Home /News /special-articles /

கல்வியை இந்தியமயமாக்குவதில் உள்ள பிரச்சனைகள் என்ன? 

கல்வியை இந்தியமயமாக்குவதில் உள்ள பிரச்சனைகள் என்ன? 

காட்சி படம்

காட்சி படம்

இந்தியமயமாக்கல் என்ற கருத்து நிலையை அடித்தட்டு மக்களிடம் இருந்து கட்டியெழுப்புவது அவசியமாகிறது. நீண்ட நெடிய உரையாடல் தேவைப்படுகிறது.

தேசிய கல்விக் கொள்கை 2020 தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உயர்க்கல்வியில் நெகிழ்வான பாடத்திட்டம்,  பல்முனை நுழைவு, வெளியேறுதல் சேர்க்கை முறை (Multiple ENtry- Exit Facility) போன்ற திட்டங்கள் மாணவர்களிடத்தில் வரவேற்பை பெற்றுவருகின்றன.

இருப்பினும், தேசியக் கல்விக் கொள்கைக்குப் பின் சில கருத்துநிலை பிரச்சனைகளும் உள்ளன. உதாரணமாக, காலனித்துவப் பிடியிலிருந்து  நாட்டின் கல்வி அமைப்பை விடுவிப்பதற்கான முயற்சியாக தேசிய கல்விக் கொள்கை பார்க்கப்படுகிறது.      

முன்னதாக, ஹரித்துவாரில் தெற்காசிய அமைதி மற்றும் நல்லிணக்க அமைப்பைத் தொடங்கி வைத்துப் பேசிய குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு,"அந்நிய ஆட்சி மூலம் இந்தியாவின் புகழ்பெற்ற பழமையான கல்வி முறை சிதைக்கப்பட்டது.

VP Venkaiah Naidu
வெங்கையா நாயுடு


பழமை காலக் கற்பித்தல் முறை மற்றும் பாரம்பரியம் மூலம் கல்வித் துறையில் இந்தியாவின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை மீட்க வேண்டும். கல்வியை  இந்தியமயமாக்கும் வேண்டும். தொடர்ந்து பேசிய அவர்,  இந்தியமயம் என்று சொன்னவுடன், சிலர் காவிமயமா? என்று வினவுகின்றனர். ஏன் காவிமயமாக்கினால் என்ன தவறு?" என்று கேள்வி எழுப்பினார்.

எனவே, கருத்துக் கொள்கையின் கருத்துநிலை யாது, அது எதனை காத்துக் கொள்ள துடிக்கிறது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

புதிய கல்வி கொள்கையும் - கருத்து உருவாக்க நடவடிக்கைகளும்:

வேத மற்றும் சமஸ்கிருத கல்வி வாரியம்:   சிபிஎஸ்இ போன்று வேத மற்றும் சமஸ்கிருத இடைநிலைக் கல்விக்கான மத்திய கல்வி வாரியம் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

பாடப்புத்தகத்தில் பகவத் கீதை:  கல்வித் துறை மூலம் இந்தியாவின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை மீட்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப, குஜராத், கர்நாடகா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை போன்ற நூல்களை  பள்ளிப்பாடத்திட்டங்களில் சேர்க்க முடிவெடுத்துள்ளன. 

இந்திய வரலாறு மறுமதிப்பீடு:  நாட்டின் வளமான கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக ஒட்டுமொத்த கல்வி பாடத்திட்டத்தை மாற்றியமைக்க தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை (National Curriculum Framework) மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இப்பாடத்திட்ட  கட்டமைப்பை உருவாக்க தேசிய வழிநடத்தும் குழுவும், பல்வேறு நிபுணத்துவ குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாற்று சொல்லாடல்கள் திருத்தப்பட வேண்டும்/மாற்றியமைக்க வேண்டும் என்று இதன் உறுப்பினர்கள் விவாதித்து வருகின்றனர். உதாரணமாக, இக்குழுவில் உறுப்பினராக உள்ள கோவிந்த் பிரசாத் சர்மா (ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கல்வி பிரிவான வித்யா பாரதியின் முன்னாள் தலைவர்), " பாரம்பரிய கல்வி முறையை மீட்டெடுக்க வேண்டும். பண்டைய இந்தியாவின் நவீனதத்துவத்தை மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அல்கெசாண்டர், கஜினி போன்ற படையெடுப்பாளர்கள்  வென்றனர் என்ற  சொல்லாடல்களைத் தவிர்த்து, இந்திய மன்னர்களின்  வெற்றியை முதன்மைப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார். 

                                                                           காட்சி படம்


சமூக அறிவியலுக்கான குழுவின் தலைவரும் (Focus Group on Social Science)  ஓய்வு பெற்ற பேராசிரியருமான சி.ஐ.ஐசக்  தெரிவித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று  கீழ்கண்டவாறு தெரிவத்தது," அறிவியல் பூர்வமான வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். 'இந்தியா எனும் பாரதம்'  என்பதற்குப் பதிலாக பாரதம் என்ற கருத்தை தான் பிரதானப்படுத்த வேண்டும். பாரதத்துக்கு பின்பு  தான் இந்தியா" என்று தெரிவித்தார். 

