மேகதாது... அணை அல்ல அரசியல்…

மேகதாது அணை அரசியல்

மேகதாது விவகாரத்தில் அற்ப அரசியல் நிற்கட்டும்… காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடட்டும் என்பதே விவசாயிகளின் ஏக்கமாக இருக்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
அப்பாடா… ஒரு வழியாக காவிரிப் பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது என்று நிம்மதிப் பெருமூச்சு விடலாம் என்று நினைக்கும் போதெல்லாம் புது பிரச்சினை கிளம்பி விடுகிறது.

சென்னை மாகாண அரசு – மைசூர் சமஸ்தான ஒப்பந்தம்.., தமிழ்நாடு – கர்நாடக மாநில அரசுகளின் பேச்சுவார்த்தைகள்…, நடுவர் மன்ற (தீர்ப்பாயம்) தீர்ப்புகள்.., உச்சநீதி மன்றத்தின் உத்தரவுகள் … என சற்றேக்குறைய 150 ஆண்டு கால விவகாரம் காவிரிப் பிரச்சினை.

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 192 டி.எம்.சி தண்ணீர் (இடைக்காலத் தீர்ப்பில் 205 டிஎம்.சி) தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்றது. மேல் முறையீட்டால், நீண்ட சட்டப் போராட்டங்களுக்கு பிறகு, கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில், தமிழ்நாட்டுக்கான தண்ணீரின் அளவு மேலும் சுருங்கி 174.75 டி.எம்.சி ஆகியது. தமிழ்நாட்டுக்கு மீண்டும் பாதகமான தீர்ப்பு என்றாலும், ஒரு தீர்வுக்கு வந்துள்ளதாகவே பலரும் எண்ணினார்கள்.

கோப்புப் படம்


ஆறு ஆண்டுகளுக்கு பிறகு காவிரி ஆறு பொங்கி வந்தாலும் அதை அறுவடையாக்க முடியாமல் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை சிதைத்து, சின்னா பின்னமாக்கியுள்ளது.

இந்நிலையில், ஆறுதல் அடையக் கூட அவகாசம் அளிக்காமல், மேகதாதுவில் அணை என்று மீண்டும் ஒரு சிக்கலைத் தந்துள்ளது கர்நாடகம். கடந்த 1980-ம் ஆண்டே முன்னெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட திட்டத்தைத்தான் மீண்டும் தூசி தட்டியுள்ளது கர்நாடகம்.

இரு மாநில ஒப்பந்தங்களை மீறி, கர்நாடகம் தமிழ்நாட்டின் அனுமதியின்றி ஏற்கனவே அணைகளைக் கட்டி, பெருமளவு தண்ணீரைத் தடுத்து விட்டது. தற்போது, வடிகாலாக வரும் தண்ணீரையும் தடுக்கப் பார்க்கிறார்கள் என்று தமிழ்நாட்டு விவசாயிகள் பதறுகிறார்கள். கடந்த கால நிகழ்வுகளே இந்த பதற்றத்திற்கு காரணம்.

கடந்த 1970-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, காவிரியில் கர்நாடகத்தின் நீர்ப் பாசனப் பரப்பு சுமார் 7 லட்சம் ஏக்கர். தமிழ்நாட்டில் 30 லட்சம் ஏக்கர். படிப்படியாக அணைகள், பிரம்மாண்ட ஏரிகளை வெட்டியதால் இன்றைக்கு கர்நாடகத்தின் பாசனப் பரப்பு 25 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.

காவிரி நதி நீர் ஆணைய கூட்டம்


இதில், நீர்த்தேக்கங்கள் மூலமாக மட்டும் 20 லட்சம் ஏக்கர்கள். ஏரிகள், குட்டைகள் மூலம் 2 லட்சம் ஏக்கர்கள், அணைக்கட்டுகள் மூலம் 2.67 லட்சம் ஏக்கர்கள்.

