Motivation Story : சாதிக்கத் துடிக்கும் இளைஞருக்கு மருள் நீக்கியார் கூறிய ஆலோசனை

சாதனை முயற்சி

செயல்தான் வெற்றிக்கான படிக்கட்டு, கனவுகளும், நினைவுகளும், கற்பனைகளுமே எல்லாவற்றையும் நிறைவேற்றிவிடாது. இவை எல்லாம் தூண்டுதலை மட்டுமே செயக்கூடியவை. செயல்தான் நிறைவேற்றக்கூடியது என்று சாதிக்கத் துடிக்கும் இளைஞருக்கு ஆலோசனை கூறினார் மருள் நீக்கியார்.

  • Share this:
மேம்பட்ட வாழ்க்கையை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. முன்னேற்றத்தை விரும்புவது மனிதர்களின் இயல்பு. ‘சாதிக்க வேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும்’ என்று சொல்லாத உதடுகளை பார்ப்பது அரிதினும் அரிது. அதுபோல, எதையாவது சாதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு இளைஞர். அவர், இதே வார்த்தையை கடந்த இரண்டு ஆண்டு காலமாக சொல்லி வருகிறார். நீங்கள் என்ன செய்து சாதிக்கப் போகிறீர்கள் என்று கேட்டபோது, அதைப்பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்தார் மருள் நீக்கியார். அவர் அந்த ஊர் மக்களுக்கு பல்வேறு நல்ல யேசனைகளை சொல்லி வருபவர் என்பதால், சாதிக்கத் துடிக்கும் இளைஞனுக்கு அவரிடம் ஏதேனும் யோசனை கேட்கலாம் என்று அவரிடம் சென்றோம். அவர் எங்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்கத் தொடங்கினார்.

இப்போது என்ன செய்றீங்க? என்று கேட்டார், அதற்கு அந்த இளைஞன் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன் என்றான். என்ன வயசு? என்று கேட்டார் இருபத்தி நான்கு என்றான் இளைஞன். எந்த துறையில் சாதிக்க நினைக்கறீங்க என்றார். எதிலாவது சாதிக்கனும் என்று பதில் வந்தது.

சில வினாடிகள் மவுனமாக இருந்த மருள் நீக்கியார், பின்னர் பேசத் தொடங்கினார். “சாதிக்கனுங்கறது பெரும்பாலும் அனைவருக்கும் இருக்கும் எண்ணம்தான். ஆனால், புத்திசாலிகள் நீண்டகாலம் யோசித்துக் கொண்டே இருக்க மாட்டார்கள். சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட செயலுக்குதான் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒரு விஷயத்தை எத்தனை முறை சிந்தித்தாலும் அதனால் எதுவும் விளைந்து விடாது. செய்தால்தான் பலன் கிடைக்கும். செயல் மூலம்தான் முயற்சி செய்ய வேண்டும்.

செயல்தான் வெற்றிக்கான படிக்கட்டு, கனவுகளும், நினைவுகளும், கற்பனைகளுமே எல்லாவற்றையும் நிறைவேற்றிவிடாது. இவை எல்லாம் தூண்டுதலை மட்டுமே செயக்கூடியவை. செயல்தான் நிறைவேற்றக்கூடியது. ஊர் மக்கள் அடிக்கடி சொல்லும் ஒரு பழமொழி, ‘நெனப்பு பொழப்பக் கெடுக்கும்’ என்பது. மற்றொன்று ‘முயன்றால் முடியாதது எதுவும் இல்லை’ என்பது. அவர்கள் கனவுகளையும், நினைவுகளையும் நிராகரிக்கவில்லை. அதே நேரம், செயலுக்கான முக்கியத்துவததை இதன் மூலம் உணர்த்துகின்றனர்.

Must Read : தவறை திருத்தும் வழிமுறை: ஒரு ஞானியின் அறிவுரை

 

ஆகவே, சாதிப்பதற்கான வேலையை செய்யத் தொடங்குங்கள். விடா முயற்சியுடன் தொடர்ந்து ஈடுபடுங்கள் அது உங்களின் தவறுகளை சரிபடுத்தி முன்னேற்றி அழைத்துச் செல்லும்” என்று கூறிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பினார் மருள் நீக்கியார்.
Published by:Suresh V
First published: