சிறப்புக் கட்டுரை: கஜா இடப்பெயர்வு முதல் நவுருத்தீவு அகதிகள் முகாம் வரை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் (கோப்புப் படம்)

ஆசிய-பசிபிக் நாடுகளில் நடக்கும் இடப்பெயர்வு, ஆட்கடத்தல், அகதிகள் சிக்கல், சட்டவிரோத குடியேறிகள் பிரச்னைகளை உள்ளடக்கிய அண்மைச் செய்திகளின் தொகுப்பு.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆசிய-பசிபிக் நாடுகளில் நடக்கும் இடப்பெயர்வு, ஆட்கடத்தல், அகதிகள் சிக்கல், சட்டவிரோத குடியேறிகள் பிரச்னைகளை உள்ளடக்கிய அண்மைச் செய்திகளின் தொகுப்பு இது.

தமிழ்நாட்டில் கஜா புயலின் காரணமாக இடம்பெயர்ந்த இரண்டரை லட்சம் மக்கள்

‘கஜா’ புயலின் காரணமாக நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 2,49,083 மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். இம்மக்கள் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள 493 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் பாதித்த பகுதிகளில் 56,942 கூரை வீடுகள் முழுமையாக அழிந்துள்ளன. கூடுதலாக 30,404 கூரை வீடுகள் மற்றும் 30,828 ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.

கஜா புயலால் நாசமடைந்த வீடுகள்


அதே சமயம், போரினால் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து புதுக்கோட்டை முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகளும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். 2017-ல் பேரிடர் காரணமாக 13 லட்சம் மக்கள் இந்தியாவில் இடம்பெயர்ந்திருப்பதாக உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையம் கணக்கிட்டுள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் கஜா புயலால் ஏற்பட்ட இடப்பெயர்வு உள்நாட்டுக்குள் நடந்த முக்கிய இடப்பெயர்வுகளுள் ஒன்றாக கருதலாம்.

அமெரிக்காவில் மீள்குடியேற்றப்பட்ட அகதிகள் மீண்டும் நவுருத்தீவுக்கு திரும்ப முயற்சி

நவுருத்தீவில் தடுத்து வைக்கப்பட்டு அமெரிக்காவில் மீள்குடியேற்றப்பட்ட அகதிகள் மீண்டும் நவுருக்கே திரும்ப விரும்புவதாக நவுரு அதிபர் பாரோன் வக்கா கூறியிருக்கிறார். அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட 300 பேரில் 40 பேர், அங்கு வாழ்க்கை சுலபமானதாக இல்லாத காரணத்தால் நவுருவுக்கே திரும்பி வர கோருவதாக தெரிவித்திருக்கும் அதிபர் வக்கா, “ஆனால், நவுருவில் வாழ்க்கை சுலபமானது. அமெரிக்கா- வாழ்வதற்கு கடினமான இடமாகும். அங்கு வேலைகளுக்கு நிறைய போட்டி உள்ளது” என்று கூறியுள்ளார்.

நவுருத்தீவில் அமைந்திருக்கும் அகதிகள் தடுப்பு முகாம்


பல்வேறு நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சித்த நூற்றுக்கணக்கான அகதிகள் பசிபிக் தீவு நாடுகளான பப்பு நியூ கினியா, மற்றும் நவுருவில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த முகாம்களாக செயல்படும் இம்முகாம்களில் சுமார் 2000 அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அந்த அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியேற்றுவதற்கான ஒப்பந்தம் 2016ல் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா இடையே கையெழுத்தாகியிருந்தது.

தாய்லாந்திலிருந்து ஒரே மாதத்தில் வெளியேறிய 10,000 மியான்மர் தொழிலாளர்கள்

தாய்லாந்தில் எந்தவித முறையான ஆவணங்களின்றி பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை நாடெங்கும் நடந்து வரும் நிலையில், சுமார் ஒரு மாத காலத்தில் 10,000 த்துக்கும் அதிகமான மியான்மர் தொழிலாளர்கள் மியான்மருக்கு திரும்பியுள்ளனர். மியான்மரின் உள்விவாகரங்கள் அமைச்சகத்தின் ஆவணங்கள் அடிப்படையில், கடந்த அக்டோபர் 01 முதல் நவம்பர் 10 வரையில் மியான்மருக்கு திரும்பிய இந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாய்லாந்திலிருந்து டிரக் ஒன்றில் திருப்பி அனுப்பப்பட்ட மியான்மர் தொழிலாளர்கள்


“எந்த வித ஆவணங்களும் இல்லாத தொழிலாளர்கள் மியான்மருக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். ஆனால், போலியான ஆவணங்களுடன் சிக்குபவர்கள் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்படுகின்றனர்” என்கிறார் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் நல உரிமைகளின் அமைப்பின் தலைவர் யு ஆங் கியாவ். அந்த வகையில் சமீபத்தில் நடந்த தேடுதல் வேட்டைகளில், 2000-க்கும் மேற்பட்ட மியான்மர் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மறுபுறம், தாய்லாந்து மற்றும் மியன்மர் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம், சட்டரீதியாக தாய்லாந்துக்கு செல்லும் மியான்மர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சராசரியாக மாதத்துக்கு 20,000 மியான்மர் தொழிலாளர்கள் தாய்லாந்தில் பணியாற்ற இடம்பெயர்கின்றனர்.

சுரண்டலுக்கு உள்ளாகும் நிலையில் இந்தோனேசிய தொழிலாளர்கள்

இன்றைய நிலையில், இந்தோனேசியாவைச் சேர்ந்த 45 லட்சம் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் வேலை செய்வதாக இந்தோனேசியாவின் பாதுகாப்பு மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேலைவாய்ப்புக்கான தேசிய அமைப்பு (BNP2TKI) கணக்கிட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் வீட்டுப்பணிகளிலும் அதில் பெருமளவிலான தொழிலாளர்கள் பெண்களாகவும் உள்ளனர்.