ஆனால், தமிழ்நாட்டின் காவிரி பாசனப் பரப்பு 20 லட்சம் ஏக்கருக்குள்ளாக சுருங்கியுள்ளது. இது இன்னும் சுருங்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு அணை கட்டும் முயற்சியை எடுத்துள்ளார்கள்.

ஆடு தாண்டும் பாறை என்பதை சொல்லும் மேக்கே தாட்டு என்கிற இடத்தில் ரூ. 5 ஆயிரத்து 912 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகா தயாரித்துள்ளது. இதற்கு அனுமதி அளித்து மத்திய அரசும் தன் பங்கிற்கு எண்ணெயை ஊற்றியுள்ளது.

“இது தமிழ்நாட்டிற்கு செய்யும் துரோகம். அணை கட்டினால், வடிகால் தண்ணீர் கூட வராது. விவசாயிகளின் வாழ்வாதரத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். ஒருதலைப்பட்சமாக செயல்படக் கூடாது” என்று தமிழ்நாட்டு விவசாயிகள் ஒட்டுமொத்தமாக குரல் கொடுக்கிறார்கள்.

மேலும், தொடர் போராட்டங்களையும் விவசாயிகள் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு துணையாக அரசியல் கட்சிகளும் ஓரணியில் நிற்கிறார்கள். இவ்விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளனர்.

பொங்கி வரும் காவிரி


அதோடு நில்லாமல், உச்சநீதிமன்றத்தை நாடி மீண்டும் சட்டப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி அணை கட்டப்படாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி சொல்கிறார். கட்டியே தீருவோம் என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் சொல்கிறார். இரண்டும் அரசியல் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

உச்சநீதிமன்றத்தை நோக்கி சென்ற பிறகு இருமாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிறது கர்நாடக அரசு. பேசலாம் என்பது போல் சமிஞ்சை கொடுக்கிறது மத்திய அரசு. இதுவும் அரசியலே என்கிறார்கள்.

கர்நாடகத்தின் காவிரி ஆற்றுப் படுகைப் பகுதிகளான குடகு, மாண்டியா, மைசூர், பெங்களூரு புறநகர், சாம்ராஜ் நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் முதலமைச்சர் குமராசாமியின் மதச் சார்பற்ற ஜனதா கட்சி, வாக்கு வங்கி சார்ந்து செயல்படுகிறது. ஆகையால் தனது வாக்கு வங்கியை பலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறது.

அதே பகுதியில் தங்களது செல்வாக்கை பெருக்க காங்கிரஸ் தலைவரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான சிவக்குமார் திட்டமிடுகிறார்.

கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார்


இதற்காக தனது தொகுதியான கனகபுராவில் உள்ள மேகதாதுவில் அணையைக் கட்ட முயற்சிக்கிறார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக தென்னிந்தியாவில் பலமாக கால் ஊன்ற, இதையும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்த மத்தியில் ஆளும் கட்சியாகவும் மாநிலத்தில் எதிர்கட்சியாகவும் உள்ள பா.ஜ.கவும் அணை கட்ட அழுத்தம் கொடுக்கிறது.

பா.ஜ.க., காங்., ஆகிய இரண்டு தேசிய கட்சிகளும் தேசியத்தை மறந்து இங்கே மாநிலக் கட்சியாக மட்டுமே செயல்படுகின்றன.

இந்த அணை கட்டினால் காவிரி ஆற்றுப் படுகையில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் வனப்பகுதி அழிந்து,சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும் என்கிறது கர்நாடக வனத்துறை.

சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் முழ்கும் என்று அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் எதையும் கண்டுகொள்வதாக இல்லை மூன்று முக்கிய கட்சிகளும். அவரவர் அரசியல் லாபங்களுக்காக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

இயற்கையை வளைத்து விபரீத விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்கள் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

அற்ப அரசியல் நிற்கட்டும்… காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடட்டும் என்பதே விவசாயிகளின் ஏக்கமாக இருக்கிறது.

Also See..

Published by:Sankar
First published: