திறமையுள்ள இளைஞர்களை ஊக்குவித்தவர்... ‘கணினித்தமிழ் தந்தை’ என அன்போடு அழைக்கப்படும் பேராசிரியர் மு. ஆனந்தகிருஷ்ணன்!

மு. ஆனந்தகிருஷ்ணன்

எந்த பாகுபாடும் இன்றி அனைவரிடமும் எளிமையாகப் பழகும் இயல்பை கொண்டிருந்தார் மு. ஆனந்தகிருஷ்ணன். திறமை எந்த இளைஞரிடம் இருந்தாலும் ஊக்கப்படுத்தியவர்.

  • Share this:
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் கணினித் தமிழ் தந்தை என அன்போடு அழைக்கப் படுபவருமான பேராசிரியர் பத்மஸ்ரீ மு.ஆனந்தகிருஷ்ணன் மறைந்தார்.

உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆனந்தகிருஷ்ணன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணினியிலும், இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதில் முயற்சி மேற்கொண்டு, வெற்றி பெற்றவர் ஆனந்தகிருஷ்ணன்.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை எளிதாக்கிய ஒற்றைச் சாளர முறை நடைமுறை படுத்துவதற்கு காரணமாக இருந்தவர். புதிய பாடத்திட்டத்தின் தலைவர், வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் அறிவியல் ஆலோசகர், ஐ.நா சபையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் துணை இயக்குநர் மற்றும், இந்த மையத்திற்கான ஐ.நா. ஆலோசனைக் குழுவின் செயலர் என பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர் ஆனந்தகிருஷ்ணன்.

இந்தியாவில், செமஸ்டர் கல்வி முறையை கொண்டு வர காரணமாக இருந்த ஆனந்தகிருஷ்ணன், 1998-99ஆம் ஆண்டுகளில், தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். 1999-ல் தமிழ்நாட்டில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டிற்கு பிறகு ஏராளமானவர்களை தமிழ்க் கணினி மொழியியல் ஆய்வில் ஈடுபட ஊக்கப்படுத்தினார்.

கணினித் தமிழ் தொடர்பான எராளமான கூட்டங்களில் பங்கு பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணினிமொழியியல் தொடர்பாக நடத்தப்பட்ட மாநாடுகளில் தலைமை ஏற்று சிறப்புரை வழங்கினார். 2010ஆம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாட்டு நடைபெற்றபோது, தமிழ் இணைய மாநாடும் சிறப்பாக நடைபெறுவதற்கு முன்முயற்சிகளை மேற்கொண்டார்.

தமிழ் இணையக் கல்விக்கழகம் நிறுவதற்கும், தமிழ் மென்பொருள் உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகித்தார், ‘உத்தமம்’ என்ற பெயரில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக ஒரு பொதுக் கழகம் உருவானதற்கும் மு.ஆனந்தகிருஷ்ணனே முக்கிய காரணமாக இருந்தார். ஆனந்தகிருஷ்ணனுக்கு 2002-ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் பெருமைக்குரிய கல்வியாளரை இழந்திருப்பதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பொறியியல் மாணவர் சேர்க்கையில் ஒற்றைச் சாளர முறையை கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்துவதற்கும், இணையத்தில் தமிழ் பயன்பாட்டை எளிமைப்படுத்த ஒருங்கிணைந்த தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்படுவதற்கும் ஆனந்தகிருஷ்ணன் உறுதுணையாக இருந்தார் என இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும், திமுக ஆட்சியில் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் காரணமான கதாநாயகனாக விளங்கியவர் அவர் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மு. ஆனந்தகிருஷ்ணன் மறைவுக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மிகச் சிறந்த கல்வி ஆளுமையாகத் திகழ்ந்த ஆனந்தகிருஷ்ணன், தேசியக் கல்விக் கொள்கை 2020, முன் வைக்கும் ஆபத்தான நடைமுறைகளைத் தெளிவாக எடுத்துரைத்தவர் என்றும், இவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே தொழில் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழ் நாடு அரசு சட்டம் இயற்றியது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், கல்வித் தளத்தில் மிகப் பெரும் சவால்களை மக்கள் சந்திக்க வேண்டிய சூழலில் ஆனந்தகிருஷ்ணனின் மறைவு மிகப் பெரிய இழப்பு என்றும் குறிப்பிட்டுள்ளது.

பேராசிரியர் வா.மு.சே.ஆண்டவர்


இந்நிலையில், மறைந்த ஆனந்தகிருஷ்ணன் அவர்களுடன் நெருங்கிப் பழகியவரும், அவருடன் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, கருத்தரங்குகளில் பங்கேற்றவருமான, சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் வா.மு.சே.ஆண்டவர் கூறுகையில், “ஆனந்தகிருஷ்ணன், கல்வி என்பது சமுதாய நோக்கில் இருக்க வேண்டும் என வலியுறுத்தியவர். அறிவியல் கடைகோடி மக்களுக்கும் சென்றுசேர வேண்டும் என்று பணியாற்றியவர். அண்ணா பல்கலைக்கழகம் உலகலாவி உயர்ந்திருப்பதற்கு அவர் கொண்டுவந்த திட்டங்களே முக்கிய காரணமாக அமைந்தன. நுழைவுத் தேர்வு திட்டத்தால், ஏழை மக்கள் பாதிக்கப்பட்டனர், இதனை உணர்ந்து அதை மாற்றி ஒற்றை சாளர முறையை கொண்டுவந்தவர்.

Must Read : நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்குக் காரணமான கதாநாயகனாக இருந்தவர் அனந்தகிருஷ்ணன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

எந்த பாகுபாடும் இன்றி அனைவரிடமும் எளிமையாகப் பழகும் இயல்பை கொண்டிருந்தார் ஆனந்தகிருஷ்ணன். திறமை எந்த இளைஞரிடம் இருந்தாலும் ஊக்கப்படுத்தி வந்தவர். தமிழ் பள்ளி ஆசிரியர்களும், பேராசிரியர்களும் நவீன அறிவுடன் முன்னேற வேண்டும் என விரும்பி அதற்காகவும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தார்.

தமிழ் இலக்கியத்துறை, மொழித்துறை மற்றும் பிற அறிவியல் துறை பேராசிரியர்கள் கலந்த பழகி ஒருங்கிணைந்த அறிவை, ஆரோக்கியமாக பரிமாறி சமுதாயம் முன்னேற வேண்டும் என ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார். ஆசிரியர்கள், பேராசியர்கள் துறை வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.” என்று கூறி கண்கலங்கினார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Suresh V
First published: