இயற்கைக் குறித்து பெருங்கனவு கண்ட நம்மாழ்வாரின் சாதனைகள்!

மனித இனமும் பூவுலகுக்கு எதிரானதாக இருந்தால், அவர்களை பூமியும் உட்செரிப்பதற்கு தயங்காது என்பது யதார்த்தம்

இயற்கைக் குறித்து பெருங்கனவு கண்ட நம்மாழ்வாரின் சாதனைகள்!
நம்மாழ்வார் (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: December 30, 2018, 1:01 PM IST
  • Share this:
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் என்ற வள்ளுவனின் குறளுக்கு அர்த்தம் அளித்தவர்தான் நம்மாழ்வார்.

இயற்கை விவசாயம் - என்ற சொல்லாடல் தற்போதைய தமிழ்ச் சூழலில் தவிர்க்க இயலாத ஒரு சொல்லாக இருக்கிறதென்றால் அதற்கு முழு முதற் காரணம் நம்மாழ்வார் என்று சொன்னால் மிகையாகாது.


ஒருவேளை தற்போது பலருக்கும் இந்தச் சொல் சலிப்பைக் கொடுத்திருக்கலாம். எந்தப் பிரச்னைக்கும், இயற்கை விவசாயம், விவசாயிகள் என்பதை பிரதானப்படுத்துவது அதற்கான காரணமாக இருக்கலாம். ஆனால், அதற்கான காரணத்தை நம்மாழ்வாரைத் தெரிந்துகொள்ளும்போது உணரமுடியும்.

சாதி, மதம், இனம், வர்க்கம் கடந்து அனைத்து உயிரிகளுக்குமானது இயற்கை. அந்த இயற்கை நம் கண்முன்னே, மெல்லமாக அல்ல மிக வேகமாக அழிந்துகொண்டுவருவதைப் பார்த்துக் கொண்டே நாம் எந்தக் குற்றவுணர்வுமின்றி கடந்து செல்கிறோம்.

அப்படி, இயற்கைக்கு எதிராக தொடுக்கப்படும் அநீதிக்கு எதிராக சமரசமின்றி இறுதிவரை போராடியவர்தான் வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார். ஆம், உண்மையில் அவர் வேளாண் பேரறிஞர்தான். அவருடைய பெரும் நிழலில்தான் தற்போது தமிழகம் கொஞ்சமேனும் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது என்பது நிச்சயம் மிகையல்ல.
நம்மாழ்வார் (கோப்புப்படம்)


தஞ்சாவூர் மாவட்டம் இளங்காட்டி கிராமத்தில் 1938-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி பிறந்த நம்மாழ்வார், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை விவசாயம் படித்தார். அதன்பிறகு, 1960-ம் ஆண்டில் கோவில்பட்டி மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வு உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.

அதன்பிறகு கோவில்பட்டி பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் பண்ணை மேலாளராக பணியாற்றிய அவர், பணியின்மீது ஏற்பட்ட சலிப்பினால், 1969-ல் வேலையை உதறித் தள்ளினார். அப்போது அவருக்கு வயது வெறும் 31. அரசுப் பணியை வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு பலரும் வாழ்ந்து வரும் சூழலில், 1960 காலக் கட்டத்திலேயே 31 வயதிலேயே அரசுப் பணியை உதறித் தள்ளியவர் நம்மாழ்வார்.

அதன்பிறகு, அவருடைய வாழ்க்கையை முழுவதுமாக இயற்கைக்கென்று அர்பணித்தார். நம்மாழ்வாரின் வாழ்க்கையை மாற்றியதில் பெரும் பங்கு, ஜப்பானிய வேளாண் அறிஞர் மாசானபு புகோகாவுக்குத்தான் சொந்தம்.

நம்மாழ்வார், அவருடைய இளம் வயதில் பாண்டிச்சேரியின் ஆரோவில்லிருந்த பெர்னார்டுவிடம் இயற்கை விவசாயம் குறித்து கற்றறிந்துள்ளார். அந்தக் காலக் கட்டத்தில் உலகில் பல்வேறு பகுதிகளில் இயற்கை விவசாயம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கற்றுணர்ந்துள்ளார். இயற்கை விவசாயத்துக்கு அடுத்து, அவர் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை பாரம்பரிய விதை ரகங்கள்.

நம்மாழ்வார் (கோப்புப்படம்)


அவருடைய பேச்சுகளை உற்றுநோக்கினால், இயற்கை மற்றும் விவசாயம் சார்ந்து அவருடைய அறிவு எத்தனை நுட்பமானது என்பதை விளங்கிக் கொள்ள முடியும். அவர், ஒருபோதும் விவசாயத்தை வெறும் பணம் சம்பாதிக்கும் தொழிலாகப் பிரித்து வகைப்படுத்தியது கிடையாது.

விவசாயம் என்பது வாழ்வின் அங்கம் என்பதே அவர் உறுதியாக வலியுறுத்த விரும்பியது. அவர், உணவுச் சங்கிலி குறித்த நுட்பமான அறிவைக் கொண்டிருந்தார். கால்நடைகளின் வீழ்ச்சி இயற்கை வேர்களின் வீழ்ச்சி என்பதைப் புரிந்து கொண்டிருந்தார்.

அதனை, மக்களுக்கு புரிய வைக்க வாழ்நாள் முழுவதும் முயற்சிசெய்தார். அவர், 70-80-களிலேயே இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தாலும், அந்தக் காலத்தில் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

அப்போது, அவருடைய சொல்லை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. 2004-ம் ஆண்டு தமிழகத்தைச் சுனாமி தாக்கியதற்குப் பிறகு, கடற்கரை அருகே உள்ள கிராமங்களில் கடல்நீர் புகுந்து, நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டிருந்தது.

அதனால், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்த அந்த நேரத்தில் தீவிரமாக களப்பணியாற்றினார் நம்மாழ்வார். அப்போது, அவருடைய ஆலோசனையில் செயல்பட்ட விவசாயிகள் மெல்ல மெல்ல அவர்களது நிலத்தை மீட்டெடுத்தனர். அதன்பிறகுதான், அவர்கள் நம்மாழ்வாரின் இயற்கை விவசாய முறையைப் பின்பற்றத் தொடங்கினர்.

நம்மாழ்வார் (கோப்புப்படம்)


நம்மாழ்வாரின் வாழ்வை நினைவு கூறும்போது இரண்டு அம்சங்களைத் தவிர்க்க முடியாது. ஒன்று வேம்புக்கான காப்புரிமையை மீட்டுக் கொடுத்தது. மற்றொன்று வானகம் எனும் வேளாண் பெருங்காடு.

அமெரிக்காவைச் சேர்ந்த டபியுள்யூ ஆர்.கிரேஸ் என்ற நிறுவனம், வேப்பங் கொட்டையை அரைத்து பூச்சி பாதித்த செடிகளுக்கு மேல், தெளித்தால் அந்த நோய் குணமாகிறது என்று கூறி அதற்கு அறிவுசார் சொத்துரிமை(intellectual property rights) என்ற சட்டத்தின்கீழ் காப்புரிமை பெற்றிருந்தது.

அதற்கு எதிராக, டெல்லியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் போராளி வந்தனா சிவா என்பவர் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்திருந்தார். அதுதொடர்பான வழக்கு ஜெர்மனியில் நடைபெற்றது. அந்த வழக்குத் தொடர்பாக, வந்தனா சிவா, நம்மாழ்வார் உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் ஐந்துபேர் ஜெர்மனிக்குச் சென்றனர்.

அதுதொடர்பான, விசாரணையில், வேப்பங் கொட்டையை மருந்தாக பயன்படுத்துவது என்பது இந்தியாவில் ஆயிரமாயிரம் ஆண்டு காலமாக பயன்படுத்தப்பட்டுவரும் முறை. குறிப்பாக, தமிழ்ச் சமூகத்தில் வேப்ப மரத்தின் பங்கு அதிகமானது. எனவே, டபியூள்யூ ஆர்.கிரேஸ் நிறுவனம் உரிமை கொண்டாடமுடியாது என்று வாதிட்டனர்.

