இன்றைய உலகில் தண்ணீர் 'திரவத்தங்கம்' என அழைக்கப்படுகிறது. தண்ணீர் இன்றி நாம் வாழ்வதை கற்பனை கூட செய்ய முடியாது. உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் ஏதாவது ஒன்றை சார்ந்து வாழ்கின்றன. மனிதன் பலவற்றை சார்ந்து உள்ளான். இதில் வாழ்நாள் முழுவதும் நீர் என்பதை அடிப்படையாக கொண்டு வாழ்கிறான். முன்னோர் காலத்தில் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை மக்கள் வாழ்ந்தனர். இன்றைய நவீன காலத்தில் மனிதர்கள் பெரும்பாலும் இயற்கையில் இருந்து விடுபட்டு செயற்கையான படைப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டு செயற்கை வாழ்வாதார முறைகளை இழந்து வருகின்றனர். அந்தவகையில் கீழே நாம் காணப்போகும் மனிதர்கள் உண்மையில் மென்மையானவர்கள். அவர்களின் சமுதாய பங்கு பல்வேறு மக்களுக்கு வசந்தத்தை அளித்துள்ளது.
அம்லா ருயா (Amla Ruia):
உத்தரபிரதேசத்தில் பிறந்து வளர்ந்த அம்லா ருயா, ராஜஸ்தானில் வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் பணிபுரியும் ஆகர் அறக்கட்டளையைத் (Aakar Charitable Trust) தொடங்கினார். அறக்கட்டளை 2000 முதல் 2005ம் ஆண்டு வரை 200 குடிநீர் தொட்டிகளையும், பாரம்பரிய நீர் சேகரிக்கும் பகுதிகளையும் கட்டியுள்ளது. இதன் மூலம் வருடத்திற்கு 1 கோடி லிட்டர் தண்ணீரை அப்பகுதி மக்கள் சேமிக்கின்றனர். இந்த தண்ணீரை அரசாங்கத்தால் வழங்க முடியாத கிராமங்களுக்குச் சென்று கொடுக்கின்றனர். இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் தொட்டிகளின் செலவுக்கு 25% நிதியை அளிக்கின்றனர். அம்லாவின் தொண்டு நிறுவனம் 2006 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 317 அணைகளைக் கட்டியுள்ளது. இதனால் ராஜஸ்தானில் இருக்கும் 182 கிராமங்களும் நேரடியாக பலனடைகின்றனர். இந்த கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு அம்லா தண்ணீர் வசதி செய்து கொடுப்பது மட்டுமன்றி அவர்களுடைய வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்தியுள்ளார். அவர்களை வறுமை கோட்டிலிருந்து மீட்டெடுத்துள்ளார். மொத்தமாக 4,82,900 பேர் நேரடியாகவும் , மறைமுகமாகவும் அந்த அணைகளின் நீரை பயன்படுத்தி வருகின்றனர்.
லக்ஷ்மி நாராயண் திரிபாதி (Laxmi Narayan Tripathi):
திருநங்கையான லக்ஷ்மி நாராயண் திரிபாதி புனேவில் முழுக்க முழுக்க திருநங்கை ஊழியர்களால் நடத்தப்படும் ஒரு குடிநீர் ஆலையை அமைத்துள்ளார். திரிபாதியின் முன்முயற்சியான Kineer Services-ன் கீழ் அமைக்கப்பட்ட இந்த ஆலை, ஒதுக்கப்படும் சமூகமாக விளங்கும் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கிறது. இதன் மூலம் அவர்களை பொருளாதார ரீதியில் பாதுகாப்பானவர்களாக மாற்ற இவ்வமைப்பு உதவுகிறது.
லிசிபிரியா கங்குஜம் (Licypriya Kangujam):
மணிப்பூரைச் சேர்ந்த 9 வயது சிறுமி லிசிபிரியா கங்குஜம். இவர் 2018-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி மங்கோலியாவில் நடந்த ஐ.நா நிகழ்வில் உலகத் தலைவர்களின் முன்னிலையில் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான தன்னுடைய குரலை ஒலிக்கச் செய்தார். காலநிலை மாற்றத்துக்கு எதிராக உலகத் தலைவர்கள் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பின்னர் 2019-ம் ஆண்டு முதல் இந்திய நாடாளுமன்ற வாயிலில் தன் கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து ஒரு வாரம் போராட்டம் நடத்தினார்.
இதே கோரிக்கையை முன்வைத்து தற்போதுவரை பல்வேறு இடங்களில் குரல்கொடுத்து வருகிறார். லிசிபிரியா இந்தியாவின் இளம் காலநிலை செயற்பாட்டாளராக உள்ளார். 2019-ம் ஆண்டு இவர் அப்துல் கலாமின் குழந்தைகள் விருதை வென்றுள்ளார். மேலும், உலக அமைதி மற்றும் இந்திய அமைதிக்கான விருதையும் பெற்றுள்ளார். "இவரைப் போன்ற ஒருவரை உங்களுக்குத் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்” என மத்திய அரசின் ட்விட்டர் பக்கம் இவரை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
சஷிகாந்த் தல்வி (Shashikant Dalvi):
சஷிகாந்த் தல்வியின் மழைநீர் சேகரிப்பு பயணத்தை புனேவில் உள்ள தனது சொந்த குடியிருப்பு பகுதியில் தொடங்கினார். அவரின் இந்த மழைநீர் சேகரிப்பு அன்று தான் முதன்முதலில் தொடங்கப்பட்டது. 2003 முதல், 150 க்கும் மேற்பட்ட RWH திட்டங்களை அவரும் அவரது குழுவும் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளனர். 100 கிராமங்களின் நீர் வரைபடங்களை மாற்றவும் இவர் உதவியுள்ளார்.
விஸ்வநாத் ஸ்ரீகாந்தையா (Vishwanath Srikantaiah):
கோடைகாலத்தில் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொண்ட பெங்களூரு நகரம், கடந்த 2020 க்குள் நிலத்தடி நீர் காலியாக வாய்ப்புள்ள மெட்ரோ நகரங்களில் ஒன்று என்று நிதி ஆயோக் ஒரு அறிக்கையில் எச்சரித்திருந்தது. நெருக்கடி நேரத்தில், பெங்களூருவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான ரெயின்வாட்டர் கிளப்பின் நீர் ஆர்வலர் விஸ்வநாத் ஸ்ரீகாந்தையா, நீர் பாதுகாப்புத் துறையில் ஒரு நிலையான சக்தியாக உருவெடுத்துள்ளார், மேலும் மழைநீர் சேகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் விஷயத்தில் பெரும் நுண்ணறிவைக் கொண்டுள்ள இவர் பல்வேறு இடங்களில் நீரின் அவசியத்தை பற்றி ஆக்கபூர்வ செயல்களை செய்துவருகிறார்.
தனது யூடியூப் சேனலின் பெயரான ZenRainMan மூலம் பிரபலமாக அறியப்பட்ட ஸ்ரீகாந்தையா மழைநீரின் சரியான பயன்பாடு, மழை நீர் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவதற்கும், அதை சரியாகவும் போதுமான அளவிற்கு பயன்படுத்துவதற்கான நுட்பங்களை பல வழிகளில் மக்களுக்கு சொல்லிவருகிறார்.
கார்விதா குல்ஹாட்டி (Garvita Gulhati):
கார்விதா குல்ஹாட்டி 'வீணாக்குவது ஏன்' ('Why Waste') என்ற நீர் பற்றிய ஒரு பாதுகாப்பு முயற்சியை 2015 ஆம் ஆண்டில் தொடங்கினார். புதுமையான கல்வி மூலம் குல்ஹாத்தியும் அவரது குழுவும் நீர் பாதுகாப்பை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல முயற்சித்து வருகின்றனர்.
சோனம் வாங்சுக் (Sonam Wangchuk):
மிகவும் பிரபலமான இந்திய திரைப்படமான 3 இடியட்ஸ் உருவாக அடித்தளமாக இருந்தவர் சோனம் வாங்சுக், Ice Stupas of Ladakh என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளார். இமய மலையின் மேலே, இந்தியாவின் வடக்கில் உள்ள, லடாக் பகுதியில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க, 10 தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து ஒரு திட்டத்தை தீட்டுகின்றனர். அங்கு சில பெரிய கட்டிடங்களின் மேல் 30 அடிகளுக்கு உயரமான பனிப்பாறைகள் உள்ளன, வசந்தகாலத்தின் ஆரம்ப கட்டத்தில் அவை உருகி, அங்குள்ள கிராம மக்களுக்கு தண்ணீர் அளிக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இதை செய்துள்ளனர்.
இந்த பனி வடிவங்கள், சோனம் வாங்சுக் என்பவரின் யோசனையில் உருவானவை. லடாக்கில் பிறந்த இவர், உள்ளூர் மக்களின் அன்றாட பிரச்சனையை சரிசெய்ய பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். வித்தியாசமான உயரங்கள், தட்பவெட்பம் மற்றும் புவியீர்ப்பு விசையால், தண்ணீர் மேல் எழும்புகிறது. குழாய் மூலம் வெளியேறி வரும் தண்ணீர், நீரூற்று போல மாறுகிறது. பூஜியத்திற்கும் கீழே, வெட்பநிலை குறையும்போது, அவை உறைந்து, முக்கோணம் போல காட்சியளிக்கின்றன. இது குறித்து பேசிய வாங்சுக், "நாங்கள் பனிக்காலத்தில் பயன்படுத்தப்படாத தண்ணீரை உறைய வைக்கிறோம், இங்குள்ள வடிவியல் சூழல், வசந்த காலத்தின் இறுதி நாட்கள் வரை, அவற்றை உருகாமல் பார்த்துகொள்கின்றன" என்கிறார். வசந்த கால இறுதியில், இந்த பாறை வடிவங்களை உருக்கி, பயிர்களின் சொட்டு நீர் பாசனத்திற்கு இவற்றை பயன்படுத்தலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mission Paani, Rain water