தொழிலாளர்கள் தலைத்துண்டிப்பு விவகாரத்தில் சவுதி அரசை கண்டித்து இந்தோனேசியாவில் நடத்தப்பட்ட போராட்டம்


இவர்களை பாதுகாக்கும் விதமாக தொழிலாளர்களுக்கான சட்டத்தை மேம்படுத்தியுள்ள இந்தோனேசிய அரசு, ஒரு தொழிலாளி வேலைக்கு செல்லும் நாடு மூன்று அவசியமான அம்சங்களை கொண்டிருக்க வேண்டும் எனக் கூறுகின்றது. அதாவது, முதலாவதாக வேலைக்கும் செல்லும் நாட்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான சட்டம் இருக்க வேண்டும். இரண்டாவது, இந்தோனேசிய அரசுடன் எழுதப்பட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்க வேண்டும். மூன்றாவது, அந்நாடு சமூக பாதுகாப்பு அல்லது இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான காப்பீடு திட்டத்தை கொண்டிருக்க வேண்டும். இச்சட்டம், இந்தோனேசியாவை இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சர்வதேச சாசனத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இந்தோனேசிய அரசின் சட்டம் மேம்படுத்தப்பட்டு உள்ள நிலையிலும் சுரண்டல் அல்லது பாதிப்பை இந்தோனேசிய தொழிலாளர்கள் எதிர்கொள்வதாக Migrant Care என்ற தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இதனை மறுத்துள்ள இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தேசிய அமைப்பின் தலைவர் நுஸ்ரோன் வாகித், “இந்தோனேசிய தொழிலாளி ஒரு புகாரை கொடுக்க வேண்டும் என்ற பட்சத்தில் சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்தோனேசிய தூதரக அதிகாரிகளை எளிதாக அணுகலாம்” எனக் கூறியிருக்கிறார்.

சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றிருந்த துட்டி துர்சிலாவதி என்ற இந்தோனேசிய பெண் தொழிலாளி தனது முதலாளியால் பாலியல் சீண்டலுக்கு ஆளான நிலையில் தற்காப்புக்காக அந்நபரை கொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை குற்றமாக கருதிய இஸ்லாமிய ஷரிய சட்டம் அவருக்கு மரணத்தண்டனையை வழங்கியது. கடந்த மாதம், அப்பெண்மணி தலைத்துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்த இந்தோனேசிய தொழிலாளர்களின் உரிமைகள் குறித்த விவாதம் மேலெழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமை நிர்வகிப்பதில் 300 கோடி ரூபாய் கண்ட கட்டுமான நிறுவனம்

நவுருத்தீவில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாமை நிர்வகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள Canstruct Intertnational என்ற தனியார் கட்டுமான நிறுவனம் கடந்த நிதியாண்டில் வரி மற்றும் இதர செலவுகள் போக சுமார் 300 கோடி ரூபாய் ($43 மில்லியன்) லாபத்தை ஈட்டியுள்ளது.

அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களை தடுத்து வைத்துள்ள முகாமின் காவல் மற்றும் நலச்சேவை பணிகளை செய்து வரும் இந்நிறுவனம், 2017ல் எந்த வித போட்டியுமின்றி ஆஸ்திரேலிய அரசுடனான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது. 2012 முதல் நவுருவில் கட்டுமான பணியில் இந்நிறுவனம் ஈடுபட்டிருந்தாலும் நலச்சேவைகளை வழங்குவதில் Construct-க்கு எந்தவித முன் அனுபவம் இல்லாமலேயே இந்த ஒப்பந்தத்தை பெற்றது.

இந்த நிலையில், கடந்த மாதம் நிறைவடைந்த இந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ஆஸ்திரேலிய அரசும் மீண்டும் புதுப்பித்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 4,000 கோடி ரூபாய் ($591 மில்லியன்) ஆகும். இப்போதைய நிலையில், அம்முகாமில் 22 குழந்தைகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் சட்டவிரோத குடியேறிகளை தடுக்கும் டிஜிட்டல் சுவரா ஆதார்?

சட்டவிரோத குடியேறிகள் இந்தியாவுக்குள் மீண்டும் நுழைவதை தடுக்கும் டிஜிட்டல் சுவராக ஆதார் செயல்படும் என உதய் (UIDAI) திட்ட தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் ரோஹிங்யா அகதிகளிடமிருந்து போலியான பதிவுகள் கொண்ட பாஸ்போர்ட், ஆதார் அட்டைகள் சிக்கியது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள பூஷன் பாண்டே, “நாங்கள் ஆதாரை மட்டும் ரத்து செய்யவில்லை, அக்குற்றத்தில் ஈடுபட்டவர்களின் பயோமெட்ரிக் தகவல்களை மீண்டும் ஆதாரில் இணைக்க முடியாது என்பதை உறுதி செய்கிறோம்” எனக் கூறியிருக்கிறார்.

Myanmar, Rohingya, Immigrants
இந்தியாவுக்கு வரும் ரோஹிங்யாக்கள்


கடந்த அக்டோபர் மாதம் திருப்பூரில் கைது செய்யப்பட்ட வங்கதேச குடியேறிகளிடமிருந்தும் ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. ரோஹிங்யாகள் இந்தியாவுக்குள் வரும் காரணமும் வங்கதேசிகள் வரும் காரணமும் வெவ்வேறாக இருந்தாலும், ரோஹிங்யாக்களை சட்டவிரோத குடியேறிகள் என்றே பாரதீய ஜனதா அரசு அடையாளப்படுத்தி வருகின்றது.
Published by:Sheik Hanifah
First published: