டிஜிட்டல் யுகத்திலும் நூலகம் தேவைதான்!

நூலகங்களை ஈடுசெய்ய வீட்டு நூலகத்திலோ, ஆன்லைன் வாசிப்பிலோ பெற இயலாது

டிஜிட்டல் யுகத்திலும் நூலகம் தேவைதான்!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: January 5, 2019, 6:39 AM IST
  • Share this:
நூலகங்களில் படிக்கும் பழக்கம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. கடந்த வருடம் மத்திய பிரதேசத்தில் மந்த்ராலாயாவில் 62 வருட பழமை வாய்ந்த மத்திய நூலகம் வாசிப்பாளர்களின் வருகைக் குறைவால் மூடப்பட்டது.

இப்படி உறுப்பினர்கள் இல்லாத பல நூலகங்கள் மூடப்பட்டுள்ளன. அதற்கு மாற்றாக பலரும் தங்கள் வீடுகளிலேயே நூலகம் போன்ற அமைப்பை உருவாக்கிப் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்கின்றனர்.  டிஜிட்டல் மயத்தாலும் நூலகம் சென்று படிக்கும் பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது. இருப்பினும் இன்றைய டிஜிட்டல் யுகத்திலும் நூலகங்கள் தேவைப்படுகின்றன. அதற்கான காரணங்கள் என்ன என்பதைக் கீழே காணலாம்.

அமைதியான சூழல்


புத்தகம் படிக்க மிக முக்கியத் தேவை அமைதி. அது நூலகங்களில் மட்டுமே சாத்தியம். நூலகத்தின் அமைப்பும், அமைதியும் பழைய புத்தகங்களின் வாசனையும் நம்மை அந்த புத்தகத்தின் கதைக்குள் இழுத்துச் செல்லும். சில சமயம் அதை கண் முன்னே காட்சிப்படுத்தும். இதற்காகவே நூலகங்கள் நமக்கு அவசியமாகின்றன.

தேவைக்கு அதிகமான புத்தகங்கள்

நூலகங்களில் நம் விருப்பத்திற்கும் , தேவைக்கும் ஏற்ப புத்தகங்களை தேர்வு செய்து படிக்கலாம். அதற்கான சுதந்திரமும் கிடைக்கும். கூடுதலான தகவல்களுக்கும் , குறிப்புகளுக்கும் ஏராளமான புத்தகங்களைப் புரட்ட முடியும். ஆனால் நம் வீட்டு நூலகங்களில் குறிப்பிட்ட புத்தகங்கள் மட்டுமே இருக்கும். டிஜிட்டலிலும் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கக் கூடிய வகையில்தான் இருக்கும். அதேபோல் நீங்கள் இதுவரை படிக்காத ஜானர்களைக் கண்டறிந்து வாசிக்க சிறந்த வாய்ப்பாக இருக்கும்.கவனத்தை சிதைக்காத சூழல்

புத்தகத்தின் கதைக்குள்ளோ, கட்டுரைக்குள்ளோ நம்மை இழுத்துச் செல்ல நூலகத்தைத் தவிற வேறு எந்த இடமும் இருக்க முடியாது. அலைபேசி பயன்படுத்தக் கூடாது. உணவுகளை உள்ளே எடுத்துச் சென்று உண்ணக் கூடாது. உறவினர்கள் தொல்லை கிடையாது. இப்படி நம்மை கவனச் சிதறல்களுக்கு இட்டுச்செல்லும் எந்த விஷயங்களும் நூலகத்தில் இருக்காது. ஒருவேளை நாம் இவற்றை செய்ய நினைத்தாலும் நூலகத்தின் விதிமுறைகள் அனுமதிக்காது. இப்படியான சூழல் நம்மை சவுகரியமாக உணர வைக்கும். இதனால் ஒரு புத்தகத்தை முழுமையாக படிக்க முடியும். ஆனால் வீட்டு நூலகத்தில் உறவினர்கள் தொல்லை அல்லது அலைபேசியில் நண்பர்கள் உறவினர்களின் அழைப்புகள், சமூக வலைதளங்களின் நோட்டிஃபிகேஷன்கள் என நம்மை தொந்தரவு செய்யும் விஷயங்கள்தான் அதிகமாக இருக்கும்.