இதற்கிடையே, 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான வரலாற்றுப் பாடத்திட்டத்தை ஹரியானா மாநில அரசு முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. காலனி ஆதிக்க தாக்கத்திலிருந்து இந்திய கல்வி அமைப்பை விடுவிப்பதற்கான நடவடிக்கையாக இது அமையும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

மகரிஷி சரக் சப்த் உறுதி மொழி: 

மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களை வரவேற்கும் வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில் ‘ஹிப்போகிரட்டிக்’ உறுதிமொழிக்குப் பதிலாக, சமஸ்கிருத ‘மகரிஷி சரக் சப்த்’ உறுதிமொழியை வாசிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இந்தியமயமாக்கத்தில் உள்ள பிரச்சனைகள் என்ன? 

மனிதன் சமூக வளங்களைப் பெறுவதற்கான ஒரு வழிவகை என்ற  அளவில் ஆங்கிலேயே  காலத்தில் இந்தியாவில் புதிய கல்விமுறை (மெக்காலே) அறிமுகப்படுத்தப்பட்டது. ஆட்சிக்கு வேண்டிய பணியாளர்களைத்  திரட்டுவதற்காக இந்த புதிய கல்வித்துறை ஊக்குவிக்க பட்டாலும், உயர்க் கல்வியை சகல மனிதருக்கும் கொண்டு சென்ற பங்கு இதற்குண்டு. பிறப்பு படிப்புக்கான தகுதி இல்லை என்றும் தெரிவித்து.

இந்தியாவின் பாரம்பரிய சாதி அமைப்புகள் இதனை அங்கீகரிக்கவில்லை, இது நமது சமூகத்துக்கு மிகவும் புதியது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த  கூற்றில் இருந்து தான், இந்தியமயமாக்கல் திட்டத்தை ரோமிலா தாப்பர், கோபால் குரு போன்ற முற்போக்கு சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் எதிர்க்கின்றனர். இந்தியமயமாக்கல் விளிம்பு நிலை மக்களைப் பற்றியோ, அவர்களது கடந்த கால துயர வாழ்க்கைப் பற்றியோ அதிக சிரத்தைக் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டை இவர்கள் முன்வைக்கின்றனர்.

உதாரணாமாக, 2017ம் ராஜஸ்தான் மாநிலத்தில்  அப்போதைய பாஜக அரசு பாடத்திட்டத்தில், அம்பேத்கரை  இந்து சமய சீர்த்திருத்தவாதி என்ற அடைமொழிக்கும் சுருங்கியது. அம்பேத்காரின் அரசியல் செயல்பாடுகளை தயானந்த சரசுவதி, மகாத்மா காந்தி, ஆர்எஸ்எஸ் கே. பி. ஹெட்கேவர்  ஆகியோருக்கு இணையாக நிறுவியது. அம்பேத்காரின் தனித்துவமான  சாதி மறுப்பு போராட்டம், பௌத்த மத மாற்றம் தொடர்பான விபரங்கள் மூடிமறைக்கப் பட்டன. எனவே , புதிய கல்விக் கொள்கையின் மூலம் மீள் கண்டுபிடிப்புச் செய்யப்படுகிற 'இந்தியமயமயக்கம்' , மேல் தட்டு இந்து மக்களின் பேச்சாகவே  மேலோங்கி நிற்கிறது.

கடந்த 75 ஆண்டுகால இந்திய அரசியல் வரலாற்றில், பல்வேறு பாரம்பரிய நடவடிக்கைகள் எதிர்க்கப்பட்டன.கேள்வி கேட்கப்பட்டன. முற்றிலும் மறுதலிக்கப்பட்டன. பட்டியல் கண்ட சாதிகள், பட்டியல் கண்ட பழங்குடியினரின் இன்றைய சமூக வளர்ச்சிப் பரிமாணங்கள் யாவும் பாரம்பரிய சமூக ஒழுங்கமைப்பு பற்றிய விமர்சனத்தின் விமர்சனத்திலிருந்து தோன்றியவையே.

எனவே, இந்தியமயமாக்கல் என்ற கருத்து நிலையை அடித்தட்டு மக்களிடம் இருந்து கட்டியெழுப்புவது அவசியமாகிறது. அதிகாரப்படி நிலை கொண்ட ஒரு சமூகத்தில், எது இந்தியம்? எது வரலாறு? எதை மீள் கொள்ள வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு  தொடர்ச்சியான நீண்ட நெடிய உரையாடல் தேவைப்படுகிறது.
Published by:Salanraj R
First published:

Tags: Education

அடுத்த செய்தி