மனநல சிகிச்சை நிபுணர், தொழில்முனைவோர், எழுத்தாளர், கொடையாளர், மொழி பயிற்றுனர் என பல்துறை வித்தகராக திகழும் சென்னையைச் சேர்ந்த டாக்டர். பிளாரன்ஸ் ஹெலன் நளினி மும்பையில் நடைபெற்ற அழகிப் போட்டியில் பங்கேற்று ‘Mrs இந்தியா 2021’ பட்டத்தை வென்று அசத்தியிருப்பதுடன் அடுத்த ஆண்டு அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்க தேர்வாகி உள்ளார்.
பெண்கள் அதிகாரமளிப்பதற்கான சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்க - இந்திய கூட்டு முயற்சியில் மிஸஸ் இண்டர்நேஷனல் வோர்ல்ட் கிளாசிக் அழகிப் போட்டி நடைபெற்றது. இந்தியா முழுவதிலுமிருந்து சுமார் 3000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டியானது பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் இதன் இறுதிப் போட்டி மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. இதில் சென்னையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட பிளாரன்ஸ் நளினி போட்டிக்கே புதியவர். மாடலிங் துறையில் அனுபவமற்றவர்.
இவருடன் கலந்து கொண்ட பெரும்பாலான பெண்கள் மாடலிங் துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள். இருப்பினும் புதியவரான நளினி அனைத்து கட்டங்களிலும் சிறப்பாக தன்னை வெளிப்படுத்தி இறுதிப் போட்டியில் 47 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு, அதில் 2021ம் ஆண்டுக்கான மிஸஸ் இண்டர்நேஷனல் வோர்ட்ல்ட் கிளாசிக் பட்டத்தை வென்று திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். இதே போட்டியில் Glamourous achiever என்ற துணைப் பிரிவிலும் கூடுதலாக ஒரு பட்டத்தையும் வென்றிருக்கிறார் நளினி.
இது வெறும் அழகிப் போட்டியாக மட்டுமே இல்லாமல் சில சமூக நோக்கங்கங்களுக்காகவும் கவனம் பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் ஒரு அங்கமாக குழந்தைகளுக்கான கல்விக்காக, போட்டியாளர்கள் நிதி திரட்ட வேண்டும். இந்த உன்னதமாக நோக்கத்தை உத்வேகத்துடன் எடுத்துக் கொண்ட நளினி 366 பேரிடம் நிதி திரட்டி மகளிர் கல்விக்கு உறுதுணையாகவும் இருந்துள்ளார். மகளிருக்கு 100% கல்வி கிடைக்கச் செய்வதன் மூலம் இந்தியா முற்போக்கான இடத்துக்கு செல்லும் என நளினி தெரிவித்தார்.
Also read: பாஜக எம்.பிக்களை பிரதமர் மோடி எச்சரித்தது ஏன்?
அடுத்த ஆண்டு அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடக்க இருக்கும் சர்வதேச போட்டிக்காக தயாராகி வரும் நளினி நம்மிடையே பேசுகையில், அவர் கடந்து வந்த சவால்கள் குறித்து விவரித்தார்.
“எனது சொந்த ஊர் கோயம்புத்தூர், நான் வளர்ந்தது, இருப்பது எல்லாம் சென்னையில். எனக்கு சிறுவயதில் இருந்தே படிப்பின் மீது ஆர்வம் அதிகம். எனது குடும்பத்தில் முதல் பட்டதாரி பெண் நான். நான் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பிஎஸ்சி லைஃப் சயின்ஸில் பட்டம் பெற்றேன். நான் அந்த பட்டம் பெறுவதற்கு மிகுந்த சங்கடங்களை எதிர் கொண்டேன். என் படிப்பை நிறுத்தும் சூழ்நிலை எல்லாம் வந்தது, படிப்பதற்காக நான் மற்றவர்களுக்கு கல்வி பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன். அதில் வரும் வருமானத்தை வைத்து தான் படிப்பு மற்றும் குடும்ப செலவுகளைச் செய்தோம். அன்று தான் முடிவு செய்தேன் ஆசைப்பட்ட அனைத்து படிப்புகளையும் படிக்க வேண்டும் என்று. இன்று வரை நான் படித்துக் கொண்டே தான் இருக்கின்றேன். உளவியலில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறேன். கல்வி மீதான எனது ஆர்வம் என்னை ஒரு Edupreneurஆக்கியது.