அதனைக் கடந்து, பல்வேறு நாடுகளிலுமுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடைய வாதத்துக்கு பையோ பைரசி (bio-piracy) என்ற வார்த்தையை டபிள்யூ.ஆர் கிரேஸ் நிறுவனத்துக்கு எதிராகப் பயன்படுத்தினர். அதன்விளைவாக, டபிள்யூ ஆர்.கிரேஸ் நிறுவனத்துக்கு வேப்பங்கொட்டைக்கு வழங்கப்பட்டிருந்த காப்புரிமை திரும்பப் பெறப்பட்டது.

சுமார், 10 ஆண்டு கால சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி அது.

வானகம்


கரூர் மாவட்டத்தின் கடவூர் பகுதியில் இயற்கை ஆர்வலர்களின் துணையுடன் நம்மாழ்வார் உருவாக்கியதுதான் வானகம். ஏறத்தாழ 35 ஏக்கர் கொண்ட வறண்ட நிலம், சில ஆண்டுகளில் ஒரு வேளாண் பெருங்காடாக உருவாக்கப்பட்டது. அங்கே, இன்றுவரை இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்டுவருகிறது.

சிறு, குறு தானியங்களான ராகி, கம்பு, சோளம், கேழ்வரகு, குதிரைவாலி போன்றவையும் இங்கு பயிரிடப்படுகிறது. உடலுக்கு நஞ்சாகும் எந்தவித ரசாயன உயிர்க் கொல்லிகளும் இங்கு பயிர்களுக்கு பயன்படுத்தாமல் இயற்கையான உரங்களே பயன்படுத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கே வந்து இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி எடுத்துசெல்கின்றனர்.

நமது சமகாலத்தில் வாழ்ந்த சமரசமில்லா போராளி நம்மாழ்வார். அவருடைய காலத்திலேயே போராட்டத்துக்கான பலனை கண்கூடாகப் பார்த்தவர். பசுமைப் புரட்சி, நியூட்ரினோ, மீத்தேன், உலகமயமாக்கல் உள்ளிட்ட விவசாய அழிப்புத் திட்டங்களை சமரசமில்லாமல் எதிர்த்தவர்.

2013-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி மீத்தேன் திட்டத்துக்கு எதிரான தொடர் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

நம்மாழ்வார் (கோப்புப்படம்)


உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை என்ற வள்ளுவனின் குறள் விளக்கும் கருத்தான உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை என்பதைத்தான் நம்மாழ்வார் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தினார்.

அவருடைய 75 ஆண்டுகால வாழ்வில் சமூகப் பங்களிப்பு என்பது கணக்கில் கொள்ள முடியாது. இன்று ஆயிரக்கணக்கான படித்த, நல்ல வேலையில் இருந்த இளைஞர்கள் விவசாயத்தை நோக்கித் திரும்புகிறார்கள் என்றால் அவர்களின் முன்னால் நம்மாழ்வார் இருக்கிறார்.

அவருடைய வார்த்தைகள், இளைஞர்களுக்கு வழிகாட்டுகின்றன. இந்திய அரசும், விவசாய நலன் சார்ந்தக் கொள்கைகளை முன்னெடுப்பதுதான் நம்மாழ்வாருக்கு செய்யும் சிறந்த அஞ்சலியாக இருக்கும்.

இந்தப் பூவுலகு பல லட்சம் வருடங்களைக் கடந்தது. அதில், மனித இனத்தின் பங்களிப்பு சில ஆயிரம் ஆண்டுகளே இருக்கும். இந்த உலகம், தனக்கு எதிரான எல்லாவற்றையும் உட்செரித்து புதுப்பித்து கொள்ளும் தன்மை கொண்டது. மனித இனமும் பூவுலகுக்கு எதிரானதாக இருந்தால், அவர்களை பூமியும் உட்செரிப்பதற்கு தயங்காது என்பது யதார்த்தம்.

Also see:

First published: December 30, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்