மறைந்திருக்கும் தடங்கள்

நூலகங்களில் மட்டுமே கிடைக்கப்பெறும் அனுபவம் மற்றவர்கள் விட்டுச் சென்ற தடங்கள்தான். அதாவது புத்தகத்தில் இதற்கு முன் படித்தவர்கள் முக்கியக் குறிப்புகளை அடிக்கோடிட்டிருப்பார்கள். முக்கியக் குறிப்புகளை எளிதில் எடுக்க எண்களை எழுதி வைத்திருப்பார்கள். இதனால் படிக்கும்போது நமக்கும் அது பேருதவியாக இருக்கும். சிலர் மற்றவர்களுக்காகவே புத்தகங்களில் சுவாரஸ்யமான தகவல்களைப் படித்தால் அதுகுறித்த கருத்துக்களை கீழே எழுதி வைத்திருப்பார்கள். அதேபோல் சில முக்கிய தலைவர்கள், சமூகத்தில் தடம்பதித்தவர்கள் பலரும் அந்த புத்தகத்தைப் படித்திருக்கக் கூடும். அதை நாம் படிப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கும். அவர்களும் புத்தகத்தில் கருத்துக்களை எழுதி வைத்திருக்கக்கூடும்.

அனுபவசாலிகளின் பரிந்துரைகள்

பல வருடங்களாக நூலகத்திற்கு சென்று புத்தகம் வாசிப்பவர்களின் நட்பு கிடைக்கும். இதனால் அவர்களின் அனுபவத்தினால் சில புத்தகங்களை நமக்காக பரிந்துரைப்பார்கள். அவர்களைவிட சிறந்த பரிந்துரைகள் ஆன்லைனில்கூட கிடைக்காது. நாமும் மற்றவர்களுக்கு சிறந்த புத்தகங்களைப் பரிந்துரைக்கலாம்.

சிறந்த நட்பு வட்டாரங்கள்

என்னதான் நூலகத்தைச் சுற்றி பேசிக் கொள்ளவே முடியாத அமைதியான சூழல் இருந்தாலும், உண்மையான நண்பர்கள் அமையும் சிறப்பு நூலகத்தில் மட்டுமே சாத்தியம். இப்படியாக நூலகர் தொடங்கி அங்கு படிக்க வருபவர்கள் வரை நமக்கு புதிய நட்புகள் உருவாகும். இதனால் நம் நட்பு வட்டாரமும் பெருகும். நூலகத்தில் அமையும் நண்பர்களால் பல தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் உதவும். இதனால் நாம் படித்த தகவல்களை எந்த அளவிற்கு புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள முடியும். நம் நினைவுத் திறனும் அதிகரிக்கும்.

பணத்தை மிச்சப்படுத்துதல்

நீங்கள் தீவிர புத்தக வாசிப்பாளர் என்றால் உங்களுக்கு புத்தகம் வாங்குவதற்காகவே மாதம் ஒரு தொகையை ஒதுக்க வேண்டும். ஆனால் நூலகத்தில் அப்படியில்லை. நீங்கள் நினைத்த புத்தகத்தை எடுத்துப் படிக்க முடியும். குறிப்பாக பெரும் தகவல்களை உள்ளடக்கிய புத்தகங்களின் விலை அதிகமாகவே இருக்கும். அவற்றையும் நூலகத்தில் நாம் படிக்க முடியும்.

இப்படி, பல வசதிகளை உள்ளடக்கிய நூலகங்களை ஈடு செய்ய வீட்டு நூலகத்திலோ, ஆன்லைன் வாசிப்பிலோ பெற இயலாது. இவற்றை நீங்கள் இதுவரை அனுபவிக்கவில்லை எனில் இனியாவது நூலகங்களுக்குச் செல்லுங்கள். உறுப்பினராகுங்கள்.

Also See..

First published: January 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்