞ்ச ஒழிப்புத்துறை பல்வேறு கேள்விகளை அடங்கிய பட்டியலை அனுப்பி விளக்கம்கேட்டது.

ரயில் பெட்டிகளில் எலட்ரிக்கல் வேலைகளை செய்ய ஐசிஎஃப் சார்பில் டெண்டர் கோரப்பட்டபோது, மேதா என்ற இந்திய நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டதால் அதற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த டெண்டரில் கலந்துகொண்ட பம்பார்டியர் என்ற கனடா நாட்டைச் சேர்ந்த நிறுவனமும், சீமன்ஸ் என்ற ஜெர்மனியை சேர்ந்த சர்வதேச நிறுவனமும் ஒப்பந்தத்தில் தோல்வியடைந்தன.
கடந்த ஆகஸ்ட் மாதம் ரயில்வே வாரியத்தின் தலைவர் ஒய்.கே.யாதவ்விற்கு, ட்ரெயின் 18 திட்டத்தில் பணியாற்றிய, தலைமை இயந்திரவியல் பொறியாளர் சுபார்ன்ஷூஒரு கடிதம் எழுதினார். அதில், ட்ரெய்ன் 18 திட்டத்தில் தொடர்புடையவர்கள், லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கையால் அச்சுறுத்தலுக்கிடையில் வேலை செய்வதாகவும், பிரதமரின் இந்த கனவு திட்டத்தை நிறைவேற்ற உகந்த சூழலை உருவாக்கித் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். குறிப்பிட்ட எந்த ஒரு நிறுவனத்திற்கும் விதிகளை மீறி ஒப்பந்தம் வழங்கப்படவில்லை என்று கூறிய சுபார்ன்ஷூ, கடந்த 6 மாதமாக இயக்கப்பட்டு வரும் வந்தேமாதரம் எக்ஸ்பிரஸ், தற்போது வரை, சிறு தொழில்நுட்ப பிரச்னையையும் சந்திக்கவில்லை என்றும், இது மிகப்பெரிய சாதனை என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.

ட்ரெய்ன் 18ஐ உருவாக்கியவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை, இந்திய தொழில்நுட்பத்தின் பெருமிதங்களாக கருதப்படும் சந்திரயான் விண்கலம் மற்றும் பிம்மோஸ் ஏவுகணைகளை வடிவமைத்த விஞ்ஞானிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்துவதற்கு இணையானது என்றும், சுபார்ன்ஷூதனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

சுபார்ன்ஷூவின் கடிதம், ரயில்வே வாரியத்திடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ட்ரெய்ன் 18 திட்டத்தின் முக்கிய நபர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கை தொடர்ந்தது. இதற்கிடையில், துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க போதிய பணம் இல்லை என்பதை ரயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்த சுபார்ன்ஷூ, பீகாரில் உள்ள ரயில் சக்கரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.
ஒருபுறம், ரயில் வடிவமைப்பிற்கு ஒப்புதல் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லி, கட்ரா இடையிலான வழித்தடத்தில் இரண்டாவது ட்ரெய்ன் 18 ஓடத்தொடங்கியது. ஆனால், திட்டமிட்ட படி புதிய ரயில்களை உருவாக்க ஐசிஎஃப்பிற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தது.

இந்நிலையில், ட்ரெயின் 18 வகையை சேர்ந்த 60 அதிவேக ரயில்களை வாங்க, சர்வதேச டெண்டர் விட ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுபார்ன்ஷூ, ரயில்வே வாரியத்திற்கு எழுதியுள்ள மற்றொரு கடிதத்தில், 25000 கோடி செலவில் வெளிநாட்டிலிருந்து ரயிலை இறக்குமதி செய்ய திட்டம் இருப்பதாக கூறுகின்றார். சர்வதேச டெண்டரில் ஐசிஎஃப் நிறுவனம் கலந்துகொள்ள முடியாத வகையில் டெண்டர் நிபந்தனைகள் உள்ளதை அந்த கடிதத்தில் சுபார்ன்ஷூசுட்டிக்காட்டியுள்ளார். பொதுத்துறை நிறுவனமான ஐசிஎஃப், அதி நவீன ரயில்களை தயாரிக்கும் அந்தஸ்தை பெறுவதை தடுப்பதற்காக சதி நடைபெறுவதாகவும் சுபார்ன்ஷூகுற்றம் சாட்டுகின்றார்.

இதற்கிடையில், ஐசிஎஃப் தயாரித்த ட்ரெய்ன் 18, அதிக எடை கொண்டதாக இருப்பதால், அதை இயக்குவதற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படுவதாக ரயில்வே வாரியம் புதியதொரு கதையை கூறியுள்ளது. இதற்கும் தனது கடிதம் மூலம் வாரியத்திற்கு பதில் அளித்துள்ள சுபார்ன்ஷூ, 17 டன்னுக்கு குறைவான எடை, உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றே என்று கூறியுள்ளார்.

விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கவில்லை என்பதால், அதை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யலாம் என்று முடிவெடுப்பது சரியா என்று கேள்வி எழுப்புகிறார் சுபார்ன்ஷூ. இன்றுவரை, எந்தவித பிரச்னையும் இல்லாமல் “வாழ்க பாரதம்” வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போது, அதை உள்நாட்டில் தொடர்ந்து தயாரிப்பதில் என்ன பிரச்சனை என்று கேட்கிறார் சுபார்ன்ஷூ.
Published by:Yuvaraj V
First published:

Tags: Train 18

அடுத்த செய்தி