நான் ஆங்கிலம், பிரஞ்சு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்கிறேன். இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு படிக்கவும், எழுதவும், பேசவும் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.
உளவியல் துறையில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான உளவியல் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கான சிறப்பு பட்டம் பெற்றுள்ளேன்.
Also read: மதமாற்றம் செய்யப்படுவதாக கிடைத்த தகவலால் கிறிஸ்துவ பள்ளி சூறையாடல்
போட்டி குறித்து...
என்னை இந்த போட்டியில் பங்கு பெறுவதற்கு அறிவுறுத்தியது எனது இளைய மகள் சரிஹா தான். நான் சாதாரண எண்ணத்துடன் தான் இப்போட்டிக்குள் நுழைந்தேன். பல விதமான சுற்றுகளை கடந்து வந்துள்ளேன். இந்தப் போட்டியின் தொடக்கத்தில் 3,000 நபர்கள் பங்கு பெற்றனர். அதிலிருந்து நாங்கள் 52 பேர் தேர்வு செய்யப்பட்டு அதில் தமிழ்நாடு சார்பாக நான் ஒருத்தி மட்டுமே இருந்தேன். இந்த போட்டியின் போது நான் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டு அதிலிருந்து என் மனதைரியத்தாலும், என் குடும்ப உறுப்பினர்கள் என்னை ஊக்கப்படுத்தியதாலும் மீண்டு வந்து இந்த போட்டியில் கடைசி சுற்றில் பங்கு பெற்றேன்.
இந்தப் போட்டி என் வாழ்நாளில் என்னால் மறக்க முடியாதது. நான் இதன் மூலமாக நிறைய மனிதர்களை சந்தித்தேன். ஒவ்வொருவரிடம் இருந்தும் எனக்கு ஒரு அனுபவம் கிடைத்தது. எனக்கு இதற்கு முன்னால் மாடலிங் துறையில் எந்த அனுபவமும் கிடையாது. ஆனால் அங்கு பங்கு பெற்றவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள்.
இந்தப் போட்டியில் உள்ள சமூக விழிப்புணர்ச்சி க்கான சுற்றில் நான் Dream and Believe foundation மூலம் படிக்கும் திறமை இருந்தும் பயில முடியாத குழந்தைகளுக்கு அதிக அளவில் நிதி திரட்டி அவர்களுக்கு உயர்தர கல்வி கிடைக்க வழிவகை செய்தேன்.
நான் ஆல் லேடீஸ் லீக் என்ற அமைப்பில் தமிழக துணைத்தலைவராக இருக்கின்றேன். இவ்வமைப்பின் மூலமாக தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பெண் தொழில் முனைவோர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கான வாய்ப்புக்களை தேடித் தருகிறோம். மேலும் நான் மகளிர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மன்றத்தில் கவுன்சில் உறுப்பினர் (WICCI) ஆவேன்.
Also read: பீகார் கொரோனா பரிசோதனை பட்டியலில் மோடி, அமித்ஷா, பிரியங்கா சோப்ரா பெயர்கள் இடம்பெற்றதால் சர்ச்சை!
பெண்கள் சாதிக்க பிறந்தவர்கள். எப்பொழுதும் நீங்கள் முயற்சி செய்து கொண்டே இருங்கள் ஒரு நாள் நிச்சயம் வெற்றி அடைவீர்கள் உங்களை ஒரு வட்டத்திற்குள் வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களின் இலக்கை அடைவதற்கு நீங்கள்தான் ஓடவேண்டும் உங்களின் மீது நம்பிக்கை வைத்து வாருங்கள் ஒன்றாக முன்னேறலாம்.”
பெண்களுக்கு எடுத்துக்காட்டாக திகழும் பிளாரன்ஸ் நளினி பல துறைகளில் ஈடுபட்டு முத்திரை பதித்து வரும் நிலையில் இடையில் கிடைத்த இந்த அழகிப் போட்டி வாய்ப்பையும் சரிவர பயன்படுத்தி சாதித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Women Empower